அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)!

Wednesday, 14 March 2018 16:44 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

அஞ்சலி: நவீன வானியற்பியல் அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹார்கிங் (1942 - 2018)!

ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018)  தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில்  'மோட்டார் நியூரோன் டிசீஸ்' என்னும் ஒருவகையான நரம்பு நோயால்  உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.

நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்திருக்கின்றார். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை.

அறிவியல் அறிஞரான இவரால் பேச முடியாது. எழுத முடியாது. சக்கர நாற்காலியுடன் கூட இவருக்காக அமைக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் கணினித்தொழில் நுட்பம் மூலமே இவரால் உரையாட முடிந்தது. எழுத முடிந்தது.

இவர் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு ' (A Brief History of Time)  என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றது. எத்தனையோ பல பதிப்புகளைக் கண்டதுவானியற்பியற்றுறை பற்றிய சிறப்புச் சார்பியத்தத்துவம், பொதுச் சார்பியற் தத்துவம் மற்றும் சக்திச்சொட்டுப் பெளதிகம் (குவாண்டம் பிசிக்ஸ்) ஆகிய ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளை, ஏனைய நவீனக் கண்டுபிடிப்புகளை மற்றும் தனது கண்டுபிடிப்புகளை, ஆய்வுகளைச் சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் இவர் எழுதிய 'காலத்தின் சுருக்கமான வரலாறு ' (A Brief History of Time)  என்னும் நூல் மிகவும் புகழ் பெற்றது. எத்தனையோ பல பதிப்புகளைக் கண்டது. இன்றும் மீள்பதிப்புகளாக வெளியாகிக்கொண்டேயுள்ளது. இதுவரை பத்து மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிச் சாதனை புரிந்துள்ளது. இது போல் இவர் மேலும் பல நூல்களை கருந்துளைகள் பற்றி, பிரபஞ்சத்தின் வடிவமைப்பு பற்றி எழுதியுள்ளார்.

இவரது பிரபஞ்சம் பற்றிய கோட்பாடுகள் ஆழமானவை. சிந்திக்க வைப்பவை. தனது கருத்துகளைச் சுவையாக, சில சமயங்களில் வேடிக்கையாகக் கூறுவதில் வல்லவர் இவர். இவரே முதலில் சார்பியற் தத்துவம் மற்றும் குவாண்டம் இயற்பியல் ஆகிய கோட்பாடுகள் இணைந்த கோட்பாடாக நவீன் வானியற்பியலை (Cosmology) வார்த்தெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது கருந்துளைகள் பற்றிய கோட்பாடுகளும் மிகுந்த புகழ் பெற்றவை. கருந்துளைகள் எதனையும் வெளிவிடாதவை என்று கருதப்பட்ட நிலையில் கருந்துளைகள் சக்தியை வெளிவிடுகின்றன என்றும் , காலப்போக்கில் ஒன்றுமில்லாமலாகி மறைந்து விடுகின்றனவென்றும் கண்டறிந்தார். கருந்துளைகளின் இச்செயற்பாடே பின்னர் ஹார்கிங் கதிரியக்கம் என அறியப்படலாயிற்று.

கணிதவியல் அறிஞரான சேர் ரோயர் பென்ரோஸுடன் இணைந்து இவர் செய்த ஆய்வுகளின் விளைவாக ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியற் கோட்பாடானது 'காலவெளி'யானது 'பெரு வெடிப்பில்' தொடக்கத்தையும், கருந்துளையில் முடிவினையும் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்றது என்பதை எடுத்துக்காட்டினார்.

பல புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ள இவரது முதல் மனைவியான 'ஜேன் ஹார்கிங்'கின்  (Jane Hawking) ஸ்டீபன் ஹார்கிங்குடனான அவரது வாழ்க்கையைப்பற்றி விபரிக்கும் நூலினை மையமாக வைத்து உருவான 'பிரிட்டிஷ்' திரைப்படமான The Theory of Everything  சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினைப்பெற்றதும், மேலும் பல பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உடல் உபாதைகளுக்கு மத்தியில் இவரது நவீன வானியற்பியற் துறைக்கான பங்களிப்பானது மகத்தானது. இவரது வாழ்க்கையானது மானுடர்கள் வாழ்வின் வெற்றிக்கு மாதிரியாகக்கொள்ள வேண்டியதொரு வாழ்க்கை. நவீன இயற்பியலின், வானியற்பியலின் தந்தையான ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்த நாளான மார்ச் பதினான்காம் திகதியில் அத்துறையில் ஐன்ஸ்டைனுக்குப் பின் மிகப்பெரிய அளவில் பங்களிப்பினை வழங்கிய ஸ்டீபன் ஹார்கிங்கின் மறைவு நிகழ்ந்தது தற்செயலானது, ஆனால் வியப்புக்குரியது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Wednesday, 14 March 2018 17:13