நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!

Tuesday, 19 May 2020 23:11 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!அண்மையில் ஶ்ரீ வாசவி கல்லூரியில் (ஈரோடு) ஏழு நாள் இணையப்பட்டறையொன்று 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' “Translation and Research – A Contemporary Perspective” என்னும் தலைப்பில் நடைபெற்றது. அதனை ஒருங்கிணைத்து நடாத்தியவர் முனைவர் என்.மைதிலி. இப்பட்டறையில் கலந்துகொண்டு , நீண்டதொரு உரையினை அரச கலை & அறிவியற் கல்லூரியில் (அவிநாசி) உதவிபேராசிரியராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் பணியாற்றும் முனைவர் ர.தாரணி அவர்கள் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' ( “Translation and Research – the Connecting Dots”) என்னும் தலைப்பில் நிகழ்த்தினா. அவ்வுரையினை உள்ளடக்கிய காணொளிக்கான இணைய இணைப்பினை அனுப்பியிருந்தார் முனைவர் ர.தாரணி. அதற்காக அவருக்கு என் நன்றி. அத்துடன் அக்காணொளியினை உங்களுடன் பகிர்ந்தும்கொள்கின்றேன். https://youtu.be/GA3SUsC_eb0

அவரது நீண்ட உரையின் முதல் பகுதி சுமார் நாற்பது நிமிடங்கள் மொழிபெயர்ப்பு பற்றியதாகவும், அடுத்த ஒருமணி நேரம் ஆய்வு, மொழிபெயர்ப்பும் ஆய்வும் ஆகியவை பற்றியவையாகவும் அமைந்திருந்தன. மொழிபெயர்ப்பு பற்றிய உரையில் மொழிபெயர்ப்பின் வரலாறு, காலனியாக்கத்திற்குப் பின், மற்றும் முன் காலகட்டத்தில் முறையே உலகில், இந்தியாவில் நடைபெற்ற மொழிபெயர்ப்பு முயற்சிகள், அவை ஆரம்பத்தில் சமய நூல்களின் மொழிபெயர்ப்புகளின் வரலாறாகவே இருந்தன என்பது பற்றிய வரலாறு பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்தியாவைப்பொறுத்தவரையில் அவ்விதமான மொழிபெயர்ப்புகள் சமூகத்தின் உயர்வர்க்கத்தினரின் மொழியான சமஸ்கிருதத்திலேயே அமைந்திருந்தன என்றும் , அதனை உடைத்தவர் புத்தரே என்றும் குறிப்பிட்டார். புத்தர் அவ்வகையான சமயத்தத்துவ நூல்களை பாலி மொழியில் மொழிபெயர்த்து ஏனைய வர்க்கத்தினரையும் சென்றடைய வைத்தார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

முனைவர் என்.மைதிலி

நீண்ட உரையின் பிரதான பகுதியாக அமைந்திருந்தது அடுத்த ஆய்வு, ஆய்வும் மொழிபெயர்ப்பும் பற்றிய பகுதியே. இப்பகுதியில் அவர் ஆய்வுகளும், மொழிபெயர்ப்புகளும் ஒன்றுக்கொன்று பயனுள்ள வகையில் உதவ முடியுமென்பதைப் பல்வகை உதாரணங்களுடன், விளக்கக்காட்சிப்படங்களுடன் (Slides) எடுத்துக்காட்டினார். இப்பகுதியில் அவர் ஆய்வு மாணவர்களுக்குக் கூறிய அறிவுரைகள் முக்கியமானவை. ஆய்வுகள் செய்யும் ,மாணவர்கள் முதல் வருடத்திலிருந்தே தாம் எடுத்துக்கொண்ட விடயத்தைபற்றிய ஆய்வினை முழுமையாகச் செய்திருக்க வேண்டும். பலர் ஆரம்ப வருடங்களை வீணாக்கிவிட்டு , இறுதி வருடத்தில் அவசர அவசரமாக எழுதி முடிக்கின்றார்கள். வெட்டுதலும், ஓட்டுதலும் பிரதிபண்ணுதலும் ஆய்வுகளல்ல என்னும் கருத்தை உள்ளடக்கிய தனது விமர்சனத்தையும் அங்கு அவர் முன்வைத்தார்.

