மகாகவி பாரதியார்"போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?"
- பாரதியார் -

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த இலக்கியவாதியென்றால் முதலில் நான் கருதுவது மகாகவி பாரதியாரைத்தான். முரண்பாடுகளற்ற மனிதர்கள் யாருளர். பாரதியிடமும் முரண்பாடுகளுள்ளனதாம். ஆனால் அவை அவரது அறிவுத் தாகமெடுத்த உள்ளத்தின் கேள்விகளின் பரிணாம வரலாற்றின் விளைவுகள்.

குறுகிய கால வாழ்வினுள் அவர் மானுட வாழ்வின் அனைத்து விடயங்களைப்பற்றியும் சிந்தித்தார். கேள்விகளையெழுப்பினார். அவற்றுக்குரிய விடைகளைத் தன் ஞானத்துக்கேற்ப அறிய முயற்சி செய்தார். இவற்றைத்தாம் அவரது எழுத்துகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

பாரதியாரின் எழுத்துகளிலிருந்து நான் அறிந்த , இரசித்த, எனையிழந்த முக்கிய விடயங்களாகப்பின்வருவனவற்றைக் கூறுவேன்:

1. மானுட வாழ்க்கையைப்பற்றிய, மானுட இருப்பு பற்றிய சிந்தனைகள்.
2. மானுட வாழ்வின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகள் பற்றிய அவற்றுக்கான தீர்வுகள் பற்றிய சிந்தனைகள்.
3. மானுட  இருப்பு பற்றிய, மானுட சமூக, அரசியல் மற்றும் பொருளியல் பற்றிய கோட்பாடுகள் பற்றிய சிந்தனைகள்.
4. இயற்கை பற்றிய , பூவுலகின் ஏனைய உயிர்கள் பற்றிய சிந்தனைகள்.
5. தமிழ் மொழி , தமிழ் இனம் பற்றிய , சக மானுடர் பற்றிய சிந்தனைகள்.
6. மானுட உணர்வுகள் பற்றிய காதல், இயற்கையை இரசித்தல் போன்ற சிந்தனைகள்
7. மானுட ஆளுமைகள் பற்றிய சிந்தனைகள்.
8. மானுட வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு நடைபோடுதல் பற்றிய சிந்தனைகள்
9. பிரபஞ்சம் பற்றிய அவரது சிந்தனைகள்

இவற்றை முக்கியமானவையாக கூறுவேன்.

பாரதியாரின் எழுத்துகள் என்னைக்கவர்ந்ததற்கு இவற்றுடன் அவ்வெழுத்துகளில் பாரதியார் கையாண்ட மொழியும் முக்கிய காரணம். எளிமையான, உயிர்த்துடிப்பு மிக்க, கூறப்படும் பொருள் பற்றிய உணர்வினைத்தூண்டிவிடும்படியான அவரது தெளிந்த நீரோடை போன்று கூறப்படும் பொருளைத் தெளிவாக விளக்கும் தன்மை மிக்க மொழி என்னை மிகவும் கவர்ந்தது. தமிழில் வெளியாகும் இலக்கிய சஞ்சிகைகள் பலவற்றைப் பார்த்தால் பாரதியாரின் கவிதை வரிகளே அவற்றில் பலவற்றின் தாரக மந்திரங்களாக இருப்பதைக் காணலாம்.இது அவரது கருத்துச் செறிந்த மொழி நடைக்கு முக்கிய உதாரணங்களிலொன்று.

அவரது கவிதைகளில் வெளிப்படும் சமூக அரசியல் கருத்துகள் என்னை மிகவும்  கவர்ந்தவை. அவர் வாழ்ந்த காலத்தில் வைத்து அவரது கருத்துகளை ஒப்பிடுகையில்தான் அவரது மேதமை நன்கு அறியப்படும். பெண் கல்வி , பெண் விடுதலை, தேசிய விடுதலை, மானுட வர்க்க விடுதலை என்று சிந்தித்த, எழுதிய அவர் ஒரு செயல் வீரரும் கூடத்தான். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்தான்.

அவரது எழுத்துகளைப்போல் அவரது ஆளுமையும் என்னை மிகவும் கவர்ந்தது. தன் வாழ்க்கையைபற்றி, தன் இதயத்து உணர்வுகளைப் பற்றியெல்லாம் அவர் எழுத்துகளூடு தன் எண்ணங்களை  எம்முடன் பகிர்ந்துள்ளார். அவரது அவ்வுளவியற்போக்கும்  என்னை மிகவும் கவர்ந்தது.

பாரதியாரின் நினைவு தினம் செப்டெம்பர் 11. அவர் நினைவாக எனது இந்தப்பதிவும் அமைகின்றது.

அவர் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.