வாசிப்பும், யோசிப்பும் 282 : எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு!

Tuesday, 15 May 2018 17:29 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுஎழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பற்றிய செய்தியைப் பலர் முகநூலில் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். எண்பதுகளில் தமிழகத்து வெகுசன இதழ்களில் பிரபலமாக விளங்கிய எழுத்தாளர். தமிழ்த்திரையுலகிலும் கால் பதித்தவர். இவர் வெகுஜன இதழ்களில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் நான் வெகுசன இதழ்களை விட்டு விலகி விட்டிருந்தேன். அவ்வப்போது பார்ப்பதோடு சரி. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் படைப்புகள் ஏதும் வந்தால் மட்டும் வாங்குவதுண்டு. அதனால் பாலகுமாரனின் எழுத்துகள் எவையும் என்னைக் கவர்ந்திருக்கவில்லை. கல்கி, நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், அகிலன், 'நைலான் கயிறு', 'அனிதா இளம் மனைவி' காலத்து சுஜாதா, மீ.ப.சோமு, ர.சு.நல்லபெருமாள், பி.வி.ஆர், .. என்று வெகுசன இதழ்களில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்குப் பிறகு என்னை பிறகு உருவான வெகுசன எழுத்தாளர்கள் எவருமே கவரவில்லை. ஆனால் வெகுசன எழுத்துகளை வழங்கிய, வழங்கும் எழுத்தாளர்கள் மேல் மதிப்பு வைத்திருப்பவன் நான். வாசகர்களின் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டியவர்கள், தூண்டுபவர்கள் இவர்கள். அவ்வகையில் இவர்களது படைப்புகள் முக்கியமானவை.

இன்று எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு பற்றி வெளியாகும் பதிவுகளிலிருந்து அவரது பாதிப்பை உணர முடிகின்றது. அவ்வகையில் அவரது பங்களிப்பை உணர முடிகின்றது. எண்பதுகளில் அவரது எழுத்துகளால் கவரப்பட்டு, வாசிப்புக்குத் தூண்டப்பட்டு, இன்று எழுத்தாளர்களாக மலர்ந்துள்ள பலரையும் அவரது மறைவு எவ்விதம் பாதித்துள்ளது என்பதை அப்பதிவுகள் மூலம் அறிய முடிகின்றது. அவ்விதம் எழுத்தாளர்கள் பலரது வளர்ச்சிப்படியில் அவரது எழுத்துகளின் பங்களிப்பு நிறையவே உள்ளது. அதுவே அவரது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும். அவரது மறைவால் துயருறும் நண்பர்கள் அனைவர்தம் துயரிலும் நானும் பங்கு கொள்கின்றேன்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 15 May 2018 17:35