பத்து நாட்களில் பத்துப் படங்கள் (4) - பாலு மகேந்திராவின் 'வீடு'

Friday, 15 May 2020 11:06 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

இயக்குநர் பாலு மகேந்திராதமிழ்த்திரையுலகில் சத்யஜித் ரே போன்று யாராவது இருக்கின்றார்களா என்று எண்ணிப்பார்த்தால் முழுமையாக அவரைப்போன்றில்லாவிட்டாலும், ஒரளுக்காவது அவரைப்போன்ற ஒருவர் இருக்கின்றார். யார் அவர் என்று நீங்கள் கேட்கலாம். அவரும் சத்யஜித் ரே போல் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். சத்யஜித் ரே இயக்கம், திரைக்கதை, கதை, இசை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர். அவர் சில படங்களுக்கு இயக்கத்துடன் இசையினையும் வழங்கியிருக்கின்றார். இவரும் பன்முகத்திறமை வாய்ந்தவர்தான். இயக்கம், ஓளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை, கதை என்று பன்முகத்திறமை வாய்ந்தவர்தான்.

இருவருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளுள்ளன. இருவருமே எழுத்தாளர்கள். அது தவிர இருவருமே 'பைசிக்கிள் தீவ்' திரைப்படத்தைப்பார்த்து விட்டு , அதன் தூண்டுதலால் தரமான சினிமாவை எடுக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டவர்கள். இப்பொழுது உங்களுக்கு அவர் யாரென்பது புரிந்திருக்கும். அவர்தான் பாலு மகேந்திரா. ஏன் பாலு மகேந்திராவை நூற்றுக்கு நூறு வீதம் சத்யஜித் ரேயுடன் ஒப்பிட முடியாது என்று கேட்கலாம். அதற்குக் காரணம்: ரே ஒருபோதுமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுத்தவரல்லர். ஆனால் பாலு மகேந்திரா விட்டுக்கொடுத்தவர். அதனால் அவரது திரைப்படங்கள் பல ரேயின் படங்களைப்போன்று உன்னத நிலையினை அடையவில்லை. அவரே இதனை உணர்ந்திருக்கின்றார். அதனால்தான் அவர் தான் எடுத்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படங்கள் வீடு மற்றும் சந்தியாராகம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார். இவையிரண்டிலுமே குறைந்தளவு விட்டுக்கொடுப்புகள் செய்ததாகவும் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

இவ்விதம் நான் கூறுவதைக்கேட்டு யாரும் ஏன் பாரதிராஜா, பாலச்சந்தர், பாலாவை விட்டு விட்டீர்கள் என்று போர்க்கொடி தூக்கிவிடாதீர்கள். இது என் கருத்து. உங்கள் கருத்தாக இருக்க வேண்டுமென்பதில்லை. பாலச்சந்தர், பாரதிராஜா, பாலா எல்லாருமே சிறந்த இயக்குநர்கள்தாம். ஆனால் அவர்கள் அனைவருமே வர்த்தக சினிமாவுக்காக அதிக அளவில் விட்டுக்கொடுப்பு செய்தவர்கள். கதை , ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு, கதைப்பின்னல், இசை எல்லாவற்றிலுமே மிகுந்த விட்டுக்கொடுப்புகளைச் செய்தவர்கள். பாலச்சந்தரின் திரைப்படங்களில் பல காட்சிகள் நினைவில் நிற்கும்படியானவை. சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய திரைப்படங்களிலெல்லாமுள்ள விட்டுக்கொடுப்புகளை இயன்ற வரையில் நீக்கி, அவற்றைச் சீரமைத்தால் ஓரளவு தேறும் சாத்தியமுண்டு. பாரதிராஜா கிராமத்தை, கிராமிய இசையைத் தமிழ்ச்சினிமா உலக்குக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவர் திரைப்படங்கள் அனைத்துமே வர்த்தக சினிமாவுக்காக விட்டுக்கொடுப்புகள் அதிக அளவில் செய்தவைதாம். என்னைப் பொறுத்தவரையில் என் வரிசை இவ்வாறிருக்கும்: பாலு மகேந்திரா, பாலா, மகேந்திரன், பாலச்சந்தர் & பாரதிராஜ.

'வீடு' திரைப்படத்தில் பானுசந்தர் & அர்ச்சனா

இம்முறை நான் தேர்வு செய்யும் திரைப்படம் - பாலு மகேந்திராவின் 'வீடு' . இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை (நடிகை அர்ச்சனா) ஆகிய விருதுகளையும் , பிலிம்ஃபெயர் பத்திரிகையின் சிறந்த இயக்குநருக்கான (பாலு மகேந்திரா) விருதினையும் 'வீடு' பெற்றது குறிப்பிடத்தக்கது.

இயக்கம், ஒளிப்பதிவு, 'எடிட்டிங்', திரைக்கதை: பாலு மகேந்திரா
இசை: இளையராஜா
நடிப்பு: அர்ச்சனா, பானுசந்தர், சொக்கலிங்க பாகவதர்
'வீடு; திரைப்பட யு டியூப் இணைப்பு: https://www.youtube.com/watch?v=BYRVBLKa9-o

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Friday, 15 May 2020 11:27