30ம் அத்தியாயம் : தந்தையின் தியாகம்!

( தொடர் நவீனம் 'மனக்கண்' ) அத்தியாயம் 30: தந்தையின் தியாகம்!

சிவநேசர் சுரேஷுக்கு எழுதிய தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த டாக்டர் மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரி சென்னை நகரில் கீழ்ப்பாக்கம் என்னும் பிரதேசத்திலுள்ள சிம்சன் ஹைரோட்டில் அமைந்திருந்தது.  முழு இந்தியாவிலும் பெயர் பெற்ற தனியார் கண்ணாஸ்பத்திரியில் அதுவும் ஒன்று.  மோகன்ராவ் என்னும் பிரபல கண் வைத்தியரால் அமைக்கப்பட்ட அவ்வைத்திய நிலையம் இன்று அவரது மகன் டாக்டர் சஞ்சீவிராவால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

டாக்டர் சஞ்சீவிராவ் சாதாரணமாக அதிகாலை எட்டரை மணிக்கே தமது வைத்திய நிலையத்துக்கு வந்து விடுவார். அன்றும் அவர் அவ்வாறே வந்து தமது அறையிலுள்ள சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததுதான் தாமதம் வைத்திய நிலையத்தின் உதவி டாக்டர்களில் ஒருவரான கணேசன் அவரிடம் வந்தார்.

"சார்! ஒரு முக்கியமான விஷயம். பீர் மேட்டிலுள்ள டாக்டர் குமரப்பா நர்சிங் ஹோமிலிருந்து இரு கண்கள் நமது ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.  அங்கு இன்று காலை இறந்துபோன ஒரு  கோடீஸ்வரர் அவற்றைத் தானமாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறாராம். இது பற்றி அவர் விட்டுப்போன கடிதங்களில் ஒன்று உங்கள் விலாசத்துக்கு எழுதப்பட்டிருக்கிறது. கண்களை நான் குளிர்ப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்துவிட்டேன். கடிதம் இதோ இருக்கிறது" என்று கூறிக்கொண்டே பென்னாம் பெரிய ஒரு கவரை டாக்டர் சஞ்சீவிராவிடம் அவர் சமர்ப்பித்தார்.

டாக்டர் சஞ்சீவிராவ் கவரை எடுத்துப் பிரித்தார். அதில் ஒரு கடிதமும் இன்னும் இரண்டு கவர்களும் இருந்தன. அவற்றில் ஒன்று டாக்டர் சுரேஷுக்கு விலாசமிடப்பட்டிருந்தது. மற்றது "ஶ்ரீதருக்கு" என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் சஞ்சீவிராவுக்கு இப்படிப்பட்ட கடிதங்கள் வந்தமை வாழ்நாளில் இதுவே முதல் தடவை போலும்! ஆகவே அளவுக்கு மீறிய பரபரப்போடு தன் பெயருக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தை அவசரமாக வாசிக்கலானார் அவர். அக்கடிதம் பின் வருமாறு :-

மதிப்புக்குரிய டாக்டர் சஞ்சீவிராவ் அவர்களே!

எனக்கு உம்மைத் தெரியாது. உமக்கும் என்னைத் தெரியாது.  இருந்தபோதிலும்  உமது சேவை எனக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதால் இக்கடிதத்தை நான் எழுதுகிறேன்.  எனக்கு உம்முடைய சேவை கண் வைத்தியர் என்ற முறையிலும் ஒரு சக மனிதர் என்ற முறையிலும்  தேவைப்படுகிறது.  உமது வைத்திய சேவைக்கு இத்துடன் 3000 ரூபாவுக்குச் செக் இணைத்துள்ளேன். ஆனால் சக மனிதர் என்ற முறையில் நீர் செய்ய வேண்டுமென்று நான் கோரும் சேவைக்கு என்னால் என்ன பதில் செய்ய முடியும்? என் மனமார்ந்த  நன்றியை மட்டும் தெரிவிக்க முடியும்.  இறந்து போய்விட்ட நான் வேறெதையும் செய்யக் கூடிய நிலையில் இன்றில்லை.

சரி , சுற்றி வளைக்காமல் நேரே விஷயத்துக்கு வருகிறேன். இக்கடிதத்துடன் எனது இரு கண்களும்  உம்மை வந்தடையும். அவற்றைத் தயவு செய்து நான் சொல்வதுபோல்  நீர் உபயோகிக்க வேண்டும்.  அதுவே கண் வைத்தியர் என்ற முறையில் நீர் எனக்குச் செய்ய வேண்டிய சேவையாகும்.

