எழுத்தாளர் க.நவம்- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -


வீரியம் குன்றாத சாதியம்!எமது ஊரில் சவரத்தொழில் செய்து வாழ்ந்துவந்த குடும்பம் ஒன்றின் கதையை, எழுத்தாளர் தெணியான் அவர்கள் ‘குடிமைகள்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியிருந்தார். அதற்கான அறிமுக நிகழ்வு ஒன்றினை, கடந்த வருடம் அவரது நண்பர்கள் கொழும்பில் நடத்தியிருந்தனர். அதில் கலந்துகொண்ட கொழும்புவாழ் கனவான்கள் சிலர், ”சாதியம் செத்துப்போன இன்றைய நிலையிலும், இது போன்ற படைப்புக்களுக்கான அவசியந்தானென்ன?” எனக் கேட்டு, ’அரியண்டப்’ பட்டிருந்தனர். இதே கேள்வியை திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது இந்த நூல் குறித்து, ஒருசில தமிழ்க் கனடியக் கனவான்கள், கல்விமான்கள் கேட்டுக் கறுவிக்கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

இந்நிலையில் திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ எனும் இந்த, தன்வரலாற்று நூல் குறித்து, கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து, இன்றைய காலகட்டத்திலும் இவை போன்ற படைப்புக்களுக்கான தேவை என்ன? இவற்றின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? என்பன போன்ற வினாக்களுக்கான ஒருசில ‘அடையாள விடைகளை’ சொல்லிச் செல்வதே எனது நோக்கமாகும்.

வரலாறு என்பது ஆதிக்க சக்தியினரின் - ஆதிக்க சக்தியினருக்காக - ஆதிக்க சக்தியினாரால் எழுதப்பட்ட கடந்தகாலக் ’கலாபக் கதைகள்’ என்பதாகவே காலம் காலமாக இருந்து வந்தது. ஆயினும் மாறிவரும் இன்றைய நவீன உலகின் புதிய நடப்புகளுக்கேற்ப, இதிலும் பல மாற்றங்கள் இடம்பெறலாயின.  மேட்டிமையாளர்களால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டுவந்த உழைக்கும் மக்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும், அடிநிலை மக்களதும் கதைகள் இப்போது இலக்கியங்களாகப் புனையப்படுகின்றன; வரலாறுகளாக வரையப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று ஆவணங்களாக, தமிழ்நாட்டில், பாமாவின் ‘கருக்கு,’  கே.ஏ. குணசேகரனின் ‘வடு,’  ராஜ்கௌதமனின் ‘சிலுவைராஜ் சரித்திரம்,’ என்பவை முதற்கொண்டு, இன்னும் பல தன்வரலாற்று நூல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

ஈழத்தைப் பொறுத்தவரை, கடந்த ஐம்பதுகளின் ஆரம்பத்தில் வதிரியைச் சேர்ந்த கா. சூரன் எழுதிய ‘சூரன் சுயசரிதை,’  2001இல் டொமினிக் ஜீவா எழுதிய ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்,’  2004இல் என்.கே. ரகுநாதன் எழுதிய ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி,’  2005இல் இலங்கையன் செல்வரத்தினம் எழுதிய ‘வாழ்வும் வடுவும்,’  2011இல் தெணியான் எழுதிய ‘இன்னும் சொல்லாதவை,’  அதேயாண்டில் யோகரட்ணம் எழுதிய ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூட்டிய நாட்களும்,’  2013இல் தெணியான் எழுதிய இன்னொன்றான ‘பூச்சியம் பூச்சியமல்ல’ என்பன ஒடுக்கப்பட்டோரது தன்வரலாற்று நூல்களாகும்.

