- 'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' இதழ் பன்னாட்டிதழாக மலர்ந்திருக்கின்றது. இச்சிறப்பிதழில் எனது கவிதையான 'காலவெளிப்பயணியின்  நெடும் பயணம்' கவிதை வெளியாகியுள்ளது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். -

 

என் வெப்ப மண்ணை, மேல் விரியும்
இரவுவானை, சுடரை, நிலவை
நான் நீங்கியது நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவசை போடுமொரு
மாடுமாகினேன்.
ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கானுயிராயுமாகினேன்.

முடிவற்ற நெடும் பயணம்!

தங்குதற்கும், ஆறுதற்கும்
தருணங்களற்ற நெடும் பயணம்!

என்று முடியும்? எங்கு முடியும்?

நம்பிக்கையினை
நானின்னும் இழக்கவில்லை.
வழிச்சோலைகள், நீர்நிலைகள்
துருவப்பாலை வசங்களாயின.
பேய்த்தேரெனவே போயின.
இருந்தும் சிந்தையின்னும்
இழக்கவில்லை நான்.

காலவெளிக் குழந்தை நான்
கண்ட கனவுகள்
நனவிடைதோய்தற் துளிகளாயின.
துருவப்பாலை ஒட்டகம் நான்.
இன்றோ சுடர் தேடுமொரு
துருவத்துப் பரதேசி!

அந்தமிலாவிருப்பு
நம்பிக்கைக் கனவுகள்
மிகப்பயணிக்குமொரு
காலவெளிப்பயணி
நான். பயணிக்கின்றேன்.
பயணிக்கின்றேன். பயணிக்கின்றேன்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.