(28) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

Tuesday, 01 May 2012 16:50 - வெங்கட் சாமிநாதன் - வெங்கட் சாமிநாதன் பக்கம்
Print

- வெங்கட் சாமிநாதன் -நம்மவர்களுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு தரமும், பண்புமற்ற வியாபாரிகளின் சந்தைப் பொருட்கள் காலம் காலமாக பழக்கி விட்ட ரசனையை யாரும் கேள்வி எழுப்பாமல் இருந்தால் சுகமே இருப்பார்கள். அந்த கனவு சுகத்தைக் கலைத்து விட்டால் அவர்களிடமிருந்து தங்கள் ரசனை சார்பான வாதங்களோ பதில்களோ வருவதில்லை. சீற்றம் தான் கனல் அடிக்கிறது. அன்பர் பிரபாகர் என்னை மன்னிக்கவேண்டும்.  நான் மேற்சொன்ன இந்த தரமற்ற ரசனைக்குப் பழக்கப்பட்ட கூட்டத்தில் அவர் தனித்தவரல்லர். எத்தனியோ கோடிகளில் அவர் ஒருவர்.. அவர்களால் தான் தமிழ் சினிமா தொடர்ந்து ஜீவிக்கிறது, இன்னும் கீழ் நோக்கிய பயணத்தில். நான் மாதிரிக்காக ஒருவர் பெயரை, நான் எழுதியதுக்கு பதில் தராது தான் சொன்னதையே சொல்லும் எதிர்வினையைத் தான் குறித்துச் சொன்னேன். அதைச் சுட்டிய பிறகும் அவர் நான் கேட்ட கேள்விக்கு, சுட்டிய அவர் சொன்னதைச் சொல்லும் குணத்திற்கு பதில் சொல்லவில்லை.  ஆடுகளம் படத்தை குறைந்த சமரசங்கள் கொண்ட, மறு[படியும் சொல்கிறேன், குறைந்த சமரசங்கள் கொண்ட, அதிக அளவு யதார்த்த முயற்சி என்றேன். காரணங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டேன் உதாரணத்திற்கு. ஆனால் இதை அன்பர் தனது காரணங்களைச் சொல்லி மறுத்திருக்க வேண்டும். இல்லை. மாறாக, இதைப் போய் யதார்த்தம் என்றும், தனுஷைப் போய் பெருமைப் படுத்துவதற்கு என்ன காரணம் என்றும் கேட்கிறார்.

மறுபடியும், பிரபாகர் என்னை மன்னிக்க வேண்டும். இதிலும் நீங்கள் தனித்து நிற்கவில்லை. நம் ரசனையை நம் குணத்தை யாரும் குறை சொல்லி விட்டால் வரும் ஆத்திரம் கோடி கோடியான பழக்கப்பட்ட ரசனைகொண்ட தமிழர்களில் அவரும் ஒருவர். நான் எழுதும் விஷ்யங்களைச் சுட்டி ஏன் மறுக்கிறார்கள் என்று சொன்னால் நல்லதாக இருக்கும். இது காபி என்றால் எதனின் காப்பி என்று சொல்ல வேண்டும். பெயர் நினைவுக்கு வர இல்லையென்றால், ஏன் காபி என்று தோன்றுகிறது என்றாவது  சொல்ல வேண்டும். இது வரை நான் பார்த்த சமீபத்திய, தமிழ்ப் படங்களில் தமிழ் மண்ணை ஒட்டிய படங்கள் என்று ஆடுகளம், தென் மேற்கு பருவக்காற்று அதுவும் ஓரளவுக்குத் தான், என்று சொல்கிறேன்.

இவையெல்லாம் ஆரம்ப முயற்சிகள், மூன்று தலைமுறையாக தடம் புரண்டு சென்று விட்ட தமிழ் சினிமா திரும்ப தன் மண்ணில் தடம் பதிக்க முயலும் ஆரம்ப கட்டங்கள். இதை நாம் சுட்ட வேண்டும். இந்த முயற்சிகளைப் பாராட்ட வேண்டும். அதில் காணும் சமரசங்களை, தான் வாழும் வாழ்க்கையைப் பிரதிபளிக்கும் முயற்சியில் காணும் தடுமாற்றங்களையும் சொல்ல வேண்டும்.  ஆடுகளத்தில் நான் காணும் நல்ல மாற்றங்களையும் சொன்னேன்.