”ஈழத்தில் சாதியம் செத்துப் போய்விட்டதே! இந்நூல்களுக்கும் இவையொத்த இன்னபிற புனைவுகளுக்கும் இப்போது என்ன தேவை!” என்பது, ஒரே அடைப்படையில்தான் எப்போதுமே சிந்தித்துப் பழக்கப்பட்ட ’அடிப்படைவாத அரிதாரிகள்’ முன்வைக்கும் கபடத்தனமான கருத்து. ஆனால் இன்றும் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகள் பலர், போர்க்கால ஆக்கங்களைப் படைத்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ’மூன்று தசாப்தகால ஈழப்போர் முள்ளிவாய்க்காலில் வந்து முடிவடைந்து விட்டதே! போர்க்கால இலக்கியங்களுக்கு இன்னும் என்ன தேவை’ என்று யாராவது கேட்கின்றார்களா? இல்லையே! சாதியத்துக்கு மட்டும் ஏன் இப்படியொரு சப்பைக்கட்டுச் சமாதானமோ தெரியவில்லை!
வெளிநாடுகளிலும் ஈழத்தின் பட்டின, நகர, பெருநகரங்களிலும் வாழும் மேட்டுக் குடியினர்தான் பெரும்பாலும் ஊரில் சாதியம் செத்துவிட்டது என்று சாதிப்பவர்கள். உண்மை நிலையை உள்ளது உள்ளபடி நேரில் கண்டறிய வேண்டுமாயின் இவர்கள் ஊரிலுள்ள கிராமங்களைப் போய்ப் பார்த்து வரவேண்டும்.

யாழ் மண்ணின் பல கிராமங்களில் இன்னமும் அதே அடிமை குடிமை முறைமை பேணப்பட்டு வருகின்றது; மரணம், திருமணம், பூப்பு நீராட்டுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் சவரத் தொழிலாளர்களும் சலவைத் தொழிலாளர்களும் பறைமேளம் தட்டுவோரும் ஊரூராகச் சென்று, தத்தமக்கே உரிய அடிமை குடிமைத் தொண்டுகளை இன்றும் ஆற்றிக்கொண்டுதான் உயிர் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற உண்மைகளை இவர்கள் அறியமாட்டார்கள். வெளிநாட்டுப் பணச் செருக்குடன் மூலஸ்தானத்தில் சொகுசாக வீற்றிருக்கும் எத்தனையோ சுவாமிகளின் கோவில்கள் இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளே விடாமல் பூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும், சாதியின் பேரால் எத்தனை காதல் கல்யாணங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன என்பதையும், எத்தனை சண்டைகள் சச்சரவுகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும், பல்கலைக்கழகம் முதற்கொண்டு சின்னச் சின்னப் பாலர் பள்ளி வரை, புதுப் புது வடிவங்களில் சாதியம் பூடகமாகப் பேணப்பட்டு வருகின்றது என்பதையும், யாழ் சமூக வெளியெங்கும் சாதிய அடக்குமுறையென்னும் கூரிய கத்தியின்மீதுதான் அடிநிலை மக்கள் அச்சத்துடன் கால்பதித்து நடக்கின்றனர் என்பதையும், சாதி என்னும் கெட்ட வியாதியால் அந்த மக்கள் சிந்திய கண்ணீர், மானுடத்தின்மீது படிந்த கறையாக இன்றும் அங்கு மண்டிக் கிடக்கின்றது என்பதையும் இவர்கள் அறியமாட்டார்கள்.

கல்வி, பொருளாதார அபிவிருத்திகள் காரணமாக, ஒடுக்கப்பட்டோரது பிள்ளைகள் சிலர் ஒருசில வாய்ப்புக்களை ஆங்காங்கே பெற்றுவருகின்றனர் என்பதும் – அதனால் அவர்களது வாழ்வுநிலை ஓரளவு மேம்படுகின்றது என்பதும் உண்மையே. ஆனால் தவிர்க்கமுடியாத அல்லது தட்டிக் கழித்துவிட முடியாத சூழ்நிலைகளில்தான் அவ்வாறான வாய்ப்புக்கள் அவர்களுக்குத் தரப்படுகின்றனவே தவிர, யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் சாதிய மனோபாவ வாசற்கதவுகள் திறந்துகொண்டதினாலல்ல என்பதை நாம் மறந்துவிடலாகாது. உண்மையைச் சொல்வதானால், ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாதியம் என்பது சுவாலையின்றி இன்னமும் கனன்றுகொண்டிருக்கும் ஒரு தணல் நெருப்பு; அது அணைந்துபோன நெருப்பல்ல. இந்த நெருப்புக் கனலின் அகோரம் குறித்து ஷோபாசக்தி தமது கட்டுரை ஒன்றில் – ‘சாதியத்தின் பாரத்தை, வலியை, இழிவை அடக்கப்பட்டவன் அல்லாத ஒருவனால் எதிர்வுகூறவும் முடியாது, உணரவும் முடியாது. சைலன்ஸ்ர் துப்பாக்கியில் ஸ்னைப்பர் பூட்டப்பட்டு, அதிலிருந்து லேஸர் குண்டு சுடப்படுவதுபோல, சத்தமில்லாமல் சாதியத் தாக்குதல் நெருப்பைக் கக்கிக்கொண்டு வரும்’ என்று போர்க்கால மொழியில் கூறுகின்றார்’.  இதனால்தான் ஒரு இளங்கீரனோ அல்லது ஒரு கணேசலிங்கனோ சாதியத்திற்கு எதிராக எழுதிச் சாதித்ததைவிட, டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், பெனடிக்ற் பாலன், தெணியான் போன்றவர்களது எழுத்துக்கள், சாதியத்தைத் தகர்ப்பதற்கான தர்க்க மனநிலையோடும், பரிதவிப்பின் உணர்வோடும், சில தருணங்களில் பொங்கியெழும் கோபாவேசங்களோடும் வெளிவந்திருக்கின்றன. வெளியில் நின்று அனுதாபத்துடன் அணுகுவதற்கும், உள்ளே தன்னிலையில் நின்று தானே உணர்வதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்! 

