வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): "அறிந்தால் அறிவியடி அருவியே!"

Tuesday, 25 February 2020 12:38 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!
கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.
கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!
கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!
இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.
காலவெளியடி கண்ணம்மா! நீ என்
காலவெளியடி கண்ணம்மா!

 

எல்லைகடந்து சிறகடிக்க எப்போதும்
விரும்புதடியென் மனம் கண்ணம்மா!
உன் மனமும் அப்படியாயடி!
காலவெளி கடந்து சிறகடிக்க முடியுமெனின்
கண்ணம்மா அக்கனவுலகம் காணத்துடிக்குதென்
மனமே. கண்ணம்மா என் மனமே!
ஒரு வினா! விடைபகிர் கண்ணம்மா!
நீ அலையா கண்ணம்மா!
நீ துகளா கண்ணம்மா!
நீ அலையென்றால் காலவெளியும் அலையன்றோ!
நீ துகளென்றால் காலவெளியும் துகளன்றோ!
அலையா? துகளா ? கண்ணம்மா!
அறிந்தால் அறிவியடி அருவியே!

Last Updated on Tuesday, 25 February 2020 12:48