இக் கண்களில் ஒன்று கண்ணிழந்துபோன என் மகன் ஶ்ரீதருக்குரியது. அதை இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து உம்மைக் காண வரும் டாக்டர் சுரேஷிடம் ஒப்படைக்கவும். அவர் வரும்வரை அதைப் பாதுகாத்து வைத்திருத்தல் உமது கடமை.

மற்றக் கண்ணை உங்கள் ஆஸ்பத்திரிக்கு நான் தானமாக வழங்குகிறேன். கண்ணிழந்து தவிக்கும் யாருக்கும் அதனை நீங்கள் உபயோகிக்கலாம்.

சகமனிதர் என்ற முறையில் நீங்கள் செய்ய வேண்டிய  உதவி இத்துடன் இருக்கும் இரு கடிதங்களையும்  உங்களைக் காணவரும் டாக்டர் சுரேஷிடம் கொடுப்பதாகும். அதில் எனக்கு உயிருக்கு உயிரான விஷயங்கள் பல அடங்கியிருக்கின்றன.  ஆகவே அவற்றை எங்கும் தவறவிடாது கண்ணேபோல் பாதுகாத்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.  இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இறந்துபோன நான் இவர்களுடன் பேச வேண்டிய விஷயங்கள் பல. அதற்கு இக்கடிதங்கள் மட்டுமே எனக்குள்ள ஒரே வழி. ஆகவே கடிதங்கள் பத்திரம். - எனது நன்றி உங்களுக்கு என்றும் உரியது.

இப்படிக்கு ,
நமசிவாயம் சிவநேசர்
'அமராவதி மாளிகை' -
யாழ்ப்பாணம்
(இலங்கை)

சஞ்சீவிராவ் கடிதத்தை வாசித்ததும் பீர்மேடு குமரப்பா      நர்சிங் ஹோமுக்குத் தொலைபேசியில் பேசினார்.  நர்சிங் ஹோமின் பிரதான டாக்டர் முஸ்தபா கான் பதிலளித்தார்.

" யாரது? டாக்டர் கான் தானே? இங்கே சஞ்சீவி பேசுகிறேன்."

"என்ன விசேஷம்?"

" என்ன விசேஷமா? காலையில் இரண்டு கண்கள்  உங்கள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திறங்கியிருக்கின்றன.  அது விசேஷமில்லையா? அத்துடன் என் பெயருக்கு விலாசமிடப்பட்ட ஒரு கடிதமும் வந்திருக்கிறது.  எல்லாம் புதுமையான அனுபவங்கள். யார் இந்த மனிதர்?  சிவநேசர் என்று பெயர். சிலோன்காரராம். அவர் இக்கண்களிலொன்றைத் தமது மகனுக்கு அளிக்க வேண்டுமென்றும் மற்றதை என்னிஷ்டம் போல் உபயோகித்துக்கொள்ளலாமென்றும் எழுதியிருக்கிறார். இதற்கு பீஸ்வேறு ரூபா 3000 அனுப்பியிருக்கிறார். ஆள் பெரிய பணக்காரராயிருப்பார் போலிருக்கிறதே!"