இலங்கையின் வடபுலத் தமிழர் வாழும் பிரதேசங்களில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள்மீது மிக நீண்ட காலமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுவந்த அநீதிகளுக்கும் சாதிய அவமானங்களுக்கும் அளவுகணக்கே கிடையாது. அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கென்று, ஏற்கனவே நிர்மாணிக்கப் பெற்றிருந்த ’ஒடுக்கப்பட்ட ஊழியர் சங்கம்’ 1943இல் ’சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ எனப் புதுவடிவமெடுத்தது.

இதே காலகட்டத்தில் வில்லூண்டி மயானத்தில் முதலி சின்னத்தம்பி என்ற தாழ்த்தப்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ் குடாநாட்டில் அடிநிலை மக்களுக்கெதிரான வன்செயல்களும் துச்சாதனங்களும் துரிதமடைந்தன. சுமார் 5 வருட காலத்திற்குள் மட்டும் பூநகரி, காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, பருத்தித்துறை ஆகிய இடங்களில் ஒடுக்கப்பட்டோருக்குச் சொந்தமான 65 வீடுகள் தீக்கிரையாக்கப் பட்டன; 18 உயிர்கள் பறிக்கப்பட்டன. ஆயுதப் போராட்டம் தலைதூக்கும்வரை இந்நிலைமை தொடர்ந்த வண்ணம் இருந்தது. விபரங்கள் ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்யப் பட்டுள்ளதால், விரிவஞ்சி அவற்றை இங்கு தவிர்த்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இதேவேளை போராட்ட காலங்களின்போது ஆயுதக் குழுக்களின் தாராள சிந்தையினால் சாதியக் கெடுபிடிகள் தடுக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டு வருவது பச்சைப் பொய்! ஆயுதப் போராட்டத்தைத் திசைதிருப்பி விடக்கூடாது என்பதற்காகப் பலவந்தமாக, சாதியம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததே தவிர, யாழ்ப்பாணத்தில் ஒருபோதும் சாதியம் தனது வீரியத்தை இழந்ததில்லை!

”நிர்வாணம் கொண்டு
தமிழர்கள் அனைவரும்
தெருக்களில் திரிக!

மீண்டும் ஒருதரம்
ஆதிமனிதனை நெஞ்சில் நினைத்திட,
நிர்வாணம் கொண்டு
தமிழர்கள் அனைவரும்
தெருக்களில் திரிக!’

என்று கவிஞர் சேரன் அறம்பாடிய சம்பவத்தை நீங்கள் மறந்திருக்க முடியாது. மிருசுவில் கிராமத்தில் தென்னை மரத்தோடு தாழ்த்தப்பட்டவனொருவன் தறித்து வீழ்த்திக் கொல்லப்பட்ட அந்தக் கொடிய சம்பவம் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தது.

