சம்ஸ்காரா (கன்னடம்) - Samskara (1970)பட்டாபிராம ரெட்டி தயாரித்து, இயக்கிய கன்னடத்திரைப்படம்தான் எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் புகழ்பெற்ற நாவலான 'சம்ஸ்காரா'. பட்டாபிராம ரெட்டியும் எழுத்தாளர், கவிஞர், படத்தயாரிப்பாளர், இயக்குநர்,  திரைக்கதை வசனகர்த்தா எனப்பன்முகக் கலையாளுமை மிக்க ஒருவர். இவற்றுடன் சமுக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட.

இத்திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இவரது மனைவி சிநேகலதா ரெட்டியும் இவரைப்போன்று பன்முகக் கலையாளுமை மிக்க ஒருவர். மேடை, சினிமா நடிகை. சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இந்தியாவில் அவசரகால நிலை நிலவியபோது சிறைவாசம் எட்டு மாதங்கள் அனுபவித்தவர். சிறையில் பல்வகைச்சித்திரவதைகளை அனுபவித்தவர். சிறையில் தொய்வு நோயால் அவதிப்பட்ட இவர் அதன் காரணமாகவே நினைவிழந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிறையிலிருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு , அடுத்தவாரமே சிறைச்சித்திரவதைகள், சிறையில் கவனிக்கப்படாத உடல்நிலை காரணமாக மரணித்தவர். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்குப் பலியாகிய முதலாவது நபர் இவரே. இத்தனைக்கும் காரணம் இவர் அப்போது தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணான்டஸுடன் தொடர்பிலிருந்தார் என்பது மட்டுமே. முன்னாள் அமைச்சரும், அரசியல்வாதியும் இவரிருந்த சிறையில் அப்போது அடைக்கப்பட்டிருந்த மது தாண்டவதே இரவுகளில் சித்திரவதைகளால் அலறும் சிநேகலாதாவின் குரலொலி கேட்டதாகத் தனைது நினைவுக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். சிநேகலதாவும் சிறைக்குறிப்புகளை எழுதியுள்ளார். இவரது மகள் எழுத்தாளரும் , மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நந்தனா ரெட்டி உருவாக்கிய வேலை பார்க்கும் குழந்தைகளுக்கான , பெங்களூரை மையமாகக்கொண்டியங்கும் இலாப, நோக்கற்று இயங்கும் அமைப்பு அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் (2012) பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சிநேகலதா ரெட்டி, பட்டாபிராம ரெட்டி தம்பதியின் மகனும் ஓர் இசைக்கலைஞரே.

இத்திரைப்படத்தில் கதாநாயக வேடத்தில் நடித்திருப்பவர் கன்னடச் சினிமா, நாடக உலகில் நன்கறியப்பட்டவரும், அண்மையில் மறைந்தவருமான கிரீஷ் கர்னாட். இவரும் இயக்குநர், எழுத்தாளர், நாடகாசிரியர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகக்கலைத்திறமை மிக்கவராக விளங்கியவர்.

சம்ஸ்காராவின் பிரதான திரைக்கதை இதுதான்: கர்நாடக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள கிராமமொன்றிலுள்ள அக்ரஹாரத்தை மையமாக்கொண்டு பின்னப்பட்ட நாவல் சம்ஸ்காரா. அங்கு வாழும் பிராமணர்களின் குருவாக விளங்குபவர்.

கிரீஷ்  கர்னாட்

ஆசாரங்களைத் தவறாது கடைப்பிடிக்கும் பிராணோசாரியா. படுத்த படுக்கையாக நோய்வாய்ப்பட்டுக்கிடக்கும் மனைவியைப் பராமரித்து வருபவர். அங்கு வசிக்கும் இன்னுமொரு பிராமணரான நாரணப்பாவோ பிராமண ஆசாரங்களையெல்லாம் மீறி

பட்டாபிராம ரெட்டி & சிநேகலதா ரெட்டி

வாழ்க்கை நடத்துபவர். புலாலுண்டு, முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழுமொருவர். விலைமாதான சந்திரியுடன் வாழ்பவர். இத்தகைய காரணங்களினால் அங்கு வாழும் ஏனைய பிராமணர்களின் வெறுப்புக்காளானவர். இவ்விதமானதொரு சூழலில் நாரணப்பா இறந்து விடுகின்றார்.  ஆனால் அவரது உடலைத்தொட்டு இறுதிச் சடங்குகள் செய்ய ஏனைய பிராமணர்கள் மறுத்துவிடுகின்றனர். இச்சூழலில் ஆசாரசீலரான ,குரு ஸ்தானத்திலிருக்கும் பிராணோசாரியாவிடம் தீர்வுக்கு வருகின்றார்கள். அவராலும் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. காட்டிலுள்ள அனுமான் கோயிலுக்குச் செல்கின்றார். அங்கு இதற்கான முடிவினைக்காட்டும்படி வேண்டிப்பிரார்த்திக்கின்றார். அங்கும் அவருக்கு முடிவெதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பிராமணர் ஒருவர் இறந்துவிட்டால் அவரது இறுதிச்சடங்குகள் செய்யும் வரையில் யாரும் உணவுண்ணக்கூடாது என்றொரு பழக்கமும் அவர்களிடமுள்ளது.

