வேந்தனார் இளஞ்சேய்அண்மையில் நண்பரும், எழுத்தாளருமான வேந்தனார் இளஞ்சேய் என் படைப்புகள் சிலவற்றை வாசித்துத் தன்  கருத்துகளைப் புலனம் (Whatsup) மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். என் படைப்புகளை வாசித்துத் தன் கருத்துகளைத் தெரிவித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.


1. 05.08.2019

நல்லது கிரி. உங்கள் குறுநாவலான "சுமணதாஸ பாஸ்" ஜ தற்போது வாசித்தேன். இயற்கையை இரசிக்கும் தன்மை - அடர்ந்த காடு - கடும்மழை- குளங்கள்- ஆறுகள்-பறவைகள்-விலங்குகள் - இவற்றை ரசிக்கும்  மனப்பாங்கு , பொதுவாகவே எழுத்தாளர்களுக்கு அதிகம். அது உங்கள் எழுத்தில் நன்கு தெரிகின்றது. கதை ஓட்டம் , ஆற்றொழுக்காக இயற்கை காட்சிகள் வர்ணனைகளுடன் தங்கு தடையின்றி செல்கின்றது.வாழ்த்துக்கள்.நீங்கள் தந்த உங்கள் நூல்களையும் விரைவில் வாசிப்பேன். நிற்க. இக் கதையின் உட்கருத்து - மனிதாபிமானமிக்க சுமணதாஸ் பாஸ் கொல்லப் பட்டதும் , அவனுடன் சேர்ந்து அவன் குடும்பமும் கொல்லப்பட்டதும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பும், ஆதங்கமுமே. இதை நான் நன்கு உணர்கின்றேன். ஏற்றுக் கொள்கின்றேன்.

சம்பவம் 1
நானிருந்த கந்தர்மடத்தில் ,  1969-73 பகுதிகளில், என் வீட்டிற்கு மூன்று வீடு தள்ளி ஓர் குடும்பம்  வசித்து வந்தது. மூத்த இரு ஆண் பிள்ளைகள்.கடைசி பெண்பிள்ளை. மூத்த ஆண் பிள்ளைக்கு என்னிலும் 3 வயது குறைவு. மற்றவனுக்கு 5 வயது குறைவு. கடைசிப் பெண் பிள்ளை 12 வயது இளமையானவள். இரு பெடியன்களும் எங்களுடன் துடுப்பெடுத்தாட்டம்- உதைபந்தாட்டம்  விளையாடுவார்கள். அவர்களுடன் வரும் சிறுமியை, என் சிறிய தமக்கையார் தூக்கிக் கொண்டு திரிவார்.

ஞானம் சஞ்சிகையில் வ.ந.கிரிதரனின் 'சுமணதாஸ பாஸ்'இவர்கள் 1974 அளவில் கொழும்பு சென்றுவிட்டார்கள். நான் இந்த இரு ஆண் பிள்ளைகளையும் 1983 இன் தொடக்கத்தில் கொழும்பில் சந்தித்தேன் . மிகவும் அழகான - கம்பீரமான உருவத்துடன் 23 வயது - 21 வயது இளைஞர்கள்,  தங்கள் தங்கையும் (14 வயது) நலமாக உள்ளதாகக் கூறினார்கள் கொழும்பில் சொந்த வீடு கட்டி வசித்து வருவதாகக் கூறினார்கள். பின் நான் இவர்களில் இளைய சகோதரனையும் , சகோதரியையும் கண்டது , 1983 ஆடி 23 , கலவரத்தில் , பம்பலப்பிட்டி - சரசுவதி மண்டபத்தில் அகதிகளாய். இளையவனிடம் தமையனை - தகப்பனைப் பற்றி விசாரித்தேன் . (தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்). நீண்ட மெளனத்தின் பின் , தகப்பனாரும் - தமையனும் - காடையர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டு - வீட்டின் முன் எரியூட்டிக் கொளுத்தப்பட்ட செய்தியை , விம்மலுடன் கூறினான். வீட்டலிருந்த தங்கையை ஓடும்படி விட்டு விட்டார்கள். வெளி  இடத்தில் இவன் நின்றதால் தப்பினான். இவர்களை என்னுடன் யாழ் கூட்டி வந்து , ஊரில் இருந்த அவர்களின் பாழடைந்த வீட்டைத் துப்பரவாக்கி தங்க வைத்தோம். பின் இந்த இளைஞனும் இயக்கமொன்றில்  இணைந்து ,  1986 அளவில் ,கடலில் உயிர் இழந்ததாக அறிந்தேன். இந்த இரு கம்பீரமான  இளைஞர்களையும், அவர்களின் சாதுவான( இதற்கு ஓர் கதையுமுண்டு-  அது 1970 இல் நடந்தது)தந்தையின் முகமும் இன்றும் அடிக்கடி என் நினைவில் வரும்.

