ஜி. நாகராஜனின் நாவல்கள்

Tuesday, 02 June 2015 17:24 - நடேசன் (ஆஸ்திரேலியா) - இலக்கியம்
Print

ஜி.நாகராஜன்இலக்கியம் என்பதென்ன? எழுதுவதெல்லாம் இலக்கியமா? எப்படி இலக்கியத்தை தரப்படுத்தலாம்? . முக்கியமாக தமிழ் இலக்கியத்தில் முக்கிய அணியில் இருந்தோ அல்லது, பணத்தை வாரியிறைத்தோ பரிசுகளைப் பாராட்டுகளை பெறும்போது நியாயமான சந்தேகங்கள் சாதாரணமான வாசகர்களுக்கு எழுவது சகஜம்தானே…? இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?

ஹெமிங்வேயின் ஒரு முக்கியமான கூற்றைப் படித்தேன். அதில் ‘ இலக்கியம் பனிப்பாறை போன்றது’ என்றார். நீரில் மிதக்கும் பனிப்பாறையில் எட்டில் ஒரு பகுதி வெளியே தெரிவது. மிகுதி நீரின் உள்ளே இருப்பது. அதாவது இலக்கியத்தில் எழுதப்பட்டது: சிறிதாகவும் சொல்லப்படாத விடயங்கள்: பெருமளவில் வசனங்களின் இடையில்; ஊகத்திற்கு விடப்படுபவை. இவை அம்பிகுயிற்றி (ambiguity) அல்லது பொருள்மயக்கம் எனக்கூறலாம். இது சிறுகதை நாவல் கவிதை என்பதற்கு பொருந்துமானதாலும் நான் நாவலையே இங்கு பார்க்கிறேன்.

பொருள்மயக்கத்தை ஹெமிங்வேயின் எழுத்துகளில் பார்க்க முடியும் கிழவனும் கடலும் (Old man and the sea) என்ற பிரபலமான நூலில் சொல்லப்படுபவை. அந்த சன்ரியாகோ கிழவன் மாலின் மீனோடு போராடுவது என்பது மிகவும் சிறிய விடயங்கள். ஆனால் சொல்லப்படாதது ஏராளம். முதுமையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல. தூண்டில் கயிறை பிடித்திருந்த இடது கரம் களைத்து மரத்தவுடன் இரண்டு கைகளோடு நடத்தும் சம்பாசணையில் கையின்; உரத்திற்காக நான் உணவு உண்கிறேன் என்பது மனித வாழ்க்கையில் உணவு எவ்வளவு முக்கியத்துவம் என்பது வருகிறது.

எந்த உயிரினது சகல முயற்சிகளும் உணவிலே முடிகிறது. மீனோடு நடத்தும் உரையாடலில் எங்கள் இருவரில்; யார் இறந்தாலும் பரவாயில்லை என்று செலன்ஜ் பண்ணுவது. வாழ்க்கையில் முதுமையை அடையும்போது வரும் கனவுகள் கூட ஈரமற்றவையாகிறது. இதற்கு முன்பு ஒரு பெண்மீனை துண்டிலில் பிடித்தபோது அதோடு வந்த ஆண்மீன் எட்டிப்பாய்ந்து அந்த பெண்மீனைத் தேடியது. சன்ரியாகோவின் நினைவில் வருவது கதையின் அழகியல்.

ஒருவிதத்தில் முதுமையின் வெளியா அல்லது ஹெமிங்வேயின் வாழ்க்கை தற்கொலையில் முடியும் வரையிலான படிமம் இப்படியாக எழுதப்படுகிறது என எண்ணலாம். ஏராளமாக எழுதாத விடயங்கள் உள்ளது அந்தச் சிறிய புத்தகத்தில்.

சமீபத்தில் மகாபாரதத்தை சன் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு கட்டம் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. மனதில் நினைப்பதை சொல்லுங்கள், பாண்டவர்களைக் கேட்டுவிட்டு கடைசியாக பாஞ்சாலியை கிருஷ்ணன் கேட்டபோது, கர்ணனை சுயம்வர அவையில் நான் அவனை அவமதித்து பேசியது தவறு என நினைக்கிறேன் என்றாள். அவளது சிந்தனையை பலர், பல அர்த்தம் கொள்ளுவார்கள்.

