By A.N.Kandasamy - அண்மையில் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'தீ' நாவல் பற்றி எழுதிய நூல் மதிப்புரையொன்றின் போட்டோப்பிரதி கிடைத்தது. 27/6.1962இல் வெளிவந்த இந்நூல் மதிப்புரை 'மரகதம்' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கருதுகின்றோம். ஒரு பதிவுக்காக அம்மதிப்புரையினை பிரசுரிக்கின்றோம். மேலும் 'அறிஞர் அ.ந.கந்தசாமி ஐஸன்ஸ்டைனின் 'பாட்டில்ஷிப் பாட்டெம்கின்' என்ற 1905இல் ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெளனத்திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனமொன்று 'பாரதி' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனம் விரைவில் பிரசுரமாகும். - பதிவுகள் -

ank_on_espo5.jpg - 20.50 Kbஒரு நந்தவனத்தில் முன்னேற்பாடு செய்துகொண்டபடி சரசு என்ற வேசியின் வரவை எதிர்பார்த்திருக்கிறான் ஒரு தலை நரைத்துவிட்ட பாடசாலை ஆசிரியன். காத்துக்கிடக்கும் இந்த நேரத்தில் அவனது மனம் பழைய ஞாபகங்கள் என்ற இரையை மீட்ட ஆரம்பிக்கிறது. படிப்படியாகக்காட்சிகள் விரிகின்றன.  பத்துப்பன்னிரண்டு வயதில் கமலா என்ற சிறுமியோடு மாப்பிள்ளை-பெண்பிள்ளை விளையாடியதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் முதலில் தோன்றுகின்றன. அடுத்து பள்ளிக்கூட விடுதி வாசமும், ஜோசப் சுவாமியார் சொல்லித்தரும் அதிவிசித்திர பாடமும் ஞாபகம் வருகின்றன.  பின்னர் பாக்கியம், சாந்தி, லில்லி ஆகியோருடன் கொண்ட காதற் தொடர்புகள் . இதில் லில்லியிடம்தான் உண்மையில் மனம் பறிபோகின்றது.  ஆனால் லில்லியோ அவளது தாத்தாவின் இஷ்டப்படி ஒரு டாக்டரை மணந்து விடுகிறாள். பின்னால் நிர்ப்பந்தச் சூழ்நிலைகளால் புனிதத்தை மணந்ததும், அவளோடு எவ்வித தேகத் தொடர்புமில்லாமலே காலம் கடந்ததும் ஞாபகம் வருகின்றது. ஆனால் மலடன் என்ற இழிவுரை அவனுடைய ஆண்மைக்குச் சவால் விட, மனக்கோளாறால் தோன்றியிருந்த நபுஞ்சக மறைந்தமையும், புனிதம் ஐந்தாறு தடவை கருச்சிதைவுற்று மாண்டதும் மனத்திரையில் நிழலாடுகிறது. இந்த வேளையில் இலக்கிய சேவை அவனை அழைக்கிறது. லில்லியின் காதலுக்கு உலை வைத்த தாத்தா ஒரு தமிழ்ப்பண்டிதர். அவர் மீது கொண்ட வெறுப்பு அவர் காத்த இலக்கிய மரபுகளைச்சிதைக்கும்படி அவனை உந்துகிறது.  சிதைக்கிறான். பின்னர் லஞ்சம் கொடுத்து ஒரு பட்டிக்காட்டு ஆசிரியனாகியமையும், திலகா என்ற சின்னஞ்சிறு பெண்ணோடு பழகி அவளைத்தன் ஆசைக்குப்பலியிட்டமையும் நினைவில் வருகின்றன. இந்நிலையில்தான் சரசுவின் சந்திப்பேற்படுகிறது. இந்த நினைவுப்பாதையின் முடிவில் சரசு எதிர்ப்படுகிறாள். ஆனால் சரசுவின் நாணமற்ற போக்கு பெண்களையே வெறுக்கச்செய்கிறது.  தீ அவிந்து விடுகிறது.  வீடு நோக்கி மீளும் கதாநாயகன் காதில் திலகா பூப்படைந்து விட்டாள் என்ற செய்தி கேட்கிறது.

பொன்னுத்துரையில் 'தீ' என்ற நாவலின் கதை இதுதான். சிறுகதை உலகில் நல்ல புகழ்பெற்ற பொன்னுத்துரையின் இந்த நாவலுமொரு நீட்டி வளர்த்தப்பட்ட சிறுகதைபோல்தான் தோன்றுகிறது. முதல் ஆறு அத்தியாயங்களும் வெறும் ஞாபகக்குவியல்கள். 7ஆம் அத்தியாயத்தில் திலகாவின் சந்திப்போடு தான் கதை தொடங்குகிறது. திலகாவின் சந்திப்பு, திலகாவின் வீழ்ச்சி, சரசுவின் தலையீடு, அவள் ஏற்படுத்தும் புயல், வேட்கைகளிலிருந்து விடுதலை- இவைதான் கதையின் சம்பவங்கள்.  இச்சம்பவங்களோடு கமலாவுக்கோ, பாக்கியத்துக்கோ, லில்லிக்கோ, புனிதத்துக்கோ, சாந்திக்கோ, ஜோசப் சாமியாருக்கோ எவ்வித சம்பந்தமுமில்லை. இது நாவல் என்ற ரீதியில் பலஹீனமாகத்தோன்றினாலும், அழகிய வர்ணனைகளும், அலங்கார நடையும், சித்திர விசித்திர சொல்லமைப்பும் கதையை ஆவலுடன் வாசிக்கும்படி தூண்டவே செய்கின்றன.

'தீ' துணிகரமான முயற்சி. மனக்கோளாறால் ஏற்படும் நபுஞ்சக நிலையும், அது திடீரெனத்தரும் வேகமும், சிந்தனையைத்தூண்டும் கட்டம். பல 'செக்ஸ்' அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் மன இயல் நபுஞ்சகத்தை ஒரு கதையில் யதார்த்த பாவத்தோடு பொன்னுத்துரைதான் முதலில் உபயோகித்திருக்கிறாரென்று  நினைக்கிறேன்.  பொன்னுத்துரையின் நடையைப்பற்றி ஒரு வார்த்தை. ஒரு வித கவிதா நயத்தோடு கம்பீரமாகச் செல்லும் அவர் நடை சில சமயங்களில் மக்கர் அடிக்கிறது. வசனத்தின் ஒலியினிமை என்ற மாயையில் சிக்கி பொருளற்ற சொற்களை மாலையாகக்கோர்க்கிறார் அவர். உதாரணமாகக் கீழ்க்கண்டவற்றைச்சொல்லலாம்.

"மலர்கள்.... கண்களில் அருவருப்புக்கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள .... அப்புறம்"

"அவள் என் குருதியுடன் கலந்துவிடும்; என் இதயத்துடன்  கலந்துவிடும். என் உணர்வுகளுடனும் கலந்துவிடும்.."

இப்படிப்பட்ட சிக்கலான பிரயோகங்கள், தெளிவற்ற வசனங்கள், தவறான அமைப்புகள் அடிக்கடி வருதல் வாசிப்பவருக்குச் சங்கடத்தையே விளைக்கிறது.  சொற்களைப் பொறுத்தவரையிலும் கூட பிரதேசப் பிரயோகங்கள் ஒரு கட்டுக்குள் இல்லாததால் கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சில சொற்களை மட்டும் இங்கு காட்டுகிறேன்.

டோக்கா, குதிரும், லோப்பு, சோங்கும், சலங்கும், இத்யாதி. இவைதவிர பல வசனங்கள் படாடோபமாகத்தொடங்கப்படுகின்றன. ஆனால் முடிக்காமல் விடப்படுகின்றன.  சில இடங்களில்  இப்படிப்பட்ட பிரயோகங்களுக்கு இலக்கியத்தில் இடமுண்டு என்பதை மறுக்க முடியாது.  ஆனால் இத்தகைய யுக்திகள்  மிக மலிந்த சரக்குப்போல் சமயா சமயம் இல்லாமல் உபயோகப்படுகையில் அவற்றுக்குள்ள மவுசு குறைந்துவிடுகிறது. ஆசிரியர் தனது எதிர்கால எழுத்துகளில் இதைக்கவனித்தல் நல்லது.

