மதிப்புரை: மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்

Saturday, 01 October 2016 04:49 - பேராசிரியர் இ. பாலசுந்தரம், தலைவர், கனடா தமி;ழ் எழுத்தாளர் இணையம் - இலக்கியம்
Print

 மரபுக் கவிதைப் பாவலன் தேசபாரதி-தீவகம் வே.இராஜலிங்கம்“தீவகம் தொட்டுத் துறைபனிச் சாரலும்
நாவகம் தந்தானெம் நம்நாடன் – பாவகத்துத்
தண்ணார் தமிழ்மணக்கச் சந்தமொடு தேனூற
விண்ணார் புகழ்பரப்பும் வேள்! – (காரையூரான்)


‘தீவகம் இராஜலிங்கம்’ எனத் தமிழ் எழுத்தாளர் உலகம் போற்றும் ஈழத் தமிழ்க் கவிஞரைக் கனடா ‘கதிரொளி’  வானொலி ‘ தேசபாரதி’ என விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இலக்கியத் துறையிலும் ஊடகத்துறையிலும் அனுபவம் உடையவராகக் கனடாவில் புகலிடம் கொண்ட இராஜலிங்கம் அவர்கள், ‘நம்நாடு’ எனும் வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அப்பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தி (1992-2003) ஓய்வு பெற்றவர். இராஜலிங்கம் அவர்கள், தாயகத்திலும் கனடாவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை அரங்குகளிற் பங்குபற்றித் தம் கவிதைகளை அரங்கேற்றியதோடு, பலகவி தை நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தாயகப் பற்றும், தமிழ்மீ தான தணியாத தாகமும், சமய ஈடுபாடுங்கொண்ட தேசபாரதி அவர்கள,; ஈழத்திலும், தென்னிந்தியாவிலும் நூற்றுக்கும் மேற் பட்ட திருத்தலங்களுக்குத் தான் மேற்கொண்டதிருத்தலப் பயணங்களின் பயனாக ஆயிரக்கணக்கான பாடல்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார். இதுவரை இவராற் பத்தாயிரம் பாடல்கள்வரை இயற்றப் பட்டுள்ளன. இவற்றைவிட இன்னும் மூன்று கவிதைப் படைப்புகள் நூலாக்கம் பெறத் தயார்நிலையில், வெளியீட்டுக்காகக் காத்துக்கிடக்கின்றன.

ஏற்கனவே வேவியூ(டீயலஎநைற) பெரியபிள்ளையார் ஆலயத்தின்மீது பாடப்பட்ட பாடல்களைக் கலைமாமணி உன்னி கிருஷ்ணன் அவர்களின் தலைமையிலான இசையாளர்களைக் கொண்டு பாடுவித்து ஆலய நிர்வாகம் இசைத்தட்டாக வெளியிட்டுள்ளனர். அதுபோன்றே ‘திருப்பொலி ஐயனார்’ மீது பாடிய பஜனைப் பாடல்களை இசையமைப்பாளர் முரளியின் இசையமைப்பில் ஈழத்துச் சாந்தன், அவரது பிள்ளைகள் ஆகிய இசைக் குழுவினரின் குரலிசையில்பாடி, இரண்டாவது இசைத்தட்டையும் வெளியிட்ட பெருமைக்குரியவர.; இவற்றுடன், ‘நிலப்பூக்கள்’ ‘அகவைப்பா’, ‘சரவணை கிழக்கு பள்ளம்புலம் திருமுருகன் பிள்ளைத்தமிழ்’, ‘திருப்பொலி ஐயனார் அருட் பாமாலை’, ‘தெய்வமும் தீந்தமிழும்- கீர்த்தனைப் பாடல்கள்’ (இது பல தெய்வப் பாடல்களின் தொகுப்பாகும்) என்பனவும் இதுவரை வெளிவந்த தேசபாரதியின் கவிதை நூல்கள் ஆகும்.

