இலக்கிய அநுபவ அலசல் - 14

Tuesday, 08 August 2017 06:31 - கவிஞர். ஏ. இக்பால் - இலக்கியம்
Print

அஞ்சலி: மூத்த இலக்கியவாதி ஏ.இக்பால் மறைவு!- வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'பூங்காவனம்' சஞ்சிகையில் வெளியான அண்மையில் மறைந்த எழுத்தாளர் ஏ.இக்பாலின் 'இலக்கிய அனுபவ அலசல்' தொடரின் ஓர் அலசலை மீள்பிரசுரம் செய்கின்றோம். அனுப்பி வைத்த வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு நன்றி. -பதிவுகள்  -


இலக்கிய ஈடுபாடு பல்திறப்பட்ட நுணுக்கமான பார்வைக்கு வழிவகுக்கும். ஓர் இலக்கியப் படைப்பின் இயல்புகளை இனங்கண்டு அதனை விவரிக்கவும் விளக்கவும் இலக்கிய ஈடுபாடு ஏற்படுத்தும். வாசிக்கும் வல்லமையால் மனதை உறுத்திய குறிப்புக்களை எப்போதோ எழுதி வைத்திருந்தேன். அவற்றை இப்போது அலசும்போது புதுமையான எண்ணங்கள் எழுவதால் சிலவற்றை இங்கே தருகிறேன்.

01
1967 ஆம் ஆண்டு அ.ந. கந்தசாமி தினகரனில் ''மனக்கண்'' என்னும் சிறந்த நாவல் ஒன்றை எழுதினார். இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு வாசகன் பெறும் தகவல்கள் அளப்பரியன. அவற்றை அட்டவணை செய்து பார்த்தல் அவசியம்.

''உயிருடனிருக்கும்போது கண்தானம் சட்டப்படி செய்ய முடியாது'' என்ற உண்மை, வைத்திய சம்பந்தமான நூல் பிரான்ஸ் டாக்டர் பீஸரெரோலன்ட் என்பவர் எழுதிய புத்தகம், வைத்திய நுணுக்கங்கள், கிரேக்க நாடகாசிரியரான செபாக்கிளிஸ் எழுதிய ஈடிபஸ் ரெக்ஸ் நாடகம், துஷ்யந்தன் சகுந்தலை காதல், துட்டகைமுனுவின் மகன் சாலிய குமாரனுக்கும் பஞ்சகுலப் பெண் அசோகமாலாவுக்கும் ஏற்பட்ட காதல், இளவரசி மார்க்கிரட் காதல், அரிச்சந்திர புராணம், காந்திமகான் வாழ்க்கையை மாற்றிய காரணத்துக்கான நிகழ்வு, இளவரசர் அலிகான் ரீட்டா ஹேவொர்த் அந்யோன்யம், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியத், அறபு நாட்டுக் கதை லைலா மஜ்னு, பெர்னாட்ஷா கூற்றுக்கள், புறநானுற்றுச் செய்யுள்கள், இராமாயனக் கதை, நளன் தமயந்தி தூது, சிலப்பதிகார இந்திரத்திரு விழா, அலெக்சாந்தர் கோடியல் சந்திப்பு, சுவாமி விபுலானந்தர் செய்யுள், வள்ளுவர் குறள்கள், பழமொழிகள், வழக்குச் சொற்றொடர்கள்,  நீட்சேயின் தத்துவ விளக்கம், சத்தியவான் சாவித்திரி கதை, ஆங்கிலக் கவிஞன் மில்டனின் கவிதைகள், பிரசித்தி பெற்ற குருடர்கள் வரிசை:- துரியோதனனுடைய தந்தை திருதராஷ்டிரன், மாளவ தேசத்து சத்தியவானின் தந்தை, தேபஸ் மன்னன் ஈடிபஸ், யாழ்ப்பாடி, ஆங்கிலப் பெருங்கவிஞன் மில்டன், சிந்தாமணி என்னும் தாசியின் தொடர்பால் தன் கண்ணைத் தானே குத்திக்கொண்ட வைஷ்ணவப் பத்தன் பில்வமங்கள் கதை, சிந்தகன் என்னும் மேலைத்தேயச் சிற்பத் தோற்றம், பட்டினத்தார் பாடல்கள், இன்னோரன்னவைகள் அந்நாவலில் விரவிக் கிடப்பதைப் படிக்க முடியும். 02
தன் மனைவியரின் கற்பற்ற தன்மையைக் கண்ட மன்னன், தினமும் ஒரு கன்னிப் பெண்ணை மணந்து மறுநாள் அவளைக் கொன்றுவிடுகிறான். கன்னிப் பெண்களைத் தேடிக்கொடுப்பவர் மந்திரிதான். கன்னிப் பெண்கள் தேடுவது கஷ்டமான நிலை ஏற்படும்போது, தந்தையின் அவதியைக் கண்ட மந்திரி மகள், மன்னனை மணக்க முன் செல்கிறாள். மன்னனைக் கவர்ந்து இரவில் ஒரு கதையைச் சொல்லி சுவாரஸ்யமான இடத்தில் அதைக் காலையானதும் நிறுத்திவிடுகின்றாள். இவ்வாறு மன்னன் கவனம் கதையின் பக்கம் இருக்குமாறு செய்து ஆயிரத்து ஓராம் இரவு கழிந்த பின் மன்னனின் மனமே மாறிவிடுகிறது. இக்கதையை அறபியில் ஷஷஅல்புலைலா வலைலா|| என்பர். அதாவது ''ஆயிரம் இரவும் மேலும் ஓர் இரவும்'' என்பதாகும். இதிலுள்ள கதைகள் இருநூறுதான்.