தென்மேற்குப் பருவக்காற்று, முழுக்க முழுக்க தமிழ் வாழ்க்கை சார்ந்தது. நாம். பார்த்தது தமிழ் கிராமங்களைத் தான். கிராம மக்களைத் தான். திருடர்களும், ஆடு மேய்ப்பவர்களும், பெண் தேடுபவர்களும், பழிவாங்கல்களும் எல்லாம் தான். அங்கு ஒரு அனன்யாவையோ ஷ்ரேயாவையோ கமலஹாசனையோ பார்க்கவில்லை. இந்தத் தலைமுறைக்கு இவர்கள் தானே நம் நினைவுக்கு உடனே வருவார்கள்.? முப்பது வருஷங்களுக்கு முன் கிராமத்தைக் காட்டுகிறேன் என்று புரட்சி செய்த பாரதி ராஜாவே அவர் காலத்திய ராதிகாவையும், ஸ்ரீதேவியையும் தான் பவுடர் பூசி, லிப்ஸ்டிக் தடவி கிராமத்துப் பெண்களாக நம் முன் வைத்தார். பின் என்ன மாரியாயியையும் பழனியம்மாவையுமா ஷூட்டிங்குக்குக் கூப்பிடமுடியும்? நம் நடிகர்கள் தான் அதற்கு ஒப்புக்கொள்வார்களா? ஸ்ரீதேவியோட டூயட் பாடறதுக்கும் வடுகபட்டி வேலாயியோட பாடி ஆடறதுக்கும் வித்தியாசம் இல்லையா?

சரண்யாவை கிராமத்துத் தாய் ஒருத்தியாகத் தான் பார்த்தோம். அவர் பாவனை செய்யவில்லை. வசனங்கள் பேசவில்லை. ஆனால் அவளுடைய தத்தாரியாகத் திரியும் மகனாக வந்தவர் களவுக்கூட்டதைச் சேர்ந்த பெண்ணிடம்  தன் காதலை வெளிப்படுத்தும் கட்டங்களில் இயல்பான பாவங்கள் இல்லை. இபபடிப் பார், இப்படிப் பேசு என் று இயக்குனர் சொல்லி, அதைச் செய்ய முயல்கிறார். தன் ஆடுகளைக் களவாண்ட பெண்ணிடம் எப்படி ஆசை வரும்? ஒரு தமிழ் நடிகர் இப்படி இயக்குனரிடம் பாடம் கேட்கமாட்டார். அவர் தன் இஷ்டைலில் பேசுவார். நடிப்பார். அப்போது தான் ரசிகர்களுக்கு விருந்து இருக்கும். இரண்டுக்கும் நடுவில் தடுமாறும் தடுமாற்றம் இயக்குனரது. கிராமத்துக் கூட்டங்கள், களவுக் கூட்டத்தில் சேர்ந்த பெண் சைக்கிளில் தப்பி ஓடுவதும், வீடு வந்ததும், சைக்கிளை சுவருக்கு அப்பால் தூக்கி எறிவதும், சுவர் தாண்டி வீட்டுக்குள் குதிப்பதும் இயக்குனரின் கிராம வாழ்க்கைத் தாகத்தைச் சொல்வன. ஆனால் தமிழ் சினிமாவின் மிகைப் படச் சித்தரிக்கும் மிகையுணர்ச்சி நாடகமாக்கும் குணமும் தவறுவதில்லை. சரண்யா வயிற்றில் கத்திக்குத்துப் பட்டு மரத்தடியில் சாய்ந்திருப்பவர், கிராமத்துக் காரர்கள் ஓடி வந்து அவர்களுக்குச் செய்தி சொல்லும் வரை அங்கு காத்திருப்பார். பின் புடவைத் தலைப்பைக் கிழித்து வயிற்றைச் சுற்றிக் கட்டிக்கொண்டு அந்த வயல்காட்டிலிருந்து தூரத்திலிருக்கும் ரோட்டுக்கு ஓடுவார். ஏற்கனவே இயக்குனரும் கதாசிரியரும் திட்டமிட்டது போல அவர் ரோட்டை அண்டியதும் தூரத்திலிருந்து ப.ஸ் வரும். பஸ்ஸில் ஏறியதைக் காட்டவில்லை. ஏறித்தானே டவுனுக்குப் போக முடியும்?.வயிற்றில் கத்திக் குத்தை விடுங்கள். வயிற்றில் வலி வந்தாலே அவ்வளவு தூரம் வயல் வரப்புக்ளில் நடந்து பஸ்ஸுக்காகக் காத்திருந்து டவுனுக்குப் போய் பின் ஆஸ்பத்திரிக்குப் போக என்னால் முடியாது. ஆனால் சரண்யாவுக்கு கொடுக்கப்பட்ட ரோல் வேறே ஆச்சே. சரி, கண்டக்டர் என்ன செய்தார்? முந்தானையில் தயாராக முடிச்சுப் போட்டு வைத்திருந்த காசைக் கொடுத்து, சரண்யா பஸ் டிக்கட் வாங்கினார் டவுன் போனதும் பஸ்ஸை விட்டு இறங்கி ஆஸ்பத்திரிக்கு நடந்து போயிருக்கிறார். ஆஸ்பத்திரி வாசலில் காவல்காரர் யாரும் அவரை நிறுத்தி, “ஏ புள்ளே நீ பாட்டிலே போய்க்கினே இருந்தா என்ன அர்த்தம்?: என்று அதட்டி நிறுத்தி காசு கழட்டச் சொல்லவில்லை ஆஸ்பத்திரியிலும் அவருக்கு உடனே சிகித்சை நடந்திருக்கிறது.. எல்லாம் இது பொற்காலம் என்று கழக ஆட்சியில் சொல்லியிருக்கிறார்களே. அதை நம் இயக்குனரும் கதாசிரியரும் நம்பியிருக்கிறார்கள். அடுத்த காட்சி நாம் சரண்யா ஆஸ்பத்திரியில் படுத்திருப்பதையும் கதை ஆசிரியர் எழுதி வைத்திருந்த வசனம் சொல்லும் வரை உயிரோடு இருந்து வசனம் சொல்லு முடித்ததும் கண்களை மூடி தலையைச் சாய்த்துக்கொள்கிறார். தாயின் வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா தத்தாரி மகன்? டயலாக் சொல்லி முடிக்கிற வரைக்கும் உயிரை கையில் பிடித்து டயலாக் முடிந்ததும் தலை தொங்குகிற காட்சிகள் எத்தனை தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம்?