தெய்வப் பிறப்பான அவள் கர்ணனை யார் என புரிந்திருப்பாள். அவனை அவமதித்தால் முக்கிய எதிரியை உருவாக்கியது தவறு அல்லது பாண்டவரோடு அவனையும் மணந்திருக்கலாம் என எங்கோ படித்த நினைவு. இவற்றிற்கு இடையே பல விடயங்கள் அந்த வசனத்தில் ஊகிக்க உள்ளது.

ஜாதக கதையொன்றில் காமத்தால் நிலை குலைந்த மற்றைய ரிஷிக்கு புத்தர் ஆறுதல் வார்த்தைகளாக சொல்லும் கதையிது.

முன்பு ஒரு பிறவியில் புத்தர் ரிஷியாக இருந்து தியானத்தால் பிறக்கும் சித்துகளை பெற்ற பின்பு நகரத்துக்கு வந்ததாகவும் அங்கு அரசனுக்கும் அரசிக்கும் கல்வி போதிக்கும் குருவாக இருந்தபோது ஒருநாள் அரசர் வெளியூர் அரசகாரியமாக சென்றார். மாடத்தில் குளித்துவிட்டு பட்டுத்துணியால் போர்த்தபடி இருந்த அரசி ரிஷி வந்த அவசரத்தில் எழுந்தபோது அரசியின் ஆடை விலகியது. அவளது அழகைக் கண்டு அவள்பால் காதல் கொண்டு தவித்தார் ரிஷி. பின்னர் அரசர் விடயத்தை அறிந்து அரசியை ரிஷியோடு அனுப்பினார். அரசி ரிஷியிடம் தங்குவதற்கு குடிசை அமைக்கச் சொன்னாள். அதன் பின்பு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் என பல விடயங்களை சொன்னாள். அரசியாரின் தேவைகள் சிறிதாக இருக்குமா…? அவற்றை ஒவ்வொன்றாக செய்த ரிஷி களைத்துவிட்டார்.

‘ இந்த வேலைகள் தங்களின் இன்பத்தின் அடையாளமா…?’ என அரசி கேட்டபோது ரிஷி தனது தவறை உணர்ந்து அரசனிடம் அரசியை ஒப்படைத்துவிட்டு தன் தவறிற்கு மன்னிப்புக் கேட்டார்.

இந்தக் கதையில் மலையில் யாருமற்ற சூழ்நிலையில் யோகத்தால் சித்துகள் அடைவதற்கு இலகுவாக இருந்தது. ஆனால் நகரில் அவரது உறுதியில்லை. அதேபோல் குடும்பச் செயல்கள் இலகுவானது அல்ல என்பதை புரியவைக்கிறது. இதேவேளை அழகிய அரசியார் அழகால் நிலை தடுமாறிய ரிஷியை அதே வழியில் சென்று திருத்துகிறார். இதற்கப்பால் தவறுகளைத்தானும் முற்பிறப்பில் இளைத்தேன் என புத்தர் ஆறுதல் சொல்கிறார் இப்படி எண்ணற்கரிய விடயங்களை தன்னகத்தே புதைந்து உள்ள கதைகளுக்கு நாம் சொந்தக்காரர்கள்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தில ஹெமிங்வேயின் பனிப்பாறை வடிவத்தில எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் எழுத்துக்களை தேடியபோது அங்கெல்லாம் வார்த்தைகள் விதைக்கப்பட்டு படிப்பவர்கள் கற்பனைக்கு இடமின்றி எழுதப்பட்டிருந்தது. இப்படியாக எழுதினால் வாசகனுக்கு ஊகிக்க அங்கு இடமில்லை தமிழ் வாசகர்கள் பரீட்சையில் கொப்பியடித்து (தமிழ்நாட்டுத் தமிழில் பிட் அடித்து) எழுதும் மாணவர்களின் நிலையில் கற்பனையற்று இருக்கிறார்கள்.

சம்பவத்தைக் கோர்த்த கட்டுரைகள் சிறுகதைகளாகவும் வாழ்க்கையில் சந்தித்த விடயங்கள் நாவலாக மாறினால் வாசிப்பவனுக்கு மிகவும் போர் அடித்துவிடும். தமிழ் இலக்கியம் வாசிப்பவர்கள் குறைவதற்கு இதுவும் ஒருகாரணமா…?

