யாழ்  கோட்டைக்குள் இராணுவ முகாம்புத்தரின் கண்ணீர்'ட்விட்ட'ரில் கண்ட இச்செய்தி என் கவனத்தை ஈர்த்தது. யாழ்ப்பாணத்திலுள்ள ஒல்லாந்தரின் கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இலங்கைத் தொல்லியற் திணைக்களம் அனுமதியளித்துள்ளதாம். அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் புகைப்படங்களையும் அச்செய்தியில் காண முடிந்தது. கரிகாலன் garikaalan‏ @garikaalan என்பவரின் 'ட்வீட்' இது. ஆச்சரியமென்னவென்றால் முகநூலில் இது பற்றிய செய்திகள் எதனையும் கண்டதாக நினைவிலில்லை. இச்செய்தி உண்மையாகவிருக்குமானால் இலங்கை அரசு தவறிழைக்கின்றதென்றே கூற வேண்டும். யாழ்நகரின் மத்தியில் கோட்டைக்குள் இராணுவமுகாம் அமைப்பதே முட்டாள்தனமானது. காலம் மீண்டுமொருமுறை ஆயுதபோராட்டமொன்றினை உருவாக்குமானால் (தென்னிலங்கையில் முதற் புரட்சியில் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டெழுந்து பதினேழு வருடங்களுக்குப் பின்னர் ஆயுதப்புரட்சி செய்யவில்லையா) மீண்டும் அன்று மாதிரி கோட்டை மீதான முற்றுகைக்குள் சிக்கப்போவது இம்முகாம் இராணுவத்தினரே..

உபகண்ட அரசியலில் இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு உத்தரவாதமெதுவுமில்லை. இலங்கை எவ்வளவுக்கு எவ்வளவு சீனாவின் பிடிக்குள் செல்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்தியா மீண்டும் இலங்கைத்தமிழர்களின் பிரச்சினையைத் தனது துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தவே முனையும். மேலும் களத்தில் விடுதலைப்புலிகளுமில்லை. இந்தியாவின் சார்பு முன்னாள் ஆயுதப்போராட்ட அமைப்புகளே உள்ளன. எனவே இந்தியா மிகவும் இலகுவாக இலங்கைப் பிரச்சினைக்குள் உள் நுழைய முடியும்.

இலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் புத்திசாலிகளென்றால் இலங்கைத்தமிழர் பிரச்சினையை முற்றாகத் தீர்த்து வைப்பார்கள். அதன் மூலம் இந்தியாவின் அழுத்தங்களிலிலிருந்து தப்பலாம். இதுபோன்ற இராணுவ மயமாக்கல் நடவடிக்கைகள் மீண்டும் இலங்கையை யுத்த பூமியாகவே மாற்றும். ஜே.வி.பி.க்கு மீண்டும் உயிர்த்தெழ சுமார் 17 வருடங்கள் பிடித்தது. தமிழர்களின் யுத்தம் முடிந்து ஒன்பது ஆண்டுகளே கடந்துள்ளன. இன்னும் எட்டு ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடக்கலாம்? யார் கண்டது?

இலங்கையின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் இதனை நன்குணர்ந்துகொண்டு , தீர்க்கதரிசனத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பார்களென்றால் மீண்டுமொரு மோதல் எழுவதைத்தவிர்க்கலாம். யாருக்குமே யுத்தத்தில் விருப்பமில்லை. யுத்தங்கள் எப்பொழுதுமே அழிவுகளைத்தாம் கொண்டுவரும். கருணாகரமூர்த்தியான புத்தருக்கு மூலைக்கு மூலை சிலை வைப்பதுடன் அவரின் தத்துவங்களையும் பின்பற்றுவார்களென்றால் , மன்னன் அசோகன் அன்று செய்தது போல், இலங்கையில் பூரண அமைதி திரும்பும். இல்லாவிட்டால் இலங்கையை யாராலுமே காப்பாற்ற முடியாது போய்விடலாம்.


