'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)

Saturday, 19 May 2018 22:26 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)'ஞானம்' சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரனுடான இலக்கியச் சந்திப்பு! (சிறு குறிப்பு)நேற்று மாலை (18.05.2015) எழுத்தாளர் தேவகாந்தனுடன் 'ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்' ஏற்பாடு செய்திருந்த , தற்போது கனடாவுக்கு வருகை தந்திருக்கும் 'ஞானம்' இதழாசிரியர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் தம்பதியினருடனான இலக்கியச்சந்திப்புக்குச் சென்றிருந்தேன். நிகழ்வில் கனடாவில் கலை, இலக்கியத்துறையில் நன்கு அறியப்பட்ட பலரைக் காணக்கூடியதாகவிருந்தது. குறிப்பாக எழுத்தாளர்களான அ.முத்துலிங்கம், மனுவல் ஜேசுதாஸ், அகணி சுரேஷ், அகில், தேவகாந்தன், பார்வது கந்தசாமி, சி.பத்மநாதன், ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, 'சோக்கலோ' சண்முகநாதன், முருகேசு பாக்கியநாதன், 'காலம்' செல்வம், த.சிவபாலு, முனைவர் நா.சுப்பிரமணியன் தம்பதியினர்.. எனப்பலரைக் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலியுடன் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினை நிகழ்த்தினார். அதிலவர் இலங்கையில் வெளியான தமிழ்ச்சஞ்சிகைகளின் பங்களிப்பு பற்றி, குறிப்பாக முதலாவது சஞ்சிகையான கே.கணேசின் 'பாரதி' தொடக்கம் 'ஞானம்' சஞ்சிகை வரையிலான இலக்கியப்பங்களிப்புகள், அவற்றின் முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமாக எடுத்துரைத்தார். தனது முதலாவது சிறுகதை ஞானம் சஞ்சிகையிலேயே வெளியானதெனவும், மேலும் சிறுகதைகள் வெளியானதாகவும், தனது நாவலொன்று ஞானம் வெளியீடாக வெளியானதாகவும் தனது உரையிலவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான எழுத்தாளர் தி. ஞானசேகரன் 'ஈழத்தின் இன்றைய இலக்கியச் செல்நெறி' என்னும் தலைப்பில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் நீண்டதொரு உரையினை நிகழ்த்தினார். தான் கூறவேண்டியவற்றை, மிகவும் திறமையாகத் தயார் படுத்தி வந்திருந்தார் என்பதை அவரது தான் கூற வேண்டிய பொருள் பற்றிய தெளிவான உரை புலப்படுத்தியது. அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட முக்கியமான கருத்துகள் சில வருமாறு:

1. அண்மையில் நிகழ்ந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக உருவான இரட்டைக் குழந்தைகளாக நாட்டில் படைக்கப்பட்ட போர்க்கால இலக்கியத்தையும், நாட்டில் நிலவிய அரசியல் நிலை காரணமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் படைத்தபுலம்பெயர் இலக்கியத்தையும் குறிப்பிடலாம்.

2. அக்காலகட்டத்தில் உருவான இலக்கியம் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஞானம் சஞ்சிகை போர்க்கால இலக்கியச் சிறப்பிதழ், புலம்பெயர் தமிழர் இலக்கியச் சிறப்பிதழ் போன்றவற்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் கலை, இலக்கியப்படைப்பாளிகளுடனான நேர்காணல்களையும் தொகுத்து ஞானம் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இவை எவ்விதம் சங்ககாலத் தொகுப்பு நூல்கள் இன்றும் பேசப்படுகின்றனவோ, அக்காலகட்ட தமிழர்தம் வாழ்வினை விபரிக்கின்றனவோ அவ்விதமே கடந்த முப்பதாண்டு காலப் போர்க்கால வாழ்வினை, அக்காலகட்டத்தில் நிலவிய பல் அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகள், நிகழ்ந்த முக்கிய அரசியல் , சமூக நிகழ்வுகளை இச்சிறப்பிதழ்கள் வெளிப்படுத்துகின்றன.

3. இன்று புலம்பெயர் இலக்கியமானது தனது எல்லைகளை விரிவு படுத்தியுள்ளது. பொதுவாகப் புலம்பெயர் இலக்கியமென்று அழைக்கப்பட்ட புலம்பெயர் இலக்கியமானது கனடாத் தமிழ் இலக்கியம், ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் போன்று வளர்ச்சியடைந்து இன்று உலக இலக்கியமென்ற நிலையை நோக்கிச் செல்லத்தொடங்கி விட்டது. ஏற்கனவே வெளியான ஆ.சி.கந்தராஜாவின் புனைவுகள், எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் இவ்வகையில் முக்கியமானவை, ஏனைய படைப்பாளிகள் சிலரின் படைப்புகளிலும் உலக இலக்கியத்துக்கான அம்சங்கள் சில காணப்படுகின்றன என்னும் கருத்துப்பட அவரது உரை அமைந்திருந்தது.

செப்டம்பர் 2000 ஆம் ஆண்டில் ஞானம் சஞ்சிகையினைத் தான் ஆரம்பித்தார் என அவர் குறிப்பிட்டபோது என் நினைவில் அக்காலகட்டத்தில் (மார்ச் 2000 ஆரம்பமானது 'பதிவுகள்') நான் ஆரம்பித்த 'பதிவுகள்' தமிழ் இணைய இதழின் ஞாபகம்ஏற்பட்டது. பதிவுகள் இணைய இதழும், ஞானம் சஞ்சிகையும் இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.]

4. இலங்கையில் போர்க்காலத்திற்குப்பின்னரான இலக்கியமானது இன்றைய புதிய தலைமுறையினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் புலம்பெயர் தமிழர்தம் இளைய தலைமுறைகளிடமிருந்து இன்னும் தமிழில் ஆக்கங்கள் வெளியாகவில்லை. ஒரு சில வெளிவந்தாலும் 'Exception' , 'Examples' ஆக மாட்டா என்னும் கருத்துகள் அடங்கியதாக அவர் உரை அமைந்திருந்தது.

அவர் தனதுரையில் தனது மகன் எழுத்தாளர் பாலச்சந்திரனின் இலக்கியப் பங்களிப்பு பற்றியும் , புரவலராக அவர் ஞானம் சிறப்பிதழ்களை வெளியிட உதவி வருவதையும் குறிப்பிட்டார்.

அவரது உரையினைத் தொடர்ந்து அவர் தனதுரையில் தெரிவித்த கருத்துகளை மையமாக வைத்துக் கலந்துரையாடல் நிகழ்ந்தது. சிறிது காரசாரமாக நடந்த கருத்துப்பரிமாறலென்று அதனைக் கூறலாம்.

நிகழ்வின் நிறைவுரையினைக் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றினார். அதனைத்தொடர்ந்து இராப்போசனத்துடன் நிகழ்வு முடிவுக்கு வந்தது. சுருக்கமாகக் கூறப்போனால் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட நிகழ்வுகளிலொன்றாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. மாதாமாதம் கலை, இலக்கிய நிகழ்வாக இலக்கியச் சந்திப்பினை நடாத்திவருகின்றது ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், அதற்குப்பின்னாலிருந்து செயற்படும் மருத்துவர் இலம்போதரன், எழுத்தாளர் அகில, முனைவர் நா.சுப்பிரமணியன் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Last Updated on Sunday, 20 May 2018 17:40