ஈழநாடும் , நானும் (5): என் கவிதை முயற்சிகளும், வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!

Tuesday, 09 June 2020 23:14 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

V.N.Giritharan in his teen days.."நான் என்  பால்ய ,பதின்மப் பருவத்து வாசிப்பு, எழுத்தனுபவங்களை இங்கு எழுதுவதற்கு முக்கிய காரணம் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இவ்வனுபவங்களை அறிய வேண்டுமென்பதற்காகவே. பொதுவாக எழுத்தாளர்கள் தம் பால்ய, பருவத்து எழுத்து, வாசிப்பனுபவங்களை விரிவாக எழுதுவது குறைவு. எனது அப்பருவத்து அனுபவங்கள் இப்பொழுதும் மகிழ்ச்சியைத்தருவன. இந்நிலையில் இவற்றை வாசிக்கும் இளம் பருவத்தினருக்கும் இவ்வனுபவங்கள் நிச்சயம் இன்பத்தைத்தருவதுடன் , வாசிப்பு, எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை மேலும் இத்துறைகளில் ஆழ்ந்து ஈடுபடத்தூண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு." - வ.ந.கி -
மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள் மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில் கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும். இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.
அடுத்தது எழுத்து எளிமையானதாகவிருக்க வேண்டும், மக்களின் வாசிப்புக்குரியதாக அமைந்திருக்க வேண்டும். ஆழமான விடயங்களையும் மிகவும் எளிய, மனத்தைத் தொடும் இனிய மொழியில் எழுத வேண்டுமென்பதுதான் என் விருப்பம். இதற்குக் காரணம் என் எழுத்துலக வழிகாட்டிகளான மகாகவி பாரதியாரின் , அறிஞர் அ.ந.கந்தசாமியின் எழுத்துகள். இவர்களின் எழுத்துகள் எளிமையானவை; வாசிக்கும் உள்ளங்களைக் கட்டிப்போடுவன; தெளிந்த ஞானத்தின் விளைவுகளாகப் புடமிடப்பட்ட எழுத்துகள் அவை. தர்க்கச்சிறப்புள்ள, நெஞ்சையள்ளும் அவர்கள் பாவிக்கும் மொழி என் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமானது. பாரதியாரின் பல கவிதைகள் என் நெஞ்சிலெப்போதுமூறிக் கிடப்பவை. அது போல் அ.ந.கந்தசாமியின் எழுத்துகளும் (கவிதை, கட்டுரை & கவிதைகள்) என்னுள்ளத்தில் எப்போதும் ஊறிக்கிடப்பவை. நினைத்த மாத்திரத்தில் உற்சாகம் தரத்தக்கவை.
இவ்விதமான எழுத்துகள் பற்றிய சிந்தனை மிக்க எனக்கு அக்காலகட்டத்தில் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் போன்றவை புதுக்கவிதை முயற்சிகளுக்கு வழங்கிய களங்கள் முக்கியமானவை; உற்சாகத்தையூட்டின. சிந்தாமணியைப் பொறுத்தவரையில் குறைந்த வரிகளைக்கொண்ட கவிதைகளுக்குரிய களமாக அது வழங்கிய மணிக்கவிதை என்னும் பகுதி விளங்கியது. வீரகேசரி தனது உரைவீச்சு என்னும் கவிதைப்பகுதியில் வரிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காமல் ஊக்குவித்தது. அக்காலகட்டத்தில் சிறிது காலம் வெளியாகிய ஈழமணி பத்திரிகையும் சிந்தாமணி போல் குறுகிய வரிகளைக்கொண்ட கவிதைகளுக்குக் களம் அமைத்துத்தந்தாக நினைவு. தினகரனும் தனது கவிதைச்சோலைப் (ஏ.எச். சித்தீக் காரியப்பர் நடத்திவந்தார்) பகுதியில் கவிதைகளுக்கு வரிக்கட்டுப்பாடுகள் அதிகம் விளைவிக்காமல் ஊக்குவித்ததென்பேன். நான் குறிப்பிடுவது 78 - 81 காலகட்டமாகும். இப்பத்திரிகைகள் அனைத்தும் தமது வார வெளியீடுகளிலேயே இக்கவிதைப் பகுதிகளை வெளியிட்டு வந்தன.