03
''மணிக்கொடி காலம் தமிழ் இலக்கியத்தில் புதுமைகள் பூத்த காலம், புதுவகை முயற்சிகள் முகிழ்ந்த காலம், பல்வகை இலக்கியங்கள் புதிய வடிவம் பெற்று உருக்கொண்ட காலம், வரலாற்றில் ஒரு திருப்பு மையம்'' என்று தமிழ் அறிந்தோர் விளக்கும் பத்திரிகைதான் மணிக்கொடி.

உலக இலக்கியத்தில் வேகமாக வளர்ந்து வந்த சிறுகதைகளுக்குச் சமதையாகத் தமிழ் சிறுகதையும் வளர வேண்டுமென்று ஆழமான சிந்தனையில் ''மணிக்கொடி'' எழுத்தாளர்கள் இயக்க ரீதியாக எழுந்தனர். அதன் விளைவால் மணிக்கொடி எழுத்தாளர்களான கே. சீனிவாசன், வ.ரா. ராஜகோபால், பி.எஸ். ராமையா, ந. பிச்சமூர்த்தி, பெ.கொ. சுந்தரராஜன், புதுமைப் பித்தன், கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, இளங்கோவன், சிதம்பர சுப்ரமணியம், பி.எம். கண்ணன், மௌனி போன்றோர் தமிழ் நாட்டின் மணிக்கொடிக் காலத்தில் கதாநாயகர்களாகும் போது, இலங்கையிலும் அதன் தாக்கம் ஆகர்ஷித்ததன் விளைவாக சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர் கோன், ந. சிவஞானசுந்தரம் ஆகியோரும் சேர்ந்து அவ்விடத்தைப் பெறுகிறார்கள். இவர்களின் கதைகளில் அனேகம் கலைத்துவமுடையன. இளைய பரம்பரையினர் அவற்றைத் தேடிப்படித்தல் இலக்கிய பலத்தைக் கொடுக்கும்.

04
103 வருடங்களாக லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ''டிட்பிட்ஸ்'' என்னும் பத்திரிகை 1984 ஆம் ஆண்டு நின்றுவிட்டது. அதற்கான காரணம்: வேலை நிறுத்தம்தான். வாரம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் இதழ்கள் விற்பனையான பத்திரிகை இது. இப்பத்திரிகையின் துணுக்கு வடிவம் எல்லோரையும் கவர்ந்துவிடும். இந்த வடிவத்தைப் பின்பற்றி முன்பு தினகரனில் உதவி ஆசிரியராகயிருந்த ஸெயினுல் ஹுசைன் சுடச்சுடத் துணுக்குகளை சுவாரஸ்யமாகத் தருவார். வாசகர்கள் விழுந்தடித்து அதனையே முன்பு வாசித்துவிடுவர்.

