- வெங்கட் சாமிநாதன் -நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி கால் நடையாகவோ ரயில் பெட்டிகளில் அடைந்தோ ரயில் பெட்டியின் மேலே உட்கார்ந்தோ வந்த ஆபத்தும் அவதியும் நிறைந்த கதைகளைச் சொன்ன ஹரிசந்த், உத்தம் சந்த் எல்லாம் என் செக்‌ஷனின் வேலை செய்கிறவர்கள். ஒரு எக்ஸிக்யூடி என்சினீயர், கேவல் கிஷன் என்பவர் தனியர். அவர் பெற்றோர்கள் கூடப் பிறந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்தை தன் கண்களாலேயே பார்த்தவர். அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை இங்கு தொடங்கியுள்ளதைப் பார்க்கும் போது எவ்வளவு மனத்திடம், முனைப்பு என்று நினைப்பேன். அவர்கள் அந்த சோகத்திலேயே ஆழ்ந்து விடவில்லை.

அவர்களில் ஒருவர் நான் பதினாறு வயதினன் என்ற போதிலும்  வேலையில் ”Boys service என்று  சொல்லி சேர்த்துக்கொள்” என்று சொல்லி என் சம்பாத்திய வாழ்க்கையின் முதல் தடைக்கல்லை அகற்றியவர். அந்தப் புதிய வழிமுறை ஊர் பேர் தெரியாத ஒரு சிறுவனை அப்படிச் சேர்க்க வேண்டும் என்று என்ன முடை? அந்த இடத்தில் ஒரு பஞ்சாபிச் சிறுவனை அவர் சேர்த்துக் கொண்டிருக்கலாம். மூல்தான் மாவட்டத்தைச்சேர்ந்த ஒருவருக்கு தஞ்சாவூர் சிறுவனிடம் கருணை தோன்றக் காரணம் என்ன? அவர் ஓய்வு பெற்று நானும் ஹிராகுட்டை விட்டு நீங்கி தில்லிக்கு வந்து மத்திய உள்துறை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மூன்று வருஷம் கழித்து ஜம்முவுக்கு மாற்றலாகியிருந்தேன். ஷேக் அப்துல்லாவுக்கும் மிர்ஸா அஃப்ஸல் பேக் போன்ற அவருடைய கூட்டாளிகளுக்கும் எதிரான கஷ்மீர் சதி வழக்கு நடந்து கொண்டிருந்தது ஜம்முவின் ஒரு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில். தினம் விசாரணை நடக்கும். காலையில் 7.30 லிருந்து மதியம் 1.00 மணி வரை. கோர்ட்டுக்கு தினம் போகவேண்டும். அன்றன்றைய விசாரணையின் குறிப்பெடுத்து அன்றே மாலை 4.00 வாக்கில் விமானத்தில் தில்லிக்கு அனுப்பவேண்டும். விசாரணை நடக்காத நாட்களில் அது கோடை நாட்களாக இருந்தால் ஸ்ரீநகருக்குப் போவோம்.

