அப்பா நினைவாக......

Sunday, 16 June 2019 07:04 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

அப்பா நடராஜா நவரத்தினம்அப்பாவும் மகனும்வீடு முழுவதும் புத்தகங்கள் , சஞ்சிகைகளால் நிறைந்திருந்த சூழலுக்குக் காரணம் அப்பா(நடராஜா நவரத்தினம் - நில அளவையாளரான அவரைப் பலர் 'Tall Nava' என்று அறிந்திருக்கின்றார்கள்).  தமிழகச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், இலங்கைப்பத்திரிகைகள் என்று அவற்றை வாங்கிக் குவித்தார். இவற்றுடன் அவர் தனது ஆங்கில நூல்களுக்காக புத்தக 'ஷெல்ஃப்' ஒன்றும் வைத்திருந்தார். அவற்றிலிருந்த நூல்களின் ஆசிரியர்களில் முக்கியமானவர் கிறகாம் கிறீன். அவரது நாவல்கள் பல அவரிடமிருந்தன. ஆர்.கே.நாராயணனின் நாவல்களும் ஓரிரண்டிருந்தன. டி.இ.லாரண்ஸின் 'லாரண்ஸ் ஒஃப் அராபியா' (Lawrence of Arabia) . இவற்றுடனிருந்த இன்னுமொரு நூல் டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா'.

என் வாசிப்பு, எழுத்தார்வத்துக்கு முக்கிய காரணமே அப்பாதான். அப்பா என்றதும் கூடவே நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம் அப்பாவுடன் பார்த்த ஆங்கிலத்திரைப்படங்கள். என் சிறு வயதில் வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் என்னைத் தன்னுடன் ஆங்கிலத்திரைப்படங்களுக்குக் கூட்டிச் சென்றிருக்கின்றார். 'சீன் கானரி' ஜேம்ஸ் பாண்டாக நடித்த 'யு ஒன்லி லிவ் டுவைஸ்' , 'பரபாஸ்', 'பெனஹர்' அடுத்தது 'டென் கமாண்ட்மென்ட்ஸ்'.  இவற்றில் முதலாவதைத்தவிர ஏனையவை பைளிள் கதைகளை ஆதாரமாகக்கொண்டவை. இத்திரைப்படங்கள் அவருக்குப் பிடித்திருந்ததற்கு முக்கிய காரணங்களிலொன்று அவற்றில் நடித்திருந்த நடிகர்கள். இவர்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்த 'ஹாலிவூட்' நடிகர்கள். பாண்ட் திரைப்படத்தில் சீன் கானரி. பரபாஸில் அந்தனி குயின். பென்ஹர், டென் கமாண்ட்மென்ட்ஸில் சார்ள்டன் ஹெஸ்டன். இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள். இதன் மூலம் என் பால்யகாலப்பருவத்திலேயே இந்நடிகர்கள் எனக்கும் அறிமுகமானார்கள். பின்னர் என் பதின்ம வயதுகளில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் பலவற்றைத் தேடித்தேடிப்பார்ப்பதற்கு அப்பாவுடன் சென்று பார்த்த இத்திரைப்படங்களே காரணம்.

அக்காலகட்டத்தில் அவருக்குப்பிடித்த நடிகர் சிவாஜி. எனக்கோ எம்ஜிஆர். பாலச்சந்தரின் திரைப்படங்களை அவர் விரும்பிப் பார்த்தார். அவை பற்றியும் அவர் அம்மாவுடன் உரையாடுவார். குறிப்பாக எதிர் நீச்சல், பாமா விஜயம் ஆகியவை பற்றிய அவரது அம்மாவுடனான உரையாடல்கள் நினைவிலுள்ளன. எதிர் நீச்சல் படத்தில் வரும் நாயர் (முத்துராமன்) மற்றும் மாது (நாகேஷ்) பாத்திரங்களை அவர் பெரிதும் இரசித்தார்.

தமிழ் எழுத்தாளர்களைப்பொறுத்தவரையில் அவருக்குப் பிடித்த முக்கிய எழுத்தாளர்களிலொருவர் ஜெயகாந்தன். அப்பொழுதுதான் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முத்திரைக்கதைகள் வெளியாகின. அவரது நாவல்களான 'ஒரு மனிதன். ஒரு வீடு . ஒரு  உலகம்' , 'ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்' ஆகியவை வெளியாகியிருந்தன. தினமணிக்கதிரில் அவரது சிறுகதைகள், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவல் ஆகியவை வெளியாகின. ஆனந்த விகடனில் வெளியாகிய குறுநாவல்களான 'கோகிலா என்ன செய்து விட்டாள்', 'ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' ஆகியவை பற்றி அவர் அம்மாவுடன் உரையாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகின்றன.

அப்பா தமிழரசுக் கட்சி ஆதரவாளர். எழுபதுகளில் வவுனியாவில் செல்லத்தம்பு தமிழரசுக் கட்சி சார்பில் தேர்தலில் நின்றபோது , வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்துக்கும் அப்பா என்னை அழைத்துச் சென்றிருந்தார். நான் முதன் முதல் சென்ற அரசியல் கட்சியொன்றின் தேர்தல் கூட்டம் அதுதான். முதல் முறையாக தந்தை செல்வா, 'தானைத்தலைவர்' அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம் எனப்பலரைப் பார்த்ததும் அப்போதுதான். அச்சமயத்தில் மங்கையற்கரசி அமிர்தலிங்கத்திடமிருந்து 'ஆட்டோ கிராப்' கூட வாங்கியிருந்தேன்.

தமிழக அரசியலைப்பொறுத்தவரையில் அப்பா அறிஞர் அண்ணாவின்  தலைமையிலான 'திமுக' ஆதரவாளர். அப்போது தமிழகத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மலர் மிகவும் சிறப்பான முறையில் வெளிவந்திருந்தது. அதனையும் அவர் வாங்கியிருந்தார். அம்மலரிலிருந்துதான் கலைஞர் கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன் போன்ற திமுகவினர் பலரின் எழுத்துகளை அறிந்துகொண்டேன். பின்னர் எழுபதுகளில் திமுக, அதிமுக என இரண்டாகப்பிளவுண்டபோது அவர் கலைஞரின் பக்கமே நின்றார். நானோ வாத்தியாரின் பக்கம். இருவருமே அக்காலகட்டத்தில் நண்பர்களைப்போல் அது பற்றி வாதாடுவோம். இன்னும் நினைவிலுள்ளது.

அப்பாவுக்குப் பிடித்த இன்னுமொரு விடயம் கிரிக்கெட். கிரிக்கெட் பற்றிய நேர்முக வர்ணனையை அவரது ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவில் கேட்டுக்கொண்டிருப்பார். அதன் மூலம் நானும் அக்காலகட்டத்துக் கிரிக்கெட் வீரர்கள் பற்றிச் சிறிது அறிந்துகொண்டேன். நவாப் பட்டெளடி, சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் போன்றோரின் காலகட்டம். அப்பொழுதுதான் கவாஸ்கர், விஸ்வநாத் கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமாகிச் சாதனைகள் படைக்கத்தொடங்கியிருந்தார்கள். ஏற்கனவே சாதனை புரிந்த பிராட்மன் பற்றியும் அவர் என்னிடம் கூறியிருக்கின்றார். ஆஸ்திரேலியர்களான சாப்பல் சகோதரர்கள் கிரிக்கெட் உலகில் பிரபலமாக விளங்கிய காலகட்டம். நானும் சில தடவைகள் அவருடன் கிரிக்கெட் நேர்முக வர்ணனையைக் கேட்டதுண்டு.

அப்பா என்றால் நினைவுக்கு வரும் இன்னுமொரு முக்கிய விடயம் அவருக்குப் பிடித்த திரைப்படப்பாடகர்கள், பாடல்கள் பற்றியது. இலங்கை வானொலியில் காலை நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்புவார்கள். அப்போது பி.யு.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரின் பாடல்களைத் தவறாது ஒலிபரப்புவார்கள். அவற்றை ஆர்வமாகக் கேட்பதும் அவரது பொழுது போக்குகளிலொன்று.