05
ஆர்.எம். நௌஸாத் (என்.ஏ. தீரன்) என்பவரை ஆசிரியராகக் கொண்டு ''தூது'' என்னும் கலைத்துவ இலக்கிய ஏடொன்று சாய்ந்தமருதுவிலிருந்து வெளிவந்தது. சிந்தனைக்கு முதலிடம் கொடுக்கும் இச்சஞ்சிகை புதிய பரிமாணங்களையும், நவீன பரிணாமங்களையும் எதிர்பார்க்கின்றது. தரமான இலக்கியப் படைப்புக்கள், விமர்சனங்கள் கிடைக்காத காரணத்தால், கிடைத்தவை தரமில்லாததால், தமிழ் நாட்டில் ஷஷநடை|| என்றும் ஏட்டை நிறுத்திவிட்டனர். அவ்விதம் தூது நின்றுவிடக்கூடாது. இலக்கியவாதிகள் கைகொடுத்தல் அவசியம். ஆனால் ''தூது'' நின்றுவிட்டது.

06
கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றுள்ள படம்தான் ஷஷதபரனா கதா|| வாகும். இப்படம் ஓய்வு பெற்ற அரச ஊழியன் பென்ஷன் தொகையைப் பெறுவதற்குப் படும்பாட்டையே சுட்டிக் காட்டுகின்றது. இப்படத்தைத் தயாரித்து நெறிப்படுத்திய விருது பெற்ற கிரிஷ்காஸரவல்லி என்பவரைப் பாராட்டிய கர்நாடக அசை;சர் வீரண்ணா, ஷஷபென்ஷன் கிராஜுவிடி, ப்ரவிடன் பண்ட் போன்றவற்றை அரச ஊழியர்களுக்கு யதார்த்தத்தில் ஓய்வுபெறும் நாளன்றே கொடுக்க ஏற்பாடு செய்வேன்|| என உறுதிமொழி கொடுத்தார். இது ஒரு வெற்றிப் படம்தான்.

07
மகாகவி மில்டன் தமது பதினாறாவது வயதில் ஆங்கில மொழியில் அழகு நடையில் அரிய கருத்துடைய எளிய கவிதைகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். அவரது கல்லூரி ஆசிரியர்களே அவரது கவிதைகளைப் படித்து அவருடன் மரியாதையாகப் பழகினார். மில்டனுக்கு இது பிடிக்காததால் ஆசிரியர்களிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். கேம்பிரிஜ்ஜில் கற்கும் போதே அவரது கலைத்துவ மிக்க கவிதைகளால் அவர் புகழ் மேம்பாடடைந்தது.

இங்கிலாந்தில் முதலாவது சார்லஸ் மன்னன் ஆட்சியை விரும்பாத மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். புரட்சியின் அவசியத்தையும் மன்னனின் குறைகளையும் அறிந்த மில்டன் ஆவேசம் நிறைந்த அழகிய கவிதைகளால் மக்களின் ஆர்வத்தைத் தூண்டினார். புரட்சியால் முடியாட்சி கவிழ்ந்து, புதிய அரசாங்கத்தில் பொறுப்புள்ள பதவி மில்டனுக்குக் கிடைத்தது. பத்தாண்டு காலம் மில்டன் க்ரம்வெல் ஆட்சியில் ஆஸ்தான கவிஞராக விளங்கினார். பதவியின் பெருமையில் மில்டன் ஓய்ந்திருக்கவில்லை. ஆடம்பர வாழ்வை  அறவே வெறுக்கும் இயக்கமொன்றை ஆரம்பித்தார். மன்னர்களிடம் அபிமானமுடைய ஸ்டுவட் பரம்பரையினர் இவ்வியக்கத்தை எதிர்த்துக் கேலி செய்தனர். இவர்களது எதிர்ப்புகளுக்கெல்லாம் எளிமை வாழ்வின் மேன்மையைக் கவிதை மூலம் எழுதி வெளியிட்டு வெற்றி கண்டார்.