யாழில் தலைவிரித்தாடும் வன்முறைகளும், சண்டியர்களும்!

விஜயகலா மகேஸ்வரன்பூனைக்கு மணி கட்டுவது யார்?அண்மைக்கால யாழ் குடாநாட்டில் தலை விரித்தாடும் வன்முறைகள் (பாலியல் வன்முறைகளுட்பட) கண்டு எழுந்த உணர்வில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புலிகளை நினைவூட்டித் தெரிவித்த கருத்துக்குக் காரணம் "வடக்கில் குறிப்பாக யாழ்.குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. " என்று தெரிவித்துள்ளார்.

அவரது அரசியலுக்கு அப்பால் அவர் மக்கள் படும் இன்னல்களைக் கண்டு , குறிப்பாகப் பெண்களுக்கு எதிராகப் புரியப்படும் வன்முறைகள் கண்டு மனம் வெதும்பிக் கூறியதும், அதன் காரணமாகப் பதவி விலகியதும் முக்கியமானவை. ஆனால் பெண்ணான இவர் புங்குடுதீவு மாணவியின் படுகொலையின்போது ஏன் எதிரிகள் பக்கம் நின்றார் என்பது புரியாத புதிர்.

வேறு அரசியல்வாதிகளில் யார் யாழ் குடாநாட்டில் தலை விரித்தாடும் வன்முறைகளுக்கெதிராகப்போர்க்கொடி உயர்த்தியது. அறிந்தவர்கள் பகிரவும்.

இதனை அரசியலாக்காமல் யாழ் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு அனைத்து அரசியல் சக்திகளும் செயற்படவேண்டிய நேரம் இது. முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பூனைக்கு மணியைக் கட்டியிருக்கின்றார் புலியைப்பாவித்து. யார் தொடர்கின்றார்கள் என்று பார்ப்போம்.

யாழ் வன்முறைகளும், சண்டியர்களும்!

அறுபதுகளில், எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சண்டியன்கள் பலரிருந்தார்கள். ஆனால் இவர்களெல்லாரும் தமக்கென்றொரு பிரதேசத்தில் ஆட்சி செய்துகொண்டிருப்பார்கள். ஓட்டுமடம், கொட்டடி, கோணாந்தோட்டம், ஆரியகுளம் என்று சண்டியர்கள் பலரிருந்தார்கள். தமக்கிடையில் முட்டி மோதிக்கொள்வார்கள். அவ்வப்போது சந்திகளிலும் மோதிக்கொள்வார்கள். ஒருமுறை ஓட்டுமடச் சந்தியில் சண்டியர்கள் இருவர் மோதிகொண்டார்கள். சனம் விடுப்பு பார்த்துக்கொண்டிருந்தது. சிறுவனான நானும் அவர்களில் ஒருவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். சண்டியனொருவன் இன்னுமொருவனைத் துவம்சம் செய்துகொண்டிருந்தான். தரையில் விழுந்திருந்த நிலையிலும் , மற்றவனின் குத்துகளை வாங்கிக்கொண்டிருந்த நிலையிலும் , அடிவாங்கிக்கொண்டிருந்தவன் தளர்ந்து ஓய்ந்துவிடவில்லை. மீண்டும் மீண்டும் எழுவதற்கு முயன்றுகொண்டேயிருந்தான். அவன் எழ எழ மேலும் மேலும் அவன் மேல் உதைகளும், குத்துகளும் மற்றச் சண்டியனால் தாராளமாக வழங்கப்பட்டுக்கொணடேயிருந்தன. ஆனால் அக்காலச் சண்டியர்கள் எவரும் பொதுமக்கள்மேல் கை வைத்ததாக ஞாபகமில்லை.

தமிழரின் ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் பலர் இயக்கங்களால் அழிக்கப்பட்டார்கள். சிலருக்கு சிறிய அளவில் தண்டனை (பச்சை மட்டையடி) கொடுக்கப்பட்டு அடக்கி வைக்கப்பட்டார்கள்.