ஒரு நாள் ஸ்ரீநகர் ரெசிடென்ஸி ரோடின் ஒரு சதுக்கத்தில் லால் சௌக் என்று பெயர் என்று நினைவு. அங்கு ஒரு கடைக்கு முன் ப்ளாட்ஃபாரத்தில் மலிக் சாப் ( அதான் அந்த முல்தானி நிர்வாக அதிகாரி,(Admnistrative Officeer) மலிக் முரளீதர் மல்ஹோத்ரா), தன் பெரிய குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். விரைந்து நடந்து அவர் முன்னால் நின்றேன். அவர் திகைப்பும் மலர்ந்த முகமுமாக, ”அரே. இது சாமிநாதன் இல்லையா?, நீ இங்கே எப்படி வந்தாய்? கஷ்மீர் பாக்க  வந்தாயா, இல்லை இங்கே வேலை செய்கிறாயா? என்று கேட்டார். நான் சொன்னேன். தில்லியிலிருந்து  ஜம்முவுக்கு மாற்றலாகி வந்திருக்கிறேன். இங்கு அலுவலக சகாக்களோடு வந்தது லீவில் பொழுது போக்க.” என்று. ”சந்தோஷமாக இருக்கிறாயா? “எதிர்பாராமல் சந்தித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றேன். உடனே திரும்பி “இது , ஹிராகுட்டில் என்னிடம் வேலை பார்த்த சாமிநாதன்” என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.”  அவர்களில் ஒரு இளைஞனைப் பார்த்து (அது அவர் மகனாக இருக்க வேண்டும்) ”உன் கல்யாணத்திற்கு ஒரு பகவத் கீதை புத்தகம் பரிசு வந்ததில்லையா? அது இந்த சாமிநாதன் கொடுத்தது தான்” என்றும் கூடுதலாக ஒரு அறிமுகம் கொடுத்தார். கல்யாணத்தில் பகவத் கீதை புத்தகமா கண் முன் நிற்கும்? அதுவா ஞாபகம் இருக்கும்? இல்லை அது யார் கொடுத்தது என்று நினைவு இருக்குமா? அந்த பரிசைக்கூட நினைவு வைத்துக்கொண்டிருந்து, (அவன் ஏதோ தலையை ஆட்டினான், இருந்தாலும்) மகனுக்குச் சொன்னது மனதை நெகிழ வைத்தது இடையில் நான்கு வருடங்கள் கடந்திருக்கும். பார்ப்போம் என்ற நினைப்பே இருந்திராத ஒருவரை எதிர்பாராத இடத்தில் அவ்வளவு கனிவோடு சந்தித்து ஒரு சின்ன விஷயத்தை நினைவில் வைத்திருந்து அதை தன் மகனுக்குச் சொல்லும் கனிந்த மனதைவிட மனித உறவில் வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?

நான் சொல்ல வந்தது வேறு. ஆனால் எழுத்து வேறு பாதைக்குத் திரும்பிவிட்டது. நான் ஹிராகுட்டுக்கு வந்தபோது இருந்தது ஆர்.பி. வஷிஷ்ட் என்ற சீஃப் என்சினியர் என்றேன். நான் வேலையில் சேருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு சீப் என்சினியர் அமர்த்தப்பட்ட போதிலும் வீடுகள் கட்டுவதும், மகாநதிக்குக் குறுக்கே ஒரு ரயில்/ரோடு பாலம் கட்டுவதிலுமே கழிந்தது. அதிலும் பாதி செலவை ஏற்றுக்கொள்ள வேண்டிய ரயில்வே அந்த பாலத்தில் ரயில் ஓட்டமுடியாது என்று நிராகரித்து செலவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்று நான் வேலைக்குச் சேர்ந்த போது கேள்விப்பட்டேன். இதனால் ஆர்.பி.வஷிஷ்ட்டுக்குப் பதிலாக அப்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்த துங்கபத்ரா அணைக்கட்டின் பொறுப்பாளராக இருந்த திருமலை அய்யங்காரை ஹிராகுட் அனைக்கட்டுக்கு சீஃப் என்சினியராக அனுப்பியது மத்திய அரசு. அவர் வந்ததும் வேலைகள் மிக துரிதமாக நடந்தன. அவரோடு துங்கபத்ராவில் வேலை பார்த்த தமிழ்த் தொழிலாளிகளும் அணைக்கட்டு வேலை முடிந்ததும் இங்கு வேலை தேடி திருமலை அய்யங்காரின் பின்னால் இங்கு வந்து சேர்ந்தனர். முன்னாலேயே சொல்லி யிருக்கிறேன், அவர்களது பெரும்பான்மை காரணமாக புர்லாவில் தொடங்கப்பட்ட சினிமா கொட்டகையில் ஒரு கட்டத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களே திரையிடப்பட்டன. அந்தக் கொட்டகை யில் தான், நான் சிவாஜி கணேசன் படங்கள் பராசக்தி, பாசமலர், எதிர்பாராதது, பின்,  நாகே/ஸ்வர ராவ் நடித்த தேவதாஸ், ஸ்ரீதரின் கல்யாணபரிசு எல்லாம் அவ்வப்போது வெளிவந்தவுடன் ஒரு சில மாதங்களின் இடைவெளியில் பார்த்தேன். பார்த்து ஜன்ம சாபல்யம் அடைந்தேன் என்றும் சொல்ல வேண்டும்