இன்றைய வெகுஜன ஊடகமாகத் திகழும் முகநூலிலும் ‘இராஜலிங்கம் வேலாயுதர்’ என்ற பெயரில் ஓயாது கவிதைகளைப் பதிவுசெய்யும் நித்தியக் கவிஞராகத் திகழும் ‘ தேசபாரதி’ அவர்கள், கனடா வாழ்க்கையில் தான்பெற்ற பல்வேறுபட்ட அனுபவப்பிழிவாக, பதினொரு பாகங்களில் ‘உறைபனிச்சாரல்’ என்ற கவிதைத் தொகுப்பைப் பாரதிவயல் வெளியீடாகத் தந்துள்ளார். தேசபாரதியின் ‘உறைபனிச்சாரல்’ என்ற இக்கவிதைநூல் ‘கனடாத் தமிழ் இலக்கியம்’ என்ற தளத்தில் தடம் பதித்திருக்கிறது

 

இத்தொகுப்பில் 1. உறைபனிச்சாரல்-கனடா வாழ்த்து, 2.தமிழ் வாழ்க 3. தமிழும் பண்பாடும், 4. உருகும் பாடல்கள்,  5. வாழ்த்துவோம் வாரீர், 6. இறைவம், 7. வானலைக் கவிகள், 8. அமரகாவியம், 9. சிறுவரோடும் பாடுவோம், 10. வானமே எல்லை, 11.பதினாறின் பதிவுகள் என்ற பகுதிகளில் 367தலைப்புக்களில் ஆயிரங் கவிதைகள் மலர்ந்துள்ளன.

ஈழத் தமிழரின் வரலாற்றில் இடம்பெற்ற வரலாற்றுத் துயரங்களால் தாயகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து, பிறநாடுகளிற் பல இலட்சம் மக்கள் புகலிடம் தேடிக்கொள்ள நேரிட்டது. இதனால் பல்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் ‘புகலிடத் தமிழர்’ என்ற புதுப்பெயரையும் பெறலாயினர். வேற்றுப்புல நாடுகளில் வாழும் புகலிடத் தமிழரின் தாயக ஏக்கம், புதிய வாழிடச்சூழல்கள், அச்சூழலிற் பெற்ற வாழ்க்கை அனுபவங்கள் என்பவற்றின் வெளிப்பாடே புகலிட இலக்கியங்களின் பரிணாமமாகும். கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் வாழும் ஈழத்தமிழ் இலக்கியவாதிகளிற் கணிசமானோர் தாயக விடுதலை வேட்கையுடனும் தமிழ்மொழிப் பற்றுடனும் செயற்பட்டு வந்துள்ளனர்; இவர்களின் படைப்புக்களில் மொழி வேட்கையும் தாயக அரசியல் எதிர்பார்ப்புகளும் முதன்மை பெறலாயின. இவை காலத்தின் பதிவுகளாக மட்டுமன்றி, புகலிட இலக்கியத்திற்குப் புதுப்பரிமாணமாகவும் மிளிர்கின்றன.

உறைபனிச் சாரலின் முதலில் அமைந்துள்ள கனடாநாடு பற்றிய அவரது பாடல்கள் கனடா நாட்டுக்குப் பெரிதும் நன்றி கூறுவதாகவே அமைகின்றன.

‘கனடிய நாடே எம்மைக்
காத்த பொன்வீடே
அனலிடைப் பட்ட போதும்
அகதியாய் ஏற்ற கூடே....”             ( பக்கம்-02)


‘நர்த்;தனப்பூமி’ என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் படிப்போரை எழுந்து நர்த்தனம் புரியச்செய்வன்

துருவத்துக் கரடியும் வீவரென் றணிலுமாய்
பென்குயின் ஆடவும் மேபிளின் நிழலுமாய்
பருவத்துக் குமரிகள் பரதமாய் நடையிடும்
பருவங்கள் மாறிடப் பட்டாடை மாறிடும்
தருவென்கும் அடர்காவும் தாரணிப் பறவையும்
தாயென்ற விதமாகிச் சந்ததி பலவாகித்
உருவத்தில் பெரியதாய் உலகோடுஞ் செறிவதாய்
உயிர்மேவித் துயர்காவித் தொழில்தந்த கனடியத்
திங்களே எங்கள் வீடே!        ஷஷ    (பக்கம்: 06)