"பணக்காரரா, அவர் ஒரு கோடீஸ்வரர். இங்கு நமது ஏ கிரேட் வார்டில் தங்கியிருந்தார். நீரிழிவு- அத்துடன் வயிற்றிலே நோய் என்று சொல்லிச் சிகிச்சைக்கு வந்தார். சிறந்த படிப்பாளி. மிகவும் திறமையாக உரையாடுவார். சிகிச்சைக்கு வந்த அன்றே அவர் தம் கண்களைத் தானம் செய்திருப்பதாகக் கூறித் தமக்கு ஏதாவது நடந்துவிட்டால் கண்களைத் தவறாமல் எடுத்து ஆவனவற்றைச் செய்யவேண்டுமென்று சொல்லி, அதற்குரிய பத்திரங்களையும் காட்டினார்.  நான் அவற்றை வாசித்து அவரைப்பாராட்டி விட்டு "பயப்பட வேண்டாம். உங்களுக்கொன்றும் நடக்காது." என்று சொல்லிச் சென்று விட்டேன்.  இது நடந்து ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்றிரவு 6 மணிக்கு அவர் மேட்ரன் மூலம் எனக்கு ஒரு செய்தி அனுப்பினார்.  சரியாக 8.30 மணிக்குத் தவறாமல் தன்னைப்பார்க்கவேண்டுமென்பதே அது. ஆகட்டும் என்று அப்படியே எட்டரை மணிக்கு வந்தேன். ஆனால் நான் வந்தபோது அவர் ஒரு சவரக் கத்தியால் தன் கழுத்தை வெட்டிக்கொண்டு இறந்து போய்க்கிடந்தார்.  பக்கத்தில் பெரிய எழுத்துகளில் டாக்டர் கானுக்கு என்று விலாசமிடப்பட்ட ஒரு கடிதம் கிடந்தது.  பார்த்தேன். "அன்புள்ள டாக்டரே நன்றி. என் கண்ணை உடனே எடுத்துவிடுங்கள். இப்பொதுதான் நான் செத்தேன்.  இது முக்கியம்.  மிக முக்கியம்" என்று எழுதப்பட்டுக்கிடந்தது.  நான் திடுக்கிட்டு விட்டேன்.  என்றாலும் பொலிசாருக்கு அறிவித்துவிட்டு என் கடமையைச் செய்கிறேன்"

"டாக்டர் நான், நீங்கள்: சொல்வது மிகவும் சுவாரஸ்யமாயிருக்கிறது. அப்புறம்?"

"அப்புற்றமென்ன? அவர் கைப்பட பொலிஸ் அதிகாரிகளுக்குக் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தான் தற்கொலை புரிந்தே இறந்து போனதாகவும் யாரையும் யாரையும் சந்தேகிக்க வேண்டாமென்றும் கூற்யிருந்தார். இன்னும் தன் பிணத்தை சிலோனிலிருந்து வரும் டாக்டர் சுரேஷ் என்பவரிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டுமென்றும் எழுதியிருக்கிறார்.  நாங்கள் இங்கு அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்."

"அப்படியா? சுரேஷைப்பற்றி எனக்கெழுதிய கடிதத்திலும் அவர் பிரஸ்தாபித்திருக்கிறார். நானும் அவரைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.."

"டாக்டர் சஞ்சீவி, இன்னொரு விஷயம். அவர் இங்கே வைத்திருந்த சூட்கேசில் ருபா 10,000 காசாக இருந்தது.  அதில் பாதியை ஆஸ்பத்திரிக் கட்டணமாக எடுத்துக்கொள்ளும்படியும் எஞ்சியதைத் தனது தனது அறையில்  வேலை செய்த நர்சுமாருக்கும் இதர ஊழியருக்கும் சம பங்காகப் பகிர்ந்துகொடுத்து விடவேண்டுமென்றும் எழுதியிருக்கிறார்.  இவை எல்லாவற்றையும் பார்த்தால் அவர் கோடீஸ்வரர் மட்டுமல்லர்; ஒரு பெரிய கொடையாளி போலவும் தோன்றுகிறது."

"ஆம் டாக்டர் கான், அவர் ஓர் அதிசயமான மனிதராகத்தான் தெரிகிறது.  என்னைப் பொறுத்த வரையில்  அவரது வேண்டுகோளைச் சரிவர நிறைவேற்றி வைக்க நான் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்வேன்."

"ஆம். அது நாம் செய்ய வேண்டிய கடமைதான். சஞ்சீவி. ஆனால் எந்த நடவடிக்கைக்கும் அந்த சுரேஷ் இங்கே வரவேண்டுமல்லவா?"

 

அதற்கு "ஆம்" என்று டாக்டர் சஞ்சீவி பதிலளிப்பதற்கும் அவருக்கு வேறெங்கோவிடத்திலிருந்து ஒரு 'ட்ரங் கோல்'வருவதற்கும் சரியாக இருக்கவே டாக்டர் கானோடு நிகழ்த்திய பேச்சை அவர் அத்துடன் நிறுத்தினார்.

