எழுத்தாளர் அருண்மொழிவர்மன்எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு 'தேவதைகளுக்கு வயசாவதில்லை' என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.

உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். :-) உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் :-)

அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீரும் 'பால்ய காலத்து சகி' நாவலில் தன் தேவதையை மீண்டும் சந்திக்கும் ஒருவன் அடையும் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.
மகாகவி பாரதியாரையும் அவரது பால்ய காலத்துச் சகி விட்டு வைக்கவில்லை. தன் முதற்காதல் அனுபவங்களை அவரும் எழுத்தில் வடித்திருக்கின்றார்.

"ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்"

- பாரதியார் தன் 'சுயசரிதை' கவிதையில்.-


கவிதை: தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.

- அருண்மொழிவர்மன் -

மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய
சிலநாட்களின்பின்னர்
மீண்டும் எடிசனுக்குப் போனேன்.
ஓலைக் கூரைகள் சிதைந்துபோய் இருந்தன.
உள்ளே நுழைந்து
வழமையாக நாம் அமரும்
வாங்கில்
சிலநொடிகள் அமர்ந்து பார்த்தேன்.
மேசையில் இருந்த
தூசியை தட்டியபோது
எனது பெயருடன்
எனது நான்கு நண்பர்களின் பெயர்கள்
எழுதி இருந்ததை கண்டதும்
கண்ணில் நீர் கட்டியது.
அதற்கு கீழாக சற்று மெல்லிய
எழுத்துகளில் எழுதப்பட்டு
ஆனால்
பிரகாசமாக தெரிந்தது
அந்த தேவதையின்
பெயர்.
காதல் பழசாவதும் இல்லை,
தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை.