- பொ. கருணாகரமூர்த்தி , பெர்லின் -‘சூரியனிலிருந்து வந்தவர்கள்’ என்றொரு குறுநாவலை நான் 2000 ஆண்டு எழுதியிருந்தேன். விடுதலைப்புலிகளின் பல மனிதவுரிமைகளுக்கெதிரான செயற்பாடுகளை அந்நாவல் விமர்சிப்பதால் அப்போது அதனைப்பிரசுரிக்க பத்திரிகைகள்  தயங்கின. பின்னர் அதனை ஷோபாசக்தியும் சுகனும் சேர்ந்து தொகுத்த   கருப்பு    இலக்கியமலரில் 2003 வெளியிட்டனர்.

அதில் ஒரேயொரு ஆண்பாத்திரம், இலேசான  மனப்பிறழ்வு கொண்டவர். அவருக்கு காசி என்று பெயர், எப்போதும் கையில் தன் உயரமொத்த ஒரு  ‘கழி’யை வைத்திருப்பார். அவர் விரும்பும் வேளைகளில் முன்னால் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ , தரையில் அதை ஊன்றிவிட்டு அதையே ஒலிவாங்கியாக   எண்ணிப் பேசத்தொடங்கிவிடுவார். அரசியல், ஆன்மீகம், சமூகவியல், அறிவியல், தர்க்கம், மெய்யியல் என்று செறிவாகவும் மணிக்கணக்காகவும் அவரது பேச்சுக்கள் நீளும். பெம்மானின் தொண்டைத்தண்ணீர் வற்றி உலர்ந்து குரல் வராதபோது  பேச்சை நிறுத்திவிட்டு  அடுத்த  ஊருக்குப்  போய்விடுவார். சாப்பாட்டைக் கருதி  அவரை எவ்வூரிலும் கோவில் வட்டகைகளிலேயே காணலாம்.

அந்நாவல் எனது ஒரு பரிசோதனை முயற்சி. அதில் நிறைய உரையாடல்கள் இடம்பெறும், அவ்வுரையாடல்களாலேயே நாவல் முழுவதும் நகரும், ஆனால் பிற பாத்திரங்கள் எவரும்  அதில்    வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். ஆனாலும் அப்பாத்திரம் தன்னை வெளிப்படுத்தினால் எதிர்நோக்கும் அபாயத்தை வாசகன் உணர்ந்துகொள்வான்.

 

சமீபத்தில் பார்த்திபனின் ‘ஒத்தைச்செருப்பு இல 7’ என்றொரு படம் வெளிவந்திருக்கிறது. அதுவும் எந் நாவலைப்போலத்தான். அதில் வரும், மாசிலாமணி எனும் மனநிலை அவ்வப்போ பிறழ்ந்த ஒரு பாத்திரம் (பார்த்திபனே) மட்டும் வரும் / பேசும். ஒரு கொலைக்குற்றத்துக்காகச் சந்தேகத்தின்பேரில் கைதாகும் அவரின் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள், அதற்கு அவர் சொல்லும் தமாஷான பதில்கள், அவரின் நடத்தைகள் என்பவற்றினைக் காட்சிப்படுத்தல் மூலம் படம் முழுவதும் நகர்கின்றது, 102 நிமிடப் படத்தில் 95 நிமிடங்களும் பார்த்திபனையே  பார்த்துக்கொண்டிருப்பது  சலிப்பூட்டுகிறது. வேண்டுமானால் அதை ஒரு  ‘திறில்லர்’ என்றே  வகைப்படுத்தலாம். வேறு பாத்திரங்கள் எதுவும் இல்லாது கதையை  நகர்த்திச்செல்லும் அந்த உத்தி என்னுடையது. பார்த்திபன் நிறைய வாசிப்பவர். அவர் ஒருவேளை எனது நாவலை வாசித்து அதனால் Inspire / அகத்தூண்டப்பெற்று  அப்படத்தை இயக்கியிருக்கலாம்.   ‘சூரியனிலிருந்து வந்தவர்களை’ அவர்   படிக்காமலேகூட  ‘ஒத்தைச்செருப்பு இல 7’ ஐ இயக்கியிருக்கலாம்.  இதற்காகத் தீர்ப்பாயம் எதையும் நாடும் உத்தேசம் எதுவும் எனக்கில்லை. ஒரேமாதிரியான   கற்பனைகள் இருவருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்பதை நான் நம்புபவன்.

1987 ம் ஆண்டு நான்தான் அவரது முதற்படமான ‘ புதியபாதையை’   பெர்லினில் வெளியிட்டேன், அதன்மூலம்  ஒருவேளை என்னை அவர் அறிந்துமிருக்கலாம். ‘சூரியனிலிருந்து வந்தவர்கள்’குறுநாவல் ஜனவரி 2020 இல் வெளிவரவிருக்கும் என் ‘வெய்யில் நீர்’ குறுநாவல் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளது.

P.Karunaharamoorthy, Berlin.