தொடர் நவீனம்: மனக்கண் - அ.ந.கந்தசாமி - 30ம் அத்தியாயம் : தந்தையின் தியாகம்

இச்சம்பவங்கள் நடந்த அதே தினம் பிற்பகலே சுரேஷ் சென்னையை அடைந்து விட்டான். சென்னை அவனுக்குப் புதிய இடமல்ல.  ஏற்கனவே இரண்டு தடவை சென்னைக்கு அவன் வந்திருக்கிறான்.  ஆகவே எவ்வித சிரமுமில்லாமல் அவன் ஒரு ஹோட்டலுக்குப் போய் ஓர் அறையை ஒழுங்கு செய்து அங்கு தன் பெட்டி படுக்கைகளை வைத்து விட்டு உணவருந்திப் புதிய உடைகளை அணிந்துகொண்டு டாக்சி மூலம் சிம்சன் ஹை ரோட்டுக்கு - மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரிக்குப் புறப்பட்டான்.  அங்கே டாக்டர் சஞ்சீவி  அவனுக்காகக் காத்திருந்ததால் விஷயங்கள் மிக இலகுவாகிவிட்டன.  சுரேஷைக் கண்டதும் "நீங்கள் சிலோனிலிருந்தா வருகிறீர்கள்? அப்படியானால் நீங்கள்தானா டாக்டர் சுரேஷ்?" என்றார்.

'ஆம்" என்று பதிலளித்த டாக்டர் சுரேஷிடம் டாக்டர் சஞ்சீவி "அப்படியானால் இதோ இரு கடிதங்கள். இறந்துபோன திரு.சிவநேசர் இதை உங்களிடம் ஒப்படைக்கும்படி என்னிடம் அனுப்பியுள்ளார்" என்று சொல்லிக்கொண்டே சுரேஷிற்கும், ஶ்ரீதருக்கும் விலாசமிடப்பட்ட கடிதங்கள் இரண்டையும் சுரேஷிடம் ஒப்படைத்தார்.

டாக்டர் சஞ்சீவியின் வார்த்தைகளைக் கேட்ட சுரேஷ் திடுக்கிட்டு விட்டான். "என்ன சிவநேசர் இறந்துவிட்டாரா?" என்று திகைப்போடு கேட்டான்.

"ஆம், தற்கொலை செய்து கொண்டார்" என்று சஞ்சீவி அதற்குப் பதிலளித்தார்.  இதற்கிடையில் சுரேஷ் மிகுந்த ஆவலுடன் தனக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தை வாசிக்கலானான்.  கடிதம் பின்வருமாறு:

குமரப்பா நர்சிங் ஹோம்,
பீர்மேடு சென்னை,

அன்புள்ள சுரேஷ்,

ஶ்ரீதரைப்போல உன்னையும் எனது மகன் போல் நான் மதிப்பதனால்தான் நான் இக்கடிதத்தை உனக்கு எழுதுகின்றேன்.  இக்கடிதம் உனக்குக் கிடைக்கும்போது நான் இவ்வுலகில் இருக்க மாட்டேன்.  ஆகவே இனி என் துணை ஶ்ரீதருக்குக் கிடையாது.  நீயே அவனுக்குத் துணை. கிஷ்கிந்தாவில் தனியே இருக்கப் பயப்பட்ட அவனுக்கு  அவன் தனிமை நீக்கும் துணையாக நீ வந்து சேர்ந்தாய்.  இனி அமராவதியிலும் நீ அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.  எனது இவ்வேண்டுகோளை நீ மறுக்க மாட்டாயென்று நான் எண்ணுகிறேன்.  நீ சென்னை வரும்போது நான் பிணமாக இருப்பேன்.  இப்பிணத்தைச் சுடும் பொறுப்பு உன்னுடையது.  சுட்ட சாம்பலை 'அமராவதி'யில் புதைக்க வேண்டும்.  ஆனால் இதை இன்றிலிருந்து இரண்டு மாதம் கழித்தே செய்ய வேண்டும்.  அதை நீ இரகசியமாக உன் வல்வெட்டித்துறை இல்லத்திலேயே வைத்துக் காப்பாற்று.  இன்னொன்று நான் இறந்த விஷயம் ஶ்ரீதருக்கோ, பாக்கியத்துக்கோ வேறெவருக்குமோ தெரியக்கூடாது. இது சம்பந்தமாக இத்துடன் ஶ்ரீதருக்கு ஒரு கடிதம் வைத்திருக்கிறேன். அதை நீ அவனிடம் அதில் குறிப்பிட்ட திகதியிலேயே அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதம் கழித்தே கொடுக்க வேண்டும்.