1956-ல் அணைக்கட்டு வேலைகள் மிக துரிதமாக முடிவடையத் தொடங்கின. ஆயிரக்கணக்கில் துங்கபத்ராவிலிருந்து வந்த தமிழ்க் கட்டிடத் தொழிலாளிகளும் திருமலை அய்யங்காருடன் ஹிராகுட்டைவிட்டுப் போய்விடுவார்கள். உள்ளூர்க்காரர்களான ஒடியாக்காரர்களுக்கு அணைக்கட்டு முடிந்தவுடன் அதை நிர்வகிக்கும் வேலையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மற்றவர்களுக்கு அங்கு வேலை இராது. அந்தக் கூட்டத்தில் தான்  நானும், மிருணால் காந்தி சக்கரவர்த்தி, தேவசகாயம் எல்லாரும்
அடங்குவோம். ஆனால், ஒரு முன் ஜாக்கிரதை உணர்வோடு, வருட ஆரமத்திலேயே எல்லோரும் வேறு வேலை தேடும் முயற்சியில் இறங்கினாரகள்.

முதலில் கழன்று கொண்டது ஹிராகுட்டுக்கு  வந்த புதிதில் எனக்கு ஆதரவாக இருந்து அலுவலக பால பாடங்கள் போதித்த செல்லஸ்வாமி. அவருக்கு தில்லி மத்திய அரசாங்கத்தில், Ministry of Labour என்று நினைவு, வேலை கிடைத்து விட்டது.  அந்த சமயத்தில் தான் பிலாய் உருக்கு ஆலையும் ஆரம்பிக்கப் பட்டது. அதில்  இங்கிருந்த FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்கள் பெரும்பாலோருக்கு வேலை கிடைத்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். நானும் இங்கிருந்து அங்கு வேலைக்குச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு அங்கு வேலையில் சேர உதவ முடியுமா என்று கேட்டு.. அவர் ஜே. ஆர். லாமெக் என்னும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த கிறித்துவ இளைஞர். தன் stenographer-ஐ என்னுடன் பகிர்ந்து கொண்டவர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை. தேவசகாயம், வேலு, ஆர். சுப்பிரமணியம் போன்ற என் அறையில் உடன் இருந்தவர்கள் இப்போது இல்லை. எனக்கு மூன்று வயது இளையவனான எல். சிவராமக்ரிஷ்ணன், அவனுக்கு அதிகாரபூர்வமாக என் வீட்டில் பாதி ஒதுக்கப்பட்டது. ஆக, இனி ஐந்து ரூபாய் வாடகை என்பது இரண்டரை ரூபாயாகக் குறையும். பின் எங்களை அண்டி வந்து எங்களுடன் குடியிருக்கும் ஒரு இளைஞன் பெயர் மறந்து விட்டது. ஒரு காலத்தில் ஏதோ ஒரு சத்திரம் போல் நிறையப் பேர் வருவதும் போவதுமாக கலகலப்புடன் இருந்த என் வீடு இப்போது மிகுந்த அமைதி நிறைந்த இடமாகிவிட்டது. இதற்கெல்லாம் மேலாக, ஹிராகுட்டிற்கு வந்த 1950 லிருந்து முதலில் ஹிராகுட்டிலும் இப்போது புர்லாவிலும் இங்குள்ள தமிழர்களுக்கு உணவளித்து வந்த சங்கரய்யரும் தன் மெஸ்ஸை மூடிவிட்டார். அதனால் எனக்கொன்றும் அதிக பாதிப்பு இல்லை. தமிழக உணவை விட பஞ்சாபிகளின் உணவை அதிகம் விரும்பிச் சாப்பிடும் பழக்கம் தானாகவே என்னில் படிந்து விட்டது. இதைச் சொல்லக் காரணம், ஏரியில் நீர் வற்றிவிட்டால் பறவைகள் எல்லாம் வேறிடம் நோக்கிப் பறந்துவிடுவது போல, புர்லாவும் ஹிராகுட்டும் கொஞ்சம் கொஞ்சமாகக் காலியாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து வந்தேன். ஆறு வருடங்களாக தினம் நாள் முழுதும் பழகியவர்களிடமிருந்து பிரிவது ஒரு மாதிரியான் சோக உணர்வைத் தந்தது தான். அந்த இடத்தோடு எனக்கு ஒன்றும் அதிக பிடித்தம் ஏற்படவில்லை. அது ஒரு சின்ன முகாம். தாற்காலிகமாக அணைக்கட்டு கட்டி முடியும் வரை தான் இருக்கப்போகிறோம். ஒரு சில ஆயிரம் பேர் தான் மொத்தம் ஆனால் தினம் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறோம். பெரிய நகர வாசிகள் இல்லை. ஒரு கிராமம் போல் தான். எல்லாம் சரிதான். ஆனால் பிரிய வேண்டும். பிரிந்தே ஆகவேண்டும் பிரிவு கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டு தான் இருந்தது. முதலில் தெரியாவிட்டாலும் பிரிந்தவர் உணர்வில் படும்படி அதிகமாகவே சோகம் கப்பிக்கொள்கிறது. அது எனக்கும் தானே. நானும் இங்கு எவ்வளவு காலம் இருக்கமுடியும்.? எங்கு போவது, எங்கு வேலை கிடைக்கும் என்ற சிந்தனைகள், நடைமுறைக்கான வாழ்வின் யதார்த்தமாகி முன் நின்றன. 

