தெளிவத்தை ஜோசப்இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கியமான சஞ்சிகை இது. யாழ்ப்பாணத்தில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை அச்சில் வெளியாவதற்குச் சில மாதங்களுக்கு முன் வெளியான சஞ்சிகை. அச்சஞ்சிகைதான் எழுத்தாளர்கள் கே.கணேஷ், கே.ராமநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இணைந்து வெளியிட்ட 'பாரதி' சஞ்சிகை. ' 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்' நூலை எழுதிய முனைவர்கள் சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் ஆகியோர் இச்சஞ்சிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்களது ஆய்வு நூலில் இச்சஞ்சிகை பற்றி 'பாரதியில் கட்டுரைகள் வெளிவந்தன' என்று ஒரு வரி மட்டுமே காணப்படுகின்றது. இவர்கள் பாரதியை மறைத்ததற்கு முக்கிய காரணங்களிலொன்றாக நான் கருதுவது இலங்கைத் தமிழிலக்கியத்தில் முற்போக்குத் தமிழிலக்கியத்துக்கு பாரதியாற்றிய பங்களிப்புத்தான். இவர்கள் யாருமே இதுவரையில் இலங்கைத் முற்போக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த இலக்கிய  முன்னோடிகள் பற்றி இதுவரையில் விரிவான ஆய்வுக்கட்டுரைகள் எவற்றையும் நானறிய எழுதவில்லை. அந்த அடிப்படையில் இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தையும் புறக்கணித்திருக்கலாம் அல்லது மறைத்திருக்கலாம் என்றும் கருதவேண்டியுள்ளது.

இவர்கள் பாரதி சஞ்சிகையின் முக்கியத்துவத்தை மறைத்தாலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி, எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் , எழுத்தாளர் நந்தினி சேவியர் மற்றும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா போன்றோர் மறக்கவில்லை. தெளிவத்தை ஜோசப் தினகரனில் 'ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி' என்னும் தலைப்பில் முக்கியமானதோர் ஆய்வுக் கட்டுரையினை எழுதியுள்ளார். அக்கட்டுரை தினகரனில் செப்டம்பர் 1984 - நவம்பர் 1984 வரை வெளியாகியுள்ளது.  இக்கட்டுரையினை எழுத்தாளர் டொமினிக் ஜீவா தொகுத்து மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளியிட்ட "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' கட்டுரைகளின் தொகுப்பு நூலில் உள்ளடக்கியுள்ளார்.

இந்நீண்ட கட்டுரையின் ஆரம்பத்தில் பாரதி பற்றிய பேராசிரியர் கா.சிவத்தம்பியின் கூற்றினைத் தெளிவத்தை ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார்:

கே.கணேஷ்" 'தமிழிலக்கிய வளர்ச்சியும்' என்பது பற்றிய ஒரு வரலாற்று நோக்குக் குறிப்பெழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்."  1946-ல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தோர் அக்காலத்தில் , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக விருந்த கே.ராமநாதன், கே.கணேஷ் ஆகியோரே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப் படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே.ஏ.அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று ராமநாதனும் கணேஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர். (புதுமை இலக்கியம் தேசிய ஒருமைப் பாட்டு மாநாட்டு மலர் - 1975) இதே 1946-ல், இதே கே.கணேஷம், ராமநாதனும் கூட்டாசிரியராக இணைந்து ‘பாரதி' சஞ்சிகையை வெளியிட்டனர்."

இந்நிலையில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் "ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" என்று சரியாகவே தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கின்றார். தை 1946 தொடக்கம் ஆகஸ்ட் 1946 வரை மொத்தம் ஐந்து  இதழ்கள் (இவற்றில் மூன்று, நான்காவது இதழ்கள் ஒன்றாக பங்குனி - சித்திரை 1946 வெளியாகியது) வெளியாகியுள்ளன. ஐந்தாவது இதழ் ஆகஸ்ட் 1946இல் வெளியானது. பின்னர் இறுதி இதழான ஆறாவது இதழ் மார்கழி -தை 1948இல் வெளியானது.