அது போக, சுரேஷ் நான் எதற்காகத் தற்கொலை செய்து இறந்து போனேன் என்று எண்ணுகிறாயா? ஶ்ரீதர் கண்ணில்லாது கலங்குவதை - சுசீலாவைக் காணத் துடிப்பதை என்னால் பார்க்கச்சகிக்க முடியவில்லை.  அவனுக்குக் கண்ணளிப்பதற்காகவே நான் சாகிறேன். இக்கடிதம் கிடைக்கும்போது என் இரு கண்களும் அகற்றப்பட்டிருக்கும். அவை இரண்டும் மோகன்ராவ் கண்ணாஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. டாக்டர் நெல்சன் ஶ்ரீதரனின் ஒரு கண்ணைக் கோர்னியாவை ஒட்டுவதன் மூலம் மீண்டும் பார்வை பெறச்செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார். ஆகவே எனது கண்ணில் ஒன்றை அவனுக்கு உபயோகிக்கவும், மற்றக் கண்ணை மோகன்ராவ் ஆஸ்பத்திரியிலேயே விட்டு விடவும், அவர்கள் இஷ்டம் போல் அதை உபயோகித்துக் கொள்ளட்டும்.

சுரேஷ்! என் மரணத்தை ஶ்ரீதர் இரண்டு மாதங்களுக்கு அறியக் கூடாது என்று நான் குறித்திருப்பது ஏன் என்று நீ ஆச்சரியப்படக் கூடும். அதற்குக் காரணம் நான் தற்கொலை செய்து என் கண்ணே தனக்குத் தரப்படுகிறது என்று தெரிந்தால் ஶ்ரீதர் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பது எனக்குத் தெரிந்திருப்பதுதான்.

கடைசியாக ஒரு வார்த்தை. நான் இறந்து போனேன் என்று நீயோ மற்றவர்களோ கலங்கக் கூடாது.  மரணம் ஒரு துன்ப அனுபவமென்று யார்தான் அறுதியிட்டுக் கூற முடியும்?  இறந்து மீண்டவர் எவரையும் நாம் இதுவரை கண்டதில்லையல்லவா? ஆனால் மனிதர்கள் தகுந்த நிரூபணமில்லாமலே இறப்பென்றால் துன்பமென்று தீர்மானித்துவிட்டார்கள்.  இவ்வித அவசரத் தீர்மானங்களுக்கு வருவது ஏனோ மனித ஜாதிக்கு வழக்கமாகிவிட்டது.  உனக்குத் தெரியுமா , மரணத்தறுவாயில் கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் என்ன சொன்னாரென்று? 'மரணம் என்பது ஓர் இனிமையான அனுபவமாகக்கூட இருக்கலாம்.  யாருக்குத் தெரியும்?  ஆகவே நான் மரணமடைகிறேன் என்று நானோ நீங்களோ கவலைப்படுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?' என்று சாக்ரட்டீஸ்  சொன்னதாக நான் வாசித்திருக்கிறேன். ஆகவே மரணம் துன்பமாகத்தானிருக்கும் என்று எண்ணி நாம் கவலைப்படுவது வீண்.

சுரேஷ்! உனக்கு நான் ஒரு கோடீஸ்வரன் என்பது தெரியும். என்னிடமுள்ள பணம் ஶ்ரீதருக்கு மிக அதிகம். ஆகவே அதில் சரி பாதியை நான் உன் பெயருக்கு எழுதி வைக்கிறேன்.  இது சம்பந்தமுள்ள என  மரணசாசனம் என் நியாயதுரத்தார் குமாரசூரியரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.  இம் மரணசாசனத்தில்  எல்லா வகையிலும் ஶ்ரீதருக்குச் சமமான உரிமைகள் என் சொத்தில் உனக்கும் உண்டு என்று  நான் எழுதியுள்ளேன். ஶ்ரீதர் நான் பெற்ற மகனானாலும் எனக்கு இன்று கொள்ளி வைக்கும் மகன் நீயல்லவா?

இக்கடிதத்தை இன்னும் நீளமாக எழுத எனக்கு ஆசைதான். ஆனால் என் கை அதற்கிடம் கொடுக்கவில்லை.  ஆகவே இத்துடன் நிறுத்துகிறேன்.  எனக்கு இவ்வுலகை விட்டுப்போவதில் துயரில்லை.   ஆனால் ஶ்ரீதரை, பாக்கியத்தை, முரளியை, சுசீலாவை, உன்னை, நன்னித்தம்பியை, சின்னைய பாரதியை, 'அமராவதி'யின் மான்களை, மயில்களை விட்டுப்பிரிவதென்பது எனக்குக் கஷ்டமாகத்தானிருக்கிறது.  ஆனால் ஶ்ரீதருக்குக் கண்ணளிப்பதற்காக நான் இதைச் செய்தேயாக வேண்டும். வேறு வழியில்லை. ஆகவே விடைபெறுகிறேன். எல்லாவற்றையும் நான் சொன்னபடியே செய்துவிடு.

