வாசிப்பும், யோசிப்பும் 304: வாசிப்பு பற்றிய எழுத்தாளர் கோமகனின் முகநூற் கருத்துகள் பற்றி...

Wednesday, 24 October 2018 21:47 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

டால்ஸ்டாய்எழுத்தாளர் கோமகன் தன் முகநூற் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "வாசிக்க வேண்டுமே என்பதற்காக எல்லாவற்றையும் வாசித்தால் இறுதியில் மண்டை சுக்கு நூறாகி வெடித்துவிடும் என்பது மட்டுமல்லாது தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும். ஆக ஒருவனுக்கு எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும். அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை. வேண்டுமானால் அவை ஒருவரது எழுத்துப்பற்றிய ஒப்பீட்டுக்குத் துணை நிற்கலாம்."

வாசிப்பு என்பது தானாக விரும்பி வாசிப்பது. சிலர் வேலை காரணமாகவும் வாசிக்கின்றார்கள். உதாரணத்துக்குப் பத்திரிகை நிறுவனமொன்றில் வேலை பார்ப்பவர் வேலையின் காரணமாக கட்டாய வாசிப்புக்குத் தன்னை ஆட்படுத்த வேண்டிய தேவையுண்டு. அவ்வகையான வாசிப்பை நான் இங்கு குறிப்பிடவில்லை. கோமகனும் அவ்விதமான வாசிப்பைக் குறிப்பிடவில்லை எனவும் கருதுகின்றேன். வாசிப்பு என்பது இன்பத்தைத்தருமொன்று. அதற்கு வாழ்நாளே போதாது என்பதுதான் என்னைப்பொறுத்த குறை. வாசிப்பு என்னைப்பொறுத்தவரையில் மூச்சு விடுவதைப்போன்றது. மூச்சு விடுவதால் மண்டை வெடித்து விடுவதில்லை. வாசிக்காமல் இருந்தால்தான் மண்டை வெடித்து விடும். என்னைப்பொறுத்தவரையில்.  

அதிக வாசிப்பு என்பது 'தனக்குரிய கற்பனைவளத்தையும் சுயத்தையும் அது மழுங்கடித்து விடும்' என்றும் கோமகன் கூறுகின்றார். உண்மையில் பரந்த வாசிப்பு ஒருவரின் கற்பனை வளத்தையும், படைப்பாற்றலையும் மேலும் செழுமை அடைய வைக்குமென்பதே என் கருத்து. பரந்த வாசிப்பு காரணமாக ஒருவரின் எழுத்தாற்றல் மேன்மேலும் வளர்கின்றது. பரிணாமமடைகின்றது. மொழியைக் கையாடும் ஆற்றலும் மேலும் வளர்கின்றது.

அத்துடன் ஒருவனுக்கு 'எழுத்தும் கற்பனை வளமும் தானாக வரவேண்டியது ஒன்றாகும்.  அதற்கு வாசிப்பு பெரிதாக உதவப் போவதில்லை ' என்றும் கூறுகின்றார். எழுதும் ஆர்வம் என்பது பலருக்குத் தானாக பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு காரணமாக வரலாம். அவ்விதம் இல்லாமலும் வாழும் சூழல் காரணமாகவும் வரலாம். கற்பனை வளம் என்பது அவரது வாசிப்பு , சிந்தனையாற்றல், பலவகை அனுபவங்கள் மற்றும் பரம்பரை உயிரணுக்களின் பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக செழுமையடையலாம். இது என் கருத்து. ஒருவரின் எழுத்துச்சிறப்புக்கும், படைப்பாற்றலுக்கும் நிச்சயம் வாசிப்பு பெரிதும் உதவும் என்பது என் கருத்து. உதாரணத்துக்குச் சங்கீதத்தில் ஆர்வமுள்ள ஒருவரின் திறமை வளர்வதற்கு அவர் நிச்சயம் அத்துறையில் மேலும் கற்க வேண்டும். பிறப்பிலேயே அவருக்குப் பாடும் திறமை இருந்தாலும் அவர் அத்துறையில் கற்காமல் சிறக்க முடியாது. சிலர் விதிவிலக்காக ஆரம்பத்தில் பிரகாசித்தாலும், அப்பிரகாசம் மேலும் சிறப்படையை பயிற்சியும், கல்வியும் அவசியம். இது போலவே எழுத்தைப்பொறுத்தவரையில் வாசிப்பு எழுத்தின் சிறப்புக்கு மிகவும் அத்தியாவசியமானதொன்று.

