வாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'... வ.ந.கிரிதரன் -கனடாவிலிருந்து வெளியான , புலம்பெயர்தமிழ்ப்படைப்பாளிகளிடமிருந்து வெளியான சிறுகதைத்தொகுப்புகளில் 'நான்காவது பரிமாணம்' வெளியீடாக வெளிவந்த எழுத்தாளர் க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்' தொகுப்புக்கு முக்கிய இடமுண்டு. எழுத்தாளர் ஒரு கல்விமான் மட்டுமல்லர் சிறந்த எழுத்தாளரும் கூட. கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு எனப்பல்துறைகளிலும் சிறப்பாக ஆற்றலை வெளிப்படுத்தும் இவரது 'பரதேசம் போனவர்கள்' தொகுப்பினை அண்மையில் ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். தொகுப்பின் கதைகள் அனைத்துமே நாட்டு அரசியற் சூழல் காரணமாகப் புலம்பெயர்ந்து பரதேசம் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்வை விபரிப்பவை. தொகுப்பின் தலைப்பான 'பரதேசம் போனவர்கள்' பொருத்தமான தலைப்பு.

தொகுப்பின் கதைகள் கூறும் கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

சொந்த மண்ணிலிருந்து இன்னுமொரு நாட்டுக்கு, அந்நிய நாட்டுக்கு, வேறொரு கலாச்சாரச்சூழல் விளங்குமிடமொன்றுக்குப் புலம்பெயரும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளியல்ரீதியிலான, கலாச்சாரரீதியிலான மற்றும்  நிறவெறி போன்ற பிரச்சினைகளை, சவால்களை, அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றார்கள் என்பதைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. புதிய சூழல் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் எவ்விதம் அவர்கள் வாழ்வைச் சீரழிக்கின்றன என்பதை  புதிய சூழல் தரும் பொருளியல்ரீதியிலான அனுகூலங்களை எவ்விதம் அவர்கள் தவறாகப்பாவித்துப் பயன்பெறுகின்றார்கள் என்பதையெல்லாம் தொகுப்பின் கதைகள் விபரிக்கின்றன. சில கதைகள் அதிகம் ஏனைய எழுத்தாளர்களினால் கையாளப்பட்டிராத பால் மாற்றம் ('ட்ரான்ஸ்ஜென்டர்'), பாலியல்ரீதியிலான பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றன. இவற்றை வெளிப்படுத்தும் கதைகள் வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.

இத்தொகுப்பில் என் பார்வையில் கவனத்தை ஈர்த்த கதைகளாக 'ஜீவித சங்கல்பம்', 'வெள்ளைப்புறா ஒன்று.', 'பிச்சைக்காசு', 'காற்றைப்போன்றதடி என் காதல்', 'ஆசாரசீலம்' போன்றவற்றைக் கூறுவேன். ஏனையவையும் சோடை போனவையல்ல.

'ஜீவிதசங்கல்பம்' கதையில் வரும் பெண் பால் மாற்றச் சத்திரசிகிச்சை செய்து ஆணாக வீடுதிரும்புகின்றாள். இது போன்ற விடயங்களை எதிர்கொள்ளும் பக்குவமற்ற புகலிடத் தமிழர் சூழலில் அப்பெண் தன் பால்மாற்ற உணர்வுகளைத் தனக்குள்ளேயே வைத்துப் புலுங்கி வீடு திரும்புகின்றாள். திரும்பியவள் தன் தாயிடம் 'முந்தாநாள்தான் அறுவைச்சிகிச்சை செய்து, என்னுடைய ரெண்டு மார்பகங்களையும் வெட்டியெடுத்தார்கள்' என்கின்றாள்.  ஆரம்பத்தில் சிறுது திகைத்துப்போனாலும், அவளது தாய்
தாய்மை உணர்வுகள் வெளிப்பட "ஏனிப்படித் தன்னந்தனியனாக..? .. எனக்கு ஒரு வார்த்தைசொல்லியிருக்கலாமே.." என்கின்றாள்.  மகளின் தலையைக் கோதிவிட்டு, உச்சி முகர்கின்றாள். கதை சொல்லியான அப்பெண் 'நான் அம்மாவின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டேன்' என்று கூறிக் கதையை  முடிக்கையில் எமக்கும் சிறிது ஆசுவாசமாகவிருக்கின்றது. புகலிடத்தமிழ்ச்சூழலிலிருந்து கூறும் பொருளையிட்டு வெளியான முக்கியமான சிறுகதைகளிலொன்று இச்சிறுகதை.

இது போல்  'ஆசாரசீலம்'  சிறுகதை வாழ்வில் கல்வி, வேலையில் உச்ச நிலைக்குச் செல்லும் தமிழ்ப்பெண்ணொருத்தி இறுதியில் தன் பெண் தோழியுடன் வீடு திரும்புகையில் , அவ்வுறவை எதிர்கொள்ளும் பக்குவமற்ற பெற்றோரின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. இக்கதை எழுதப்பட்டுள்ள போக்கானது அப்பெண்ணின் திருமணம் பெற்றோரின் பல்வகை நிபந்தனைகள் காரணமாக உரிய நேரத்தில் நடைபெறாது தடைபட்டமை,  தமிழர் சமூகத்தில் நிலவிய சூழல்கள் காரணமாகத்தான் அப்பெண் அவ்விதம் மாறுகின்றாள் என்பது போன்ற முடிவினை வாசகர்கள் எடுக்கும் வகையில் அமைந்துள்ளது. உண்மையில் ஒருபால் உணர்வுகள் உடலியல் சார்ந்தவையாகத்தான் , பிறப்பிலேயே உருவாகும் ஒன்றாகத்தான் நான் கருதி வந்திருக்கின்றேன். சூழல்கள் காரணமாகவும் இவ்விதம் உருவாகக் கூடுமா என்பது அதுவும் ஆண், பெண் எனப் பாலியல் தொழிலாளர்கள் மலிந்த சூழலைக் கொண்ட சமுதாய அமைப்பொன்றில் கேள்விக்குறியே.  இது  பற்றி இத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் போன்றவர்களே தம் கருத்துகளைக் கூற வேண்டும். ஆனால் இக்கதையும் இக்கதை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் பெறுகின்றது.