என் மரணசாசனத்தில் உன்னை என் மகன் போலவே சொத்துரிமையுள்ளவனாக்கியிருப்பது என்னை விட ஶ்ரீதருக்கே அதிக இன்பத்தைக் கொடுக்கும்.  அவன் உன்னை எவ்வளவு விரும்புகிறான் என்பதை நான் நன்கு அறிந்திருப்பதனாலேயே இந்த ஏற்பாட்டை எவ்விதத் தயக்கமுமின்றிச் செய்திருக்கிறேன். மரண சாசனத்தில் நன்னித் தம்பியர், சின்னைய பாரதி தொடக்கம் வேலைக்காரர்கள் அவரை எல்லோருக்கும் என் நன்கொடைகள் இருக்கின்றன.  எனக்காக உண்மையாக உழைத்த அவர்கள் எல்லோருக்கும் என் நன்றியை நான் இந்த அன்பளிப்புகள்  மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நிற்க, சுரேஷ்! என் அன்புக்குரிய சுரேஷ்! கடிதத்தை இத்துடன் நிறுத்துகிறேன். நீ உடனே போய் நான் சொல்லியுள்ள யாவற்றையும் நிறைவேற்று.

இப்படிக்கு
நமச்சிவாயம் சிவநேசர்

கடிதத்தை வாசித்த அவன் பல இடங்களில் தன்னை அறியாமலேயே குமுறிவிட்டான். சாதாரணமாக அறிவுக்கு முதன்மை கொடுத்து உணர்ச்சிகளை அடக்கியே பழக்கப்பட்டு வந்தவனானாலும் சிவநேசரின் சொற்களின் சக்தியை அவனால் அன்று தாங்க முடியவில்லை. அவனை அறியாமலே கண்ணீர் விட்டுக் கலங்கிய அவனது நிலையைக் கண்ட டாக்டர் சஞ்சீவிராவ் அவனை ஒரு நாற்காலியில்  உட்காரும்படி செய்து தேறுதல் கூறினார்.  ஆனால் என்ன தேறுதல் கூறியும் அவனது துயரம் சிறிதும் அடங்குவதாயில்லை. 'சிவநேசர் எத்தகைய ஆச்சரியமான் மனிதர்!  பார்ப்பதற்கு எவ்வளவு கண்டிப்பான கரடு முரடான தோற்றம் உடையவராயிருந்தார். ஆனால் அந்தக் கரடுமுரடான தோற்றத்தின் பின்னே எத்தகைய அன்புள்ளம் அவருக்கிருந்திருக்கிறது. சாதாரணமாக கிஷ்கிந்தாவிலோ , அமராவதியிலோ என்னைக் காணும் போது என்னுடன் அவர் அதிகமாகப்பேசுவது கூட இல்லையே. வெறுமனே தலையை ஆட்டுவதுதானே அவரது வழக்கம்... ஆனால் இவற்றுக்குப் பின்னால் , பழக்கப்பட்டுப்போன அந்தஸ்து பரம்பரைப் பெருமை என்னும் இவற்றுக்குப் பின்னால் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்த அவரது கருணை உணர்வை இன்றல்லவோ உணர்கிறேன்.  பலாப்பழத்தின் வெளிப்புறம் கையை உறுத்தும் முட்களுடன் பார்ப்பதற்குக் கரடு முரடாகத்தானிருக்கிறது.  ஆனால் உள்ளே தேன் ச்ட்டும் கனிச் சுளைகளை அது தனித்து வைத்திருக்கிறது.  சிவநேசரும் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு அவரது உலக வாழ்வின் கடைசி நேரத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஒத்தாசை புரியக் கூடியதாயிருப்பது உண்மையில் எனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்புத்தான். தன்னுடைய அந்திய காலத்தில் அவரது மனக் குகையில் உலாவிய இரகசியங்களை அவர் இவ்வுலகில் என்னொருவருடன் தானே பகிர்ந்துகொண்டிருக்கிறார்' என்று பல எண்ணங்கள் அவன் சிந்தனையோட்டத்தில் மிதந்து வந்தன.


