வாசிப்பும், யோசிப்பும் 293 : ஒரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு' மற்றும் அ.செ.முருகானந்தனின் 'புகையில் தெரிந்த முகம்' பற்றி.....

Saturday, 18 August 2018 22:13 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

அ.செ.முருகானந்தன்Orhan Pamukஓரான் பாமுக் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி நாட்டவர். அவரது புகழ் பெற்ற நாவலான 'எனது நிறம் சிவப்பு' (My Name is Red) நாவலுக்காக அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதில் இறந்தவர்களே நடந்த கொலைகள் எவ்விதம் நிகழ்ந்தன என்பதை விளக்குவார்கள். பின் நவீனத்துவப்படைப்புகளில் ஒன்றாக மேற்படி நாவல் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இது போன்ற ஆனால் அளவில் சிறிய நாவலை இலங்கைத்தமிழ் எழுத்தாளர் ஒருவர் 'ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே எழுதியுள்ளார்.

'சுதந்திரன்' வாரவெளியீட்டில் தொடராக வெளியான நாவல் அது. பின்னர் நவலட்சுமி புத்தகசாலை ( 136 செட்டியார் தெரு, கொழும்பு ) பதிப்பகத்தினால் 1950இல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நூலுக்கு நூலாசிரியர் சுவையானதொரு முன்னுரையினையும் எழுதியுள்ளார். அம்முன்னுரையின் முடிவில் அவர் " முன்னுரையை நானேதான் எழுத வேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் - அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி் இருக்கிறதா? :-) இன்னும் சொல்லப்போனால் நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசை கொள்ளப்போகிறார்கள்?"

சரி யார் அவ்வெழுத்தாளர்? அப்படைப்பின் பெயர் என்ன? என்று கேட்கின்றீர்களா? அதற்கு முன் மேலும் சில வார்த்தைகள்..

இவ்வெழுத்தாளர் யாழ்ப்பாணத்தமிழர்களின் வாழ்வினை மண் வாசனை கமழ, சுவையுடன் எழுதுவதில் வல்லவர். இக்கதையின் கதை சொல்லியான ராமலிங்கம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார். புகையை வட்ட வட்ட வளையங்களாக விட்டுக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் அச்சுருட்டுப் புகையினூடு அழகிய முகமொன்று தெரிகின்றது. அந்த முகத்துக்குரியவள் வேறு யாருமல்லள். புகையிலை வியாபாரி பொன்னுச்சாமியின் மகளான காந்திமதியே் அவள்.

காந்திமதியையும் அவளது அத்தானான காதலன் முருகேசனையும் பொன்னுச்சாமி அவர்களது காதலை எதிர்த்ததனால் கொன்று விடுகின்றார். அதன் மேல் தென்னம்பிள்ளையொன்றையும் வளர்த்து விடுகின்றார். அவ்விதம் அவரால் கொல்லப்பட்ட அவரது மகளான காந்திமதியும், அவளது காதலான முருகேசனுமே கதை சொல்லியான ராமலிங்கத்துக்குத் தங்களது கதையினைக் கூறுகின்றார்கள்.

இப்பொழுது விளங்குகின்றதா ஓரான் பாமுக் எழுதுவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே நம்மூர் எழுத்தாளர் ஒருவரும் அதே பாணியில் எழுதிவிட்டாரே? ஆச்சரியமாகவிருக்கின்றதா?

பின்நவீனத்துப்படைப்புகளில் 'மாஜிக்கல் ரியலிசப்' படைப்புகளும் அடங்கும். நம்மூர் எழுத்தாளரின் மேற்படி படைப்பினை மாஜிக்கல் ரியலிசம் என்னும் பிரிவுக்குள் அடக்கலாம். ஏனென்றால் யதார்த்தமாக மானுட வாழ்வை விபரிக்கும் கதைச்சூழலில் மாந்த்ரீக யதார்த்தவாதப்பாணிச் சம்பவங்கள் உள்ளடங்கியுள்ளன. அந்த வகையில் அளவில் சிறியதானாலும் நம்மூர் எழுத்தாளரின் படைப்பினையும் 'மாந்த்ரீக யதார்த்தவாத'ப் பாணியில் உள்ளடக்கலாம்தானே.

எழுத்தாளரின் பெயர் அ.செ.முருகானந்தன்.
படைப்பின் பெயர்: புகையில் தெரிந்த முகம்

அப்படைப்பினைக் கீழுள்ள இணைப்பில் நீங்கள் வாசிக்கலாம்: http://www.noolaham.net/project/02/168/168.pdf

அ.செ.முருகானந்தனின் 'புகையில் தெரிந்த முகம்'

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Saturday, 18 August 2018 22:26