அப்பா என்றதும் எனக்கு மறக்க முடியாத விடயம். வவுனியாவில் வசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இரவுகளில் சாய்வு நாற்காலியை முன்றிலில் போட்டுப்படுத்தபடி சுடர்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடியிருப்பார். அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானுமதில் படுத்தப்படி இரவு வானை இரசித்தபடியிருப்பேன். அப்பொழுது அவர் அவ்வப்போது விரையும் செயற்கைக்கோள்களைச் சுட்டிக்காட்டுவார்.

நான் அப்பாவை இழந்தபோது எனக்கு வயது பதினெட்டு. இன்றும் எனக்கு அவரது மறைந்த நாட் சம்பவங்கள் நினைவில் பசுமையாகவுள்ளன. அன்று என் கடைசித்தங்கையின் பிறந்தநாள் கூட. நவம்பர் 30. யாழ் ஶ்ரீதர் திரையரங்கில் பிற்பகட் காட்சியாகத் 'தாயைக் காத்த தனயன்' நண்பர்களுடன் பார்த்துவிட்டு வீடு திரும்புகின்றேன். அப்பொழுது நாங்கள் வடக்கு அராலியில் வசித்துக்கொண்டிருந்தோம். 'சத்தியமூர்த்தி' மாஸ்ட்டர் என்னும் ஆசிரியர் அங்கு நன்கு அறியப்பட்ட ஒருவர். எம் குடும்பத்துடன் நன்கு அன்புடன் பழகி வருமொருவர். வீட்டுக்கு முன்னால் நான் பஸ்ஸில் வரும் வரையில்  காத்து நின்று , பஸ்ஸிலிருந்து  இறங்கி நடக்கையில் என்னை நோக்கி வந்தார். வந்தவர் தோளணைத்து ஆறுதலாக அப்பா இறந்த தகவலைக் கூறினார். எனக்கு ஏற்படும் அதிர்ச்சியைச் சமாளிப்பதற்காக 'சத்தியமூர்த்தி மாஸ்ட்டர்' அவ்விதம் செய்தார். அவரது அப்பெருந்தன்மை இன்னும் என் மனத்திலுள்ளது. அப்பாவின் மறைவையெண்ணியதும் என்  நினைவில் கூடவே 'சத்தியமூர்த்தி மாஸ்ட்ட'ரின் நினைவும் எழுவதுண்டு.

இன்னுமொருவர் அருகில் வசித்து வந்துகொண்டிருந்த 'தேவசகாயம் அங்கிள்' என்று அப்பகுதி மக்கள் பலராலும் அழைக்கப்படுமொருவர். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது இளமைக்காலத்தில் துடுப்பெடுத்தாட்டத்தில் நன்கு பெயர் பெற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவர் நகருக்குச் சென்று வீடு திரும்புகையில் பல சமயங்களில் அப்பாவுடன் மதிலோரம் நின்று உரையாடிவிட்டே செல்வார். அன்றும் பஸ்ஸிலிருந்து இறங்கி வீடு நோக்கி வந்துகொண்டிருந்த அவரைக்கண்டு அவருடன் சிறிது நேரம் உரையாடும் பொருட்டு மதிலோரம் காத்து நின்றார் அப்பா. அச்சமயம்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மதிலருகில் கீழே விழுந்திருக்கின்றர். அவர்தான் அப்பா அவ்விதம் விழுந்ததை முதலில் கவனித்தவர். ஓடி வந்து அப்பாவைத்தூக்கியிருக்கின்றார். இச்சமயத்தில் வீட்டினுள் அப்பாவுக்குத் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்த கடைசித்தங்கையும் ஓடி வந்திருக்கின்றார்.

இன்று தந்தையர் தினப்பதிவுகள் மீண்டும் அப்பா பற்றிய நினைவலைகளை எழுப்பி விட்டன. இருக்கும் வரை இருக்கப்போகின்ற நினைவுகளல்லவா. இது போல் எத்தனை இனிய நினைவுகள்.  மறக்க முடியாத நினைவுகள் அவை.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 16 June 2019 23:47