வாசிப்பும், யோசிப்பும் 311: எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அடுத்த சிறுகதை 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரி'

Sunday, 04 November 2018 23:32 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் தமிழகத்தின் வெகுசன இதழ்களில் குறிப்பாக ஆனந்த விகடனில் நன்கு பிரபலமான எழுத்தாளர். வெகுசன இதழ்களில் புனைகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் அவ்விதழ்களின் வாசகர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அவர்களைக் கவரும் வகையில் எழுதுவதை விரும்புவார்கள். அ.மு.வின் புனைகதைகளை வாசிக்கும்போது இதனை அவதானிக்கலாம். தனது கற்பனையைத் தொய்வில்லாமல், கதைக்கு மேல் கதையாக நகர்த்திச்செல்வதில் வல்லவர் அவர்.

புனைகதைகளை வாசகர்களின் சுவைகளின் அடிப்படையில் எழுதுவதனாலோ என்னவோ சில வேளைகளில் அபுனைவுகளைப்பற்றி விபரிக்கையிலும் அவற்றிலும் வாசிக்கும் அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைக் கவரும் வகையில் புனைவுகளைக் கலந்து விடுகின்றாரோ என்று என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அச்சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வதுபோல் நேற்று நடைபெற்ற வானொலி, தொலைக்காட்சிக் கலைஞர் வி.என்.மதியழகனின் 'சொல்லும் செய்திகள்' நூல் வெளியீட்டில் அவர் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே பற்றிக் குறிப்பிட்ட சம்பவம் அமைந்திருந்தது. அவர் தனது உரையில் எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு நாள் தனது கதையொன்றினை ஆரம்பிக்கத் தகுந்த சொற்கள் கிடைக்காது போனதனால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று குறிப்பிட்டார். நானறிந்தவரையில் ஹெமிங்வே தனது இறுதிக்காலத்தில் மன அழுத்தம் போன்ற பல்வேறு உளவியல்ரீதியிலான மற்றும் உடல்ரீதியிலான நோய்களுக்குள்ளாகியவர். அதன் காரணமாகவே அடிக்கடி மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தவர். சில சமயங்களில் அவற்றில் தங்கியும் சிகிச்சை பெற்று வந்தவர். அவ்விதம் ஒருமுறை தம் உளவியல் சிக்கல்களுக்காகச் சிகிச்சை பெற்றுத் திரும்பி வந்தவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் பிரபல எழுத்தாளர்களின் நாவல்களின் முதல் வரிகளைப்பற்றிக் குறிப்பிடத்தொடங்கிய அ.மு அவர்கள் ஏர்னஸ்ட் ஹெம்ங்வேயின் முடிவையும் சுவையானதொரு புனைவாக்கி விட்டார். ஒருவேளை அவரின் அடுத்த சிறுகதையின் தலைப்பு 'ஏர்னட்ஸ்ட் ஹெமிங்வே எழுதாத நாவலின் எழுதாத முதல் வரிகள்' என்பதாக இருக்குமோ?

ஒரு முக்கியமான விடயமென்னவென்றால்.. ஹெமிங்வேயின் தாத்தா, தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் பேத்தி இவர்களெல்லோரும் ஹெமிங்வேயைப்போல் தற்கொலை செய்துகொண்டவர்கள்தாம். இன்னுமொரு முக்கியமான விடயமென்னவென்றால் ஹெமிங்வே Hemochromatosis என்னுமொரு பரம்பரை வியாதியினால் பீடிக்கப்பட்டிருந்தார். உடலில் இரும்புச்சத்தின் தேவைக்கு மீறிய அதிகரிப்பால் ஏற்படும் வியாதியிது. ஆனால் மருத்துவர்கள அதற்கான முறையான சிகிச்சைகளையும் ஹெமிங்வேயிற்கு வழங்கியிருக்கவில்லை. அந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான உரிய சரியான சிகிச்சையினை எடுக்காதுபோனால் மிகவும் கடுமையான வலிக்கு, துன்பத்துக்கு ஆளாக நேரிடும். அந்நிலைதான் ஹெமிங்வேயுக்கும் ஏற்பட்டது. அதன் காரணமாகவே ஹெமிங்வே தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டாரென தற்போது நம்பப்படுகின்றது. இந்நோய் பரம்பரை சம்பந்தமானதென்ற விடயம் 1996இல்தான் கண்டு பிடிக்கப்பட்டது.


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Monday, 05 November 2018 08:56