'டொரோண்டோ' நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு ஏற்படவுள்ள முடிவு?இன்று பிற்பகல் 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில்  தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் 'இன்னும் ஓரிரு மாதங்களில் 'டொரோண்டோ'விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்' என்று கூறியதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. 'என்ன! எல்லா நூலகக் கிளைகளிலிருந்துமா?' என்று வியப்புடன் கேட்டேன்.

என் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் 'துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்' என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா?' என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் 'அநேகமாக 'ரீசைக்கிள்' செய்வார்கள் 'என்றார்.

உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.

உடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு 'ஓர்டர்' தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா? என்று தெரியவில்லை.

இருந்தாலும் அந்நூலகப்பணியாளர் கூறிய பன்மொழி நூல்கள் ஓரிரண்டைத்தவிர எடுத்து விடுவார்கள் என்பதும், அநேகமாகத் தமிழ் நூல்களை மீள்சுழற்சி செய்து விடுவார்கள் என்பதும் மனத்தைச் சிறிது வருடவே செய்தன. இச்செயதி உண்மைதானா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டேன். 'டொரொண்டோ நூலக'த்தின் உயர் அதிகாரிகளுடன் இது பற்றித்தொடர்பு கொள்ளவேண்டுமென்றும் எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் 'டொரோண்டோ 'நூலகக் கிளைகளில் தமிழ் நூல்கள் இல்லாமலிருக்கும் காட்சியை நினைத்துப்பார்க்க முடியவில்லை. கடந்த பல வருடங்களாகத் தமிழ் நூல்களை அங்கிருந்து அதிகமாக இரவல் வாங்கிப்பாவிப்பவர்களில் நிச்சயம் நானுமொருவனாகவிருப்பேன்.

 'ஃபிளெமிங்டன் பார்க்'கில் அமைந்திருக்கும் 'டொராண்டோ பொதுசன நூலக'க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது.

அங்கிருந்து திரும்புகையில் ஒன்றினை அவதானித்தேன்: முன்பு தமிழ் நூல்களிருந்த புத்தக அடுக்கத்துக்கருகிலிருந்த மேசையைச் சுற்றி நாலைந்து முதிய தமிழர்கள் அமர்ந்திருந்தார்கள். ஏதாவது நூல்களைப்பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றார்களா என்று கடைக்கண்ணால் நோக்கினேன். அவர்கள் ஊர் வம்பளந்தபடியிருந்தார்கள். கூடவே 'கார்ட்ஸ்' விளையாட்டு விளையாடுவதிலும் மும்முரமாகவிருந்தார்கள். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.