காலவெளிச் சட்டங்களைக் கோத்து
உருவானதிந்த இருப்படி கண்ணம்மா!
இவ்விருப்புமொரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ!
என்னாசையொன்றுள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
ஒருபோதில் ,உணர்வுகள் கிளர்தெழுந்த
பருவத்தினொரு போதில்
உனைப்பார்த்த உணர்வுகளுளவே.
அவ்வுணர்வுகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளுளவே.
அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
நினைவுள்ளதா? இருக்கிறதெனக்கு.
மார்புற நூல்தாங்கி, முகம் தாழ்த்தி
நடந்து வந்தாய்; அது உன் பாணி.
நிலம்பார்த்து நடக்குமுனக்கு
நடப்பதற்கு,
நேரெதிர்க் காட்சிகள்
தெரிவதெப்படி என்று வியப்பதுண்டு அப்போது.
இருபுறம் பிரிகுழல் இடைவரை
இருந்தசைய ,
பொட்டிட்ட வதனத்தில் நகையேந்தி நீ'
நடந்துவருமெழிலில் பொழுது சிறக்கும்.
ஒருபோதில் வழக்கம்போல் அசைந்து சென்றாய்
அதிகாலைப்பொழுதொன்றில்.
அவ்விதம் சென்று சந்தி திரும்புகையில்
ஓரப்பார்வைக்கணை தொடுத்துச் சென்றாய்.
நினைவிருக்கிறதா? ஆனால் எனக்கு
இருக்கிறதடி.
அக்கணத்தைச் சிறைப்படுத்தி ஆழ்மனத்தினாழத்தே
பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.
அதற்கு எப்போதுமில்லையடி
விடுதலை. ஆயுள் தண்டனைதான்.
இருக்கும் வரை அதனாயுள் அங்குதான்.

ஆசைபற்றிக் கூறியபின் அலம்பலெதற்கு
என்று நீ கேட்கின்றாய் என்பதும்
புரிகின்றதடி கண்ணம்மா!
திரையிலோடிவிட்ட காட்சிகளை மீண்டும்
'ஓடவிட்டு, ஓடிவிட்ட காட்சிகளிலொன்றிக்
கிடப்பதில்லையா கண்ணம்மா! அதுபோல்
காலவெளிக் காட்சிகளை ஓடவிட்டாலென்ன?
ஆம்! மீண்டும் ஓடவிட்டாலென்ன?
என்று நாம் சிந்துப்பதுண்டு கண்ணம்மா!
இவன் சித்தம் சிதைந்ததுவோ என்று நீ
சிரித்தல் கூடும். நன்றாகச் சிரி.
சித்தம் சிதைந்த சிந்தனையின் விளைவல்ல
கண்ணம்மா இது.
சித்தச் செழிப்பின் விளைச்சலடி இது.
குவாண்டத்திரையில் இருப்புக்குப்
பல நிலைகள் ஒரு கணத்திலுள்ளதை
அறிவாயாயடி  கண்ணம்மா!
அறியின் என் சித்தச் சிறப்பினை உணர்வாய்.
காலவெளித்திரையில்
காலவெளிச்சட்டங்களை
இருந்த காலம் நோக்கி ஓட்டிடும்
ஆற்றல் மிக்கவனிவன் என்பதை
நீ உணரின் அதிசயித்துப்போவாயடி.
காலவெளித்திரையில்
காலவெளிக்காட்டி எந்திரத்தை
இயக்குபவன் நானடி கண்ணம்மா.
முன்னோக்கி, பின்னோக்கி எனப்
பல்நோக்கில்
இயக்குவதில் வல்லவன் நானடி.
ஆம்!
காலவெளித்திரையில்  இருப்புக்காட்சிகளை
முன், பின் நோக்கி ஓட்டுவதில்
நிபுணத்துவம் பெற்ற வல்லுனனடி கண்ணம்மா
நான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.