என் பல்கலைக்கழக, முகநூல் நண்பர்களிலொருவரும், நகர அமைப்பு வல்லுநரும், கட்டடக்கலைஞருமான திரு. திலீனா கிரின்கொட (L.T.Kiringoda) அவர்கள் நேற்றிரவு கொழும்பில் மறைந்த செய்தியினை இன்றறிந்தேன்.  நகர அபிவிருத்தி அதிகார சபையில் நீண்டகாலம் பணிபுரிந்து சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்தார்.

பழகுவதற்கு மிகவும் இனியவர். கிரின், திலீனா, கிரின்கொட என்று நண்பர்களால் அழைக்கப்படுபவர். அவரது மறைவு எதிர்பாராதது. சில தினங்களுக்கு முன்னரும் முகநூலில் பதிவுகளிட்டிருந்தார். இரத்த அழுத்தம் காரணமாக மூளையில் நரம்பொன்று வெடித்து  அதன் விளைவாக ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக மரணமடைந்ததாகத் தெரிகின்றது.

'பதிவுகள்' இணைய இதழிலும் இவரது நகர அபிவிருத்தி பற்றிய ஆங்கிலக் கட்டுரைகள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனது முகநூற் பதிவுகளுக்கும் அவ்வப்போது வந்து கருத்துகள் கூறுவார்; விருப்பினையிடுவார்.  இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தவர், நண்பர்கள் அனைவர்தம் துயரில் நானும் பங்குகொள்கின்றேன்.

- 'பதிவுக'ளில் வெளியான திலீனா கிரின்கொடவின் கட்டுரைகளிலொன்று -