வாசிப்பும், யோசிப்பும் 285: நடிகர் ரஜினியின் தூத்துக்குடிப்பேச்சும், அவர் மீதான சாடல்களும் பற்றி.....

Saturday, 02 June 2018 05:14 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

முகநூல் முழுவதும் நடிகர் ரஜினியை வாங்கு  வாங்கென்று வாங்கித்தள்ளுகின்றார்களே அப்படி என்னதான் அவர் பேசி விட்டார் என்று பார்க்க வேண்டுமென்று இணையத்தில் தேடியபோது கிடைத்த காணொளியில் ரஜினி பேசியதையும், அவர் பேசியதாக அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

ரஜினி நியாயமாகப் போராடிய மக்களைச் சமூக விரோதிகள் என்று கூறி விட்டார் என்பது அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறும் முக்கிய காரணம். ஆனால் அக்காணொளியில் ரஜினி கூறியது என்ன? மக்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்து விட்டார்கள். அவ்விதம் புகுந்த சமூக விரோதிகள்  காவல் துறையினரைத் தாக்கியதே தொடர்ந்து நடந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறுவதைத்தான் அக்காணொளியில் காண முடிகின்றது. இன்னுமொன்றையும் அவர் கூறுகின்றார். அது காவற்துறை ஆடை அணிந்த காவற்துறையினரைத்தாக்குவதை ஒருபோதுமே தன்னால் ஆதரிக்க முடியாது. அடுத்து அவர் கூறியது தொடர்ந்து இவ்விதம் போராட்டங்கள் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பதை.

காணொளியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்திய மக்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி கூறவில்லை. நியாயமான போராட்டத்தினுள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினரைத்தாக்கியதுதான் நடந்த பிரச்சினைக்குக் காரணம். இவ்விதம்தான் அவர் கூறியிருக்கின்றார்.  அவர் தன் கருத்துகளைக் கூறுவதற்கு முழு உரிமையுமுண்டு. மேற்படி போராட்டம் தவறு. போராட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்று பொதுவாகக் கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

இன்னுமொரு காணொளியில் அவரை யாரென்று கேள்வி கேட்கும் வாலிபர் ஒருவர் நீங்கள் ரஜினி என்று தெரிகின்றது. ஆனால் நூறு நாட்களாக எங்கேயிருந்தீர்கள் என்று கேட்பதையும் காண முடிகின்றது. என்னைப்பொறுத்தவரையில் நியாயமான கோரிக்கைக்காகப் போராட்டமொன்றினைப் பல்வேறு அமைப்புகள் நடத்தலாம். அவ்வமைப்புகளை ஆதரிக்காத ஒருவர், அப்போராட்டத்துக்கான காரணத்தை ஆதரித்தாலும், போராடும் அமைப்புகளை ஆதரிக்காதவராக இருக்கக் கூடும். அந்நிலையில் அவர் ஏன் அவர் ஆதரிக்காத அமைப்புகள் நடாத்தும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்பது எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் எடுபடும் என்று தெரியவில்லை.

தற்போது நடிகர் ரஜினியைப் போட்டுத்தாக்கும் ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் நலன்கள் அடிப்படையிலேயே அவரைத்தாக்குகின்றார்கள். அவர் பேசாத பேச்சினைப் பேசியதாகத் திரித்து, விரிவுபடுத்திப் பேசுவதாகவே தெரிகின்றது.

நடிகர் ரஜினியின் கருத்துகள் அவருடைய கருத்துகள். அவரது ஆத்திரம் எனக்கு அவரது கூற்றுகள் அவரது ஆழ்மனத்தின் உண்மையான வெளிப்பாடுகள் என்பதையே தெளிவு படுத்துகின்றது. ஆனால் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் வன்முறை வெடித்தது என்று கூறிய ரஜினி இன்னுமொரு விடயத்தையும் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும். அது சமூக விரோதிகள் சிலரின் ஊடுருவல் தொடர்ந்து வன்முறை வெடிக்கக் காரணமாகவிருந்தது என்பதை உறுதியாகக் கூறிய அவர், அதன் காரணமாகக் காவல் துறையினர் புரிந்த மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. அவை காவல் துறையிலுள்ள சமூக விரோதிகள் புரிந்த வன்முறை என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கண்டித்திருக்க வேண்டும். சமூக விரோதிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் கூறியிருக்க வேண்டும். அவ்விதம் அவர் கூறாதது கரும் புள்ளியாகவே இருக்கப்போகின்றது.

இதுவரை நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவ்வளவு தீவிரமாக நான் எடுத்திருக்கவில்லை. ஆனால் தூத்துக்குடிப்பேச்சும், அதனெதிர்ப்புக் காணொளிகளும் அவரை மக்கள் நுணுக்கமாகக் கவனிக்க வைத்துள்ளன என்றே கருதுகின்றேன்.இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் அவர் கூறியிருக்கின்றார். அதனை மக்கள் அமைதியாகக் கவனிக்கின்றார்கள். அவர் மீது அள்ளி வீசப்பட்ட அவமானச் சாடல்களை மக்கள் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டுமிருக்கின்றார்கள்.  அவர் மீதான சாடல்கள் எவ்வித விளம்பரச் செலவுமின்றி மக்கள் அவரைக் கவனிக்கும் நிலையினை ஏற்படுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.