எழுத்தாளர் நந்தினி சேவியர் தமிழ் இனி 2000 கருத்தரங்கில் சமர்ப்பித்த 'கடந்த நூற்றாண்டின் ஈழத்து மார்க்சிய இலக்கியம்' என்னும் ஆய்வுக்கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

"1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி"  எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது.  இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே.  ராமநாதன் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான  `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை  1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே. `பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி,  அ.செ. முருகானந்தன், கே. கணேஸ், மஹாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்"

பாரதி இதழ்களில் ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடியான எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் ஐந்து படைப்புகள் வெளியாகின. அவற்றின் விபரங்கள் வருமாறு:

சிறுகதைகள்:

1. வழிகாட்டி  - தை 1946 பாரதி
2. உதவி வந்தது.  - மாசி 1946 பாரதி

"சீனாவின் ஒரு கோடியில் லெயாங் நகரில் நடந்த உண்மைச் சம்பவம் பற்றியது 'உதவி வந்தது'.  சீன உள்நாட்டுப் போரில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைக் கதையாகப் பின்னியுள்ளார் அ.ந.கந்தசாமி" என்று கட்டுரையில் தெளிவத்தை ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

கவிதைகள் (கவீந்திரன்) என்னும் பெயரில் எழுதியவை:

1. தேயிலைத் தோட்டத்திலே. பாரதி பங்குனி - சித்திரை 1946

"தேயிலைத்தோட்டத்திலே துயரம் தோய வாழும் தொழிலாளத்தாயின் மனதைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை 'தேயிலைத் தோட்டத்திலே'. அ.ந.கந்தசாமி 'கவீந்திரன்' என்னும் பெயரில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார்.  லெனினுடன் பழகிய வில்லியம் கலச்சர் எழுதிய 'ஜனநாயகம் என்றால் என்ன?' என்னும் நூலை கவீந்திரன் மொழிபெயர்ப்பில் தமிழில் பாரதி பிரசுரம் வெளியிடப் போவதாக பின் அட்டையில் ஓர் அறிவிப்பு இருக்கிறது.  பாரதி பிரசுரம் என்று நூல்கள் வெளியிடும் எண்ணமும் பாரதிக்கு இருக்கிறது என்பதையே இது  காட்டுகிறது." - தெளிவத்தை ஜோசப் ( "ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" கட்டுரையில்.)

2. முன்னேற்றச் சேனை  - கவிதை - கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) - ஆகஸ்ட் 1946

"இந்தக் கவிதையின் அழைப்பும் நாம் லேலே கண்ட எழுத்தாளர்களுக்கான பிந்திய அழைப்பும் ஏறத்தாள ஒத்திருக்கின்றன. ஆகவே முற்போக்கு இலக்கியப் பரம்பரைகட்கு அப்போதே பாரதி வித்திட்டிருக்கிறது என்பது புலனாகின்றது.  முன்னேற்றச்
சேனையிலே சேர வாருங்கள் என்ற கவிதை மூலம் அழைப்பு விடுத்தவர் அ.ந,.கந்தசாமியேதான். " - தெளிவத்தை ஜோசப் ("ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" கட்டுரையில்.)

திரைப்பட விமர்சனம்: ஜூன் 1946  பாரதி ஐந்தாவது இதழில்:

