- முல்லைஅமுதன்ஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்'இளையநிலா' எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்பரமும் போனது.

அதே போலத் தான் நண்பர்கள் சேர்ந்து லெனின் மொறாயஸின் இயக்கத்தில் நல்லூர். மனோகரன்,ஹெலன்குமாரி,சந்திரகலா,சற்குணம் போன்றோரின் நடிப்பில் சினிமாஸ்கோபின் தயாரிக்கப்பட்டது.நேசன் அவர்களால் சிறப்பான முறையில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது. இவ்விரு படங்களும் 83 இனக்கலவரத்தின் போது அழிக்கப்பட்டன. வெளிவந்திருந்தால் நல்லதொரு பதிவை ஈழத்து திரைப்பட வரலாறு சொல்லியிருக்கும்.சர்மிளாவின் இதயராகம் வசூலினைப் பெற்ற படம் என்று சொல்லுவர். இதற்கிடையே மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களும்(சுமதி எங்கே,கலியுக காலம்,யார் அவள்,நான்கு லட்சம் இன்னும் பல),இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகளும் வந்து போயின.(நங்கூரம்,மாமியார் வீடு,இரத்தத்தின் ரத்தமே,நீலக் கடலின் ஓரத்திலே,பைலட் பிரேம்நாத்,மோகனப்புன்னகை,தீ,) தோட்டக்காரி படத்தைத் தந்த கிருஸ்ணமூர்த்தி மீனவப் பெண் எனும் திரைப்படத்தையும் தந்தார்.உதயகுமார்,சிறிசங்கர்,பாலன் போன்றோரின் நடிப்பில் வெளிவந்த மஞ்சள்குங்குமம் பலவருடங்களின் பின் சில மாற்றங்களுடன் மீண்டும் திரைக்கு வந்தது. உதயகுமாரின் நல்ல நடிப்பைப் பார்க்க முடிந்த படம்.

காத்திருப்பேன் உனக்காக,கோமாளிகள்,ஏமாளிகள்,மாமியார் வீடு தொழில் நுட்பங்கள் சிறப்பென்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் நடித்த கதாநாயகர்கள் பேசப்பட்டனர்.புகழ் பெற்ற நாடகக் கலைஞர்கள் நடித்து வெளிவந்த வாடைக்காற்று முதலில் நாவலாக வெளி வந்து வரவேற்பை பெற்றிருந்ததாலும்,விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத்தியதினாலும் வசூலிலும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. கடமையின் எல்லை,டாக்ஸி ட்றைவர்,நிர்மலா,வெண்சங்கு,தென்றலும் புயலும்,தெய்வம் தந்த வீடு,அநுராகம்,எங்களில் ஒருவன்,நெஞ்சுக்கு நீதி,அவள் ஒரு ஜீவநதி,பாதை மாறிய பருவங்கள் நல்ல பதிவுகளைக் கொண்ட படங்கள்.கதை சொல்லும் முறை,நடிப்பு,காட்சி ஒருங்கிணைப்பு,பாத்திரங்களின் மொழி அமைப்பு போன்ற பலவற்றில் முடிந்தளவு முயன்றுள்ளனர்.இந்திய,மேல் நாட்டு திரைப்படங்களைப் பார்த்து மோகித்தவர்களால் இத் திரைப்படங்களைப் பார்க்க முடியவில்லை.

மேலும்,இனக் கலவரம்,இன விடுதலை போராட்டம் பலரை இடம்பெயரச் செய்ததும்,பலரும் அதற்குள் உள்வாங்கப்பட்டு நல்ல  படிப்பைத் தருவதில் முனைப்புக்காட்ட முனைந்தனர்.குறும்படங்களின் மூலமும் அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ள,அப் பயிற்சியின் மூலம் முழு நீள திரைப்படங்களை தயாரிக்கும் திறனையும் வளர்த்தார்கள்.வன்னியில் நிதர்சனம் மூலம்தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள்,பின் ஆணிவேர்,எல்லாளன் போன்ற திரைப்படங்கள் நல்ல வெளிபாட்டைத் தந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் தந்தன.இன்று நெடுந்தீவு முகிலன்,மதிசுதா போன்று பலர் குறும் படம் மூலமும் பயிற்சிக்களத்தை உருவாக்கி வருகின்றனர். புலம்பெயர்ந்தவர்களும் தமது கல்வி,கணினிப் பயிற்சி என பலவற்றின் மூலம் தமது தேடலை படைப்பிலக்கியமாகவும், குறும்படங்கள்,திரைப்படங்களாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்திலும்,புலம்பெயர் நாடுகளில் நிறுவப்பட்ட திரைத் துறை சார் நிறுவனங்கள்,அமைப்புக்கள் போட்டிகளை நடத்தியும்,பயிற்சிப்பட்டறைகளைம் அதன் மூலம் பரிசுகள்,விருதுகளையும் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.இப்போது இலங்கையிலும் அமைப்புக்கள் போட்டிகள் மூலம் தெரிவாகும் நிலை தோன்றியுள்ளதும் ஆரோக்கியமாகவே உள்ளன  எனலாம். இன்று பல கலைஞர்கள் உற்சாகத்துடன் களம் இறங்கியும் உள்ளனர்.

தமிழியம்.சுபாஸ்,பாஸ்கரன்(மன்மதன்)லெனின்.எம்.சிவம் போன்ற பலர் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். லண்டனில் மண்,'சிவசேனா',தமிழ்.எம்.ஐ- 7,ஆவும் வசப்படும் எனப் பல திரைப்படங்கள் பெரிதாகப் பேசப்படுகின்றன.டென்மார்க்கிலும் அப்படியே.சண்.கி.சே.துரை போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஆரோக்கியமாக செயல்படுகின்றனர்.கனடாவும் பேசப்படும் கலைஞர்களை உள்வாங்கியுள்ளன.தற்போது வெளி வந்திருக்கும் 'GUN & RING’' திரைப்படம் நிறைய எதிர்பார்ப்புடன் வந்து பலரையும் நிமிரவைத்துள்ளன.பத்திரிகைகள்,ஒலி/ஒளி ஊடகங்களும் சிலாகித்துப் பேசவைத்துள்ளதை ஈழத்து திரைப்படவரலாறு எனி சிறந்த பதிவுகளைத் தரும் என்றே கூறமுடியும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.