அது நடந்து முடிந்த கையோடு, இரவோடிரவாக எழுத்தாளர் டானியலின் வீட்டுக்குச் சென்று, அவர் கன்னத்தில் துப்பாக்கியை வைத்து ‘இது பற்றி நீ எழுதினால் இதுதான் உனக்குப் பரிசாகக் கிடைக்கும்’ என்று, அன்று ஆதிக்கத்திலிருந்த ஆயுதக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துச் சென்ற சம்பவமும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது. .

தனது தம்பிக்கு உயர்சாதியினர் ஏன் அடித்தார்கள் எனக் கேட்டுச் சென்ற அண்ணன் ஒருவனை, 54 தடவைகள் அறம்புறமாகக் கத்தியால் வெட்டிக் கொலைசெய்த கொடிய சம்பவமும் கொடிகாமத்தில் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.

எழுதுமட்டுவாலில் வாழ்ந்துவந்த ஒடுக்கப்பட்ட சாதியொன்றின் - பாவம், அப்பாவிப் பள்ளிப் பிள்ளைகளது பாடப் புத்தகங்களைப் பறித்து, தீயிட்டுக் கொழுத்திய சம்பவமும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.

புத்தூரிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டதும், நீர்வேலி, கரவெட்டி கிராமங்களில் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.

கரணவாய் மூத்தவினாயகர் கோவிலினுள் தாழ்த்தப்பட்டவர்கள் சென்று வழிபட முற்பட்டபோது, ஆயுததாரிகள் தந்திரமாகக் கோவிற் கதவைப் பூட்டி, திறப்பைத் தம்வசம் வைத்திருந்து, பின்னொருகால் சமயம் பார்த்துச் சாதிமான்களிடம் அதைக் கையளித்து, ஆலயப் பிரவேசத்தைத் தந்திரமாகத் தடுத்தாட்கொண்டமையும் இயக்கங்களின் காலத்தில்தான் நடந்தேறியது.

பசி, பட்டினி, பஞ்சம், போர், கலவரம், பிரளயம் என்பன உலகில் எங்கு நடந்தாலும் அடிநிலைவாழ் ஏழை எளிய மக்களே பெருந்தொகையில் பாதிக்கப்படுகின்றவர்கள்.

சுனாமியின்போது இந்தியக் கடற்கரையோரங்களில் பல்லாயிரக் கணக்கில் கடலால் காவு கொள்ளப்பட்டவர்களும் இவர்கள்தான். தமிழீழ யுத்தச் சூறைக் காற்று வீறுகொண்டு வீசியடித்தபோது, நம்பிக்கைத் துரோகம் செய்யத் துணியாதவராய் – தப்பியோடும் தந்திரம் தெரியாதவராய் - எண்ணிறந்த தொகையில் இம்சிக்கப்பட்டவர்களும் இவர்கள்தான்; இடராழிக்குள் அமிழ்ந்தி இறந்தழிந்து போனவர்களும் இவர்கள்தான்.

இந்தப் பச்சை உண்மையைத் தெரிந்துகொண்டும் – வரலாறு காணாத பேரழிவுகளைக் கண்முன்னே கண்டுகொண்டும் - தமிழன் மனம் இன்னமும் திருந்த மறுக்கும் குரூரத்தை என்னவென்று சொல்வது?

அண்மையில், உடுப்பிட்டியில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்களது வீடு வாசல்களிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டுள்ளார்கள். பருத்தித்துறை – வியாபாரிமூலையில் சவரத்தொழில் செய்து வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள், அங்குள்ள கிணறு ஒன்றிலிருந்து நல்ல தண்ணீரெடுத்துக் குடிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். கைதடியில் நடைபெற்ற ஓர் அன்னதானத்தின் போது, பசிக்குச் சாப்பிடச் சென்ற தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கைநீட்டி அடித்ததால் ஏற்பட்ட கைகலப்பு, பின்னர் வழக்கில் போய் முடிந்திருக்கின்றது!

இவைபோன்று இன்னமும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எண்ணிலடங்காச் சாதியக் கொடுமைகளுக்கெல்லாம் கொடுமுடி வைத்தாற்போல - இரண்டு வருடங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவுநாளில் உரையாற்ற வந்த முன்னாள் மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான இராசதுரை அவர்களைப் பார்த்து ”இந்தச் சக்கிலியனை ஆரிங்கை பேசக் கூப்பிட்டது?” என்று அவர்மீது சீறிப் பாய்ந்த, இந்நாளைய அரசியல்வாதி ஒருவருக்கு, இராசதுரையைச் சாடுவதற்குச் சாதியைவிட, சரியான ஆயுதம் வேறெதுவும் அகப்பட்டவில்லை!