நான் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக தினசரிகளில் வரும் விளம்பரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முதலில் கண்ணில் பட்டது Northern Railway வெளியிட்ட ஒரு விளம்பரம். இனி விளம்பரம் செய்யும் இடங்களிலிருந்து அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், நீண்ட விடுமுறையில் வீட்டுக்குப் போவது என்பது சாத்தியமில்லை. புதிய இடத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமாவது ஆனபின் தான் அதைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். அது ஒரு பெரிய விஷயமில்லை தான்.

நண்பர்கள் சிலரிடம் அந்த பரபரப்பு எதையும் காணோம். சக்கரவர்த்தி, பஞ்சாட்சரம், போன்றோர் மிக அமைதியாகவே இருந்தனர். இன்னும் ஒரு வருஷமாவது கவலை இல்லாமல் இருக்கலாம் என்ற நினைப்பாக இருக்கும். “வேலை கிடைத்து விட்டது என்று வைத்துக்கொள், கிடைத்துவிடும். கிடைத்து விட்டால் உடனே போகவேண்டும். இவ்வளவு காலம் ஒரு அணை எழும்புவதைப் பார்த்துவிட்டு அதன் திறப்பு விழாவைப் பார்க்க வேண்டாமா, அதைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று வேலைக்கு அழைக்குமிடத்தில் சொல்லமுடியாது.” என்றார்கள். அதுவும் சரிதான். ஆனால் அதில் ஏதும் பெரிய கவர்ச்சி எனக்கு இருக்கவில்லை. வேலை கிடைக்கும் போது அதைத் தவறவிடுவதில் ஏதும் அர்த்தமில்லை. காப்பாற்ற, பண உதவியை எதிர்பார்க்கும் குடும்பம் ஒன்று இருக்கிறது. அந்த நினைப்பு ஒன்று இருந்தது என்றாலும் சோர்ந்து போய் தலையில் கைவைத்து உடகார்ந்து விடும் நிலையிலும் இல்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.