கணன் ஸ்வாமியின் 'பரதேசியின் வலித்தொகை'

Sunday, 22 December 2019 09:45 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

கணன் ஸ்வாமிநண்பர் கணன் ஸ்வாமியுடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் இன்று நடைபெற்ற தேடகம் அமைப்பினரின் முப்பதாண்டு விழாவின்போது கிடைத்தது. அப்பொழுது அவர் தமிழகத்துப் புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத்தமிழ் அகதி முகாமில் சுமார் பதினைந்து வருடங்கள் தான் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் அவர் நண்பர்களுடன் இணைந்து 'பரதேசியின் வலித்தொகை' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் 2008 வரை 'மனுதர்' எனுமொரு வலைப்பதிவினையும் நடாத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தேன். ஒரு பதிவு மட்டுமேயிருந்தது. ஏனையவை நீக்கப்பட்டு விட்டன போலும்.

கணன் ஸ்வாமி தன் புதுக்கோட்டை அகதிகள் முகாம் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நல்லதோர் ஆவணமாகவிருக்கும். கணன் ஸ்வாமி செய்வாரா? செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

அவரது 'மனுதர்' வலைப்பதிவிலுள்ள 'பரதேசியின் வலித்தொகை' 11 கவிதைகளின் தொகுப்பிது. அப்பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பரதேசியின் வலித்தொகை தொகுப்புக்கு நல்லதொரு பெயர். அகதிகளாகப் பரதேசம் அலைந்து திரிபவர்களின் வலியினை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகை (தொகுப்பு).


கணன் ஸ்வாமியின் 'மனுதர்' வலைப்பதிவிலிருந்து.....

'பரதேசியின் வலித்தொகை'

இந்த மன அதிர்வுப்பதிவு கிட்ட தட்ட பதினைந்து ஆண்டுகளின் முன் தமிழ்நாட்டிலுள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் ஒரு அகதியால் பதிவு செய்யப்பட்டது தமிழீழப் போரில் பாதிக்கப்பட்ட லட்சகணக்கான நிஜ அகதிகள் தமிழ்நாட்டில் இன்னமும் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது .

1. ஒரு குருவியும் குஞ்சும்

(மனிதனின் முடி உக்கிவிடாது மனித சாம்ராஜ்ஜம் அழிந்தபின்பும்!)
அழிந்தும் அழித்தும் போனான் மானிடன்
அதோ ஆங்கே அலையலையாய்
காற்றில் பறந்து வரும்
தலைமுடி உருண்டைகள்
கூடுகள் கட்ட கூட
மிருதுவானவை - ஆனால்
மானிடன் வஞ்சகன்
தன் இனத்தையே அழித்தவன் -பாவி
நீ முட்களால் கூட கூடு கட்டு
மனிதனை நினைத்துக் கூடப் பாராதே கண்ணு ........

2. வார்த்தைகளை தாண்டி

உடனிருந்தவன் ஒருவன் மீது
புல் முளைத்துப்போனது
காணமல் போனவன் ஒருவன்,
இருவர் அகதியாய்
ஒருவன் மட்டும்
மீன் பிடிக்கச்செல்வான்
அவற்றை தேடுவதும்
தோற்பதும் வெல்வதும்
அவன் போராட்டம்
காணும் போதெல்லாம்
வெகு நேரம் பேசமுடியாது
கடைசியாகச் சொன்னான்
''நீயும் நானும் தான் மிச்சம்''
அவனுடைய அந்த வார்த்தைகளை விட
அடுத்தது யார்?
என்ற அவன் பார்வையே
கனமாயிருந்தது !

3. சாவச்சம்

உலகுப்பந்தை உருட்டிவிளையாடும்
காலமுட்களிடை என்வாழ்வும்
துயரச்சாமிகுந்த தெருக்களில்
அவலநிசப்தம்
பழைய அதே நிலவொளி
இடையிடையே
தன் உயிரை உறுதி செய்யும்
தெருநாயின் குரைப்பு
முற்றத்தில் நாளை கிடக்கப்போகும்
மனித மண்டைகளை
காணத்தயாராகும் மனம்
நிலையாமை மறந்து
தூங்கி எழத்துடிக்கும் கண்கள்
உறுதிசெய்யுமா
நாளைய விழிப்பை எனக்கு.

4. என் பின்னால்

அடையாளம் காட்ட இழந்தவை பல
இப்போ ஏதோ ஓன்று மிகவும்
சமீபத்தில் உள்ளது என
உள்மனம் சொல்கிறது
எதிர்பாராத ஏதோ ஒன்றே
எனை எதிர்பார்த்து
தொடர்ந்து வரும்
.

5. ஏக்கம்

விழுதுகள் பெருக்கி அடர்
விருட்சமாய் நிழல் பரப்பி
வாழ்ந்த வாழ்வு
கூண்டுக் கிளிகளைகண்டு ஏங்குகிறது
வேரறுந்து பெயர்ந்து
சடிகளுள் முடங்கி.