உண்மையில் சிறுவர் பகுதிகள் எவ்விதம் சிறுவர்களை எழுத்துலகில் ஊக்குவித்தனவோ அவ்விதமே இக்கவிதைப்பகுதிகளும் கவிதை எழுத முனைபவர்களுக்குரிய ஆரம்பக் களங்களாகத் திகழ்ந்தன. எனவே அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இப்பொழுது நான் அக்காலகட்டத்தில் வெளியான என் கவிதைகளில் என்னிடமுள்ள சிலவற்றை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகின்றேன்.

சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான ஒரு சிறு கவிதை இன்னும் என்னிடமுள்ளது. அதன் பெயர் 'மை'யல். புதுமைப்பெண் பற்றிச் சிரித்திரன் நடாத்திய குறுங்கவிதைப்போட்டியில் தெரிவு செய்யப்பட்டுப் பிரசுரமான கவிதை.

இவ்விதமாக எனது கவிதை முயற்சிகள் இருக்கையில் நான் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கியிருந்தேன். அதிக அளவில் எனது கவிதைகளை 80/81 காலகட்டத்தில் எழுதியிருக்கின்றேன். அக்காலகட்டத்தில் எனது கவனம் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு, பழைமையின் சின்னங்கள் தேடப்படுதல் போன்றவற்றில் திரும்பியது . அவை பற்றிய சில கட்டுரைகளை ஈழநாடு வாரமலரில் எழுதினேன். வீரகேசரியிலும் கோப்பாய்க்கோட்டை பற்றிய கட்டுரையொன்றினை எழுதினேன். அவை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

1. 'மை'யல்

கண் கறுக்க ஒரு மை;
கூந்தல் நரை தடுக்க
ஒரு மை;
உதட்டுச் சிவப்பை
உலகிற் கறிவிக்க
ஒரு மை;
கை நகங்களுக்குக்கும்
மை என்று
மையிட்டுச் செல்லும்
இவளைப் புது'மை'ப்
பெண்ணென அழைக்கலாமோ>

* இக்கவிதை பற்றிய குறிப்பில் சிரித்திரன் பின்வருமாறு குறிப்பிடப்பிட்டிருந்தது: " சிரித்திரன் நடாத்திய புதுக் கவிதைப் போட்டியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நன்றி. ஆயினும் தகுந்த கவிதையை எவரும் எழுதாதது வருத்தத்திற்குரியது. போட்டிக்கு வந்த கவிதைகளில் பாராட்டுக்குரிய கவிதைகள் இங்கு வெளியாகியுள்ளன. தரமான மற்றக் கவிதைகள் பிரசுரமாகும். -ஆசிரியர்- இக்கவிதையை எழுதியபோது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். எனது சலனங்கள் சிறுகதை வெளிவந்த காலகட்டத்திறுகுச் சிறிது முன் அல்லது பின்பாக வெளிவந்திருக்கலாம்.


இக்காலகட்டத்தில் 1978 புத்தாண்டை வரவேற்று எழுதிய புத்தாண்டுக்கவிதை 'புத்தாண்டே வருக' என்னும் பெயரில் (1.1.78) ஈழநாடு பத்திரிகையில் வெளியாகியது. அடுத்துப் பல்கலைக்கழகம் சென்ற ஆண்டும் , ஈழநாடு மாணவர் மலருக்கு எனது சிறுவர் கவிதைகளை அனுப்பி அவை பிரசுரமாகியுள்ளன. அக்காலகட்டத்தில் ஈழநாடு வாரமலரில் என் சிறுகதைகள், ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதே சமயம் எனக்குச் சிறுவர் இலக்கியத்திலும் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென்ற அவாவுமிருந்தது. அவ்விதம் ஈழநாடு மாணவர் மலர் பகுதியில் வெளியான கவிதைகள்: குயிலே! , காலை மலர்ந்திற்று! & மழை! அவற்றை இங்கு தருகின்றேன்.


2. காலை மலர்ந்திற்று!

காலை மலர்ந்திற்று பாரீர்.
காகங்கள் - பா
மாலை புனைந்திடவே காலை
மலர்ந்திற்று பாரீர்.

கிழக்கினின்றுங் கதிரவன்
கிளம்பி ஒளி பரப்பிட,
வழக்கம்போல் தாமரையும் இதழ்
விரித்தே வரவேற்றிட,
சுந்தரப் பண்ணிசைத்திட,
காலையெனும் அரசி மெல்ல
கனிவுடனே நடந்து வந்தாள்.

