மாநகரத்துப் பெருமழை!

Monday, 22 June 2020 02:03 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

city_man_by_auguat_hermann_scherer

இருண்டிருக்கும்  மாநகரத்திரவு.
இருளைக்கிழித்தொரு மின்னலின் கோடிழுப்பு.
இடியின் பேரொலி.
யன்னலினூடு பார்க்கையில் பேசாத்திரைப்படமாய்
மழைக்காட்சி விரிகிறதெதிரே.
இழந்தது உறவுகள் , உருண்டு புரண்ட மண்
மட்டுமல்ல,
இதுபோன்ற இயற்கை நிகழ்வுகளையும்தாமென்று
உணர்ந்தது உள்ளம்.
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கமா?
இன்னுமா?
அன்று மட்டுமல்ல,
இன்று மட்டுமல்ல,
என்றுமே இருக்கப்போகும்
உணர்வு இதுவென்றும்
உணர்ந்தேன்.
உணர்வுகளுக்கு அடை போட முடியுமா?
எதற்காக? யாருக்காக? வயற்புறத்து  மண்டூகங்களின்
விடியும்வரைக் கச்சேரிகளற்ற
மாநகரத்துப் பெருழை! பேய்மழை!
மழையென்றாலெனக்கு எப்போதும்
மாகவியின் மழைக்கவிதை
மனத்தில் உருவெடுக்கும்.
உணர்ச்சிகள் ஊற்றெடுக்கும்
என்ன கவிஞன் அவன்!

"பேய்கொண்டு தக்கைய"டிக்கும்: காற்று!
"வெட்டியிடிக்கும்" மின்னல்!
"கொட்டியிடிக்கும்" மேகம்!
"பக்கமலைகளுடைந்து"பாயும் வெள்ளம்!
"தாளங்கள் கொட்டிக் கனைக்கும்" மேகம்!

மாநகரத்துப்பெருமழை பொழிந்து தள்ளுகிறது.
படுக்கையில் குடங்கிக்கிடக்கின்றேன்.
பொழியும் மழையைப் பார்க்கின்றேன்.
வெளியே விரிந்திருக்கும் இருளில்
வெட்டியடிக்கவில்லை மின்னல்!
தக்கையடிக்கவில்லை;
விண்ணைக்குடையவில்லை காற்று.
கொட்டியிடிக்கவில்லை மேகம்!

அப்படியா? அப்படித்தான் தோன்றியது.
அல்லது என் மனப்பிரமையா!
கழிவிரக்கத்தின் வெளிப்பாடா?

ஒரு காலத்தில் மழை  பொழிந்தபோது
கோவைமரத்தில் , நனைந்த சிறகு சிலிர்த்த
பசுங்கிளிகளைப் பார்த்து மெய்ம்மறந்ததை
எண்ணிக்கொண்டேன்.

'மழை வா! வேயில் போ!"
பாடிக்கழித்த பாடசாலைப் பருவங்களை
எண்ணிக்கொண்டேன்.

ஓட்டுக்கூரையில் மழைத்தாரை பட்டுக்
கேட்கும் சடசடப்பை இரசித்தபடி
படுத்திருந்ததை
எண்ணிக்கொண்டேன்.

வெளியே மழை அமைதியாகப்
பெய்து கொண்டிருந்தது!
ஆரவாரமற்ற  அமைதியான மழை!
பெருமழை! பேய்மழை!
மாநகரத்துப் பெருமழை!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 22 June 2020 02:47