என்னை ஆச்சரியப்பட வைத்தது நடிகர் ரஜினியின் ஆத்திரமும், ஆவேசமும்தாம். அவையே தமிழக மக்கள் அவரைக் கவனிக்க வைத்துள்ளது.  தன் மீது வைக்கப்படும் கடுமையான சாடல்களைத் தனி ஒருவராக எதிர்க்க வேண்டிய நிலை ரஜினிகாந்துக்கு. அது சில வேளைகளில் மக்கள் மத்தியில் அவர் மீதான அனுதாபமாகவே மாறக்கூடும்.

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ரஜினிகாந்த். சமூக வலைத்தளங்களில்  அவர் மீது வசைபாடும் சமூக நூல் போராட்ட வீரர்களில் 90 வீதமானவர்களும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தூத்துக்குடிப் போராட்டட்த்தில் கலந்துகொண்டு மரணித்த , காயமடைந்த மக்களின் குடும்பங்களுக்குப் பண உதவி செய்யச் சென்றிருக்கின்றார் ரஜினிகாந்த். ஆனால் அவரை வசை பாடும் சமூக ஊடகப்ப் போராளிகள் பலரும்  ஒரு துரும்பைத்தானும் அக்குடும்பங்களுக்கு அள்ளிக்கொடுக்கவில்லை.

அரசியலில்  நுழைந்தால் இவை போன்ற அவமானச்சாடல்களையெல்லாம் கேட்கத்தான் வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் கேட்டு , பயந்து , ஒடுங்கி, அரசியலிலிருந்தே ரஜினி ஓடி விடுவாரென்று அரசியல் எதிரிகள் நினைக்கின்றார்கள். ரஜினியின் வரவால் சிறிது கலக்கத்திலுள்ள அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை வைத்து அவருக்கெதிரான தமது அரசியல் வியூகங்களை வகுக்கின்றார்கள்.

இக்காணொளியிலுள்ள ரஜினியின் பேச்சின் அடிப்படையில் ரஜினி தூத்துக்குடி மக்களின் போராட்டத்தினை ஒரு போதுமே எதிர்க்கவில்லை. அம்மக்களை ஆதரிக்கவே செய்கின்றார். ஆனால் அப்போராட்டத்தினுள் சமூகவிரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினர் மீது வன்முறையினைக் கட்டவிழ்த்து விட்டதுதான் பிறகு ஏற்பட்ட காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்குக் காரணம். ஆனால் ரஜினி காவல்துறையினரின் அடக்குமுறைகளையும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லை.

தமிழகத்தின் சட்ட , ஒழுங்கினை நிலை நிறுத்துவது காவற்  துறைதான். அக்காவற்துறையினை முழுமையாக எதிர்க்க முடியாது. தூத்துக்குடியில் ஏற்பட்ட நிலைக்குக் காரணமான காவல் துறையினரையும், காவல் துறையினர் மீது தாக்குதல்  தொடுத்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அடுத்தது தூத்துக்குடிப் போராட்ட மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யக் கட்டளையிட்ட காவல்துறையின் மேலதிகாரிகளை, அரசியல்வாதிகளைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். காவல் துறையினர் அதிக அளவில் மேலதிக உதவிகளைப்பெற்று, அமைதியான முறையில் நிலைமையைக் கையாண்டிருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை.

இவ்விதமானதொரு சூழலில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கினைச் சீர்குலைத்து , தமிழகத்தின் சமூக, அரசியல் நிலையில் பாதிப்பினை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்தியாவினைப் பலவீனப்படுத்த முனையும் சக்திகளுக்குத் தூத்துக்குடி நிலை அல்வா சாப்பிடுவது போன்றது. ஆனந்தமாக அவர்கள் அல்வா சாப்பிடுகின்றார்கள்.

தூத்துக்குடி மக்களின் போராட்டம் நியாயமானது. மக்கள் வாழும் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கெதிராக அவர்கள் நடத்தும் , நடத்திய போராட்டம் நியாயமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போராட்டத்தின் நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் காவற்துறையின் மீது வன்முறையினைப் புரிந்தவர்களும், போராடியவர்கள் மீது வன்முறையினைப்பாவித்த காவற்துறையினரும் (அவர்களுக்குப் பின்னாலிருந்து செயற்பட்ட அனைத்துச் சக்திகளும்)  கண்டிக்கப்பட வேண்டியவர்கள்; தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதனை மறந்து விட்டு, ரஜினி பேசாத ஒன்றைப்பேசியதாகத் திரித்து அவர் மீது சேற்றினை அள்ளி வீசுவதன் மூலம் அம்மக்கள் எதற்காகப்போராடினார்களோ அதனிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டிருக்கின்றார்கள்  ரஜினிமீது வசைபாடுபவர்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

 

 

 

 

 

 

 

Last Updated on Saturday, 02 June 2018 05:38