வாசிப்பும், யோசிப்பும் 334: அஞர், ஆரஞர் மற்றும் பேரஞர் பற்றிய புரிதல்!

Tuesday, 26 March 2019 23:31 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

ஆரஞர்அண்மையில் 'டொராண்டோ'வில் நடைபெற்ற எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் சிறுகதைத்தொகுதியிலுரையாற்றிய முனைவர் மைதிலி தயாநிதி trauma  என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியான சொல் தெரியவில்லை எனச் சபையினரைப்பார்த்துக் கேட்டபோது மேடையில் வீற்றிருந்த கவிஞர் சேரன் அவர்கள் அஞர் என்றார். அஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகின்றது சேரனின் அண்மையில் வெளியான கவிதைப்புத்தகத்தின் பெயரும் கூட அஞர் என்பதுதான். உண்மையில் முனைவர் சேரனின் கருத்துப்படி அஞர் என்பதற்கான அவரது விளக்கம் இணையத்தில் காணப்பட்ட குறிப்பொன்றிலுள்ளது ("முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு ஆற்ற ஒண்ணா அஞர்" - சேரன்). அக்குறிப்பிலுள்ள அவரது அஞர் பற்றிய விளக்கம் வருமாறு:

"பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு என்பவற்றைக் குறிக்கும் பழைய தமிழ்ச் சொல் அஞர். எடுத்துக்காட்டாக, ‘ஊங்கு (மிக்க) அஞர் நிலையே’ என நற்றிணையிலும் (30.10), ‘ஆர உண்டு பேரஞர் போக்கி’ எனப்பொருநராற்றுப்படையிலும்(88), ‘கோடா மரைப்பின் நடுங்கஞர்’ எனக் குறளிலும் இந்தச் சொல் பயின்று வருகிறது. Trauma என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சொல்லாக இதனைப் பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம்."

இதன்படி அஞர் என்றால் "பெருந்துயரம், ஆறாத காயம், ஆற்ற முடியாத மனவடு, உளவடு." உண்மையில் அஞர் என்றால் பெருந்துயரம் அல்ல; துயரம் என்பதே சரியாக எனக்குப்படுகின்றது. 'ஊங்கு அஞர்' என்னும்போது துயரம் பெருந்துயரமாகின்றது.  பெரிய அஞர் (பேரஞர்) என்னும்போது துயரம் பெருந்துயரமாகின்றது. நடுங்கஞர் என்னும் சொல்லிலும் நடுங்கும் என்னும் சொல்லுடன் அஞர் சேரும்போதே நடுங்கஞர் ஆகின்றது.

அண்மைக்காலத்து அகராதிகளில் அஞர் பற்றிய விளக்கங்கள் எதுவுமில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெளியான அகராதிகளிலெல்லாம் அஞர் என்னும் சொல்லும் இடம் பெற்றுள்ளதை அவதானிக்கலாம். உதாரணத்துக்கு  'யாழ்ப்பாணம் மேலைப்புலோலி வித்துவான் அறிஞர் நா.கதிரவேற்பிள்ளை'யின் அகராதியைப்பார்த்தால் (சாரதா பதிப்பக வெளியீடு) அஞர் பற்றிய விளக்கம் இவ்வாறுள்ளது:  "அறிவிலார், துன்பம், வருத்தம்"

இதிலிருந்து அஞர் என்பது துன்பம், வருத்தம் என்னும் பொருளிலும், 'அறிவிலார்' என்னும் பொருளிலும் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. ஆனால் அஞர் என்னும் சொல்லுடன் ஊங்கு, பெரிய என்னும் சொற்கள் சேரும்போது மட்டுமே அஞர் ( துயரம் ) பெருந்துயரமாகின்றது. ஆனால் பெருந்துயரத்தை விபரிக்கவும் இன்னுமொரு பழந்தமிழ்ச்சொல்லுண்டு. அது அஞர் அல்ல ஆரஞர் (பெருந்துன்பம்).

சிலப்பதிகாரத்தில் தேவந்தி வரலாறு என்னும் பகுதியில் அச்சொல் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் வேறிடங்களிலும் இச்சொல் இருக்கலாம். இதுவே என் கண்களில் முதலில் பட்டது. சங்க இலக்கியங்களில் அஞர் தாராளமாகவே பல பாடல்களில் பாவிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

'மாலதி யென்பாள் மாற்றாள் குழவியைப்
பால்சுரந் தூட்டப் பழவினை யுருத்துக்
கூற்றுயிர் கொள்ளக் குழவிக் கிரங்கி
ஆற்றாத் தன்மையள் ஆரஞ ரெய்திப்"

என்று வரும் பகுதியிலுள்ள சொல் அது. மாலதி என்னும் பெண் மாற்றாளுடைய குழந்தைக்குத் தன் முலைப்பாலை ஊட்டுகின்றாள். பழவினை காரணமாக அக்குழந்தையின் உயிரைக் கூற்றுவன் எடுத்துச்சென்றுவிடுகின்றான் (கூற்றுயிர்க்கொள்ள) . அதனைப்பொறுக்க முடியாத மாலதியின் ஆற்றுப்படுத்தப்பட முடியாத பெருந்துயரமே ஆரஞர். இதனையே ஆற்றாத்தன்மையள் ஆரஞ ரெய்தி என்னும் சொற்றொடர்  விளக்குகின்றது.

இவற்றின் படி அஞர் துயரமென்றால் ஆரஞர் பெருந்துயரம்; பேரஞர்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 28 March 2019 20:44