“இத்தனை பெரிய போராட்டத்திற்குப் பிறகும் சிங்கள மேலாதிக்கத்திடமிருந்து மட்டுமல்ல, வெள்ளாள மேலாதிக்கத்திடமிருந்தும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் பிற அடுக்கினர் விடுதலையைப் பெறமுடியவில்லை’ என்று ஈழ மண்ணில் வாழ்ந்துவரும் கவிஞர் கருணாகரன் அண்மையில் பேட்டியொன்றில் கூறியுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தக்கது.

எனவேதான், போருக்குப் பின்னர் ஊரில் சாதியம் நீர்த்திருப்பதாகக் கூறுவது தவறு. அது நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

சரி, அதுதான் போகட்டும்! வெளிநாடுகளில் வந்து வாழும் தமிழன் தன்னிலும் திருந்தினானா? இல்லை! ஊரிலுள்ள இன்னானின் மகன் எனக்கு மேலை இருக்கவோ என்று, தான் வசித்த அடுக்குமாடி வாசஸ்தலத்தைக் காலிசெய்து வெளியேறிய தமிழன் கனடாவிலிருகின்றான்.

’ஏதோ பெடியள் காதலிச்சுப்போட்டுப் பிடிவாதமா நிக்கிதுகள். சரி, கலியாணத்தைச் செய்து வைப்பம். ஆனால் எங்கடையாக்களுக்கு ஒரு நாளைக்கு றிசெப்ஷன், உங்கடையாக்களுக்குப் புறம்பா இன்னொரு நாளைக்கு றிசெப்ஷன்’ என நிபந்தனை வைத்து, வாக்குவாதப்பட்டுக் காதல் இணையரைப் பிரித்தெடுத்த தமிழன் கனடாவிலிருகின்றான்.

வங்கி ஒன்றில் சக உழியர் ஒருவரின் சாதியைச் சொல்லி, ஏனைய இனத்தவர்முன் தலை குனியவைத்து அவரை வேலையைவிட்டு விரட்டியடித்த தமிழன் கனடாவிலிருகின்றான்.

கல்வியாலும் தொழிலாலும் மொழியறிவாலும் பண்பாலும் சிறந்து விளங்கிய தமிழ் மகன் ஒருவரை, மார்க்கம் நகரசபைத் தேர்தலில் தோல்வியுறச் செய்யவென, இரவிரவாய்ச் சாதி சொல்லிச் சுவரில் சாந்து பூசிய தமிழன் – இழிவுமொழி எழுதிய சுவரொட்டி சுமந்த தமிழன் கனடாவிலிருகின்றான்.

2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழ்க் குருதி ஆறாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த தருணம், ரொறன்ரோ நகரப் பிரதான வீதியொன்றில் தமிழ்மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஊர்வலமாய் ஊர்ந்துகொண்டிருந்த தருணம், வேற்றினத்தவர் அமைப்புக்களும் வீதியில் எம்மோடிணைந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்த தருணம், எங்களுக்காகக் குரலெழுப்பியபடி, ரொறொன்றோ சுத்திகரிப்பு ஊழியர் சங்கம் சுமந்து வந்த சுலோகத்தைக் கண்டு, ‘சக்கிலியத் தொழில் செய்யும் சங்கத்தின்ரை சப்போட் எங்களுகென்னத்துக்கு?’ என்று வாய் கூசாமல் கேட்ட தமிழன் கனடாவிலிருகின்றான்.

’அவற்ரை ஏறுபெட்டியையும் தளநாரையும் பாரன்…’ என்று சொல்லி ஏளனஞ்செய்து, எள்ளிநகையாடிய தமிழ் எழுத்தாளக் குஞ்சுகள் கனடாவில் இருக்கிறன.

’தமிழிசைக் கருவியான பறையானது, தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து’ எனப் பெருமைபடப் பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் அப்பெருமைக்குரிய பறையை எமது இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்யவெனத் தன்னை அர்ப்பணித்து, அயராது உழைத்துவரும் இளம் நங்கை ஒருத்தியின் மனதை வருத்தி அவமதித்த, நமது சமூகத்தவரும், நண்பர்களும், நம்பிக்கைக்குரியவர்களும் உற்றாராரும் உறவினரும் கனடாவில்தான் இருக்கின்றார்கள்.