சம்பவம் 2
நான் பரமேசுவராக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற காலத்தில் , மேல் வகுப்பு ஆங்கில ஆசிரியராக இருந்தவர் - என் தந்தையின் நண்பர். இவரிற்கு நான்கு பெண் பிள்ளைகளும் - ஓர் ஆண் பிள்ளையும். ஆண்பிள்ளை இரண்டாம் பிள்ளை என்று நம்புகின்றேன் . ஓர் சாதாரண ஏழை ஆசிரியர் - சீதனக் கொடுமை. பெண்கள் உரிய காலம் வந்தும் மணமுடிக்கவில்லை.. மகன் பொறியியல் துறைக்குத் தெரிவாகி - பொறியியல் ஆளராக கொழும்பில் வேலை. ஆடிக் கலவரம். அகதியாக மண்டபத்தில் குடும்பங்கள். கிருலப்பனையில் உள்ள தங்கள் வீடுகளுக்கு , ஐந்து தமிழ் பொறியியலாளர்களும்- அலவலக வானில்- அலுவலக சாரதியுடன்  சென்று , நகைகளை எடுத்து வந்தார்கள் . நான் மண்டபத்தில் நின்று, என் சிங்கள நண்பர் இருவர் துணைவர, தெகிவளையில் உள்ள என் அறைக்குச் சென்று , உடு துணிகளை எடுத்துக் கொண்டு, பம்பலப் பிட்டியிலுள்ள என் நண்பரொருவரின் வீட்டில் தங்குவதற்காக , கிருலப்பனை ஊடாக வருகின்றேன். ஜீப்பொன்று எரியூட்டப் பட்டது. என் நண்பர்கள் என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டார்கள். பின்னர் அறிந்தோம் - சாரதி வண்டியை நிற்பாட்டி விட்டு இறங்க , வண்டி 5 பொறியியலாளர்களுடனும் எரியூட்டப் பட்டதாக. நான்கு பெண்களை வாழ வைக்க இருந்த அந்த  ஏழை ஆங்கில ஆசிரியரின் மகனும், எரியுண்டு இறந்தான்.

கலவரங்கள் கொடுமையானவை. இயக்கங்களுக்கும் - சிங்கள இராணுவத்திற்கும் போர். இறந்தது பல அப்பாவிப் பொது மக்கள். ஏன். இனங்களுக்கிடையில் நம்பிக்கையீனம் வலுப்பெற்றது. போராட்டங்கள். காட்டிக் கொடுப்புகள். களையெடுப்புக்கள் .வஞ்சம் தீர்ப்புகள். பழி வாங்கல்கள். மனித உயிரிற்கு மதிப்பே இல்லை. ஆண்மை மிக்க வீரம். இவ் வீரத்தில் ஈரமிருக்க வேண்டும். ஈர முள்ள வீரமே அழிவைக் குறைக்கும். மறம் வேண்டும். அறம் கலந்த மறமே அழிவைக் குறைத்து , நிலையான வெற்றியைத் தரும். எம் கடந்த 50 வருடங்களான இனப் போராட்டங்களில் பற்பல அழிவுகள். இழப்புகள். பாதிக்கப் பட்டோர் அப்பாவிப் பொதுமக்கள். அதிலும்  பாதிக்கப் பட்ட பொது மக்களில் 95 சத வீதம் தமிழ் மக்கள். யார் பொறுப்பு? ஆங்கிலவனா? சிங்களவர்களா? தமிழ் அரசியல் தலைவர்களா? இயக்கங்களா? உலக நாடுகளா? நாமா? ஆண்டவனா? விதியா? பதில் தெரியவில்லை !

நன்றி.
இளஞ்சேய்


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'2.  Aug. 18 , 2019

கிரிதரன், உமது "அமெரிக்கா" குறுநாவலை இன்று முழுமையாக வாசித்தேன். அத்தியாயம் 1 இலிருந்து அத்தியாயம் 7 வரை ஒரே மூச்சாய் வாசித்து முடித்தேன். முகாம்களில் உள்ளவர்களின் உணர்வுகளை நன்றாக வெளிக் கொணர்ந்திருந்தீர்கள். இந்த முகாமின் 3 மாத அன்பவங்கள், ஓர் இளம் கதாசிரியனை உருவாக்கி , இன்று புகழ் பெற்ற நாவலாசிரியன்- பத்திரிகையாசிரியனை உருவாக்கியிருப்பதாக எண்ணுகின்றேன். உங்கள் குடிவரவாளன் நாவலை நாளை வாசிக்க உள்ளேன்.
வாழ்த்துகள்.

நன்றி.
இளஞ்சேய்

3.  Aug. 18 , 2019


கிரிதரன், உமது குடிவரவாளன் நாவலை முழுமையாக வாசித்தேன். இளங்கோவுடன் நானும் முழுமையாக , அவனின் 9 மாத (அமெரிக்கா குறுநாவலில் அவனுடன் 3 மாதம் அவனின் முகாம் வாழ்க்கையை அனுபவித்தேன்) நியூயோர்க் வாழ்க்கையை வாழ்ந்தேன். இளங்கோவின் அந்த ஒரு வருட வாழ்வு, அவன் வாழ்வில் போராடும் மனத் திண்மையைக் கூட்டியிருப்பதைக் கண்டேன்.

இந்தச் சம்பவங்களை, எமது வருங்கால சந்ததியினர் அறிந்திடல் நல்லது. ஆனால் அவர்கள் இவற்றைத் தமிழில் வாசிப்பார்களோ தெரியாது? ஆங்கில மொழிபெயர்ப்பெனில் சிலசமயம் வாசிக்கலாம். இளங்கோவின் கனடா நுழைவு, அதன்பின் அவன் கனடாவில் வாழ்வைத் தொடங்க எடுத்த பிரயத்தனங்கள் பற்றியும் எழுதியுள்ளீர்களா?

நான் படித்த பல பிரபல எழுத்தாளர்களின் நாவலைப் போலவே இந் நாவலும் எனக்குப் பட்டது.இன்றுகாலை 2.5 மணித்துளிகள் இந்த நாவலைப் படித்த போது ஏதோ ஓர் மனச்சுமை, எம் புலம்பெயர் வாழ்வுபற்றி ஏற்பட்டது. உமது மற்றச் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களையும் வாசிக்கும் ஆர்வத்தில் உள்ளேன். வாழ்த்துகள்.

நன்றி.
இளஞ்சேய்