பாரதி இதழ்: புரட்சிப்படம்

Tuesday, 14 July 2015 23:20 - அறிஞர் அ.ந.கந்தசாமி அறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்
Print


- திரைப்பட மேதை ஐஸன்ஸ்டைன் (Sergei Eisenstein) அவர்களின் ஆரம்ப கால மெளனத்திரைப்படமான "பாட்டில் ஷிப் பாட்டைம்கின்" (Battleship Potemkin) பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி 'பாரதி' சஞ்சிகையில் எழுதிய விமர்சனக்குறிப்பொன்றின் 'போட்டோப்பிரதி'யொன்று அண்மையில் எமக்குக்கிடைத்தது. '20 வருடங்களுக்கு முன் தயாரித்த இப்படம்' என்று அ.ந.க இவ்விமர்சனத்தில் குறிப்பிடுவதிலிருந்து இக்கட்டுரை 1945இல் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது.ஒரு பதிவுக்காக அதனைப் 'பதிவுகள்' இணைய இதழில் பதிவு செய்கின்றோம். -

battleshippotemkin5.jpg - 74.81 KbBy A.N.Kandasamy 1905இல் உலகம் முழுவதும் அதிரும்படியான ஒரு சேதியைப் பத்திரிகைகள்  தாங்கி வந்தன. கொடுங்கோல் ஜார் மன்னனைக் கவிழ்த்து ரஷ்ஷிய பொதுஜனங்களின் ஆட்சியை நிறுவ அங்குள்ள மக்கள் நடத்திய முதலாவது மஹத்தான முயற்சி அது. இப்புரட்சியை பின்னால் 1917ல் நடந்த சோஷலிஸ மகா புரட்சிக்குப் பயிற்சிக்கூடமாக விளங்கியது என்று கூறுவார்கள் சரித்திரகாரர்கள். இந்த 1905ம் ஆண்டுப்புரட்சியின் நெஞ்சு சிலிர்க்கும் ஒரு கட்டத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்டது மெளனப்படமொன்று.  1925ல் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு பின்னால் உயர்தரமான  பின்னணிச் சங்கீதத்தைச்சேர்த்தார்கள். ஐஸன்ஸ்டைன் (Eisenstein) என்ற உயர்தர சினிமாக் கலைமன்னன் இன்று உலக சினிமா அரங்கில்  வகிக்கும் ஸ்தானத்திற்கு அடிகோலியது இதுதான். அமெரிக்கர், ஆங்கிலேயர் எல்லோரும் இன்று ஐஸன்ஸ்டைன்  என்ற பட முத்திரையைக் கண்டதும் சினிமாக் கோபுரத்தினுச்சி மணி இது என்று  முடிவு கட்டுகிறார்கள். அத்தகைய கற்பனா நிறைவு கொண்டது அவன் 'டைரக்‌ஷன்'.

"பாட்டில் ஷிப் பாட்டைம்கின்" (Battleship Potemkin) என்ற பெயர் கொண்ட இப்படம்போல்  அடக்குமுறைச் சட்டங்களுக்காளான படம் வேறு கிடையாது. பல ஐரோப்பிய நாடுகளிலும், காலனிகளிலும் ஏகாதிபத்திய எஜமானரின் சட்டங்களாலும் தடைசெய்யப்பட்டது இப்படம். இன்றும் பல நாடுகளில் தடைச்சட்டம் ரத்தாகவில்லை. சில நாடுகளில் படம் காட்ட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதோடு இணைந்த சங்கீதத்தின் மீது தடை. இது படம் போலவே சங்கீதமும் சக்திமிகுந்ததாக இருக்க வேண்டும். இரண்டும் இணையும்போது மக்களூணர்ச்சி கடல் போலப் பொங்கி விடுகிறது. என்பதை உணர்த்துகிறது.

முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் கலையின் கழுத்தை நெரித்துக்கொல்லும் கலைவிரோத கைங்கரியத்தில் எவ்வளவு ஜரூராக இருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.

இந்தப்படம் முதன்முறையாக இலங்கையில் சென்ற மாதம் காட்டப்பட்டது. கொழும்பு 'ஆர்ட் கலரி'யில் காட்டப்பட்ட இப்படம், பல பிரதிலகூலங்களுக்கு ஆளாயிற்று.  தகுந்த மண்டபம், தகுந்த திரை என்பன கிடையாது. சங்கீதம் இல்லாத மெளனப்படம்தான்.