சந்தச்சுவை மிக்க இப்பாடல்கள் படிப்போரை உணர்ச்சி வசப்படுத்தும் தன்மையது. தேசபாரதியின் கவிதைகளில் தமிழ் உணர்வு பொங்கிப்பாயும். தீப்பொறி பறக்கத் தமிழ்கவிதை அரங்குகளில் முழங்கிடும் இராஜலிங்கத்தின் உணர்வலைகளை தமிழ் என்ற பகுதியில் வரும் பாடல்களிற் கண்டு சுவைக்கலாம்,  உணர்வு பெறலாம். தமிழ்மொழியின் உயிர்காக்கும் நிலையில் புலம்பெயரந்தோர் வாழும் சூழலில் இத்தகு பாடல்கள் வெளிவருதல் காலத்தின் தேவையாகிறது. தமிழ்மொழியின்பால் எல்லோரையும் கவர்ந்திழுத்து,

“தாய்மொழி பயில்வீர்! அன்னைத்
தமிழ்மொழி பயில்வீர்! சின்னச்  
சேய்மொழி பயில்வீர்! காக்கும்
செந்தமிழ் பயில்வீர்! நாளை  
நோய்மொழி அரற்றுங் காலை
நின்தமிழ் மறக்கும் வேளை  
காய்மொழி கொள்வ தோடா?
கனித்தமிழ் அமுதங் கற்பீர்!” (பக். 53)


என்ற அறை கூவலுடன் கவிதை நூலின் பக்கங்கள் விரிகின்றன. கனடாவில் தமிழர் பண்பாட்டையும் மொழியையும் மக்கள் மயப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட ‘தமிழ்த்தெரு விழா- 2015’ நிகழ்வைப் பதிவுசெய்யும் கவிதையும் நூலின் முற்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் ‘தமிழ் எங்கள் உயிருக்கும் மேல்’ (பக்.64-65) என்ற தலைப்பில் அமைந்துள்ள கவிதை மாணவரும் வளர்ந்தோரும் கட்டாயம் படித்துச் சுவைக்கத் தக்கதாகும். அக்கவிதையின் ஒருபகுதி கீழே காணலாம்,

“தமிழெங்கள் நிலம்தந்த கோல்-சங்கத்
தமிழெங்கள் கவிதைக்குத் தகைதந்த சூல்!

தமிழெங்கள் பிரபஞ்சக் கோள்-வண்ணத்
தமிழெங்கள் இனம்காக்கக் கரமிட்ட வாள்!

தமிழெங்கள் கனலுக்குச் சால்-தெய்வத்
தமிழெங்கள் ஞானத்தின் வலைதந்த மால்!

தமிழிந்த அண்டத்தின் தாய்-ஊழித்
தமிழாகி மொழியாகி விழியான சேய்!

தமிழுக்குக் குறள் தந்த பேர்-தெய்வத்
தமிழின்பத் திருவாசத் தொடும்நின்ற வேர்!.....” (பக்கம்: 64-65)


இக்கவிதைத் தொகுப்பில் இராஜலிங்கம் அவர்களின் தமிழ் உணர்வும், தாயக ஏக்கமும் பெரிதும் தொனிப்பதை அவ தானிக்கலாம். இலக்கியம் என்பது படைக்கப்படும் காலம், அக்காலத்துச் சமூகம், நாட்டின் பொருண்மியம், அரசியல், மக்களது வாழ்வியல், கலை, பண்பாட்டுச் செயற்பாடுகள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைவதாகும். நாற்பது ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் கனடாத்தமிழரின் வரலாறும், வாழ்வியலும் பற்றி எழுதும் படைப்பிலக்கியகாரருக்கு எழுத்துச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது.
தமது கருத்துக்களையும் உணர்வுகளையும் எவ்வித தங்குதடையுமின்றித் தம்படைப்புக்களில் வெளிப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்புகளைத் ‘தேசபாரதி’ நன்கு பயன்படுத்தி யுள்ளார். சான்றாக மானிடா கொஞ்சம் பாரடா என்ற தலைப்பி னாலான இக்கவிதைகளை நோக்கலாம்:

“தீயைக் கொடுப்பவன் கையில்-நீ
தீயாய் மாறுவை தாமோ?
தாயைக் கொல்கின்ற மூடர்-அவர்க்குத்
தம்பியாய் இருப்பது வோடா?

