காலம் ஆதரவில் 'ஈழ மின்னல் சூழ மின்னுதே!


 

தேவகாந்தனின் 'கலாபன் கதை'

பின் அட்டைக் குறிப்பு

கலாபன் என்கிற தனிமனிதனின் பதினோராண்டுக் காலகட்டத்தின் வாழ்வு இந்நாவல்.  குடும்பச் சூழ்நிலையோடு ஆரம்பித்து கரையில் கடலின் ஏக்கத்திலும், கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம். கடலோடிகளின் வரமருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறை கடல் வாழ்வு, மரண பயத்தை உண்டாக்கும் கடல் நோய்மை, தீராததும் கட்டறுத்ததுமான காமம், உறவுகளின் முகம் பார்ப்பதன் காத்திருப்பு, நாளையின் எதிர்பார்ப்புகள், நிலங்களும் காலநிலைகளும் அறிமுகப்படுத்தும் பல்வேறு மனிதர்கள் என கலாபனின் வாழ்வுபற்றி உள்ளார்ந்த மடிப்புகளுடன் விரிவு கொள்கிறது நாவல்.

கடல் விழுங்கியும் விழுங்காமலும் விட்ட வாழ்வு, அது அள்ளியும் கொடுக்கிறது, பரிதவிக்கவும் விடுகிறது. மனித வாழ்வைப் பரிகசிக்கிறது. பெரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் உருவாக்குகிறது. நெருக்கமானவர்களிடம் பிரித்து வைக்கிறது. பின் அதுவே இரக்கங்கொண்டு சேர்த்தும் வைக்கிறது. மீண்டும் சன்னதம்கொண்டு தாயங்களை உருட்டி விளையாடிப் பகடியும் செய்கிறது.

கப்பல், மனிதர்கள், கடல் பிரதேசங்கள், காலநிலைகள் தரும் குளிர்ச்சி, வறண்ட காற்று, மாறும் நிலம், போக்குவரத்தின் நுட்பங்கள் போன்ற தகவல்களும் புனைவின் உத்திகளும் நிறைந்த சீரான மொழியினைக் கைப்பற்றியிருக்கிறார் தேவகாந்தன். நாவலின் சில அத்தியாயங்கள் சிறுகதைகளாக வாசிக்கப்படக்கூடிய செறிவையும் கொண்டிருக்கின்றன. நுண் அவதானிப்புகளும், சின்ன விஷயங்களின் சேர்க்கைகளும் இப் புனைவை சாத்தியமாக்கியிருக்கின்றன.