3, மழை

'சோ'சோ'வென்று மழையோ
சோனாமாரியாகப் பெய்கிறதே!
'சூய்ங்'கென்றே காற்றும்
சுழன்று சுழன்று வீசுடுதே!

'பளீ'ரென்று மின்னல் வெட்டிக்
கண்ணைப் பறித்து மறைந்தோடிடுதே!
'பளீரி'ட்ட மின்னலைத்தொடர்ந்து
பேரிடியும் படபடத்துருண்டிடுதே!

ஆறு, குளங்கள் பொங்கிப்பெருக
அசுர மழையும் பெய்திடுதே!
வீறு கொண்ட அசுரன் போல்
வான் மழையும் பெய்திடுதே!

4. குயிலே!

'கூ' கூ'வென்றே கூவிடும் மாங்
குயிலே! உன்
கூவலில் தொனிப்பது
கவலையா? இன்பமா?

கருங்குயிலே! உனதம்மா
கல்லூரி செல்லாது நீ அடம் பிடிக்க
பிரம்பு கொண்டு அடித்தினாலோ
பெருங் குரலில் அழுகின்றாய்?

'கல்வி'யை இளமையிற் கல்
என்று பெரியோர்
கூறியதைக்
கவனித்திருப்பாயென்றால்
பல்லவியிழுத்து இப்படி நீ
படிப்பை இகழ்ந்து புலம்புவாயோ?

சிந்தாமணிப்பத்திரிகையின் வாரவெளியீட்டில் மணிக்கவிதைகள் பகுதியில் வெளியான மணிக்கவிதைகள் சில:

5. தண்டனை

கடந்தகால வயல்களில்
நான் விதைத்த
குற்ற விதைகள் வளர்ந்து
கொடிவிட்டு,
வேதனைக் கனிகளைத்
தந்தெனை வாட்டுகின்றன.
போதைக் கடல்களில்
மூழ்கி,
நானெடுத்த தவறு
முத்துகள், இன்றைய
என்
வாழ்க்கைச் சந்தையிலே
சந்தி சிரிக்கின்றன.

15.6.80

6. பொங்கல்!

வறுமைக் குடிசைகளில்
வதங்கும் ஐந்துகள்
நாங்கள்.
பொங்கற் புதுநாளில்
நெஞ்சகப் பானைகளில்
எண்ணங்களைப்
பொங்கலாக்கி
பகலவனுக்கு
எழிலாகப் படைத்தோமே!

20.1.80

7. தெருவிளக்கு

இரவு வேளையில்
வானத்து வீதிகளில்
இருளகற்ற இறைவன்
ஏற்றிய
தெருவிளக்கு!

30.12.79

8. நவீன ஆபிரகாம் லிங்கன்.

'பவர் கட்' வந்தபோதும்
பாடங்கள் படித்திடப்
பின்வாங்கி நிற்பவர்கள்
நாங்களல்ல.
மெழுகுவர்த்திகளின் வெளிச்சங்களில்
நாங்கள் படித்திடுவோம்.
நவீன ஆபிரகாம் லிங்கன்கள்
நாங்களே!

22.6.80

9. முட்கள்

முட்களின் நடுவே
வாழும்,
ரோஜாக் கன்னியர்கள்
வடித்திடும்'
கண்ணீர்த் துளிகள்
கண்டும்
வெறிகொண்ட
வண்டுகள் இரங்குவதில்லை.
காமமுட்களால்
குற்றிவிட்டே செல்கின்றன.

31.8.80

10. ஏழைகள்!

நாங்கள் தனி நட்சத்திரங்கள்.
எங்களுக்காக
உருகிடக், கண்ணீர் உகுத்திட,
எவருமற்ற நாங்கள்
தனி நட்சத்திரங்களே!
வானக்கூரையின் கீழ்
வாழுமெங்கள்
வாழ்க்கைப்பாலைகளில்
பசுமைகள் சிரிப்பதில்லை.
சோகங்கள் படர்ந்த இதயத்தே
சஞ்சலங்கள் தீர்வதில்லை.
தனிமைகளைத் தவங்களாக்கி
வாழுமெங்கள்
வாழ்விலோ இனிமையில்லை.

17.8.80

11. சிரஞ்சீவி!