நடிப்புச் சுதேசிகள் போலே-சில
நரிகள் மலிந்தன பாராய்!
முடிப்புக் கெமையிட லாமோ?-அந்த
மூடரை அடுத்திடப் போமோ! ....”. (பக்.43 )

புகலிட இலக்கிய வளர்ச்சியில் வானொலிகளின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. இதில், கனடா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தா பன வானொலி மிக முக்கியமானது. ‘ வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்கிறது’ என்ற கவிதை அரங்கம் பல வருடங்க ளாக இடம்பெற்றதும், அந்த வானொலிக் கவிதை அரங்கில் அரங்கேறிய பல கவிதையாளர் கனடாவின் சிறந்த கவிதைப் படைப்புக்களை வெளிக்கொணர்ந்ததும் குறிப்பிடத் தக்கவை. அதுபோன்றே கீதவாணி, கதிரொளி ஆகிய வானொலிகளிலும் கவிதை நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. தேசபாரதி இராஜலிங்கம் அவர்கள் கதிரொளி; வானொலிக் கவிதை அரங்குகளில் பங்குபற்றியவர். கதிரொளி வானொலியில் அவர் படைத்த கவிதைகளையே தனித்தொகுப்பாக வெளியிடலாம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பல்வேறு பண் பாட்டுச் சூழல்களில் அமைந்த புதுவாழ்வு முறைகளையும், புதிய சமூக, பொருளாதார அனுபவங்களையும் சித்திரிக்கும் இலக்கியங்களும் புதுமைநெறி கொண்டனவாக அமைதல் இயல்பே. பனிவயல், குளிர்காற்று எனப் புதிய இலக்கியக் களங்களைத் தமிழ் இலக்கியம் பெற்றுக்கொண்டதை ‘ உறை பனிச்சாரல்’ கவிதைகள் சான்றுபடுத்துவதை ஒரு கவிதையின் வாயிலாக நோக்கலாம்:

“வாட்டுங் குளிர்க்காடு வந்தே இக்கிழமை
காட்டும் பனிச்சாரல் கடும்வாதைக் குள்ளாக
பூச்சியத்தின் கீழே போய்விட்ட நாற்பதில்
வீச்சுக் குளிரில் வீழ்ந்த இந்நிலத்தின்
பட்டுப்; பனியுறைந்து பாரந் தாங்காமல்
கட்டு மரமெல்லாம் காலிடறி வீழ்ந்ததுவே!
மேப்பிள் மரமுறிந்தால் வீசுபனிக் காலமென
சோபை இழந்த செறிகாடு காட்டிவிடும்!
சொட்டுத்துணியில் தொடை தெரிய நின்றவர்கள்
முட்டக் கழுத்தோடும் முகமூடி இட்டும்
தெருவில் வலம் வருவார்!.....”          ( பக்.155 )


கனடாவிற் கால்புதைத்துக் கொண்டும், ஈழ மண்ணில் மனம் பதித்தும் எழுந்த இலக்கியப் படைப்புக்களே கடந்த காலங்க ளில் இங்கு பெரிதும் வெளிவந்துள்ளன. அவ்வகையிற் புதிய தளத்திலே தேசபாரதி அவர்களது பல கவிதைகள் ஆக்கம் பெற்றுள்ளதையும் காணலாம்.

20ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டம்வரை புகலிட இலக் கியத்தின் பாடுபொருளாகத் தாயக உணர்வுகள,; விடுதலைப் போராட்டம், இழப்புகள், தாயக மக்களின் வாழ்வியல் அவ லங்கள,; சீரழிந்து போன கலைபண்பாட்டு விழுமியங்கள் என்ப ன காத்திரமான இடத்தைப் பெற்றிருந்தன. படைப்பாளியின் மொழி வேட்கையும், கற்பனை வளனும், மொழி ஆட்சியும் அவர்களின் உணர்வுகளுக்குக் கலை இலக்கியங்கள் வடிகா லாகவும், காலத்தின் பதிவுகளாகவும், வரலாற்றுத் தேவைகளா கவும் அமையலாயின என்பதற்குப் பின்வரும் பாடல் வரிகள் சான்று பகர்கின்றன.