சந்திரி & நாராணப்பா - சம்ஸ்காரக் காட்சி

காட்டில் முடிவெதனையுமெடுக்க முடியாத சூழலிலுள்ள பிராணோசாரியா அங்குள்ள மண்டபத்திலிருக்கும் சந்திரியின் மடியில் சாய்கின்றார். ஏற்கனவே நோயாளி மனைவியுடன் எவ்விதம் உடல்ரீதியிலான சுகங்களையும் பெற்றிராமல் வாழ்க்கை நடத்திவரும் அவருக்கும் அவளுக்குமிடையில் உடல்ரீதியிலான பிணைப்பு அச்சூழலில் நடந்துவிடுகின்றது. குற்ற உணர்வால் அவர் வாடுகின்றார். யாருமே பிணத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்ய முன்வராத நிலையில் சந்திரி தனக்குத் தெரிந்த முஸ்லிம் மனிதர்களின் உதவியுடன் அதனைத் தகனம் செய்து விடுகின்றாள்.

இவ்விதமாகக் கதை நகர்ந்துசெல்கையில் அப்பகுதியை கொள்ளை நோய் தாக்குகின்றது. மனிதர்கள் மடிகின்றார்கள். எல்லோரும் அப்பகுதியை விட்டு வெளியேறுகின்றார்கள். பிரோணாசாரியாவும் செல்கின்றாற். தன் குற்ற உணர்வுக்கான காரணங்களை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமலிருக்கின்றார். இவ்விதமாகச் செல்லும் கதை வெறுமையாக இருக்கும் ஊருக்குத் திரும்புவதுடன் முடிவடைகின்றது. இடையில் அவரது ஆசாரத்தை மீறியதற்காக அவரடையுமுணர்வுகளை, வயிற்றுப் பசி ஏற்படுத்தும் தாக்கங்களையெல்லாம் விபரிக்கின்றது.

எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்திஇத்திரைப்படம் வெளியானபோது முதலில் இதற்குத் தடை விதிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது. தமிழகத்திலும் திரையிட தணிக்கச்சபை அனுமதிக்கவில்லையென்று தெரிகின்றது. பார்ப்பனியத்தைக் கேள்விக்குள்ளாக்கிய திரைக்கதையென்பதால் இதற்கு இந்நிலையேற்பட்டது. ஆனால் பின்னர் இத்திரைப்படம் திரையிடப்பட்டு மத்திய, மாநில மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றைப்பெற்று ,உலக சினிமாவில் முக்கியமானதொரு திரைப்படமாக இடம் பெற்றுவிட்டது. இந்திய மத்திய அரசின் சிறந்த திரைப்படத்துகான தேசிய விருது (1970) இத்திரைப்படத்துக்குக் கிடைத்தது. கர்நாடக மாநில அரசின் சிறந்த துணை நடிகர் (பி.ஆர்.ஜெயராம்) , சிறந்த கதை (யூ.ஆர்.அனந்தமூர்த்தி), சிறந்த ஒளிப்பதிவாளர் (டாம் கோவன்), சிறந்த இரண்டாவது திரைப்படம் (பட்டாபிராம ரெட்டி) ஆகிய பிரிவுகளுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

கலையுலக ஆளுமைகள் பலரின் இணைவு (யு. ஆர்.அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட், பட்டாபிராம ரெட்டி & சிநெகலதா ரெட்டி) சிறந்ததொரு திரைப்படத்தை நமக்குத் தந்திருக்கின்றது. இதே சமயம பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை சீரழித்து வெளியான தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றையும் நினைத்துப்பார்க்கின்றேன். கன்னட, வங்க மற்றும் கேரளத்திரைப்படங்கள் பல எழுத்தாளர்களின் மூலக்கதைகளைச் சிதைக்காமல் , கலைத்துவம் மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் சிவராம் காரந்தின் நாவலான சோமனதுடி (தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நிலையை விபரிப்பது) , எம்.கே.இந்திராவின் சாகித்திய விருது பெற்ற நாவலான பனியம்மா( விதவைப் பெண்ணொருத்தியின் வாழ்க்கைச் சவால்களை வெளிப்படுத்துவது) தாகூரின் கதைகளை அடிப்படையாகக்கொண்டு வெளியான வங்கத்திரைப்படங்கள் தகழி சிவசங்கரப்பிள்ளையின் கதையை மூலமாகக்கொண்ட செம்மீன் , வைக்கம் முகம்மது பஷீரின் மதில்கள் என்று நினைவில் திரைப்படங்கள் சில நிழலாடுகின்றன.

இத்திரைப்படத்துக்கான இணைப்பு: https://ta.wikipedia.org/s/5wv8