ஆய்வுத் தேடலற்ற இலக்கிய நந்திகளும், ஆய்வுத்தேடலும் , அர்ப்பணிப்பும் மிக்க எழுத்தாளர்களும்!

Saturday, 20 June 2020 21:52 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

நந்திஇலக்கிய நந்திகள் என்று நான் கருதுவது புத்திஜீவிப் பேராசிரியர்களில் சிலரை. இவர்கள் புத்தி ஜீவிகள். இவர்களுக்குப் பணம் ஊதியமாக வழங்கப்படுவது அவர்களது புத்தியைப் பாவித்து சீவியத்தை நடத்துவதற்காக. கூடவே ஆய்வுகள் செய்வதற்காக.  ஆனால் இவர்கள் செய்வதென்ன? செய்ததென்ன? தங்கள் மேதமையைக் காட்டுவதற்காக, தங்களுக்குப் பிடித்த சிலரின் படைப்புகளை மட்டும் முன்னிறுத்தி தமக்குக் கீழ் சீடர்கள் வட்டமொன்றினை அமைத்துக்கொள்வார்கள். அதன் பின்னர் குருவும், சீடர்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகச் செயற்படுவார்கள். இவர்கள் மூலம் மறைக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகள் பலர்.

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இதுவரை எனக்குத்தெரிந்து ஒரேயொரு பேராசிரியரே அதனைச் சரியாக உணர்ந்து மல்லிகையில் கட்டுரை எழுதியிருக்கின்றார்.  அவர் பேராசிரியர் செ.யோகராசா.   அவர்  'நவீன ஈழத்துத் தமிழ்க் கவிதை வளர்ச்சியில் அ.ந.கந்தசாமியின் பங்கு' என்னுமோர் அரிய கட்டுரையினை எழுதியிருக்கின்றார். மல்லிகை சஞ்சிகையில் வெளியான கட்டுரை அது.  ஆனால் இதுவரையில் புத்திஜீவிப் பேராசிரியர்கள் எவராவது அ.ந.கந்தசாமியின் கவிதைப்பங்களிப்பு பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. இதுவோர் உதாரணம் மட்டுமே. இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களிலொருவரான அ.ந.க.வின் படைப்புகளுக்கே இந்த நிலையென்றால் , மிகவும் தரமான படைப்புகளைத் தந்த எழுத்தாளர்கள், கவிஞர்களின் நிலையென்ன?

ஆனால் புத்திசீவிப்பேராசிரியர்கள் செய்யாத வேலையைக் கடுமையான தேடலும் ,அர்ப்பணிப்பும் மிக்க எழுத்தாளர்கள் பலர் செய்திருக்கின்றார்கள். அவர்களிலொருவர் எழுத்தாளர் அந்தனி ஜீவா. அந்தனி ஜீவா  அ.ந.கந்தசாமி பற்றிய தனது   'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரில் 'கவிதையும் கந்தசாமியும்' என்னுமொரு கட்டுரையை எழுதியிருக்கின்றார். இது தவிர அ.ந.க.வின் கவிதைப் பங்களிப்பைப் பற்றி எழுதிய இன்னுமொருவர் எழுத்தாளர் வ.ந,கிரிதரன். கவீந்திரனின் கவிதைப்பங்களிப்பு என்னும் தலைப்பில்  கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆக இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி) கவிதைப்பங்களிப்பு பற்றிய கட்டுரைகள் எழுதியவர்கள் மூவர். அந்தனி ஜீவா, பேராசிரியர் செ.யோகரசா, & வ.ந,கிரிதரன்.

இவ்வகையில் எழுத்தாளர் இளங்கீரனும் பேராசிரியரல்லர். ஆனால் அர்ப்பணிப்பும், தேடலும் மிக்க எழுத்தாளர். பேராசிரியர்கள் பலரே எழுதாத அளவுக்கு ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருப்பவர். கலை, இலக்கிய விமர்சகரான கே.எஸ்.சிவகுமாரன் பேராசியரல்லர்.ஆனால் பட்டதாரி. அவரும்  ஆவண மதிப்பு மிக்க பத்திகள் , திறனாய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார் .எழுத்தாளர் செங்கை ஆழியான முனைவர் என்றாலும் அவர் பேராசிரியராக வேலை பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவரது தேடலும், எழுதிய கட்டுரைகளும், வெளியிட்ட தொகுப்புகளும் முக்கியத்துவம் பெற்றவை. செம்பியன் செல்வன், சொக்கன் , இரசிகமணி கனக செந்திநாதன் இவர்களெல்லாரும் பேராசிரியர்களல்லர் புத்திசீவிகளல்லர். ஆனால் அவர்களது தேடலும் ,ஆற்றிய ஆய்வுகளும்  ,படைப்புகளும் முக்கியத்துவம் மிக்கவை.