களவுக் கூட்டத்தைச் சேர்ந்த பெண் சரண்யாவிடம் வந்து வீட்டு வாசலில் நின்று,” உன் மகனை உன் இஷ்டப்பட்ட பெண்ணுக்கே கட்டிக் கொடுத்துக்கோ, நான் தடையாக இருக்க மாட்டேன்,” என்று அழுது கொண்டே சொல்கிறாள். அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் சரண்யா அவள் திரும்பிப் போவதைப் பார்த்து, “ஏய், நில்லு, இங்கே வா” என்று கூப்பிடுகிறாள். மிக அழகான கட்டம். அந்தக் காட்சி அமைப்பும் சரண்யாவின் அந்த அதட்டலும் தீர்மான முகமும் மிக அழகானவை. மிக அரிதான காட்சி தமிழ் சினிமாவில். இது ஒரு முனை. இன்னொரு முனையில் நான் மேற்சொன்ன அபத்தக் காட்சி. இரண்டும் ஒரே கதாசிரியரிமிருந்து, இயக்குனரிடமிருந்து எப்படி பிறக்கிறது என்பது ஆச்சரியம். ஒரு முனையில் நுட்பமானதும் யதார்த்தமானதுமான  பார்வை. இன்னொரு முனையில் தமிழ் சினிமாவின் வழிவந்த அபத்தம்.  இதில் வரும் இரண்டு பெண்களுக்கும், சரண்யாவின் மகனாக வரும் ஹீரோவுக்கும் யாரைப் போடலாம் என்று ஆள் தேடி கோடம்பாக்கம் செல்லாதது ஒரு பெரும் ப்ளஸ் பாயிண்ட். எல்லாம் அசல் கிராமத்து முகங்கள். சாதாரண இளம் முகங்கள். இவ்வளவு தூரம் தமிழ் சினிமா வந்துவிட்டதே. மங்காத்தாக்களும், ஆளவந்தான்களும், யந்திரன்களும் கோலோச்சும் காலத்தில்

