அ.ந.கவின் கவிதை: ரவீந்திரர்

இந்து தேசத் திணையில் கவிஎனும்
முந்து வரகவி காளி தாசனின்
இந்த நாளின் அவதார மோவென
வந்தவன் ரவீந்த்ர நாத தாகுரே.

வெள்ளி வெண்சிகை வெண்ணிறத் தாடியும்
கள்ளமிற் கருணை காலும் கண்களும்
விள்ளுதற் கரிய கவிதை வேகம்
துள்ளிடும் உள்ளமும் கொண்டவன் தாகுரே.

வங்க நாடு வழங்கிய வண்கவி
எங்கணும் புகழெய்திட ஏதமில்
துங்கமார் கீதாஞ்சலியாம் துய்யநூல
மங்கிடா தொளிர்தர யாத்தளித்தனே.

கவிதையாகுக காதையாகுக
விவித நாடக நூலுமாகுக
புவியிலெவரும் புகழுமாறிவண்
கவிஞர் மன்னவன் செய்தளித்தனே.

பாரதத்தின் இன்னிசை பயின்றிடும்
வீர தேசிய கீதமும் தந்தவன்
யாரு மெச்சிடும் சாந்தி நிகேதனப்
பேருடைக் கலைக் கோவிலும் கண்டனன்.

முந்தைநாள் முனிபோலொரு தோற்றமும்
நந்தமிழ் கவி நாட்டமும் தனது
சொந்த நாட்டினில் சோர்விலா அன்பும் கை
வந்தவன் இவன்போல் வேறு யார் அரோ.

திறமுடைக் கவி எனில் அத்திறம்
பிறந்த நாடு பேசிடில் போதுமோ
பிற புலத்தும் பேரெய்தி வாழ்ந்தவோர்
குறைவிலாக் கவி மன்னிவனரோ

பலபு லத்துக் கவித்திற னாய்ந்தோர்
உலக நோபல் பரிசைத் தருவோர்
கலைகள் வல்ல கவிஎனக் கொண்டு
தலையதாமப் பரிசையும் தந்தார்.

காளி தாசக் கவியர சோச்சினான்
ஊழி தோறும் தன்புகழ் நாட்டிட
வாழி ரவீந்த்ரன் நாமமும் வையகம்
வாழும் நாள்வரை வாழிய வாழியவே!

- ஸ்ரீலங்கா ; பெப்ருவரி 1961.-


அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள்!

அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்)

ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக எம்மிடமுள்ள அவரது கவிதைகள் ஒவ்வொன்றாகப் பிரசுரமாகும்.  கவிதைகள் சில தட்டச்சு செய்த நிலையில் கிடைத்தன. அவற்றில் சில எழுத்துப்பிழைகள் இருக்கலாம். எனவே அவ்வப்போது மூலப்பிரதிகள் கிடைக்கும்போது அவை ஒப்பு நோக்கப்பட்டுத் திருத்தப்படும். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகள் இங்கு பிரசுரமாகும்.  அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக விபரங்களைப்பெற முடியும்.