ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright நவீனக் கட்டடக்கலையின் கோட்பாடுகளிலொன்று சேதனக் கட்டடக்கலை (Organic Architecture). இதன் மூலவர் புகழ்பெற்ற அமெரிக்கக் கட்டடக்கலைஞர்களில் ஒருவரான ஃப்ராங் லாயிட் ரைட் ( Frank Lloyd Wright) . இதனை , இச்சொல்லாட்சியினை், அவர் தனது சூழலுக்கு இயைந்த கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிக் குறிப்பிடுகையில் பாவித்ததன் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனை இவர் வடிவமானது அதன் செயற்பயனை அல்லது பாவனைப்பயனைத் தொடருமொன்று (form follows function) என்று நம்பிய கட்டடக்கலைஞரும் , ஃப்ராங் லாயிட் ரைட்டின் கட்டடக்கலைத்துறை வழிகாட்டியுமான கட்டடககலைஞர் லூயிஸ் சல்லிவனின் ( Louis Sullivan) கட்டக்கலைக் கருதுகோள்களின் வாயிலாக வந்தடைந்ததாக கட்டடக்கலை விமர்சகர்கள் கருதுவர். மேலும் சிலர் தோரோவின் மீ இறையியல் (Transcendentalism) சிந்தனையே இவரை அதிகம் பாதித்ததாகக் கருதுவர். ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமும், அதன் செயற்பயனும் ஒன்றென்று (form and function are one.) வாதிடுவார். வடிவம் அதன் செயற்பயனைத்தொடர்வது என்னும் கோட்பாடு அல்லது சிந்தனை நவீனக் கட்டடக்கலையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடோ அத்தகையதொரு கோட்பாடே ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக் கட்டடக்கலை என்னும் கோட்பாடும்.

சேதனக் கட்டடக்கலை என்றால் என்ன?
இதனை ஒரு கட்டடக்கலை வடிவமைப்பு பற்றிய நவீனத்துவச் சிந்தனையெனலாம். இச்சிந்தனையான கட்டடமொன்றினை உயிர்த்தொகுதியாக உருவகித்து உயிர் வடிவங்கள் எவ்விதம் அவை அவற்றுக்குரிய உயிர்கள் வாழும் இயற்கைச் சூழலுக்கேற்ப  , சூழலுடன் இயைந்து உருவாகினவோ, சூழலுக்கு இணக்கமாக அமைந்துள்ளனவோ அவ்வாறே கட்டடமொன்றின் வடிவமும் (form) , அமைப்பும் (structure) அக்கட்டடம் அமையவுள்ள இயற்கைச்சூழலுக்கேற்பவிருப்பதுடன் , இணக்கமாகவுமிருக்க  வேண்டும் என்று எடுத்தியம்புகின்றது. ஆக, சேதனக்கட்டடக்கலையானது கட்டடம் வடிவமைக்கப்படும் வெளியினை அதன் உட்புற, வெளிப்புறங்களுடன் கலந்துவிடும் வகையில் அவற்றுடன் ஒன்றிணைக்கின்றது. இவ்விதமாக உருவாக்கப்படும் கட்டடச்சூழலினை அக்கட்டடம் உருவாகும் இயற்கைச்சூழலிலிருந்து வேறுபடுத்த முற்படாது, அச்சூழலுடன் ஒன்றாகும் வண்ணம் கலந்திருக்க வழி சமைக்கின்றது. ஃப்ராங்ல் லாயிட ரைட் வடிவமைத்த பல கட்டடங்கள் குறிப்பாக அவரது சொந்த இல்லங்கள் (ஸ்பிரிங் கிறீன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற இடங்களில் அமைந்துள்ள) இவ்விதமான அவரது கட்டடக்கலைச்சிந்தனைபோக்கான சேதனக் கட்டடக்கலைச் சிந்தனையினைப் பிரதிபலிப்பவை. உண்மையில் ஃப்ராங் லாயிட ரைட் கட்டடக்கலைப்பாணிகளைப்பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. ஏனென்றால் அவர் ஒவ்வொரு கட்டடமும் அது அமைந்திருக்கும் இயற்கைச்சூழலிலிருந்து இயல்பாக உருவாக, வளர வேண்டுமென்று திடமாக நம்பினார்.

ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம். தென்மேற்குப் பென்சில்வேனியாவில், இயற்கைச்சூழலுக்கு மத்தியில் 1935இல் அமைக்கப்பட்டுள்ள வீடு அது. லிலியன் காவ்மானும் அவரது கணவரான எட்கர் காவ்மானுக்காகவும் அவர்கள் வார இறுதி நாள்களில் தங்குவதற்காக ஃப்ராங் லாயிட் ரைட்டினால் வடிமைக்கப்பட்ட அவ்வீடானது இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கட்டடடங்களிலொன்றாக, நவீனத்துவக் கட்டடக்கலையின் சிறந்த வெளிப்பாடாகக்கருதப்படுகின்றது. அத்துடன் ஃப்ராங் லாயிட் ரைட் வடிவமைத்த மிகச்சிறந்த கட்டமாகவும் கருதப்படுகின்றது. மலைப்பாங்கான காட்டுப் பகுதியில் நீர்வீழ்ச்சி பாயும் பாறைக்கு மேல், அவ்வியற்கைச்சுழலுடன் இயைந்து போகும் வகையில் இணக்கமாக அமைக்கப்பட்டுள்ள வீடு அது. 1963ஆம் ஆண்டிலிருந்து மேற்குப் பென்சில்வேனிய நகரினால் நூதனசாலையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டடக்கலையில் ஆர்வமுள்ள, கட்டடக்கலை கற்க விருப்பமுள்ள உயர்தரப்பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால முகாம்கள் அங்கு வருடா வருடம் அங்கு நடைபெறுகின்றன. அதன் பொருட்டு அங்கு மேலும் பல இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம்.

- ஃப்ராங் லாயிட் ரைட்டின் சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களில் மிகவும் புகழ்பெற்ற கட்டடமாக அவரது 'வீழும் நீர்' என்றழைக்கப்படும் (Fallingwater) வீட்டினைக் குறிப்பிடலாம். -


கட்டடக்கலை வரலாற்றில் நவீனக் கட்டடக்கலைக் கோட்பாடுகளிலொன்றான சேதனக்கட்டடக்கலை வடிவமைப்பை வெளிப்படுத்தும் இக்கட்டடமும், இச்சேதனக்கட்டடக்கலைக் கோட்பாடும் முக்கியமானவை. இக்கோட்பாட்டின் மூலவரான அமெரிக்கக் கட்டடக்கலைஞர் ஃப்ராங் லாயிட ரைட் இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவக் கட்டடக்கலையின் மிகச்சிறந்த அமெரிக்கக் கட்டடக்கலைஞராகக் கருதப்படுகின்றார். கட்டடக்கலையில் ஆர்வமுள்ள எவரும் அமெரிக்கா செல்லும்போது தவறாமல் சென்று பார்க்க வேண்டியதொரு கட்டடம்தான் இந்த 'வீழும் நீர்' இல்லமும்.

இச்சேதனக் கட்டடக்கலையினை வெளிப்படுத்தும் வடிவமைப்புடன் அமைக்கப்பட்ட அண்மைக்காலக் கட்டடங்களிலொன்று புதி தில்லி, இந்தியாவில் அமைந்துள்ள் தாமரை ஆலயத்தினைக் ( Lotus Temple, India; Architect: Fariborz Sahba - Iranian-Canadian -) குறிப்பிடலாம். இதனை வடிமைத்தவர் ஈரானியக் கனடியக் கட்டடக்கலைஞரான Fariborz Sahba என்பவர். பெரியதொரு தாமரை மலர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இக்கட்டமானது அனைத்து மதப்பிரிவினரும் வந்து வணங்கும் பஹாய் இல்லமாகும் (Bahai House).

உசாத்துணைக்காகப் பாவித்த கட்டுரைகள்:
1. Organic Architecture as a Design Tool Frank Lloyd Wright's Natural Harmony by Jackie Craven
2. Examples of Organic Architecture Buildings Concept Characteristic By Jay Amrutia
3. Frank Lloyd Wright integrated architecture into nature at Fallingwater by Eleanor Gibson
4. Organic architecture From Wikipedia, the free encyclopedia
ngiri2704"rogers.com

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.