6. பஞ்சு

மெல்லுடல் வருடி தலையணையுள்
புதைந்து கொண்டது சொற்பனங்கள்
ஓரம் கிழிந்து எட்டிப்பார்த்த
இலவம் பஞ்சும் சொன்னது
தனக்காயும் ஒரு கிளி காத்திருந்ததை

7. ஒளிவட்டங்கள்

யாரைச் சுற்றப்போகிறது ?
முன்பெலாம் அவரை இவரை என
அரசனையும் ஆண்டவனையும்
என்றிருந்தவை
நிகழ்காலம் இறந்து
வரலாறாய் வரும் பொழுது
யாரை சுற்றப்போகிறது
ஒளிவட்டங்கள்
இன்னொருபுறம்
அந்தோ பாவம் அதனை
படிக்கப் போகிறவர்கள்

8. நதி

முட்டையோட்டில் புல்லரிக்கிறது
உட்புறத்தே அது
அடைத்து அடைகாத்து
கொண்டிருக்கும்
கருவை உயிர்மூச்சை
உடைத்து வெல்லும்
அந்நாள் வரை
சுதந்திர ஓட்டத்தை
நாளும் எண்ணி எண்ணி
முட்டையோட்டில் புல்லரிக்கிறது


9. ஒரு கனவில் விபத்தும் சம்பவமும்

(பிறப்பு ஓர் விபத்து, மரணம் ஓர் சம்பவம் -விளாடிமிர் இலியச் லெனின் )

9 விபத்தின் உயிர் சூட்டின்

வேகமாய் ஸ்பரிசம்
பிரண்டு இடமாறி
பயணித்து ஜனித்து
பள்ளிக்கும் பள்ளத்துக்குமாய்
ஓடி ஓடி
பதினாறு வயது
அத்தை மகளுக்கு
அபிமன்யு ஒருவனை
தந்து கண்ணான
அவளையும் விட்டு
யாருக்கும் சொல்லாது
சுவடுகளையும் வடுக்களையும்
இறக்கிவைத்து வெறுமையாய்
பிரவேசித்தான்
ஓர் சம்பவத்தினிலே ....

10. நிலவும் பரிவட்டமும்

குரும்பை தேரோட்டி
கொடிகட்டி பறந்த
அன் நாட்கள் நான்
ராசாவாயிருந்த காலம்
எனது தேர் முன்பேவரும்
அந்த அழகே பெருமை
என்னையும்
ஏன் தொலைத்தாய்
யுகங்கள் ஊழிகள் என
தேடியும் கிடையாத
பொருளா சுதந்திரம் ?

சுதந்திரநதி என்ற
செங்குருதி சலவையில்
துவைந்து போனது
அதன் பிரவாக
ஏக்கமும் கூட
நீர் மறுத்து நதி
செந்நீர் ஓடுவதை
சீரணிக்க மறுக்கிறது
மனம்.

11. வெளி

இந்த இருளில் நான்
இரு கைவிரிக்க
ஆங்காங்கே தடுக்கி
முட்டி மோதும்
இன்னமும் சுருங்கினால்
நான் நிற்கிறேன்
அறியாத பாதங்களுடன்
வேறுபட்டு நான் .
முடிந்தவரை உள்ளெடுத்து
சுவாசத்தில் ஒரு
விலாசத்தை தேற்ற
எண்ணினால்
நீட்ட முடியவில்லை
அதிகபட்சம் தொண்டை வரை
சுருங்கிக் கொள்கிறது
நான் .
எங்கே நான்
நான் தேடுகிறது எனை
எதையும் காணமுடியவில்லை

உள்வளைந்து குறுகி
ஊனாய் வழிந்து
ஓடிவிட்டான்
நான்.
துள்ளி வெளியே
தப்பநினைத்த
கண்களிரண்டும்
வழுக்கி
ஒவ்வெரு முலையில்
ஊனில் மிதந்து
பார்த்துக் கொண்டே
இருந்தது .
ஒருகண் மற்றயதை
நேரில் சந்தித்த
ஆனந்தத்தில்
என்னை பற்றிய
தேடலை மறந்தது
நான்.
அங்கே எனது
பாதங்களிரண்டும்
ஊன்றி இருந்ததை
சொல்ல நினைத்திருக்கலாம்
ஒருவேளை
குதர்க்கவாதி என்று கூட .
கிறுக்கல்களில்
சிக்கிப்போனது வழி
பயணித்து முடிக்க
நாட்கள் நீள்கிறது .
கிட்டவில்லை வெளி
வெளியை நோக்கிய
கண்களை நம்பி
உபயோகமில்லை.
வேண்டாம் இந்தபயணம்
நாசமாய் போன கண்கள்
தொலைந்துபோன
பாதைகள் போல்
தொலைந்து போகட்டும் .
பாவம் கால்கள்
இன்னமும் சுமக்கிறது
அதற்காக எனினும்
வெளி கிட்டட்டும்
தூங்கவும்
தொலைந்து போகவும்
என பெருமூச்சு விட்டது
நான் .
யாராவது ஆணவம் என்றால்
கண்டபடிகேட்டிருப்பேன்
என்றது நான்
பின் நான்
ஒரு சிறுகதை
மட்டுமே என்றது
நான் .
கொலைகார கௌதமனையும்
புறாக்கறி சிபிகளையும்
நம்பாது
விட்டு சிறகடித்து
பறந்தது நான்
வெளியை நோக்கி .

- Monday, August 4, 2008 -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 22 December 2019 09:51