உண்மையில் ஏன்  இலக்கிய நந்திகளாகச் செயற்படும் புத்திசீவிப் பேராசிரியர்கள் பலர் இவ்விதமாகச் செயற்படுகின்றார்கள். காரணம் அவர்களிடம் போதிய தேடலில்லை என்பதே. ஆனால் அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படுவதே அவர்கள் தேடல் மிக்கவர்களாக ஆய்வுகள் செய்ய வேண்டுமென்பதற்காகத்தானே. ஆனால் ஊதியம் பெற்றும் அவர்கள் தம் பணியை முறையாகச் செய்யாமலிருக்க, எழுத்தாளர்கள் பலர் தேடல் மிக்கவர்களாக , எவ்வித ஊதியமும் பெறாமல் , தேடுகின்றார்கள். எழுதுகின்றார்கள். அதற்காக அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இலக்கிய நந்திகள் மறைப்பதையெல்லாம் வெளியே கொண்டுவரும் பெரும் பணியினைச் செய்பவர்கள் அவர்களே. அந்தனி ஜீவா இல்லையென்றால் இன்று நாம் அ.ந.க பற்றிய விரிவான தகவல்கள் பலவற்றைப்பெற்றிருக்க முடியாது. இன்று அ,ந,க பற்றி யார் எழுதினாலும், அவர்களது ஆய்வின் தொடக்கம் அந்தனி ஜீவாவின் சாகாத இலக்கியம் பற்றிய கட்டுரையும் .ஏ.இக்பால். அகஸ்தியர், த.இராஜகோபாலன் போன்றோர் மல்லிகையில் எழுதிய கட்டுரைகளும்தாம்.

எதற்காக  ஊதியம் பெறுகின்றார்களோ அதற்காகப் போதிய பங்களிப்பினைப் புத்திசீவிப்பேராசிரியர்கள் செய்யாமலிருப்பதுடன், பலரை இருட்டடிப்பு செய்து இலக்கிய நந்திகளாகச் செயற்பட, அர்ப்பணிப்பும், தேடலும் மிக்க எழுத்தாளர்கள் பலர் இலக்கிய நந்திகளால் இருட்டடிப்பு செய்யப்பட்ட இலக்கிய ஆளுமைகளை இனங்கண்டு  அவர்கள்தம் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அதனாலேயே போற்றுதற்குரியவர்கள்.

இத்தருணத்தில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சமயம் இலங்கை எழுத்தாளர்களைப்பற்றிய ஆய்வுகளைச் செய்யுமாறு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.அதன் விளைவாக மாணவர்கள்  பலர் அவ்விதமான ஆய்வுகளைச் செய்தார்கள். அவ்விதமான ஆய்வுகள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவற்றிலொன்றான ஜுவானா ஜீவராணி என்பவரின் அ.ந.க பற்றிய ஆய்வுக்கட்டுரையை வாசித்துள்ளேன். இது போல் வேறு சிலரும் செயற்பட்டிருக்கக் கூடும்.அவர்களைப்பற்றிய விபரங்கள் இருப்பின் அறியத்தாருங்கள்.

பேராசிரியர்கள் பலர் இவ்விதமாக மிக இலகுவாக மாணவர்களைக்கொண்டு இலங்கைத் தமிழ் க் கலை, இலக்கியம் பற்றி, வரலாறு பற்றியெல்லாம் ஆய்வுகளைச் செய்யுமாறு ஊக்குவிக்கலாம். அவ்விதம் புரியப்படும் ஆய்வுகளை நூல்களாக வெளியிடும் வகையில் அம்மாணவர்களை ஊக்குவிக்கலாம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 20 June 2020 22:10