எழுத்தாளர் சீர்காழி தாஜின் 'அமெரிக்கா' தொகுப்பு பற்றி 24.8.1998இல் எழுதப்பட்ட கடிதம். - தமிழகத்தில் 'ஸ்நேகா' பதிப்பகத்தாரால் 1996இல் வெளியிடப்பட்ட எனது சிறுகதைகளும், குறுநாவல் 'அமெரிக்கா'வும் அடங்கிய தொகுப்பான 'அமெரிக்கா' பற்றி எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனக்குத் தொகுப்பு பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்துக் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார். அதன் பின்னர் அவர் இன்னுமொரு கடிதத்தினை எனது நல்லூர் நகர அமைப்பு ஆய்வு பற்றிய நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு'  பற்று எழுதி அனுப்பியிருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்த கடிதமது. என்னை யாருக்குமே தமிழக்த்தில் தெரிந்திருக்கச் சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில், என நூல்களை வாசித்துவிட்டுச் சீர்காழியிலிருந்து எனக்குக் கடிதங்கள் சில அனுப்பியிருந்தார் எழுத்தாளர் சீர்காழி தாஜ். அக்குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றன. அவரது இன்னுமொரு கடிதமான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' பற்றிய கடிதம் பின்னொரு சமயம் பதிவுகளில் பிரசுரமாகும். மேற்படி கடிதத்தில் ஒரு சில சொற்கள் தெளிவாகத் தெரியாததால், அவை கூறும் கருத்துக்கு இடையூறு செய்யாமலிருப்பதால் தவிர்த்திருக்கின்றேன்.  - வ.ந.கி -

'மனித மூலம்' தத்துவம் பேசினாலும் இனிக்கும் தகவல்கள் ஓர் ஆறுதல். 'சுண்டெலிகள்' அப்படியல்ல. மிக உயர்ந்த கதை வடிவம். சரியான குறியீட்டுத்தளத்தில் நேர்த்தியான பின்னல். உயரத்துக்குகாகப் போராடும் கீழ்த்தட்டு நசிந்த உடல்களைப் படம் பிடித்துக் காட்டும் முற்போக்குக் கதைவடிவம். 'கணவன்' நெகிழ்ச்சி கூடிய கதை.  மானிட வர்க்கத்திற்குச் சந்தேகம் ஒரு பாணி. குடிக்கிறபோதுதான் இந்தத் தடுமாற்றமென்பதில்லை. நல்ல நிலையில் கூட  நாலுகால் பாய்ச்சலில்  மூளையைப் பற்றும்.  கதை தெரிவு  தேடிகொண்டிருக்கிற வாதம் பெண்ணியத்தை மதிப்பதாக இருந்தது. 'இல்லாள் வருவதற்கு ' என்றொரு சொற்சிலம்பு இந்தக் கதையில் ருசிக்க வைத்த நடை. 'ஒரு முடிவும் விடிவும்' யமுனா தி.ஜானகிராமனின் மோகமுள் ஜமுனாவை ஞாபகமூட்டியது.  மறு பிறவி போலும். பெண்கள் எப்பவும் பாவங்கள்தாம்.

தாய்த் தமிழகத்தில் நவீன நவ சிறுகதைகளின் வளர்ச்சி மஹா உச்சம். புலம் பெயர்ந்து தமிழகத்தில் வந்து தங்கிய சில யாழ் தமிழ் எழுத்தாளர்கள் இங்கும் இந்த உச்சத்தை உரசியுள்ளார்கள்.  தவிர உங்களையொத்த புலம் பெயர்ந்து தமிழ் மண்ணுக்கு பல நூறு மைல்களுக்கு அப்பால் வசிக்கும் சிலரும் நவீன நவ - சிறுகதைகளில் முகம் காட்டியிருக்கிறார்கள்.  அன்றைக்கு உங்களது பெயரும் அந்த வரிசையில் இடம்பெறும் நாள் தூரமில்லையென நம்புகிறேன்.

நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வமும் , ஈடுபாடும் - புதுக் கவிதையில் பங்களிப்பும் செய்து இருப்பவன் என்ற வகையில் உங்களது சிறுகதைகளை நேர்கோட்டில் காண முடிந்தது.

தவிர ஈழத் தமிழர்களின் கடலளவான கண்ணீர் துயரத்தை அறிந்தவுடன் உங்களையொத்தவர்களின் கதைகளில் வெடிக்காது வெடிக்கும் மன உளைச்சலை புர்ரிந்துகொள்ளக் கூடியவனென்பதால் என் பார்வை கதைகளில் கூர்மையாக நகர்ந்தது.

உங்களது சிறுகதையைத்தாண்டி குறுநாவலாய் மலர்ந்திருக்கும் 'அமெரிக்கா' தீவிரமான முயற்சி. பதிவு செய்ய வேண்டிய நிகழ்வுகளை அதன் காலத்தில் பதிவு செய்து இருக்கின்றீர்கள். கொஞ்சம் கலை வேலைப்பாடும், மனோ உளைச்சல்களின் உள்ளார்ந்த நிலையை ஒரு உருகிய மொழியியில் சொல்லி இருக்கும் பட்சம் அமெரிக்கா இன்னும் உன்னதம் பெற்றிருக்கும். என்னாலும் என்னையொத்த மேற்கு நாடுகளில் விருப்பம் கொண்டவர்களுக்கு பூரண் , நடுபக்க , தகவல் களஞ்சியமாக உள்ளது. பயணத்தின்போது நிகழும் இருண்ட பகுதியின் விளக்கமாக இருந்தது. நன்றி.

மொத்தத்தில் உங்களது இலக்கிய முயற்சிகள், உங்களைத் தமிழ் இலக்கிய உலகம் முதல் வரிசையில் வரவேற்கும் என்பதற்கான அடிப்படை இந்தத் தொகுதியில் மிளிர்கிறது.

24.8.1998