" பாரதியுடன் தன்னை இறுகப் பிணைத்துக் கொண்ட அ.ந.கந்தசாமி இந்த இதழில் ஒரு சினிமா விமர்சனம் எழுதியுள்ளார். ‘பெட்டில் ஷிப் பொடம்கின் (பொடம்கின் என்னும் சண்டைக் கப்பல்) என்னும் புரட்சிப் படம் பற்றியது இவ்விமரிசனம். '1925-ல் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கொந்தளிக்கும் கடலில், அநீதியான அதிகாரிகளுக்கெதிராகக் கொதித்தெழும் மாலுமிகளின் புரட்சியைக் காட்டுவது. புழுநெளியும் உணவை உண்ணமாட்டோம். மனிதர் உண்ணக் கூடிய உணவு வேண்டும் என்னும் மாலுமிகளின் ஏகோபித்த போராட்டம், உப்புத் தண்ணீரில் அலசிவிட்டு உண்ணுங்கள்’ என்னும் அதிகாரிகளின் அசட்டை, ஒன்றுபட்ட மாலுமிகள் ஆயுதங்களை அதிகாரிகளுக்கெதிராக உயர்த்தினார்கள். மாலுமிகளின் சொந்தக் கொடி பாய்மர உச்சியில்
ஏறுகிறது. இது படத்தின் ஆரம்பம். ஒடோசோவில் பொது மக்கள் புரட்சிக்கார மாலுமிகளை ஆதரித்து, துறைமுகத்துக்கு வந்து உணவும் உற்சாகமும் அளிக்கிறார்கள். மிலேச்சர் ஜார் மன்னனின் மிருகத்தனம் பட்டாள ரூபத்தில் வந்து மக்கள் மேல்
பாய்கிறது. ஓடெசா துறைமுகத்தின் படி எல்லாம் மக்களின் பிணம். மாலுமிகளைக் கொல்ல கடற்படை மாலுமிகளும் அதிகாரிகளின் அட்டகாசமான சவுக்கடிகளுக்கு ஆளாகிறவர்கள் தானே. 'தோழா சுடாதே சுடுவாயோ?” என்கின்றனர் புரட்சிக்கார
மாலுமிகள். முதலில் திகைத்தாலும் பிறகு ‘தம்மைப் போன்ற அந்த மாலுமிகளுக்காகத் தோழமைக் கரத்தை நீட்டுகின்றனர். கடற்படையின் மாலுமிகள். இதுதான் படக்கதை. உணர்ச்சியைத் தூண்டும் கலைரசம் ததும்பும் சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றன. புழு நெழியும் உணவைப் பூதக்கண்ணாடி காட்டும் கோலம், ஜன சமுத்திரத்தை பட்டாளத்தார் சுட்டுத் தள்ளும் பயங்கரம், துறைமுகப்படியில் உருண்டு வரும் தள்ளுவண்டிச் சிறுமியின் பரிதாபம் என்பன உள்ளத்தில் நீங்கா இடம் பெறுகின்றன. இந்தப் படத்துக்கு எத்தனையோ நாடுகளில் தடை விதிக்கப் பட்டிருந்தும் கொழும்பில் ‘பிலிம் கிளாப் மூலம் ஆர்ட்கலரியில் காட்டப்பட்டது. இது சங்கீதம் இல்லாத மெளனப் படம்தான். தகுந்த மண்டபம் திரைவசதி இல்லாத இடத்தில்தான் காட்டப் பட்டது. இருந்தும், மந்திரத்தால் சுட்டுண்டது போல் மனதை ஆகர்ஷிக்கும் சக்தி கொண்ட கலைப் படைப்பு இது. மலர்ந்து வரும் புதுயுகத்தில் சிரஞ்சீவியாய் விளங்கப் போகும் சினிமாக் கலையின் வாடாமல்லிகை இத் திரைப்படம்' என்று எழுதுகிறார் அ.ந.கந்தசாமி." -
தெளிவத்தை ஜோசப் ("ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட 'பாரதி'" கட்டுரையில்)

மேற்படி பாரதி சஞ்சிகையில் வெளியான அ.ந.கந்தசாமியின்  படைப்புகள் அனைத்தும் 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதி சஞ்சிகையின் பிரதிகளை யாராவது வைத்திருப்பின் அவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முனைவர்கள் சிலர் மறைத்தாலும், இருட்டடிப்பு செய்தாலும் முழுநிலவை மேகங்களால் ஒருபோதுமே மறைத்துவிட முடியாது என்பதற்கொப்ப இலங்கை  முற்போக்குத்தமிழ் இலக்கியம் பற்றியும், அதன் முன்னோடிகள் பற்றியும் எழுத்தாளர்களான தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா மற்றும் டொமினிக் ஜீவா போன்றோர் அவ்வப்போது பதிவு செய்துகொண்டுதான் வருகின்றார்கள். அதற்காக தமிழ் இலக்கிய உலகு அவர்களைப்போன்றவர்களுக்கு எப்பொழுதும் நன்றியுடனிருக்கும்.

மேற்படி நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்' தொகுப்பு நூலை வாசிக்க: http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D