'பிச்சைக்காசு' தமிழ்க்குடும்பமொன்று பொய்க்காரணங்களைக் கூறி அரசினால் வழங்கப்படும் சமூக உதவிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வளமாக வாழ்வதை வெளிப்படுத்துகின்றது.

'காற்றைப்போன்றதடி என் காதல்' சிறுகதையைப்படித்தபொழுது இது போன்ற நடந்த பல உண்மைச்சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. மிகவும் கடுமையாக உழைத்து, மனைவியை ஸ்பான்சர் செய்து அவளைப்படிக்க வைக்கின்றான் ஒருவன். அவளுக்காக அவளது பொருளியல் தேவைகளுக்காகக் கடன்படுகின்றான். உழைத்து உழைத்து ஓடாகின்றான். அவள் மீது மிகுந்த காதல் மிகுந்து வாழ்கின்றான். அவனது கடும் உழைப்பால் உயர் நிலையை அடையும் அவள் வாழ்க்கை மாறுகின்றது.
புதிய சூழல்கள் அவளை மாற்றி விடுகின்றன. இறுதியில் ஒரு சந்தர்ப்பத்தில் அவள் அதுவரை அவன் தன் குழந்தையாக எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த பெண் குழந்தை கூட அவனுடையதல்ல என்னும்போது அவன் நிலைகுலைந்து போகின்றான். உளவியல்ரீதியாகப்பாதிப்படைகின்றான். இறுதியில் உளநிலை பாதிக்கப்பட்டு, வீடற்றவர்களிலொருவனாக அலைந்து திரிந்து வாகன விபத்தோன்றில் மடிந்தும் விடுகின்றான். வாசித்து முடித்ததும் நெஞ்சைப்பாதிக்கும் சிறுகதைகளிலொன்று. இக்கதையில் விபரிக்கப்பட்டுள்ள சம்பவங்களையொத்த சம்பவங்களை உள்ளடக்கிய சிலரின் கதைகளை அறிந்திருக்கின்றேன்.  அவை எவ்விதம் அவர்களின் வாழ்க்கையினையே அடியோடு சீர்குலைத்திருக்கின்றன என்பதையும் அடைந்திருக்கின்றேன். அவ்விதமான சம்பவமொன்றினை எழுத்தாளர் நவமும் அறிந்திருக்க வேண்டும் என்று இக்கதையினை வாசித்தபொழுது எண்ணிக்கொண்டேன். ஆனால் இச்சிறுகதை புதிய சமுதாயச் சூழல் எவ்விதம் தமிழ்க்குடும்பமொன்றின் வாழ்வைச் சீரழிக்கின்றது, பாதிக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான சிறுகதைகளிலொன்று.

'வெள்ளைப்புறா ஒன்று' என்னும் சிறுகதை பிரபல்யமான ஜவுளிக்கடையொன்றுக்குச் செல்லும் புகலிடத்தமிழனொருவனை , சமுதாயத்தில் நிலவும் இனவெறிச் சிந்தனை காரணமாக, அங்கு பணியாற்றும் வெள்ளையினப் பெண் பாதுகாவல் அதிகாரி திருட்டுப்பட்டம் கட்ட முனைவதை வெளிப்படுத்துகின்றது என்பதைக்  கதையின் தொடக்கத்தில் சுவையாக, வேடிக்கையுடன் கூறி (ஆரம்பத்தில் அப்பெண் பாதுகாவல் அதிகாரி அவளது பணி காரணமாக அவனை அடிக்கடி வேவு பார்ப்பதை அறியாத அவன் அவள் அழகில் மயங்கி, அவள் தன் அழகில் மயங்கித் தனக்கு வகை வீசுவதாக எண்ணியெண்ணி இன்புறுகின்றான் :-) ) , இறுதியில் வாசகர்களையும் திகைக்க வைக்கின்றது.

எழுத்தாளர் நவத்தின் எழுத்து நடையில் ஆங்காங்கே தென்படும் நகைச்சுவை உணர்வுகளும் கதைகள் மீதான வாசிப்புக்குச் சுவை சேர்க்கின்றன. மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பினைத் தந்ததற்காக நிச்சயம் நவம் பெருமைப்படலாம். 'பரதேசம் போனவர்'களின் வாழ்வைப் பல்கோணங்களில் வெளிப்படுத்தும் நவத்தின் இத்தொகுப்பு புலம்பெயர்தமிழ்ச்சூழலில் வெளியான முக்கியமான தொகுப்புகளில் ஒன்று.

ngiri2704ம்@rogers.com