வாசிப்பும், யோசிப்பும் 284: ஈழகேசரி இலக்கியத் தடங்கள் 2 - ஈழகேசரியின் கம்பன் நினைவு இதழும், கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) 'கவியரசன்' கவிதையும்!

Thursday, 24 May 2018 22:45 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

ஈழகேசரி 16.4.1944 ஞாயிற்றுக்கிழமைப் பிரதியை அண்மையில் நூலகம் இணையத்தளத்தில் வாசித்தபொழுது அவதானித்த , என் கவனத்தைக் கவர்ந்த விடயங்கள் வருமாறு:

1. முதற்பக்கத்தில் 'புதிய கல்வித்திட்டம்' பற்றிய 'விந்தியா விசாரணைச்சபையின் கல்வித்திட்டம் பற்றிய பரிந்துரை சம்பந்தமாகப் பிரபல வழக்கறிஞர் பாலசுந்தரத்தின் அபிப்பிராயம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி வருடாந்தப்பரிசளிப்பு நிகழ்வில் (7.4.44) அவர் ஆற்றிய உரையில் அவர் அந்நிய பாஷையில் ஊட்டப்படும் கல்வியினைச் சாடியிருக்கின்றார்.  அந்நிய பாஷையில் கல்வி கற்பதால் துரிதமாக அறிவு பெறவே முடியாது என்று அவர் கூறுகின்றார்.

'விந்தியா' விசாரணைச்சபை தாய்மொழி மூலம் கல்வியூட்ட வேண்டுமென்று வற்புறுத்தியிருப்பதுடன், பல்கலைக்கழகம் வர இலவசக் கல்வி கொடுபடவேண்டுமென்றும் வற்புறுத்தியுள்ளது என்பதையும் இச்செய்திமூலம் அறிகின்றோம்.

மேலும் அவ்விழாவுக்குத் தலைமை வகித்துப் பரிசுகளை வழங்கியவரான உள்நாட்டு மந்திரி தமிழரான் அ.மகாதேவா என்பதையும் அறிகின்றோம். மேற்படி செய்திக்கு ஈடாக இரண்டாம் உலக யுத்தம் பற்றிய செய்தி 'யுத்தம் நடக்கின்றது: இம்பாலில் கடும்போர்' என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது.

அத்துடன் மேற்படி பிரதி கம்பர் 'நினைவு இத'ழாகவும்  வெளியாகியுள்ளது என்பதையும் காண முடிகின்றது. 'சூர்ப்பணகையின் காதல்' என்னும் தலைப்பில் தென்மயிலை இ.நமச்சிவாயத்தின் கட்டுரை, இலங்கையர்கோனின் 'கம்பராமாயணமும் நானும்'என்னும் கட்டுரை, க.செ.யின் 'அளவான சிரிப்பு', 'சோதி'யின் 'வால்மீகியும் கம்பனும்', ச.அம்பிகைபாகனின் 'இரு காதற் காட்சிகள்', சோம.சரவணபவனின் 'கம்பச் சக்கரவர்த்தி', வ.கந்தையாவின் 'கம்பன் கடவுட்கொள்கை', மா.பீதாம்பரத்தின் 'கம்பர் வந்தால்..', இராஜ அரியரத்தினத்தின் 'சான்றோர் கவி', இணுவை வை.அநவரத விநாயகமூர்த்தியின் 'கம்பன் கவிச்சுவை', ஆசாமி என்பவரின் 'தண்டனை', பண்டிதர் அ.சோமசுந்தர ஐயரின் 'கம்பர் கண்ட கசிவு' ஆகிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

மேற்படி கம்பன் நினைவு இதழ் பற்றி ஈழகேசரி நிறுவனத்தினர் 'நிவேதனம்' என்னுமொரு குறிப்பினைச் கட்டமிட்டுப் பிரசுரித்துள்ளார்கள். அக்குறிப்பில் 'ஜாதி , மத, பேதங்களை யகற்றிச் சமரசத்தையும், நீதியையும், கருணையையும் உலகில்  நிலை நாட்டினார் கம்பர். தமிழ் மக்களின் உள்ளங்களில் ஊறியிருக்கும் கம்பர் இந்த நினைவு இதழிலும் உறைகின்றார்.  'ஈழகேசரி' கம்பன் நினைவு இதழைத் தமிழ்த் தெய்வத்தின் திருப்பாதங்களிற் சாத்துகின்றோம். துன்பமும், துயருங் குடியிருக்கின்றன இன்றைய உலகில். கம்பர் அகில உலகிற்கும் ஈந்திருக்கும் இன்னிசையும், நன்னயமும் துன்பத்தைத் துடைத்துச் சுகத்தை ஊட்டுவனவாகுக' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையர்கோனின் பிரபல சிறுகதையான 'வெள்ளிப் பாதசரம்' சிறுகதையும் இக் கம்பன் நினைவு இதழிலேயே முதன் முதலாகப் பிரசுரமாகியுள்ளதும் இன்னுமொரு  குறிப்பிடத்தக்க விடயம்."

2.

இவற்றுடன் கவிதைகளிரண்டும் வெளியாகியுள்ளன. அவை: க.இ.சரவணமுத்துவின் 'நியாயவாதம்', கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) எழுதிய கம்பர் பற்றிய 'கவியரசன்' ஆகியவற்றுடன் இ.ச.வின் 'கவிஞ ஆகிய கவிதைகளும் வெளியாகியுள்ளன.

அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன் புனைபெயரில் எழுதியது) கம்பர் பற்றிய 'கவியரசன்' கவிதை வருமாறு:

கவியரசன் - கவீந்திரன்

1.

காவியத்தின் மன்னனவன்!
கற்பனையின் செல்வனவன்!
காணுமிந்தப்
பூவலயத் தவனொப்பார்
புலவரிலே யாருமில்லை
என்று சொல்லும்
பாவிரியும் புகழ்க்கம்பன்
பல்புகழைப் பாடிநின்றே
யாடுதற்கு
பாவலர்க ளால்முடியா
பாரினிலே கம்பன்தான்
உயிர்க்கவேண்டும்!

2.

வடமொழியின் வன்மீகர்
வகுத்தவொரு கவிக்கனவைப்
பின்னொருக்கால்
திடமுடைய எம்மொழியாம்
சிறப்பினிலே ஆக்கிவைத்த
கவிதானாயின்
வடநூலை வீழ்த்தியதித்
தென்னூலென்னத் தேயத்தார்
வழுத்திநிற்க
இடமாய கவிதையினை
இயற்றுகின்ற இன்கவிநீ
வாழ்கவென்றும்!

நன்றி: 'நூலகம்' இணையத்தளம் -  http://noolaham.net/project/478/47729/47729.pdf

Last Updated on Friday, 25 May 2018 05:01