“ மணிநாடே வளநாடே மகிழ்வோடு எமையேற்ற                   மனிதத்தின் புனித ஏடே!
மனதென்னில் வசமிட்ட     வரைசொல்லி உருகிட
வகுத்தனை அழகு வீடே!
அணிநாடே அகிலத்தில் அகிலாக வரும்நாடே       
அற்புதத் தெழினி நாடே!
அகதிக்குப் புகலாக்கி அமைதிக்கு வழியாக்கும்                   ஆருயிர்த் தெய்வ நாடே!
அணிலோடும் திருநாடே அரும்பனிப் பறவைவாழ்                   ஆயிரம் வாவி நாடே!
ஆகாயம் பறந்திங்கே அழகாக்கும் வாத்துகள்                       அருமில்லங் கொண்ட நாடே!
கணிப்போடு உலகார்க்கும் கன்னியே என்னாவி                   காட்டினேன் ஏற்பை நீயே!
காதலே மாதுளக் கனியெனும் கனடியக்       
கன்னியே சொர்க்கத் தாயே     “     (பக்.11-12)


“பிரியமுள தாயோடும் பிறந்தபொன் பூமியை...
பெருந்துயர மாகவே பிசகிமனம் வாடவே...
அரியமன மக்களின் அர்ப்பணிப் பானதெம்.....
அகிலத்தில் ஓடியான் அகதியெனும் சூரனாய்.... (பக்.-4)


புதிய சூழல் - புதிய அனுபவங்களுடன் வாழ்ந்து, பல்வேறு சமூ கப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து, அல்லலுறும் மக்க ளின் பிரச்சினைகள் இவர்களின் கவிதைகளின் பாடு பொருள்க ளாகவும் அமையலாயின. இவர்களது கவிதைகள் தனி ஒருவர் தொகுப்பாகவும், பல கவிதையாளரின் ஆக்கங்கள் சேர்ந்த தொகுப்பாகவும் வெளிவந்து, கனடாத் தமிழ் இலக்கியப் பரப் புக்கு வளம் சேர்ப்பதாக உள்ளன.

தாயக உணர்வுடன் செயற்பட்ட பலர் தமது அரசியல் சார்ந்த உணர்வுகளைக் கவிதைகளாக எழுதிப் பத்திரிகை களில் வெளியிடுவதில் ஆர்வங்காட்டினர். அத்தகைய கவிதை களுக்கு பொதுவாக அனைத்துப் பத்திரிகைகளும் இடம ளித்தன. கவிதை ஆக்கங்கள் தொடர்ச்சியாக அனைத்து வெளியீடுகளிலும், விழா நிகழ்ச்சிகளிலும் இடம்பெறலாயின. பொதுவாகப் புலம்பெயர் இலக்கியப் படைப்புக்களிற் தாயக உணர்வுகள் உச்சம் அடைந்திருந்தன. தன் குடும்பம், ஊரார், உறவினர் மற்றும் தாயக மக்களின் அவலம், தாயக விடுதலை எனப் பரந்த எல்லைப் பரப்புடையதாக இவர்களது கவிதைகள் அமைந்துள்ளன.

தாயக மக்களின் தேசப்பற்றும், அதனால் அவர்கள்  அடைந்த அவலங்களும் இவர்களது கவிதைகளில் பளிச் சென்று உணர்வலைகளுடன் பாய்வதை அவதானிக்கலாம். அவ்வகையிலே தாம் பிறந்த ஊரின் சுவாசக் காற்றைச் சுவா சிக்கத் துடிக்கும் உணர்வலைகள் தேசபாரதியின் கவிதைகளி லும் வீசிக்கொண்டிருப்பதைக் காணலாம். சான்றாக,

“நான்நடந்த வயல்களெல்லாம் நரியிருக்குதே- இப்போ
நாய்பித்த துணியெனவே நிலமிருக்குதே
கூன்நிமிர்த்தி நின்றநிலம் கூடு இல்லையே-அங்கே!
கோதையரும் பேதையரின் குலமழிக்குதே..” (பக்.44)