நாற்பத்தி மூன்றாவது வயதில் மில்டன் தன் பார்வையை இழந்துவிட்டார்.  ஷக்ரம்சிவல்| இறந்ததும் குடியாட்சி முடிவுற்றது. முதலாம் சார்லஸின் மகன்
பட்டத்துக்கு வர முயல்வதை மில்டன் கடுமையாக எதிர்த்தார். ஆனால் இரண்டாம் சார்லஸாக முதலாம் சார்லஸின் மகன் ஆட்சியைப் பெற்றான்.  இதனால் மில்டனின் கவிதைக்கு ஆதரவளித்தவர்கள் சிறைப்பட்டனர். கொடுமைக்குள்ளானார்கள். தூக்கிலுமிடப்பட்டனர். அரசாங்கம் மில்டனின் உயிருக்கே உலை வைக்க இருந்த காலம் அவர் லண்டனைவிட்டு நீங்கி எட்டாண்டு வாழ்ந்தார். இத்துன்பச் சூழ்நிலையிலும் அவர் எழுத்தைப் பலமாக்கினார். உலகம் வியக்கும் ஷஷஇழந்த சுவர்க்கம் - Pயுசுயுனுஐளுநு டுழுளுவு|| காவியத்தைப் படைத்து இன்பங் கண்டார்.

மில்டன் அரசாங்க ஆதரவை இழந்து, கண் பார்வையை இழந்து, மனைவியை இழந்து நின்ற போதும் நம்பிக்கையை இழக்காது உறுதியாகப் பற்றி நின்றார். இந்த நெருக்கடிக் காலத்தே ''இழந்த சுவர்க்கம்'' காவியத்தை அடுத்து, ஷஷமீண்ட சுவர்க்கம்||, ''சாம்சன்-டிலைலா'' ஆகிய உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களைப் படைத்தார்.

1974 ஆம் ஆண்டு நவம்பர் 08 ஆம் திகதி ஒரு கண்ணாடி மைக்கூட்டையும், இறகால் உருவான ஓர் எழுதுகோலையும் பிரிட்டிஷ் மியூஸியம் அறுநூறு பவுண் விலை கொடுத்து வாங்கி தம் கருவூலத்தில் பார்வைப் பொருளாகப் பத்திரப்படுத்தியது. இவ்விரு பொருட்களுக்கு உரிமையாளர் 1674 ஆம் வருடம் நவம்பர் 08 ஆம் திகதி மறைந்த மகாகவி மில்டன் அவர்களேதான். இந்த மைக்கூடும் எழுதுகோலும் சிருஷ்டித்த இலக்கியங்களின் பெருமைதான் இன்னும் பிரிட்டிஷ் மக்கள் இவற்றைப் பாதுகாத்துப் பார்வையிடுகின்றனர்.

மகாகவி மில்டனின் ''இழந்த சுவர்க்கம் - PARADISE LOST'' உலக காவியத்தின் கதாநாயகன் ''சாத்தான்'' ஆகும். இதே போல் ''இபுலீஸ்'' என்னும் சாத்தானைக் கதாநாயகனாக்கி, அழுத்கமயைச் சேர்ந்த ஆமீத் புலவர் என்பவர் 'இபுலீசு படைப்போர்' என்னும் காவியத்தை வெளியாக்கியிருக்கின்றார். அந்த நூலுடைய நாயகன் தன் வரலாறு கூறும் கவிதைகளைத் தருகின்றேன்.

''அந்தனர்வாக்குணர்ந்தழ் காமநன்கைரில்வாழும்
வெந்துறைமரைக்கார்கோத்ர      வழிபினிற்கணக்கர்மீறான்
சுந்தரப்புதல்வரான செய்குலெவ்வை மரைக்கார்
சந்ததிஅப்துர்ரகுமான் லெவ்வையின்றோன்றலானேன்

மதினாவைநாடியெங்கண் முகம்மதரெழுந்துசென்ற
வதிசயவருடமோரா யிரத்தின்மேன்முன்னூறாமாண்
டதனிலேமுகர்ரமாறாந் திகதிஜும் ஆவின்பின்னர்
வதுளையிற்கத்தீபுகாமி தென்பவன்பாடினானே.''

இவ்விதம் வாசித்த அநுபவத்தில் அறுநூறுக்கு மேற்பட்ட துணுக்குகளைப் பல வருடங்களுக்கு முன்னே எழுதி வைத்தவற்றில் சிலவற்றை உங்கள் முன் தந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்!!!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 08 August 2017 06:33