இவர்கள் தவிர இளைஞர்கள் பலர் குழுக்களாக இயங்கினார்கள். இவர்களில் பலர் காவாலிகள் என்று பெயரெடுத்திருந்தாலும் பொதுமக்கள் மீது கை வைத்ததில்லை.. இவர்கள் வேலையற்றிருந்த இளைஞர்கள். பெண்களைச் சுழட்டித் திரிவது, அதன் காரணமாகப் பெண்களின் பகுதியைச் சேர்ந்தவர்களால் அடி வாங்கி விழுப்புண்களைச் சுமந்து திரிவது, சிறிய அளவில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது எனறு திரிந்தாலும் பொதுமக்கள் எவருக்கும் இவர்கள் யாரும் துன்பம் புரிந்ததில்லை. இவர்களில் பலரையும் இயக்கங்கள் சில அழித்தொழித்தன.

ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தில் நடப்பதென்ன?

யாழில் வன்முறைக் குழு!குழுக்களாக இயங்குகின்றார்கள். தமக்கிடையில் மோதுவதுடன் நின்று கொண்டால் பரவாயில்லை. ஆனால் பொதுமக்கள் மீது கை வைக்கின்றார்கள். அண்மையில் ஐம்பது வயதினைக் கடந்த பெண்ணொருத்தியை அவரது கணவர் முன் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியிருக்கின்றார்களாம். செய்தி உண்மையாகவிருந்தால் யாழ்ப்பாண நிலை மிகவும் கவலைக்குரியது.

யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கில் இராணுவத்தினருள்ளனர். காவற் படையினருள்ளனர். சட்ட, ஒழுங்கினைப் பேணுவதற்கு நீதி அமைப்புகளுள்ளன. ஆனால் அவர்களினால் இவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆச்சரியம்தான்.

மேனாடுகளில் குழுக்களுள்ளன. குழுக்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வார்கள். ஆனால் திட்டமிட்டே பொதுமக்கள் மீது அக்குழுக்கள் கை வைப்பதில்லை. இவ்விதமானதொரு சூழலில் இவ்விதமானதொரு சூழலை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவது அரச புலனாய்வுத்துறையினரின் , அரசின் மறைமுக எண்ணமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யுத்தம் முடிந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் சகஜ நிலை நிலவுவதை இவர்கள் விரும்பவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஆட்டம்போடும் அனைத்துக் குழுக்களும் இவர்களின் ஆதரவுடன் செயற்படுகின்றார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகிவிடாமலிருப்பதற்கு இக்குழுக்களை மேற்படி சக்திகள் பயன்படுத்துகின்றார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. அதே சமயம் தமிழ் அரசியல் சக்திகள் சிலவும் தம் சுய இலாபங்களுக்காக இக்குழுக்கள் பின்னால் இருக்கக்கூடுமென்ற சந்தேகமும் தோன்றாமலில்லை.

யாழ்ப்பாணத்தில் சகஜநிலை தோன்ற வேண்டுமானால் இன்று நிலவும் இந்நிலை மாற வேண்டும். இல்லாவிட்டால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக ஆகிவிடும் யாழ்ப்பாணத்து நிலை.

அண்மையில் யாழ்ப்பாணக்குழுச் சண்டை பற்றிய செ.பாஸ்கரன் எழுதிய யாழ்ப்பாணமும் வாள்வெட்டும் என்னும் கட்டுரையினை (தலைப்பினைத் தவறுதலாக வாழ்வெட்டு என்று பிரசுரித்துள்ளார்கள். வாழ்க்கையை வெட்டுவது என்பதால் அவ்விதம் பிரசுரித்தார்களோ :-) ) தமிழ்முரசுஆஸ்திரேலியா.காம் இணையத்தளத்தில் வாசித்தேன். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.tamilmurasuaustralia.com/2017/…/blog-post_29.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.