நவீன தமிழ் இலக்கியங்கள் படிமத்தில் முரண்நகையில் பொருள் மயக்கத்தில்( http://www.jeyamohan.in/9454) எழுதப்பட்டவை குறைவு. இதில் ‘ விரித்து எழுதவில்லை. இன்னும் விபரிக்கலாம். அல்லது ஆழமாக சென்றிருக்கலாம். இது மேலோட்டமான எழுத்து’ என்று விமர்சகர்கள் தமிழ் இலக்கியவாதிகள் எழுதியிருப்பார்கள். படித்தபோது சினிமா பார்ப்பதுபோல் தெளிவாக இருந்தது என்றும் கருத்து சொல்லுவார்கள்.

சினிமா சிந்திக்க விரும்பாத கற்பனையற்றவர்களின் மீடியம் இதனாலே பல புகழ் பெற்ற நாவல்களை திரைப்படமாக்க முடிவதில்லை. திரைப்படமானவை நாவல்களின் அருகிற்கூட செல்ல முடிவதில்லை.

இப்படிப்பட்ட இலக்கியங்களைப் பார்த்துவிட்டு, நான் ஜீ. நாகராஜனின் தொகுப்பை படித்தபோது அவரது நாவல்கள், சிறுகதைகள் பெரும்பாலான பொருள்மயக்கத்தை கொடுத்தவை. ஹெமிங்வேயின் பனிப்பாறை வடிவத்தில் வடிக்கப்பட்டவை எனக் கண்டுகொண்டேன்

நாளை மற்றுமொரு நாளே

ஜி. நாகராஜனின் நாவல் நாளை மற்றுமொரு நாளே பலவிதத்தில் பொருள் மயக்கத்தைக் கொடுக்கும். சம்பவங்களும் கனவுகளும் அடுக்கடுக்காக வரும்.

உண்மையில் அதுதானே யதார்த்தம்?

நிகழ்கால சம்பவங்கள் நடக்கும்போது நம் மனம் இறந்த காலத்தை நோக்கி கொண்டு செல்வதுதானே நிஜம்.

சோலைமலை வீட்டு விடயத்தில் ஏமாற்றியதால் அவரை கொலை செய்யும் எண்ணம் கொண்ட கந்தனுக்கு ஆரம்பத்தில் கொலை செய்யபட்டவர் சோலைமலையாகத் தெரிகிறார் ஆனால் கடைசியில குத்துப்பட்டவர் வேறு ஒருவர். கொலையை தடுக்க விரைந்து சென்ற கந்தன் கொலைகாரனா இல்லையா என்பது மயக்கத்தை தருகிறது. இத்துடன் அவனது நினைவுகள் கனவுகள் சீரற்று வருவதால் இந்த நாவல் என்னை இருமுறை வாசிக்க வைத்தது இவ்வளவிற்கு நாவல் மிகவும் எளிய மொழி.

தமிழ் நாவல்கள் தொடாத விடயங்கள் சில.

நாவித சிறுவன், கந்தனின் முகத்தை சவரம் செய்யும் வேளையில் அவனது கைபடும்போது கந்தனுக்கு காம உணர்வு வருவது…..

பகல்வேளையில் உடலுறவை முடித்தபின்பு ‘ பட்டப்பகலிலே இது என்ன அட்டகாசம்’ என மீனா கேட்பது….

‘உண்மையை சொல்லட்டுமா இன்னக்கு காலயிலே இரண்டு நாயிக ஒண்ணை ஒண்ணுவிட்டுக் கலைச்சிட்டுபோச்சு’

‘ஆமா ஓடனே நினைப்பு வந்ததாக்கும். அன்றைக்கு இரண்டு அணில்கள் இண்டைக்கு நாய்கள்’

‘பொம்பிளையென்னு பிறந்திட்டாலே தேவடியா சிறுக்கிதான். ஒருத்தரோடு படுத்தா, என்ன பத்துப்பேரோடு படுத்தா என்ன. எல்லாம் ஒண்ணுதான்’

இதை விட யதார்த்தத்தை எழுத முடியுமா..?