இதே போல இன்னும் ஓரிரண்டு. பார்த்த நினைவிருக்கிறது. உடனே இப்போது நினைவுக்கு வருவது மாயாண்டி தேவர் குடும்பம் என்று ஒரு படம். ஒரு பெரிய குடும்பம் இரண்டாகப்  பிளவு பட்டுப் போகின்றது. பல காட்சிகள், பல மனிதர்கள், பெண்கள் பேச்சுக்களும், நடப்புகளும் அத்தனை இயல்பாக எனக்கு மிகவும் ஆச்சரியப் பட வைத்தன. இவ்வளவு தூரம் தமிழ் சினிமா நகர முடிந்திருக்கிறதே என்று. அனேக இடங்களில், அதே சமயம் அது மிகவும் அபத்த மிகையுணர்ச்சி திருப்பங்களும் காட்சிகளும் நிறைந்து இருந்தது. லெனின் வேறு இடத்தில் சொன்னதை இங்கு சொல்வதென்றால், அவ்வப்போது ஒரு சில படங்களில் வரும் ஒரு சில மாற்றங்கள் கூட  Two steps forward and two steps backward  ஆகவே நிகழ்ந்துள்ளன.

இவையெல்லாம் சரியான பாதையில் முதல் அடிவைப்புகள். உடனே ஆவேசம் வந்து ஆஹா ஓஹோ என்று சாமியாட வேண்டியதில்லை. கமலஹாசனையும் ரஜனிகாந்தையும் பார்த்த உடனே நமக்கு ஏதோ சாமி வந்தது போல தரையில் உருண்டு அங்கப் பிரதக்ஷிணம் செய்யவோ மண் சோறு திங்கவோ ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒன்று சொல்லவேண்டும். இந்த மாதிரியான ஆரம்பக் கட்டங்களை வங்காளிப் படங்கள் ஐம்பதுகளிலேயே ஸ்தாபித்துவிட்டன. அத்தகைய விளைபூமியில் தான், சந்தைக்காக ஆபாசத்தையும் தரங்கெட்ட தனத்தையும் ரசித்துப் பழகிய மக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பின்னர் ஒரு சில வருடங்களில் வந்த சத்யஜித் ரேயுக்கோ, மிருணால் சென்னுக்கோ, ரித்விக் காடக்குக்கோ இருக்க வில்லை. அவர்களுக்குக் கிடைத்தது களை அகற்றிய உழுது சீராக்கப்பட்ட நிலம்.

நம் மண்ணில் மண்டிக்கிடப்பது கள்ளிக்காடு முள்ளும் புதரும் என்று சொன்னாலே ”பின் என்னய்யா மக்களுக்காகத் தானே அவர்கள் ரசனை அறிந்து படம் எடுப்பார்கள்?” என்று சீறிப் பாய்கிறார்கள் .உலக சினிமா அத்தனையையும் பார்த்து தன் கைவிரல்களின் பிடியில் வைத்திருப்பதாகச் சொல்லும் நம் உலக நாயகர்கள் சத்யஜித் ரே, மிருணால் சென் போன்றோரின் தோற்றத்துக்குப் பின் ஒரு அரை நூற்றாண்டு கழிந்த பின்னும், தசாவதாரம் போன்ற ஒரு மாயாஜாலத்தை, தன்னைச் சுற்றி எழுப்பி ஒரு ஒளி வட்டம் தலைக்குப் பின் சுழல்வதான மயக்கத்தில் ஆழ்கிறார்கள். சூப்பர் ஸ்டார்களோ, கம்ப்யூட்டர் விளையாட்டுக்களையே திரையில் பிரம்மாண்டமாக விஸ்தரித்துவிடுகிறார்கள் ”ஆஹா என்னா டெக்னீக்கு! என்னா டெக்னீக்கு? என்று நம் பிளந்த வாய்கள் பிளந்தபடியே உறைந்து போகின்றன.

சமீபத்தில் வலையில் இரண்டு படங்கள் பார்த்தேன். முரண், எங்கேயோ எப்போதோ. இவற்றைப் பற்றி அடுத்து சொல்கிறேன். . .  .


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 01 May 2012 16:52