வாசிப்பும், யோசிப்பும் 281: சங்கக்கவிதைகளும், ஓசையும்..

Saturday, 21 April 2018 09:20 - வ.ந.கிரிதரன் ‍ - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

 கவிஞர் விக்ரமாதித்யன்முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்அண்மையில் கவிஞர் விக்ரமாதித்யனின் 'எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு' என்னும் நூலை வாசித்தேன். கவிஞர் தன் பால்ய காலம் பற்றி, தனது பிறந்த மண்ணான திருநெல்வேலி பற்றி, தன் கவிதைகள் பற்றி, கவிதைகள் பற்றி, தானறிந்த சக இலக்கிய ஆளுமைகள் பற்றி, திரைப்படப்பாடல்களை எழுதிய கவிஞர்களைப்பற்றி, அவர்களின் பாடல் வரிகள் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, திமுக அரசியல்வாதிகள் பற்றி, அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி, சக கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி, .. இவ்விதம் பல்வேறு விடயங்களைச் சுவையான, நெஞ்சையள்ளும் நடையில் கூறியிருக்கின்றார். பொதுவாகவே எனக்கு கலை, இலக்கிய ஆளுமைகளின் நனவிடை தோய்தல்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுண்டு. கவிஞர் விக்ரமாதித்யனின் இந்நூலையும் அவ்விதமே வாசித்தேன்.

அவர் நேர்காணலொன்றில் சங்கக்கவிதைகள் பற்றிக் கூறியிருந்த பின்வரும் கூற்று என் கவனத்தைக் கவர்ந்தது: "சங்கக் கவிதைகள் இசை கருதிச் செய்யப்பட்டவையல்ல". இன்னுமோரிடத்தில் " தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்கின்றார்.

கவிஞரின் இக்கூற்றுகளை வாசித்துக்கொண்டிருந்த போது எனக்கு தற்போது வாசித்துக்கொண்டிருக்கும் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியனின் "இசைத்தமிழ்ச் சிந்தனைகள்" நூலின் ஞாபகம் வந்தது. அதிலவர் சங்க காலத்திலிருந்து தமிழ் இசைப் பாடல்களின் வரலாறு தொடங்குவதாகக் கூறுவதுடன் அதற்கான ஆதாரங்களையும் ஆய்வுரீதியாக முன் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. நூலிலுள்ள 'கலிப்பாவும் தமிழரின் இசை மரபும்' என்னும் கட்டுரையில் சங்கத் தமிழ்ப்பாவினங்களில் ஒன்றான கலிப்பா எவ்விதம் பிற்காலத்தில் உருவான கீர்த்தனைகளின் உருவாக்கத்துக்கு முன்னொடியாக விளங்கியது என்றெல்லாம் கூறியிருப்பது நினைவுக்கு வந்தது. அதில் அவர் கீர்த்தனைகளில் வரும் பல்லவி , அநுபல்லவி மற்றும் சரணம் என்பன 'கலிப்பாவின் தரவு, தாழிசை. சுரிதகம் என்ற கட்டமைப்புடன் ஓரளவு ஒத்த காட்சியைத் தருவதை உணர முடியும்" என்று கூறுவார் (பக்கம் 61). மேலும் அவர் "கீர்த்தனையிலே சரணங்களே அவற்றின் உயிர்ப்பான உள்ளடக்கப் பகுதியாகத் திகழ்வன. கலிப்பாவில் தாழிசைகளும் அப்படியே. எனவே கீர்த்தனை என்னும் இசைப்பா வடிவத்துக்கு கலிப்பாவின் அமைப்பு - குறிப்பாக ஒத்தாழிசைக் கலிப்பாவின் தரவு, தாழிசை அமைப்பு - ஒரு முன்னோடி நிலை என்பதை நாம் உய்த்துணர முடியும்." (பக்கம் 61) என்றும் கூறுவார்

இன்னுமொரு கட்டுரையான 'இசைத்தமிழ்ப்பாடல் மரபு' என்னும் கட்டுரையில் " சங்கப்பாவடிவங்களைப் பற்றி ஆராய்ந்த டாக்டர் அ.பிச்சை அவர்கள் ஆசிரியப்பாவிற்கான அகவலோசை மூலங்களைப் பண்டைய வெறியாட்டு நிகழ்வுப்பாடல்களில் கண்டறியக் கூடியதாகவுள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளார். வஞ்சிப்பா வடிவம் பண்டைய கூத்து மரபில் குறிப்பாகத் துணங்கைக் கூத்தில் பயின்ற ஓசைகளினூடாக உறுப்பெற்றிருக்கலாமென டாக்டர் அ.பிச்சை அவர்கள் கருதுகிறார்" என்று கூறுவார் (பக்கம் 43).

இந்நூலில் தமிழரின் இசை மரபின் தோற்றுவாய் சங்க காலத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது என்பதைப் பல ஆய்வுக்கட்டுரைகள் மூலம் முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன் அவர்கள் நிறுவியிருப்பார்.

மேலுவர் விருத்தத்தின் ஆரம்பமாகச் சிலப்பதிகாரத்தை 'விருத்தத்தின் விஸ்வரூபம்' என்னும் கட்டுரையில் குறிப்பிடுவார். அதில் வரும் கானல் வரி, வேட்டுவரி ஆகியவற்றில் " அறுசீர்கழி நெடிலடி விருத்தம், மற்றும் கலி விருத்தம் ஆகிவற்றுக்குப் பொருத்தமான பாடல்கள் உள" என்று குறிப்பிடும் அவர் சான்றாகக் கானல்வரியில் இடம்பெறும் ஒரு பாடலான 'மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை அது போர்த்து" பாடலைக் குறிப்பிட்டிருப்பார் (பக்கம் 181).

இது கவிஞர் விக்கிரமாதித்யனின் கூற்றான "தமிழில் திருத்தக்கதேவர், கம்பனிலிருந்துதான் ஓசை, சந்தம் கூடி வருகிறது" என்னும் கூற்றினை மறுத்து 'ஓசை, சந்தம் ஆகியன சிலப்பதிகாரத்திலேயே ஆரம்பமாகி விட்டன' என்னும் வாதத்தினை முன் வைக்கின்றது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 21 April 2018 15:29