மேலும் மொழிபெயர்ப்புகள் நேரடி மொழிபெயர்ப்புகளாக, தழுவல்களாக (Adaptations) , மீளுருவாக்கங்களாக (Transcreations) அமைந்திருக்கலாம் என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். அவ்விதமான மொழிபெயர்ப்புகள் கூடப் பதிப்பகங்களின், மொழிபெயர்ப்பாளர்களின் நோக்கத்துக்கேற்ப அவர்களின் எண்ணங்களைப்பிரதிபலிப்பவையாக இருக்கலாம் என்றார். உதாரணத்துக்கு அவர் ஆர்.கே, நாராயணனின் புகழ்பெற்ற ஆங்கில நாவல்களிலொன்றான 'சுவாமியும் நண்பர்களும்'நாவல் தமிழில் 'சுவாமியும் நண்பர்களும்', 'சுவாமியும் சிநேகிதர்களும்' என்னும் பெயர்களில் இருவேறு எழுத்தாளர்களினால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானபோது , வெளியான நூல்களின் அட்டைப்படங்களில் ஒன்று சுவாமிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது, இன்னுமொன்று நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது என்று விளக்கினார்.

நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!

அத்துடன் சூழல் இலக்கியம் , தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், குடிவரவாளர்தம் இலக்கியம் , புகலிட இலக்கியம், சங்க இலக்கியம் , பண்டைய தமிழ் இலக்கியமெனப் பல்வகை மொழிபெயர்ப்பு இலக்கியப்படைப்புகளைப்பற்றிய ஆய்வுகளை அவரது உரை வெளிப்படுத்தியது. அவற்றை உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். குடிவரவாளர் இலக்கியம் (Immmigrant literature) பற்றிக்கூறுகையில் அவர் எடுத்துரைத்த 'வெளி பற்றிய கோட்பாடு' (The Theory of Space) என்னைக் கவர்ந்தது. மானுடர்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய வெளியானது எவ்விதம் இன, மத, பால், தேசிய ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் கடந்து செல்லும் போராட்டங்கள் நிறைந்த பாதைகள், அவற்றை வெளிப்படுத்தும் படைப்புகள் பற்றிக் குறிப்பிட்ட அவர் ஆரம்பத்தில் தனது ஆய்வு முயற்சிகளின்போது தான் ஏற்கனவே ஆங்கிலத்தில் அறியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை விட்டு அறியப்படாத ஏனையவர்களைப்பற்றித் தேட முடிவு செய்தது பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு முக்கிய காரணங்களிலொன்று அரைத்த மாவை மீண்டும் அரைப்பதிலென்ன சிறப்பிருக்க முடியும் என்பதுதான். அதனைத்தொடர்ந்த அவரது தேடலின்போது இணையத்தின் வாயிலாக குடிவரவாளர் இலக்கியம் பற்றிய படைப்புகளை வாசித்தபோது புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். அப்பொழுது அவர் வாசித்த எனது படைப்புகளைக் (வ.ந.கிரிதரன் என்னும் பெயரில்இணையத்தில் தமிழில் வெளியான எனது சிறுகதைகள், நாவல்கள் போன்றவை) குறிப்பிட்டார்.

நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!

உண்மையில் அவர் தனது பட்டப்படிப்பு ஆய்வுகளின்போது , 2007ஆம் ஆண்டில் , இணையத்தில் என் படைப்புகளை வாசித்துவிட்டு என்னுடன் தொடர்புகொண்டார். எனது படைப்புகளை மையமாக வைத்துப் புகலிட இலக்கியம்பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றினையும் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கில் சமர்ப்பித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மேலும் சிலர் அவரது ஆய்வையும் உசாத்துணையாகக் கொண்டு என் படைப்புகளைப்பற்றிய ஆய்வுகளை அங்கு நடைபெற்ற ஆய்வரங்குகளில், ஆய்விதழ்களில் எழுதியிருக்கின்றார்கள். மேலும் சிலர் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுக்கு என் படைப்புளை எடுத்திருக்கின்றார்கள். முனைவர் வெற்றிச்செல்வனும் தனது புகலிடத்தமிழர்களின் இலக்கியம் பற்றிய ஆய்வு நூலில் எனது சிறுநாவலான 'அமெரிக்கா' பற்றி ஆராய்திருக்கின்றார். முனைவர் ர.தாரணி மேலும் சில ஆய்வுக்கட்டுரைகளையும் என் படைப்புகளையிட்டு எழுதியிருக்கின்றார்.

நிகழ்வு: 'மொழிபெயர்[ப்பும், ஆய்வும் - சமகாலப் பார்வை' என்னும் இணையப்பட்டறையும் . முனைவர் ர.தாரணியின் 'மொழிபெயர்ப்பு, ஆய்வும் - இணைக்கும் புள்ளிகள்' என்னும் ஆய்வுரையும்!

நீண்ட மிகவும் பயனுள்ள, ஆய்வுச்சிறப்பு மிக்க உரையினை வழங்கியதற்காக அவருக்கும், அதனை ஒழுங்கு செய்து ,ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றிய முனைவர் என்.மைதிலி அவர்களுக்கும் நன்றி.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 19 May 2020 23:35