அறம் – மனச்சாட்சி ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

இந்த நாவலில் உள்ள அறம் என்னைக் கவர்ந்தது. அது மிகவும் விசாலமானது. கணவன் இறந்த பின்பு மனைவிகளை மட்டுமல்ல, எப்போதாவது உடலுறவு கொண்ட பெண்களையும், அந்தப்புரத்துப் மகளிரையும் கட்டையில் ஏற்றும் சமூகத்தில், விபசாரத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு தனக்கு இயலாதபோது அவளது வாழ்க்கைக்கு வேறு ஒருவனைத்தேடும் கந்தனின் பாத்திரம் உச்சமானது. இதுவரை தமிழ் இலக்கியத்தில் தரிசிக்காத வேதம் இது. இவ்வளவிற்கும் அந்தப் பெண் மீனா இரவில் விபசாரத் தொழிலை தொடர்ந்து செய்கிறாள்.

குறத்தி முடுக்கு

உணவு என்பது யாவருக்கும் தேவையானது இந்த உணவின் முன்பு காதல், கற்பு, கலாச்சாரம் என்பன அரூபமான விடயங்கள். அதாவது கடவுள் மாதிரி நம்பலாம். ஆனால், நிரூபிக்கமுடியாது.

அதேபோல் ஆண்களின் காமம் என்பது காலம் காலமாக விலை கொடுத்து வாங்கும் பொருளாகவே உள்ளது. இதை எந்த மதத்தாலும் தடுக்க முடியவில்லை. அதே வேளையில் நேர்மையாக ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கிறது. காலம் காலமாக இதில் மட்டும் கோழையானது தமிழ்ச்சமூகம்.

இந்த இரண்டு விடயங்கள் அழுத்தமாகும் களம் குறத்தி முடுக்கு.

இங்கு பத்திரிகை நிருபர் ஒருவன் விலைகொடுத்து இன்பத்தை வேண்டவந்த இடத்தில் தங்கத்தை சந்திக்கிறான். உடல் இன்பத்தை கொடுக்கும் காமதேனுவாக அவளைப்பார்த்த அவனுக்கு, அவள் விபச்சாரத்திற்காக அழைத்தாள் என பொய் வழக்கு தொடுத்தபோது அதை எதிர்த்து அவள் வழக்காடும்போது அவளது வைராக்கியத்தை பார்த்து வியப்படைகிறான் . பிற்காலத்தில் அவள் ஏற்கனவே கைவிட்டு சென்ற வேறு பெண்ணை மணம் செய்து குழந்தைகள் உள்ள காதலனோடு, வேறு இடத்தில் குடிசையில் வாழ்வது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

இந்த நாவலின் முக்கிய கரு, ஆண்பெண் உறவின் விசுவாசம் என்பது உடலில் அல்ல. இதயத்தில் உள்ளது என்பதை வலியுறுத்துகிறது. (Fidelity of the heart-as opposed to fidelity of the body)

இது ஒரு முப்பத்தியைந்து பக்கம மட்டுமே வருகிறது. நெடும் கதையாகவோ நீளமான சிறுகதையாகவோ கொள்ள முடியாது. நாவலுக்கு உரிய திருப்பங்கள் இருக்கின்றன.

ஜி. நாகராஜனின் நாவல்கள் மொழியை வலிய நீட்டாமல், முடக்காமல், உளிகொண்டு சிற்பமாக செதுக்கப்பட்டிருக்கிறதில் ஆங்கில நாவல் ஆசிரியர் ஏர்ணஸ்ட் ஹெமிங்வேயின் சாயலும் உள்ளடக்கத்தில் பிரான்சிய எழுத்தளர்களையும் ஒத்து இருக்கிறது.

பூனையை தலையில் இருந்து பின்னோக்கி குழந்தையாலும் தடவமுடியும். ஆனால் வாலிலிருந்து தலை நோக்கி தடவினால் அதனது பற்களை சந்திக்கவேண்டும். அசாத்திய துணிவுகொண்ட முதல் தமிழ் எழுத்தாளர் ஜி. நாகராஜன் என நினைக்கிறேன்

நன்றி: காலச்சுவடு ஜி. நாகராஜன் படைப்புகள்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 02 June 2015 17:41