வானதி' திருநாவுக்கரசு மறைவு!

Wednesday, 20 January 2016 00:20 - பதிவுகள் - இலக்கியம்
Print

வானதி' திருநாவுக்கரசு மறைவு!தமிழர்களின் வாசிப்பனுவத்தில் வானதி பதிப்பகத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் , மிகவும் அழகான முறையில் , நேர்த்தியாக வெளிவரும் வானதியின் நூல்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டவை. வாண்டுமாமாவின் சிறுவர் படைப்புகள் , பிலோ இருதயநாத்தின் ஆதி வாசிகளுடனான பயண அனுபவங்கள், ராஜாஜியின் வியாசர் விருந்து , சக்கரவர்த்தித்திருமகன் போன்ற ஆத்மீகப்படைப்புகள் எனத்தொடங்கி சாண்டில்யன், கல்கி, அகிலன், ஜெகசிற்பியன் போன்றோர் படைப்புகள் வரையில் அழகான அட்டைப்படங்களுடன் பல்வகை நூல்களைத் தனது வானதி பதிப்பக வெளியீடுகளாக, பல வருடங்களாகத்தந்தவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள். இப்பதிகத்தின் நூல்களைப்பொறுத்தவரையில் அவை பெரும்பாலும் வாசகர்களால் அதிகம் விரும்பப்படும் வெகுசனப்படைப்புகளாகவேயிருக்கும். இவர் தனது வாழ்வில் சந்தித்தவர்களைப்பற்றிய தனது பதிப்பகத்துறை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி வெளியிட்டிருக்கின்றார்.

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் கொடும்பாளூர் இளவரசியும், இராஜராஜனின் மனைவியுமான வானதி என்னும் பாத்திரத்தின் மீது கொண்ட பேரபிமானத்தினால் தனது பதிப்பகத்துக்கு 'வானதி' என்று பெயரிட்டவர் 'வானதி' திருநாவுக்கரசு அவர்கள்.  பல்துறைகளிலும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த படைப்புகளினூடுதான் எம் போன்றவர்களின் வாசிப்பும் வளர்ந்தது. நூல்களை மிகவும் நேர்த்தியாக வெளியிடுவதை ஒரு தவமாகச்செய்தவர் திருநாவுக்கரசு. அவரது மறைவு தமிழ்ப்பதிப்பகத்துறைக்கு முக்கியமானதோரிழப்பே.

 

வானதி பதிப்பக வெளியீடு ...

ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்'

 

Last Updated on Wednesday, 20 January 2016 01:48