ஓருநாள் எந்தன்
உடலும் உணர்வற்று
ஓய்ந்தடங்கி விடும்.
நெஞ்சப் பூங்காவின்
நினைவு மலர்கள்
வாடி வதங்கி விடும்.
கனவுப்பறவைகள்
சிறகொடிந்து வீழ்ந்திடும்.
துடிப்புள்ள செவ்விதழ்கள்
என்பீரே! அவற்றின்
துடிப்படங்கி விடுமே.
இருந்துமென்
இதயக் கோவிலில் நீர்
ஏற்றி வைத்த காதல் தீபம்
என்றென்றும்
ஒளிவீசி நிற்கும்.

19.4.81

வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (17.2.80) வெளியான கவிதைகள் சில:

12. பயணம் தொடரும்!

நாளையென்ற
வசந்தத்தை
நாடி எங்கள் பயணம்
வாழ்க்கைப்பாலையினூடு
தொடர்கிறது.

துன்பப் புயற்காற்றுகளால்
எங்கள் தேகங்கள்
சீர்குலைந்து
துவண்டுவிட்டபோதும்
உறுதி குலையவில்லை.

கானல் நீர்களைக் கண்டு
கண்டு எங்கள் கண்கள்
பூத்து விட்ட போதும்
கண் 'பாவை'யின் ஒளி
பூத்து விடவில்லை.

நம்பிக்கைக் கோல்பற்றி
எண்ண ஒட்டகங்கள் மேல்
எங்கள் பயணங்கள்
இனியும்
தொடரும் அந்த
வசந்தத்தை நாடி.

13. தாஜ்மஹால்

மும்தாஜின் சமாதி
மட்டுமல்ல இது;
முதுகொடிந்து
மாடாகக்
கண்ணீர்ப்பயிர்
விதைத்து
கனவு மலர் கொய்து
பல ஆண்டுகளாய்ப்
பாடுபட்டு இதனைப்
படைத்திட்ட
அடிமைகள் எங்களின்
சமாதியும் கூடத்தான்.

14. பெண்கள்

சமுதாயச்
சேற்றுக்குழிகளிற்குள்
செவ்விதழ் விரித்துத்
தேன் சுரக்கும்
செந்தாமரை
மலர்கள்.
ஆடவரிதயத்தை
ஆற்றங்கரை
மணல்களாக்கிக்
காதலெனும்
மணல் வீடுகள் கட்டி
மகிழ்ந்திடும்
மழலைகள்.

17.2.80

சிந்தாமணி (அல்லது ஈழமணி) பத்திரிகையில் வெளியான மணிக்கவிதைகள்.

15. பயணங்கள்

காலப் பெருங்கடலின்
கணப் பொழுதின்
ஒரு துளியாய்
இந்த ஞாலத்தில்
நாள் தோறும்
நடைபெறும் பயணங்கள்
என்றும் தொடர்வதில்லை.
எங்கோ முடிகின்றன.

25.5.80

16. பயணத்தின் எல்லை

காலப் பெருங்கடலில்
மிதக்கும்'
வாழ்க்கைப்படகுகள்
ஒரு நாள்
காலக்கடலுள்
மூழ்கிவிடும்.
எல்லையற்ற
இக்கடலை
வெற்றிகண்டவர்
யாரோ?

13.1.80

வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (1.6.80) வெளியான கவிதைகள் சில:

17. எதிர்பார்ப்பு

இருண்டு கொண்டிருக்கிறது.
இன்னும் சிறிது நேரத்தில்
இவ்வுலகம்
இருளால் நிறைந்து விடும்.
கூகைகளும்
கோட்டான்களும்
கொஞ்சிக் குலவத்தொடங்கி விடும்.
பனி முட்களால்
இருட்பன்று குத்தத்
தொடங்கிவிடும்.
நிலவயலைக்
கொத்திக் கிளறிவிட்டு
வயற்காரக் கதிரவன்\
வந்தவுடன்
இந்தப் பன்றியும்
ஓடி ஒளிந்துவிடும்.
ஆனாலென்
அகவுலகை மூடியிருக்கும்
அந்த மயக்க இருள்
என்றுதான் தொலையுமோ?
அவ்வுலகை ஆட்சி செய்யும்
கோபதாக் கூகைகளும்
கோட்டான்களும்
என்றுதான் அழியுமோ?
கும்மிருளில்
நீக்கியெழும்
குளிர்நிலவொன்றை நாடிச்
செல்லும் வழி காட்டிடத்
துருவ நட்சத்திரமொன்றை
நோக்கி நானிங்கு
காத்திருக்கின்றேன்.

வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (16.3.80) வெளியான கவிதைகள் சில:

18, ஏழைகள்

பாலைகளில்
விதைப்பதனால்
பயிரொன்றும்
வளர்வதில்லை;
அவை
சோலைகள்
ஆவதில்லை.
எங்கள் வாழ்க்கைப்
பாலைகளில்
விதைப்பவரோ
யாருமில்லை. கதிர்
அறுப்பவர்தான்
யாருண்டோ?

நாங்கள்
மூடுபனி
பெய்யுமிரவுகளில்
மல்லாந்து
கிடப்பவர்கள்.
எங்கள் நாசிகள் விடும்
பெருமூச்சுகள்
பல கதைகளை
நவின்றிடக் கூடும்.
எம்
இதயத்து வானங்களிலே
வீசிடும்
துன்பக் காற்றுகளின்
குளிர்மையை
அவை
உணர்த்திடக் கூடும்.

வயிற்றிற்காய்
வதங்குமெம்மை
வீதிகளில் வாடிட
வைத்தவன்
மஞ்சத்தில் துயில்பவர்
மடிகளிலேன்
மாணிக்கங்களை
அள்ளி வைத்தனனோ?

வர்க்கங்கள் மாறியதனால்
சொர்க்கங்கள்
இழந்தவர்கள்
நாங்கள்.

19. காடு

ஒன்றுபட்டாலுண்டு
வாழ்வென்ற
தத்துவத்தை
ஒழுகி வாழ்ந்திடும்
ஓங்கிய விருட்சங்களின்
ஒன்றிய சமூகம்.
இயற்கையன்னை
மிருகபட்சிக் குழந்தைகளை
ஈன்றெடுத்திட்ட
மடி.

20,. விலைமகள்

காதலித்த கதிர்க்
கணவனவன்
கைவிட்டுப் போனதனால்
வெறிகொண்ட
வண்டுகளுக்குத்
தன்னுடலை
விலையாக்கும்
தாமரையும் ஒரு
விலைமகளே.

வீரகேசரியின் உரைவீச்சுக் கவிதைப்பகுதியில் (16.11.80) வெளியான கவிதை.

21. ஆத்மாவின் கேள்வியொன்று

நெஞ்சைப்பாலைகளில்
சிந்தனைப்புயல்கள் வீசிப்
புழுதி பறக்கையிலே
அடிவயிற்றைக் கீறியொரு
திகில் ஊடுருவிச் செல்லும்
ஆத்துமாவின் கேள்வியொன்று
சிரித்து நிற்கும்.

"நானென்றால் நான் யார்?"
நானென்றால் இவ்வுடலோ?
நானென்றாலுடலாயின்
புழுப்பிடித்து நாறுகையில்
இந்த நானெங்கே?
நானென்றால் உள்மனமோ?
அன்றி, அம்மனத்தே
விரவி நிற்கும்
அவ்வுணர்வோ?
நானென்றால் உணர்வாயின்
நடையிழந்து , மொழியிழந்து
நிலை குலைந்து போகையிலே - இந்த
நானெங்கே?

காணுங் கனவெல்லாம்
கனன்றெரியும் சினமெல்லாம்
மெய்சிலிர்க்கும்
மயக்கமெல்லாம்,
உணர்வெல்லாம்,
உடலெல்லாம்,
'நான்' தானோ?
வெறுமைகள் சிரிக்கும்
என்னுடலும் ஓர்
அண்டம் தானோ?
அப்படியாயின் நான்
நான் மட்டும்தானா?
நான் தான் பிரபஞ்சமோ?
பிரபஞ்சம் தான் நானோ?