எனவரும் பாடல் “மோக நிலம்” என்ற தலைப்பில் வருவ தாகும். இப்பாடல்களைப் படிக்கும்போது தாயக உணர்வலை மேலோங்குவதைக் காணலாம்.
பெண்ணியம் மேற்குலக நாடுகளில் இயல்பாகவே பேணப் படும் ஒரு விடயம். கனடாவில் ஆண்-பெண் சமத்துவம், கல்வி, தொழில் மற்றும் பல்வேறு விடயங்களிலும் ஆணுக்கும் பெண் ணுக்கும் சமவாய்ப்பும் சம உரிமையும் வழங்கப்படுகின்றன. ஆனால் ஈழத்தமிழர் இந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்களா என்ற வினாவை எழுப்பும்போது பல்வேறு விடயங்கள் கரிச னைக்கு உரியனவாகின்றன. இந்நிலையிலே, தேசபாரதி; பெண்ணின் பெருமை, பெண் விடுதலை என்பன பற்றிப் பாடிய கவிதைகளும் இத்தொகுப்புக்கு அணிசேர்க்கின்றன.

“மாதரார் வாழ்க அன்னை மகத்துவம் வாழ்க கற்பின்
சோதனை வாழ்க வஞ்சிப் பெட்டகம் வாழ்க வையக்
காதலே வாழ்க மன்றின் கருவறை வாழ்க வெற்றிச்
சாதனை வாழ்க நாளைச் சந்ததி சுமப்பாய் வாழ்க”   (பக.20;. )


உறைபனிச் சாரலின் சிறப்புக்களில் விதந்து கூறத்தக்க இன்னுமொரு விடயம் நம்மிடையே வாழும் பெரியார்கள்; உயிர் நீத்த சான்றோர்கள் பற்றிய பதிவுகளாகும். கனடாவில் எம் இனத்திற்காகப் பாடுபட்ட பெரியோர்களது பணிகள், அவர்களது வாழ்க்கை வரலாறுகள் பதிவாக வேண்டும். அப்பணியின் ஒரு பகுதியை இக்கவிதை நூல் செய்திருக்கும் பான்மையே புதுமை யானது. இப்பெரியார்களது பெயர்களும் ஆற்றிய பணிகளும் மறைந்து போகாமல் இருப்பதற்கு அவர்களை நினைவு கூர்ந்து பாடிய கவிதைகள் பதிவுகளாகின்றன. உலகப் பெரியார்கள் வரிசையில் அறிஞர் அப்துல்கலாம், நெல்சன் மண்டேலா கன டாவில் அறிஞர் சிவலிங்கம், அதிபர் கனகசபாபதி முதலான பலரைப் பற்றிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள் ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் மரபுவழிக் கவிதை படைத்தோரின் ஆக்கங்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெளிவந்துள்ளன. கனடாத் தமிழர் இலக்கியப் பங்களிப்பிற் காலத்தால் முந்தி இடம்பெறுபவர் ஈழத்துப் பூராட னார் க.தா. செல்வராஜகோபால் அவர்களாவர். மரபுவழிக் கவி ஞராகிய தீவகம் இராஜலிங்கம் அவர்கள் தன் யாப்பறி புலமை யை நன்கு பயன்படுத்தி; செய்யுள் மரபு வழியாகக் கவிதை படைப்பதில் நன்கு வெளிப்படுத்தியுள்ளார.; வெண்பா, அக வற்பா, அறுசீர் விருத்தம், எழுசீர் கழிநெடில் விருத்தம், எண்சீர் கழிநெடில் ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கொச்ச கக்கலிப்பா, இயல்தரவிசைக் கொச்சகக் கலிப்பா, கும்மி,; சிந்து, கண்ணி, கீர்த்தனை முதலான பல்வேறு பாவடிவங்களைக் கையாண்டிருத்தல் இக்கவிதைத் தொகுப்புக்கு மேலும் அணி சேர்க்கிறது.

உறைபனிச் சாரலில் இடம்பெறும் ஈழம், தமிழகம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள திருத்தலங்கள் மீது பாடப்பட்ட பாடல்கள் பக்திச் சுவையும் ஆன்மீகமுங் கொண்டமைந் துள்ளன. சிறுவர் இலக்கியப் படைப்புக்கள் தமிழில் மிக அரி தாகவே கனடாவில் கிடைக்கின்றன. அவ்வகையிற் கனடாப் பாடசாலைகளில் தமிழ் பயிலும் மாணவருக்குப் பயன்படத்தக்க பல பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன.

