மனிதாபிமானச் சிந்தனையாளன்!

Tuesday, 11 February 2014 19:44 - கே.எஸ்.எஸ்.சிவகுமாரன் - K.S.Sivakumaran Column
Print

'பிரேம்ஜி எழுத்துலகில் பொன்னாண்டு நிறைவு' என்னும் நூலினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1988இல் வெளியிட்டது.  இத்தொகுப்பின் பதிப்பாசிரியராகவிருந்தவர் மறைந்த எழுத்தாளர் என்.சோமகாந்தன். இத்தொகுப்புக்காக,  தான் பிரேம்ஜி பற்றி எழுதிய கட்டுரையினை எழுத்தாளர் பிரேம்ஜியின் மறைவினையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் [ 'பிரேம்ஜி எழுத்துலகில் பொன்னாண்டு நிறைவு' என்னும் நூலினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1988இல் வெளியிட்டது.  இத்தொகுப்பின் பதிப்பாசிரியராகவிருந்தவர் மறைந்த எழுத்தாளர் என்.சோமகாந்தன். இத்தொகுப்புக்காக,  தான் பிரேம்ஜி பற்றி எழுதிய கட்டுரையினை எழுத்தாளர் பிரேம்ஜியின் மறைவினையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் ]

1950களின் பிற்பகுதி. எனது 20களுக்குள் பிரவேசம். தமிழ் வெகுஜன ஊடகத்துறையைப் பரிச்சயப் படுத்திக்கொள்ளும் காலம். சுதந்திரன் பத்திரிகையின் வளர்மதிப் பக்கத்தில் பெரியவர் துரைசாமி ம.த. லோரன்ஸ் ஆகியோரின் கணிப்பீனூடாக ஆக்கங்கள் அப்பக்கத்தில் வெளிவரத் தொடங்கின. மூத்த முன்னோடிப் பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் வழிகாட்டலில் அப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில், இலங்கை தமிழ் அரசியற்துறையில் முக்கியஸ்தராக விளங்கப்போகும் இரத்தின சபாபதி (இணுவை மாறன்) அங்கு பணிபுரிந்தார். இவர்களுடன் இன்னுமொருவரும் அமைதியாக இருந்து எழுதிக்கொண்டிருப்பார். யார் அவர்? சிரிக்க மாட்டார். பார்வையிலேயே சீரியஸ் ஆன பிரமுகராக இருந்தார். விசாரித்தபொழுது, புதிய பார்வையில் பாரதிதாசனை எடைபோடும் எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்றார்கள். அப்பொழுதுதான் முதல் அறிமுகம். ஆயினும் அந்நியோன்யம் கிடையாது.

வாழ்க்கையின் ஓட்டம், தொடர்புகள் நெருக்கமாய் இல்லை.

பின்பு பல ஆண்டுகளுக்குப் பின் பருத்தித்துறை வியாபாரி மூலையில் இடம் பெற்ற 'முற்போக்கு எழுத்தாளர் மகாநாட்'டிலும், பின்னர் நடந்த கூட்டங்கள் மகாநாடுகளிலும், பிரேம்ஜியுடன் பேசிப்பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. ஆங்கில மொழியில் அவருடன் சம்பாஷிப்பது இலகுவாயிற்று. தமிழில் அவர் யாழ்ப்பாணத்து உச்சரிப்புக்கும், தமிழ்நாட்டு உச்சரிப்புக்கும் இடையில் கஷ்டப்பட்டுப் பேசுவதுபோல் பட்டது. எனக்கும் தமிழில் பேசுவதைவிட, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவரும் போல் அந்நாட்களில் இருந்தது. இப்பொழுது தமிழும் வாலாயமாகி விட்டது.

பிரேம்ஜியுடன் பழகத்தொடங்கியதும், அவர் தூரப்பார்வை கொண்ட ஆழமான, சிந்தனையாளர் என்பது புலப்பட்டது. அது மாத்திரமல்லாமல் balanced thinking எனப்படும் சமநிலைபேணும், அடுத்த பக்கத்தையும் சீர்தூக்கி எடைபோடும், சிந்தனையாளராகவும் அவர் இருப்பதைக் கண்டுகொள்ள முடிந்தது.

அதே வேளையில் , அவர் வரித்துக்கொண்ட கோட்பாடுகள், அரசியல் சித்தாந்தங்கள் காரணமாக, அவருடைய அறிக்கைகளும், தமிழ் நடைகளும், இலகுவானதாக அக்காலத்தில் அமையவில்லை. அந்த எழுத்து நடை எனக்கு எளிதில் புரிவதாய் அன்று இருக்கவில்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் தெளிவான இலகுவான நடையில் எழுதுகிறார். காலம் கனிந்து, புஷ்டியான ஆழமான, சிந்தனைத் தெளிவுள்ள எழுத்துகளை அவர் இப்பொழுது தருகிறார்.

பிரேம்ஜி ஓர் உன்னத மனிதாபிமானி என்பதை அவரை ஊடுருவிப் படம் பிடித்தால் தெரியவரும். வெளித் தோற்றத்தில் இறுக்கம், உள்ளே நெக்குருகும் ஒரு கனிவுப் பாறை.

ஆழ்ந்த சிந்தனை, புலமை, கனிவு மனிதாபிமானம், திட்டம் வகுத்துச் செயலாற்றும் பாங்கு, கருத்து முரண்பாடுடையவர்களுடனும் இணைந்து அவர்களை வென்றெடுக்கும் கலை - இவை போன்ற பண்புகளைக் கொண்ட பிரேம்ஜி ஞானசுந்தரன் , சகோதரக் கலைஞர்களுடனும், எழுத்தாளர்களுடனும் பரஸ்பர நல்லபிமானத்தைப் பெற்றுள்ளார்.

ஈழத்து முற்போக்கு இலக்கியத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை எடை போட நான் தகுதியற்றவன். ஆயினும் அவரை முதலில் ஒரு விரும்பத்தக்க மனிதனாகவே காண்கிறேன்.

அவருடைய ஞானமும், கருணையும், சுதந்திரமான போக்குகளும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நமக்குக் கிடைத்துவர அருள்புரிய வேண்டும். சமமானவன் என்று என்னைக் கருதி அவர் என்னுடன் பழகும் முறை நெஞ்சைத் தொடுகிறது. பெரியவர்கள் என்றுமே சிறுமை காட்டார்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Tuesday, 11 February 2014 19:54