[குறிப்பு: இவ்வுடல் வெற்றிடத்துடன் கூடிய அணுக்களாலானது. எனவேதான் வெறுமைகள் சிரிக்கும் என்னுடல் என்று கூறினேன்.}

சிந்தாமணி மணிக்கவிதை (19.4.81)

22. சிரஞ்சீவி

ஓருநாள் எந்தன்
உடலும் உணர்வற்று
ஓய்ந்தடங்கி விடும்.
நெஞ்சப் பூங்காவின்
நினைவு மலர்கள்
வாடி வதங்கி விடும்.
கனவுப் பறவைகள்
சிறகொடிந்து வீழ்ந்திடும்.
'துடிப்புள்ள செவ்விதழ்கள்'
என்பீரே! அவற்றின்
துடிப்படங்கி விடுமே.
இருந்துமென்
இதயக் கோவிலில் நீர்
ஏற்றி வைத்த காதல் தீபம்
என்றென்றும்
ஒளிவீசி நிற்கும்.

வீரகேசரி உரை வீச்சு (14.2.80)

23. மும்மூர்த்திகள்

பரிசோதனைக் குழாய்களில்
புதுப் புதுச் சோதனைகள்
பல செய்து பாப்பாக்களைப்
பிரசவித்த நாங்கள் தாம்
கூடவே
'நியூட்ரன்' குண்டுகளையும்
ஆக்கிச் சாதனை
புரிந்தவர்கள்.
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்
புரியும் மும்மூர்த்திகள்
நம்மில் அடக்கம்.

24. யுகமாற்றம்

'அன்ரோமீடாக்க'ள்
திகழும்
அண்டம் முழுவதையும்
சுற்றி வந்தே
அன்பேயுனை
மணப்பேனென்று
ஒளியின் வேகத்தில்
ஓயாது சிற்றியலைந்து
மீண்டபோது ஏழை
அவளிருந்த மண்ணிலோ
புட்கள் முளைத்து யுகங்கள்
பலவந்து போயிருந்தன.

தினகரன் கவிதைச் சோலையில் வெளியான மூன்று கவிதைகள். இப்பகுதியை நடத்தியவர் எழுத்தாளர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர். இப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞர் அறிமுகப்படுத்தப்படுவார். என்னையும் என் அழிவு கவிதையுடன் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

25. எதிர்பார்ப்பு

என் நெஞ்சத்துலைகளில்
கொதித்திடும்
சிந்தனை அணுக்கருக்கள்
ஒரு நாள் ஒன்று திரண்டு
ஆக்க அணுகுண்டுகளாக
வெடித்தெழும்
அவ்வேளை - சீறியெழும்
செயற் கதிர் வீச்சுகள்
முன்னால் சமுதாயத்தின்
பொய்மைக்கரங்கள்
பொசுங்கிக் கருகும்
எழும் அனற்காற்றில்
ஏற்றத்தாழ்வரக்கர்
நிலைகுலைந்து போவர்
தோன்றிடும் ஆற்றலில்
எழுந்து நிற்கும் ஏற்றமொன்றில்
இவ்வுலகம் பொங்கிச் சிரிக்கும்.

10.8.80

26. சீடர்கள்

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில்
பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில்
தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும் எங்கள்
நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில்
வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி
வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!
அவலங்கள் கண்டு
சிந்தைகள் கனன்று
துடிக்கையிலே
புயலாகச் சீறியெழும்
நாங்கள் மிகவும்
அமைதியானவர்கள்
இயற்கையாசானின்
இரகசியங்களை அறிந்திட்ட
சீடர்களே நாம்.

1.9.80

27. அழிவு!

கொப்புகள் தாவித் தோப்புக் கரணங்கள்
சில போட்டுச்
செல்லுமிந்த
அணிலுமோர் நாள் இங்கு
அழுகி, வீழ்ந்துபோம்.
அதன்மேல் முளைக்கும் புல்மேல்
மீண்டுமொரு
அணில் வந்து விளையாடி செத்து
அழுகி அழிந்துபோம்.
இங்கே விரிந்து கிடக்கும்
இந்த மண் மேல்
அந்த நாளில் எத்தனை அழகிகள்
சிந்து பாடி, மெல்ல நடை பயின்றிருப்பர்.
எத்தனை இளந் தம்பதியர்
சித்தம் மறந்து திளைத்திருப்பர்.
கற்பனை கொடி கட்டிப் பறந்த
சிற்பிகளெத்தனைபேர் செத்திருப்பர்.
செத்தொழிந்தவரெல்லாம்
செல்வது தானெங்கே?
நிர்ச்சலனமற்று அங்கே
நீண்டு கிடக்கும் ஆகாயத்து வெளிகளின்
ஆழங்களொரு பதில் சொல்லக் கூடுமோ?