அப்படி எல்லாம் இருந்தும் படம் ரஸிக்கக்கூடியதாய் இருந்துவிட்டால் அதே ஒரு அற்புதம் என்று கூற வேண்டும்.  ஆனால் படம் ரஸிக்கக்கூடியதாய் மட்டுமிருக்கவில்லை.  மந்திரத்தால் கட்டுண்டதுபோல்  மனதை ஆகர்ஸித்து கொடுங்கோன்மைகெதிராக உத்வேகத்தையும் ஆத்திரத்தையும் கொதித்தெழச்செய்த சினிமாக் காவியம் இது என்றுதான் கூறவேண்டும்.

கொந்தளிக்கும் கடல். அநீதியான அதிகாரிகளுக்கெதிராகக் கொந்தளிக்கும் மாலுமிகளின் புயல் வேகப்புரட்சி.  'புழுநெளியும் உணவு புசிக்க மாட்டோம், மனிதர் உண்ணும் உணவு நமக்கு .வேண்டும்' என்ற மாலுமிகள் கோஷம். தோழமை யிலும் சகோதரத்துவம் இணைந்த அவர்களின் ஏகோபித்த எழுச்சி. ஆயுதம் எல்லாம் அதிகாரிகளுக்கெதிராக! மாலுமிகளின் சொந்தக்கொடி ஏறுகிறது பாய்மர உச்சியிலே.

இந்த மஹத்தான நிகழ்ச்சியோடு ஆரம்பிக்கும் கதை வேஹத்தோடு பாய்கிறது. ஓடெஸாவில் பொதுமக்கள் புரட்சிக்காரரை ஆதரிக்கிறார்கள். துறைமுகத்தில் வந்து மாலுமிகளுக்கு உணவும் உத்ஸாகமும் தருகிறார்கள். மிலேச்ச ஜாரின் மிருக பலம் பட்டாள ரூபத்தில் கோர தாண்டவம் நடத்துகின்றது. ஒடெஸா படிகள்  எல்லாம் மக்களின் பணத்தால் நிறைகின்றன. தம் உரிமை கோரும் சகோதரரை ஆதரித்ததற்காகச் சண்டாளர் விதித்த சட்டம் இது.

ஆனால்...?

மாலுமிகளைக் கொல்ல ஜாரின் கடற்படை  செல்கிறது. அதிகாரிகளின் அட்டகாசச் சவுக்கடியில் துடித்து நிற்கும் ஜாரின் மாலுமிகளீடத்தும் அதிருப்திச் சின்னஙகள்!!

"தோழா சுடாதே - சுடுவாயோ?" என்கின்றனர்  "தோழா சுடாதே - ஜாரின் மாலுமிளிடையே அதிர்ச்சி! புரட்சிக் கொடியைத்தூக்குகின்றார்கள்.

தோழமைக்கரத்தை நீட்டுகிறார்கள்  தம் போன்ற மாலுமிகட்கு. திரையில் "ஜே" கோஷம் சுடர் வீசுகிறது.

இதுதான் கதை. இதுதான் படம். உணர்ச்சியைத்தூண்டும் கலை ரஸம் ததும்பும் சிறு நிகழ்ச்சிகள் பின்னப்படுகின்றன இடையிடையே. புழுநெளியும் உணவின் பூதக்கண்ணாடித்தோற்றம் . உப்பு நீரில் கழுவி உண்ணுங்கள் என்ற அதிகாரியின் அலட்சியப்பேச்சு, ஒடெஸாப்படியில்  ஜனக்கடலைத்தாக்கி ஜாரின் படைகள்,  படியிலே உருண்டுவரும்  தள்ளுவண்டிக்கைக்குழந்தையின் தத்தளிப்பு, இவைபோன்ற பல காட்சிகள் உள்ளத்தில் நீங்கா இடம் பெறுகின்றன.

20 வருடங்களுக்கு முன் தயாரித்த இப்படம் இன்றும் கவர்ச்சியோடு விளங்குகின்றது. மலர்ந்து வரும் புதுயுகத்தில் என்றென்றும் சிரஞ்சீவியாய் இருக்கும் சின்மாக் கலையின் இவ்வாடா மல்லிகை.

இப்படத்தைக்கொழும்பில் காட்டுவதற்கேற்பாடு செய்த 'பில்ம் கிளப்'பாருக்குக் கலைபிரியர்கள் நன்றி பாராட்ட வேண்டும்.

Last Updated on Saturday, 16 May 2020 01:35