மேலும் கோமகன் அவரது பதிவுக்கான எதிர்வினையொன்றில் "சமகாலத்தில் எடுத்ததெற்கெல்லாம் எடுகோள் காட்டுகின்ற சோவியத்து மாக்சிம் கோர்க்கியும் ரோல் ஸ்ராயும் எத்தனை புத்தகங்களைக் கரைத்துக் குடித்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை" என்றும் கூறுவார். இக்கூற்றிலேயே அவருக்கு இவர்கள் பற்றிய போதிய வாசிப்பு இல்லையென்பது தெரிய வருகின்றது. இதுவே வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. அவர்கள் இருவரைப்பற்றியும் இன்னும் அதிகம் வாசித்திருந்தால் அவர்கள்தம் எழுத்துச் சிறப்புக்கு வாசிப்பு எவ்விதம் உதவியுள்ளது என்பதைக் கோமகன் அறிந்திருப்பார். உதாரணத்துக்கு மார்க்சிம் கோர்க்கி முறையான கல்வி கற்ற ஒருவரல்லர். அவரது எழுத்து வெற்றிக்கு அவரது வாழ்க்கை அனுபவங்களும், வாசிப்புமே பெரிதும் உதவின. சோசலிச யதார்த்தவாதத்தின் தந்தை என்பர் கோர்க்கியை. பல தடவைகள் அவர் பெயர் நோபல் பரிசுக்குச் சிபார்சு செய்யப்பட்டாலும் அவருக்குப்பரிசு  கிடைக்காதது அக்காலத்து உலக அரசியல் சூழல் காரணமாகவே என்பது பலரின் கருத்து. அவரது 'நான் படித்த பல்கலைக்கழகங்கள்', 'நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்' போன்ற ஆக்கங்கள் எவ்விதம் வாசிப்பு அவருக்குப் பேருதவியாக அமைந்திருந்தது என்பதை வெளிப்படுத்துவன. அவரும் 'தொடர்ந்து வாசியுங்கள். ஆனால் நீங்கள் சிந்தனையை நீங்களாகவே வளர்த்தெடுங்கள்' என்கின்றார்.

மார்க்சிம் கோர்க்கிமார்க்சிம் கோர்க்கியின் On the Art and Craft of Writing என்னும் நூல் தமிழில் ஆர்.கே.கண்ணனின் மொழிபெயர்ப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை நான் எழுதும் அனைவரும் வாசிப்பதற்குப் பரிந்துரை செய்வேன். கோமகன் நிச்சயம் வாசித்துப் பார்க்கவும். மார்க்சிம் கோர்க்கியின் தீவிர வாசிப்பனுபவங்களை, அவற்றின் வாயிலாக அவர் அடைந்த நன்மைகளை எனப்பல விடயங்களை இந்நூலை வாசிப்பதன் மூலம அறிந்து கொள்ளலாம். இந்நூலிலிருந்து அவரது வாசிப்பு பற்றிய கருத்துகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

" நான் எப்படி எழுதக் கற்றுக்கொண்டேன் என்ற கேள்விக்கு இனி பதிலளிக்கின்றேன். நேரடியாக வாழ்க்கையிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் நான் படிமங்களைச் சேகரித்தேன்." (பக்கம் 31, "நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்?")

கோர்க்கி தீவிரமான வாசிப்பாளர். அவர் வாசிப்புக்கு எல்லைகளில்லை. நல்லது கூடாதது என்றெல்லாம் பிரித்துப்பார்க்காமல் அனைத்தையும் வாசித்துத் தள்ளியவர். இது பற்றி அவரே மேற்படி "நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்?" நூலில் கூறியுள்ளார்:

"மோசமான புத்தகங்களையும் நான் கணக்கு வழக்கின்றிப் படித்தேன்.  அவையும் கூட எனக்குப் பயன்படத்தான் செய்தன.  வாழ்க்கையின் ஒளியுள்ள மகிழ்ச்சிகரமான அம்சத்தைத் தெரிந்து கொண்டிருப்பது போலவே அதன் இருளும் மாசும் படர்ந்த அம்சத்தையும் ஒருவன் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  முடிந்த அளவுக்கு மனிதன் அறிவைப்பெற்றிருக்க வேண்டும்." (பக்கம் 32; "நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்?" )

கோர்க்கியின் மேற்படி கூற்றுகள் வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைப்பன.

தமிழில் ஒரு சொற்றொடர் உண்டு. அது 'கண்டதும் கற்கப் பண்டிதன் ஆவான்' என்னைப்பொறுத்தவரையில் ஆரம்பத்தில் தேர்வுகளற்று விருப்பத்தின் அடிப்படையில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் வாசிப்பின் அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களை வாசிக்கலாம். அப்போதும் கூடத் தீவிர இலக்கியப்படைப்புகளைத்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை. அவ்வப்போது மனத்தை இளகுவாக்க மென்வாசிப்பையும் செய்யலாம் விரும்பும் பட்சத்தில்.

டால்ஸ்டாய் தன் வாழ்க்கை முழுவதும் தீவிரமான வாசிப்புக்குத் தன்னை ஈடுபடுத்திய ஒருவர். தனது அறுபத்து மூன்றாவது வயதில் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் தன் வாசிப்பனுவத்தை குழந்தைப்பருவத்திலிருந்து அறுபத்து மூன்றாவது வயது வரை ஐந்து  பகுதிகளாகப்பிரித்து (குழந்தைப்பருவம் - வயது 14, வயது 14 - வயது 20, வயது 20 - வயது 35, வயது 35 - வயது  50 & வயது 50 - வயது 63) அக்காலகட்டத்தில் தன் வாசிப்பைப் பாதித்த நூல்கள் பற்றிய விபரங்களைப் பட்டியலிட்டிருக்கின்றார். டால்ஸ்டாயின் கடிதங்கள் (Tolstoy’s Letters) என்னும் நூல் தொகுப்பில் இதனைக் காணலாம். (புத்தக விபரங்களை காண்பதற்கான இணைய இணைப்பு: https://www.brainpickings.org/2014/09/30/leo-tolstoy-reading-list/ ) இது டால்ஸ்டாயின் தீவிர வாசிப்பை வெளிப்படுத்தும் சான்றுகளிலொன்று.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 24 October 2018 22:12