* இக்கவிதை மொறட்டுவைப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான நுட்பம் (79/80) சஞ்சிகையிலும் வெளியானது.


இப்பதிவு முகநூலில் வெளியானபோது வெளியான எதிர்வினைகள்:

Sreeno Sri Sreesu இளமையிலேயேயான உங்கள் இலக்கியத்தேடல் விசாலமானது.

Vadakovay Varatha Rajan ரசித்தேன்

Siva Yali Ni இன்றைய காலப்பகுதியிலும் பல இளைஞர்கள் இளவயதுகளிலேயே என்ன ஒரு எழுத்தாற்றல் திறமை என வியந்திருக்கின்றேன் ஆனாலும் அன்றும் இன்றும் காட்சி,சொல்லாடல்,கருக்களில் தான் எவ்வளவு வித்தியாசங்கள் அதனால் தான் ஏற்கனவே சொல்லியே விட்டார்கள் போலும் இலக்கியங்கள் காலத்தைக்காட்டும் கண்ணாடி என்று.

Maani Nagesh தங்களின் இளமைக்கால எழுத்தனுபவங்களும் ஆரம்பகால கவிதைகளும் சிறப்பாகவே உள்ளது.உங்கள்
அனுபவம் பகிர்வு என்னையும் அக்காலத்திற்கு அழைத்துச் சென்றது. சில கவிதைத்துனுக்குகளை எழுதி அனுப்பிவிட்டு
ஒவ்வொரு ஞாயிற்றுக் அது வெளிவராதா என் ஏங்கிக்கொண்டிருந்த காலம்.

சகலதுறை சார்ந்து தங்களின் கடந்தகால எழுத்துச் சேகரிப்புக்கள் என்னை மீண்டும் மீண்டும் ஆச்சரியப்பட வைக்கிறது. தங்களின் எழுத்தின் எளிமை குறித்தானகருத்துக்கள் சமகாலத்திலும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியதெனக்கருதுகிறேன்

Dharani Akil அருமையான வார்த்தைகள்

Tharuman Tharmakulasingam அருமை

Yoga Valavan Thiya சிறப்பு வாழ்த்துக்கள்

Rajaji Rajagopalan கிரிக்கு இள வயதிலேயே முகிழ்த்த இலக்கிய ஆர்வமும் திறனும் வியக்க வைக்கிறது. தனது அந்தக் காலத்துப் படைப்புகளை இப்போதும் பேணிப் பாதுகாக்கிறாரே அது இன்னும் கூடுதலாக வியக்க வைக்கிறது.

Yoga Valavan Thiya உண்மையில் அவரையிட்டு எனக்கு பெரும் வியப்பே

Rajaji Rajagopalan Yoga Valavan Thiya நாமிருவரும் ஒருமுறை பேசிக்கொண்டபோது கிரியின் அயராத உழைப்பை மெச்சியது நினைவிருக்கிறதல்லவா?

Varatharajan Mariampillai நான் உங்கள் ஆக்கங்களை அப்போதே வாசித்துள்ளேன். நான் நிருபராகவிருந்த காலத்தில் அடிக்கடி வரும் பெயர்களில் உங்களதும் ஒன்று .

Janaki Karthigesan Balakrishnan இளம் வயதிலேயே இத்தனை கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமே பாராட்டத்தக்கது. “மை”க்கவிதையிலிருந்து உங்கள் கவிதைகள் எழுதிய “மை” பல தலைப்புகளைத் தொட்டுள்ளது. ஒவ்வொரு கவிதையையும் ஆழ்ந்து வாசிக்கவிடினும், நவீன ஆபிரகாம் லிங்கன், தாஜ்மஹால், மும்மூர்த்திகள் ஆகிய கவிதைகள் அவற்றின் கருத்தின் ஆழத்திற்காகவும், புரிந்து கொள்ளும் இலகு தன்மைக்காகவும், அவ்வவ் சமகால யதார்த்தத்தை எடுத்தியம்புவதால் மனதில் சட்டெனப் பதிந்தன. அந்நாளில் முற்போக்கு எழுத்தாளர் சிலரின் கவிதைகளும் சில வரிகளில், வாழ்வியல், அரசியல் நிலைபரங்களை படம் பிடித்துக் காட்டின.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 10 June 2020 18:22