 

அதன் பின் சுரேஷ் டாகடர் சஞ்சீவிராவின் உதவியுடன் பீர்மேடு டாக்ட குமரப்பா நர்சிங் ஹோமுக்குப் போய், சிவநேசரின் பிணத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டான். இது சம்பந்தமாகப் பொலிஸாரிடமும் போய்ப் பல சட்ட சம்பந்தமான பத்திரங்களை அவன் பெறவேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் சென்னை டாக்டர்கள் அவனுக்குப் பேருதவி செய்தார்கள். இவ் விஷயங்களில் எவ்வித சிரமமும் இவனுக்கு ஏற்படாமல் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.  இன்னும் இக் காரியங்களில் சட்டரீதியான பிழைகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கவனித்துக்கொள்வதற்கு டாக்டர் சஞ்சீவிராவ் சென்னையின் சிறந்த வக்கீல் ஒருவரையும் சுரேஷிற்கு அமர்த்திக்கொடுத்தார்.

இச் சம்பவங்கள் நடந்த அடுத்த தினம் சிவநேசரின் பிணம் சென்னையில் ஒரு மயான பூமியில்  தகனஞ் செய்யப்பட்டது. இக்கிரியைகளில் பீர்மேடு ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் தாதிமார்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் கலந்துகொண்டனர். ஆஸ்பத்திரியின் பெரிய டாக்டர் முஸ்தபாகானும் சஞ்சீவ்ராவும் அங்கே பிரசன்னமாகவிருந்தார்கள்.

சுரேஷ் சிவநேசரின் பிணத்துக்குக் கொள்ளி வைத்தான். தனது பதினான்கு வயதில் தன்னைப்பெற்ற  தந்தைக்குக் கொள்ளி வைத்திருந்த அவன் இன்று தனது முப்பத்திநான்காவது வயதில் இன்னொரு  தந்தைக்குக் கொள்ளி வைத்தான்.  தானறியாமலே. தன்னை இரகசியமாக நேசித்து வந்த அந்தப்புதிய தந்தையின் பிரிவை அவனால் சிறிதும் தாங்க முடியவில்லை.

"எத்தகைய அபூர்வமான சம்பவம் இது. ஶ்ரீதர் செய்ய வேண்டிய வேலையை நான் இங்கே செய்ய வேண்டியிருக்கிறது. " என்று சிந்தித்த அவனது உள்ளம் சிவநேசருக்கும் தனக்கும் கொள்கைகளாலும் போக்குகளாலும் கூட எவ்வளவு வித்தியாசம் என்பதைப் பற்றியும் எண்ணியது. "அவரோ சமுதாய அமைப்புப்பற்றியும், அந்தஸ்து முதலிய விஷயங்கள் பற்றியும் பழைய கொள்கைகள் பூண்டவர்.  அவற்றைக் கட்டிக் காப்பதில்  அக்கறை கொண்டவர்.  நானோ அதற்கு மாறான சமதர்மக் கருத்துக்ள் பூண்டவன்.  மனித சமுத்துவத்தை ஏற்பவன். இருந்தாலும்  இக்கொள்கை வேறுபாடுகளெல்லாம் அவர் உள்ளத்தில்  ஊற்றெடுத்த அன்பு வெள்ளத்தில் அடிபட்டுப் போயின்வே" என்ற நினைவுகளுடன்  வானை நோக்கித் தீக்கொழுந்தாக  எரிந்துகொண்டிருந்த சிவநேசரின் பூதவுடலை நோக்கினான் அவன்.

அப்பொழுது அவன் தன் சிறுவயதில் கற்ற பட்டினத்தார் பாடல் ஒன்று அவன் நினைவிலே மிதந்து வந்தது.

முன்னையிட்ட தீ
முப்புரத்திலே
பின்னையிட்ட தீ
தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ
அடிவயிற்றிலே
யானுமிட்ட தீ
மூழ்க மூழகவே

தீ சுழன்று சுழன்றெரிந்தது. சுரேஷும் அவனது  புதிய சென்னை  நண்பர்களும் அதற்குப்புறமுதுகு காட்டி நடந்தார்கள்.  சாவைப் பின்னே விட்டு வாழ்வை நோக்கி நடந்தான் சுரேஷ். சிவநேசரை விட்டு ஶ்ரீதரை நோக்கி நடந்தான் அவன். வருங்காலத்தின் வாரிசான முரளியை நோக்கி நடந்தான் அவன்.