கதை அமைப்பையும், நடையையும் ஓரளவு கவனித்த நாம் இந்நூல் எத்தகைய தத்துவத்தை வாசகர் முன்னால் வைக்கிறது என்பதையும் கவனித்தேயாகவேண்டும். 'புலாலெழுச்சி கொண்டவர்களுடைய போராட்ட வரலாறுதான் மனித வாழ்க்கை என்று உலக சரித்திரத்தின் போக்கையே  மிகமிக இலகுபடுத்தி விடுகிறார் ஆசிரியர். 'பாலுணர்ச்சித்தான் வாழ்வின் ஒரேயுணர்ச்சி' என்ற முறையில் அவரது சிந்தனை சுழல்கிறது. ஆனால் இவை எவ்வளவுதூரம் உண்மை? நாடுகளும், இனங்களும், வர்க்கங்களும் தம்முன் நடத்தும் போராட்டங்களும், இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்தும் போராட்டமுமே  உலக வரலாற்றை உருவாக்குகின்றன.  இவற்றின் உயிர் மூச்சு பாலுணர்ச்சி என்று எவர்தான் கூற முடியும்? பொருளாதார காரணங்களே இப்போர்களின் அடி அத்திவாரமாக விளங்குகின்றன.  பாலுணர்ச்சியல்ல. பசியுணர்ச்சிதான் சமூக மாற்றங்களுக்குக் காரணம். இதனால் பாலுணர்ச்சியின் முக்கியத்துவத்தை குறைத்து அளவிடக்கூடாது.  நவீன மன இயலின் தந்தையாகிய சிக்மண்ட்பிரய்ட் (Sigmund Freud)  பாலுணர்ச்சியே மனித வாழ்க்கையின் அடிப்படையான சக்தி என்று வற்புறுத்தினார்.  ஆனால் இவ்வுணர்ச்சி பல சந்தர்ப்பங்களில் கரந்து மறைந்து  விடுகிறதென்றும், கலை உணர்ச்சி போன்ற  உன்னத உணர்ச்சிகளாக உயர்நிலை அடைந்து வெளிப்படுகின்றதென்றும் அவர் கூறுகின்றார்.  இதுவே Sublimation (உயர் நிலைத்திரிபு) எனப்படும். 'தீ' ஆசிரியர்  பாலுணர்ச்சியின் இந்தக்கோலத்தை வலியுறுத்தி இருந்தால் அவர் சொல்லும் கருத்தை நாம் ஏற்றிருக்கலாம். ஆனால் அவர் வெறும் தோலுணர்ச்சியையே பெரிதுபடுத்துவதும் அதுவே சரித்திரச்சகடையின் அச்சாணி என்று கூறுவதும் சமூக இயலுக்கும், மன இயலுக்கும் பொருந்தாதனவாகும்.

கதையின் முடிவில் ஆசிரியர் பெண்களைத் தோல் ஜடங்கள் என்று பொருட்கள் போல் வர்ணித்தல் நம்மைத்திடுக்கிட வைக்கிறது.  பெண்ணும், ஆணும் சரி நிகரானவர்கள். அவர்கள் எவரது உடமைகளும் அல்ல என்ற முன்னேறிய கருத்துள்ள இந்த யுகத்தில் இவ்வர்ணனைகள் பட்டினத்தாரையும், அருணகிரியாரையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தத்துவரீதியில் இவை பிழையான எண்ணங்களாகும்.

இக்கதையில் பாலுணர்ச்சிக்கு ஒருவித அநாவசிய அழுத்தம் தரப்படுகின்றது.  யதார்த்த இலக்கியத்தில் பாலுணர்ச்சியை மூடி மறைத்து மழுப்புவதை நாம் ஆதரிப்பதற்கில்லை. ஆனால் அதனைப் பூதக்கண்ணாடியின் கீழ்க்கொணர்ந்து அநாவசியமாகப்பெரிது படுத்திக்காட்டுவதும் தேவையற்ற முயற்சியாகும். இவை தவிர இரட்டை அர்த்தம் தரும் அத்தியாயத்தலைப்புகள் நூலின் மதிப்பைக் கெடுக்கின்றன.

நூலில் தனது தந்தையை நெருப்பென்றும், தாயை நீர் என்றும் அடிக்கடி வர்ணிக்கும் கதாநாயகன் ஈடிபஸ் கொம்பிளக்ஸ் (Oedepus  complex) என்ற மனத்திரிபு நிலையின் பிரதி பிம்பமாகக் காட்சியளிக்கின்றான். தந்தையை எதிர்த்துத் தாயை நேசிக்கும் மனநிலை இது. கதாநாயகன் இப்படிப்பட்ட மனத்திரிபு நிலைகளில் சிக்கித்தடுமாறுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.

எது எப்படியாயினும் 'தீ' ஒரு துணிகர முயற்சி. அதை ஆதரிக்காதவர்களும் அதை அலட்சியம் செய்ய முடியாது.