பன்னெடுங்காலமாக யாழ் மண்ணில் ஒடுக்கப்பட்ட சமூகமொன்றை, சங்கம் அமைத்து, இரவு பகலாக வியர்வை சிந்தி வளர்த்தெடுத்த முதியவர் ஒருவர் கடந்த வருடம் கனடா வந்திருந்தார். பெருமக்கள் பலரும் அவர் குறித்து எழுதிய கட்டுரைகளின் திரட்டு ஒன்றினை இங்கு அவரது உறவினர் வெளியிட்டனர். நூல் குறித்து உரையாற்ற நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அதனால் அந்நூலை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது. விளைவாக அவர் மீதான எனது மதிப்பு உயர்ந்தது.

வெளியீட்டின் பின்னர் அவருடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தேன். ஆர்வமுள்ள நண்பர்கள் பலர் அதில் பங்குபற்றினர். பயன் மிக்கதொரு சந்திப்பு. அடிநிலைச் சமூகமொன்றின் அபரிமிதமான வளர்ச்சிப் பயணத்தின் வெற்றிகளையும் வேதனைகளையும் – வடுக்களையும் வாழ்மானங்களையும் ஒருசேர அவர் வாயிலிருந்து வரக் கேட்டறிந்தோம்.

ஊர் திரும்பிய அப்பெருமகனைப் புலன் விசாரணையாளர்கள் அடிக்கடி சென்று சந்தித்தனர்; திரும்பத் திரும்ப அவரைத் தேடிச்சென்று குறுக்கு விசாரணை செய்தனர். 80 வயதுக்கும் மேற்பட்ட நோயாளியான அந்தப் பெருமகனுக்கு, தொடர்ச்சியான இவ்வகை இடைஞ்சல்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாக, இப்போது அவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டவராய், பேச்சுமூச்சற்றவராய், நடமாட்டமற்றவராய் வீழ்ந்து முடங்கிப்போய்க் கிடக்கின்றார்.

’ஊரில தன்ரை சாதியைத் தலைநிமிரச் செய்தது போதாதெண்டு வெளிநாட்டுக்கும் வந்துவிட்டானோ’ என்று பொறாமையில் மனம் பொருமி, அவர் குறித்துப் பொய்யான தகவல்களை, இரகசியமாய் அனுப்பிவைத்த தடித்தனம் மிக்க சாதித் தமிழனும் கனடாவில்தான் இருக்கின்றான்.

இவ்வாறாக, எமது சமூகத்தில் சாதியம் இன்னமும் சாகவில்லை என்பதற்கான சாட்சியங்கள் ஏராளம் உண்டு. உடலை நோய் பீடித்தால் சிகிச்சை தேவை. நோய் தடுப்புக்கும், நோயெதிர்ப்புக்கும் மருந்துவம் தேவை. அவ்வாறே சமூகத்தில் நோயிருந்தால், எதிர்ப்பும் தேவை, தடுப்பும் தேவை. அதனைச் சாதிக்கவல்ல கருவிகளில் நிச்சயமாக எழுத்தும் ஒன்று என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

திரு. என்.கே. ரகுநாதன் அவர்களைப் போலவே, அடிமை முறையிலும் கொடுமையான இந்தச் சாதியத்துக்கெதிராக, எழுதுகருவி எடுத்த எழுத்தாளர்கள் அனைவரும் சமூக விடுதலைப் போராளிகளே. கருத்தியல் தெளிவுடனும் ஆழ்மன உணர்வுடனும் இவர்கள் வெளிப்படுத்திவரும் நினைவுகளையும் வாழ்வனுபவங்களையும் தேவைதானா எனக் கேட்டு எள்ளிநகையாடுவது, அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். அது அவர்கள் வாழ்ந்த சமூகத்துக்குச் செய்யும் நிரந்தர அவமானம்!


- கடந்த வருடக் (2015) கடைசியில் ரொறன்ரோவில் நடைபெற்ற திரு. என்.கே. ரகுநாதன் அவர்களது ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ நூலறிமுக நிகழ்வில் வழங்கிய உரையின் எழுத்துருவம். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.