ஶ்ரீதருக்குப் பார்வை வேண்டும். அதுவே அவனது அடுத்த வேலை என்று தனக்குள் கூறிய அவனுக்குச் சிவநேசரின் உயிர்த்தியாகம் வள்ளுவரின் குறள் ஒன்றை ஞாபகமூட்டியது.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர். அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"

(அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கேயெனக் கொண்டிருப்பவர். ஆனால் அன்புடையவர்களோ எலும்பைக் கூடப்பிறருக்கு வழங்கிவிடுவார்கள்)
__________________ ___________________

அடுத்த நாள் அவன் இலங்கைக்குச் சிவநேசரின் கண்ணோடு  புறப்பட்ட போது விமான நிலையத்தில்  புதிய டாக்டர் நண்பர்கள் எல்லோரும் கூடலவனை வழியனுப்பி வைத்தார்கள்.  சிவநேசரின் கண்களைத்தவிர  அவனிடம் வேறு ஒரு முக்கியமான பொருள்களுமிருந்தன.  ஒன்று ஶ்ரீதருக்கு சிவநேசர் எழுதிய கடிதம். மற்றது சிவநேசரின்  அஸ்திக் கலசம்.  கெட்டி வெள்ளியினால் செய்யப்பட்ட அவ்வஸ்திக் கலசம் புனிதப் பொருள் பஓம் அவனுக்குத் தோன்றியது.  அதனால் பல தடவைகள் அதனைப்பல தடவைகள்  மார்பொடு இறுக அணைத்துக்கொண்டான் அவன்.

[ வளரும் ]


நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!  - வ.ந.கிரிதரன் -

காத்யானா அமரசிங்கஅறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம்.  அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.

இவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது  அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை. நாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.மீண்டுமொருமுறை நாவலின் அத்தியாயம் முப்பதைப் பெறுவதற்காகக் கமலினி செல்வராசன் அவர்களுடன் தொடர்புகொண்டேன். அதற்கவர் நாவல் தன்னிடமில்லை என்றும் , கிழக்குப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கி விட்டதாகவும் கூறினார்.

அதன் பின்னர் அத்தியாயம் முப்பதைத் தேடத்தொடங்கினேன். தினகான் ஆசிரியருக்கும் எழுதினேன். பதிலில்லை. எழுத்தாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டேன். பயனில்லை. இந்நிலையில் அண்மையில் ஓர் எண்ணமுதித்தது. எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் என்ன என்று. 'மனக்கண்'நாவல் பற்றிக் குறிப்பிட்டு, அத்தியாயம் முப்பது வெளியாகியிருக்கக் கூடிய காலகட்டத்தையும் குறிப்பிட்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் தேடிப்பார்க்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அதற்கவர் தனக்குத் தெரிந்த சக எழுத்தாளர் ஒருவர் அங்கு பணி புரிவதாகவும் விசாரித்துக் கூறுவதாகவும் கூறினார். விரைவிலேயே அவரிடமிருந்து மகிழ்ச்சிகரமான தகவல் கிடைத்தது. லேக்ஹவுஸ் நூலகத்தில் நாவல் வெளியான தினகரன் பிரதி இருப்பதாக அறியத்தந்திருந்தார். அண்மையில் அப்பக்கத்தினைபெற்று அதன் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.

இறுதியாக மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதுக்கான தேடல் மகிழ்ச்சிகரமாக முடிவுக்கு வந்தது உண்மையில் மகிழ்ச்சியே. இதற்காக எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். காத்யானா  அமரசிங்க இலங்கையில் அனைத்து மக்களும் பூரண உரிமைகளுடன் வாழ வேண்டுமென்ற நம்பிக்கையுள்ள எழுத்தாளர்களிலொருவர். தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுள்ளவர். தமிழர் மற்றும் இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளையும் உணர்ந்தவர். அண்மையில் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' சிங்கள மொழியில் வெளிவருவதற்கு மிகவும் உதவியவர். அத்துடன் நூல் பற்றிய விரிவான கட்டுரையொன்றினையும் லக்பிம தினசரியின் வாரவெளியீட்டில் எழுதியவர். அவருக்கு அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதைப்பெற்றுத்தந்ததற்காக மீண்டுமொருமுறை நன்றி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.