சான்றாக ஒரு பாடலை உங்கள் வீட்டுச் சிறுவரோடு சேர்ந்து பாடிப்பாருங்கள்:

'தங்கப் பாப்பா தங்கப் பாப்பா      
தமிழைப் என்றும் பேசப்பா
எங்கள் மொழியை எங்கும் பேச      
இல்லைத்; தடையப்பா! ! ” (பக்.193 )

தேசபாரதி அவர்கள் இத்தகு சிறுவர் பாடல்களை மேலும் பாடி, பாடலுக்கேற்ற ஓவியங்களுடன் தனிநூலாக வெளியிட்டால், அது மாணவரால் நன்கு வரவேற்கப்படுவதோடு. அவர்கள் தமிழ்மொழியை எளிதில் பயிலுவதற்குத் துணையாகவும் அமை யும் என்பதைக் குறிப்பிட விழைகின்றேன்.

2009ஆம் ஆண்டுவரை புகலிட இலக்கியத்தின் முக்கிய பாடுபொருளாக , விடுதலைப் போராட்டம் அமைந்தமை வர லாற்றுத் தேவையாயிற்று. தாயக உணர்வுகள், விடுதலைப் போராட்டம், மக்கள் அனுபவித்த பல்வகை இழப்புகள், தாயக மக்களின் வாழ்வியல் அவலங்கள், கலைபண்பாட்டு விழுமி யங்கள், போரினால் மக்கள் அனுபவித்த அலைந்துலைவுகள், அகதி வாழ்க்கை என்பன ஆக்க இலக்கியப் படைப்புகளின் காத்திரமான இடத்தைப் பெற்றிருந்தன. அவற்றிலே “வாக்குமூலம்” என்ற தலைப்பிலே வந்த கவிதைகள் சான்று பகர்கின்றன.

“அகிலமதில் ஓடியான் அகதியெனும் சூரனாய்
எரிபோடும் மண்ணிலே இலங்கைமா மேனியில்
என்தாயர் சுற்றத்தை இயமன்கை விட்டுமே
என்னாவி மீட்க வந்தேன்..”                  ( பக்...04)

இலக்கியம் என்பது காலத்தின் பதிவாகவும் கவிஞனின் அனுபவ வெளிப்பாடாகவும் அமைவதாகும்.

இவ்வகையில் “உறைபனிச் சாரல்” சமகால நிகழ்வுகள், ஈழத்தமிழரின் அவலங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் என்ப னவற்றின் பதிவாகவும், கவிஞரின் பக்தியனுபவப் பிழிவாகவும் அமைந்துள்ளது. பாடல்களிற் சொற்சுவை, பொருட்சுவை, இசைமெட்டுக்களுடன் அமைந்த சந்தச்சுவை, பல்வேறுபட்ட உணர்ச்சி வெளிப்பாடு என்பன பொருந்திக் காணப்படுதல் தேசபாரதியின் கவிதை ஆளுமையின் தனிச்சிறப்பெனலாம். மரபிலக்கியத் தளத்திலே தேசபாரதிக்குள்ள ஈடுபாடும் முதிர்ச்சியும் இத்தொகுப்பிலே துல்லியமாக வெளிப்பட்டுள்ளன. 1991இல் ஆரம்பித்த அவரது கனடா வாழ்க்கையில் மலர்ந்த கவிதை நூல்கள் தனியாக ஆய்வு அடிப்படையில் அணுகப்படவேண்டிய விசாலமான பரப்பினைக் கொண்டவை.

கனடாத் தமிழரின் புலம்பெயர் இலக்கியத் தோட்டத்திற்கு அவர் ஆற்றிய பணியினை அவரது கவிதை நூல்கள் சான்றுபடுத்துகின்றன. அவரது ஆக்கங்களாக வெளிவந்த இலக்கியப் படைப்புகள் கனடாத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனித்துவம் வாய்ந்தவை மட்டுமன்றி, கனடாத் தமிழ் இலக்கிய பாரம்பரியத்திலும் அவருக்குத் தனியான ஓரிடத்தைக் கொடுத்துள்ளன.

வாழ்க பல்லாண்டு பாவலன் வே. இராஜலிங்கம்!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

*கட்டுரையாளர்:  - பேராசிரியர் இ. பாலசுந்தரம், தலைவர், கனடா தமி;ழ் எழுத்தாளர் இணையம் -

Last Updated on Saturday, 01 October 2016 05:06