வாசிப்பும், யோசிப்பும் 295: ஶ்ரீலங்கா சஞ்சிகையின் கலை, இலக்கியப்பங்களிப்பும், அ.ந.கந்தசாமியின் படைப்புகளும்!

Thursday, 06 September 2018 05:36 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

ஶ்ரீலங்கா இதழொன்றுஅறிஞர் அ.ந.கந்தசாமி'ஸ்ரீலங்கா' சஞ்சிகை இலங்கைத் தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தமிழ்ச் சஞ்சிகை. ஆகஸ்ட் 1950 - டிசம்பர் 1963 காலகட்ட இதழ்கள் பல (தொடர்ச்சியாக அல்ல) நூலகம் இணையத்தளத்திலுள்ளன. இவற்றைப் பார்த்தபோதுதான் ஈழத்தமிழ்இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பினைச் செய்த சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகையையும் காண முடிந்தது.

அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் போன்றவர்கள் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளர்களாகப் பணி புரிந்த காலகட்டத்தில் , அவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை இச்சஞ்சிகையென்று அறிந்திருக்கின்றேன்.ஆனால் சஞ்சிகையின் முன் அட்டையில் அரசாங்க சமாச்சாரப் பகுதியால் வெளியிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசிப்பக்கத்தின் அடியில் தகவற் பகுதியினருக்காக இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றிய விபரமெதனையும் காணவில்லை.
ஆனால் இச்சஞ்சிகையின் உருவாக்கத்தில் அறிஞர் அ.ந.கந்தசாமி, திரு.குல சபாநாதன் ஆகியோரின் பங்களிப்பினை சஞ்சிகையில் வெளியான படைப்புகள் வாயிலாக அறிய முடிகின்றது. இருவருமே இச்சஞ்சிகை வெளிவந்த காலகட்டத்தில் இலங்கைத் தகவற் திணைக்களத்தில் பணி புரிந்து கொண்டிருந்ததாலும், இருவருமே நாடறிந்த எழுத்தாளர்கள் என்பதாலும் 'ஶ்ரீலங்கா' சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தினை அலங்கரித்தவர்களாக அறிந்த தகவல் உண்மையென்றே தோன்றுகின்றது.

இலங்கைத் தகவற் திணைக்கள வெளியீடு என்பதால் அரசு பற்றிய , அரசின் திட்டங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சஞ்சிகையாக இச்சஞ்சிகை விளங்கினாலும், ஈழத்தமிழ்க் கலை, இலக்கியத்துக்குக் காத்திரமான படைப்புகளையும் கூடவே வெளியிட்டுள்ளதால் , ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் முக்கிய சஞ்சிகைகளிலொன்றாக இச்சஞ்சிகை விளங்குகின்றது எனலாம்.

கவிதை, சிற்பக்கலை பற்றி, ஆலயக் கட்டடக்கலை பற்றி, பல்லினச் சமூகங்கள் பற்றி, ஊர்களைப்பற்றி, கந்தரோடை, நல்லூர் போன்ற நகர்கள், அரசின் பல் வகை நீர்ப்பாசனத்திட்டங்கள் பற்றி, பரந்தன் இரசாயன, வாழைச்சேனைக் காகிதத் தொழிற்சாலைகள் பற்றி, ஆதிவாசிகளான குறவர்கள் பற்றி இவ்விதம் இச்சஞ்சிகையின் களம் விரிந்தது. மிகுந்த பயன் தருவது. அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரின் படைப்புகள் பலவற்றைத்தாங்கி வெளியாகிய சஞ்சிகை ஶ்ரீலங்கா. அவ்வகையில் தவிர்க்க முடியாத கலை,
இதுவரை இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் , எழுத்தாளர்கள் பலர் இனிமேலாவது இது போன்ற காத்திரமான கலை, இலக்கியப் பங்களிப்பு செய்த சஞ்சிகைகள் பக்கமும் கவனம் செலுத்தட்டும்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. " என்னும் வள்ளுவனாரின் குறளுக்கொப்ப ஆய்வுகளைக் காய்தல், உவத்தலின்றிச் செய்யட்டும்.

இலக்கியச் சஞ்சிகை.நூலகத் தளத்திலுள்ள ஶ்ரீலங்கா சஞ்சிகைகளில் காணப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் வருமாறு:
1. கட்டுரை: 'ஞானம் வளர்த்த புதுவை! பாரதியின் யாழ்ப்பாணத்து சுவாமி யார்?' - அ.ந.கந்தசாமி (ஆகஸ்ட் 1961)
2. நூல் மதிப்புரை : 'சங்கிலி' (பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை) - அ.ந.க (ஏப்ரல், மே 1957)
3. கவிதை: 'ரவீந்திரர்' -அ.ந.க (பெப்ருவரி 1961)
4. கட்டுரை: 'நேபாளம்' - அ.ந.கந்தசாமி மார்ச் 1957)
5. கட்டுரை: 'விசாக பெளர்ணமி' - அ.ந.கந்தசாமி (மே 1959)
6. நெடுங்கவிதை: 'வள்ளுவர் நினைவு' - அ.ந.கந்தசாமி (வேலணையூர்த் தொல்காவியன் மன்றில் நடைபெற்ற தமிழ் மறை விழாக் கவியரங்கில் திரு.அ.ந.கந்தசாமி பாடியவை) (ஜூன் 1962)
7. கவிதை: தமிழ் முனிவர் கணேசையர் - (நவம்பர் 1960)
ஶ்ரீலங்கா சஞ்சிகையில் வெளியான (இவை நூலகம் தளத்திலில்லை)  அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் வருமாறு:

8. கவிதை:  புதுப்பானை அடுப்பிலே ஏற்றிடுவோம் - அ.ந.க (ஶ்ரீலங்கா, ஜனவரி 1962)
9. கவிதை: மோட்டார் சாரதிகளுக்கு - அ.ந.க ( ஶ்ரீலங்கா, மார்ச் 1956 )
10. கவிதை: ஏழை பங்காளன் - அ.ந.க (ஶ்ரீலங்கா, மே 1955)
11. கவிதை : நாட்டுப்பற்று - அ.ந.க (ஶ்ரீலங்கா, அக்டோபர் 1955)
12. கவிதை: துறவியும், குஷ்டரோகியும் - அ.ந.க (ஶ்ரீலங்க ஏப்ரல்-மே 1956) - இக்கவிதை சுதந்திரன் பத்திரிகையிலும் ஏற்கனவே வெளியான கவிதை.

அ.ந.கந்தசாமியின் யாழ்ப்பாணச்சுவாமியார் பற்றிய கட்டுரை!

இவை தவிர இங்கு தவற விடப்பட்டுள்ள ஶ்ரீலங்கா சஞ்சிகைகளிலும் அ.ந.கவின் ஆக்கங்கள் இருக்கலாம். ஶ்ரீலங்கா சஞ்சிகையின் அக்டோபர் 1955 இதழில் அ.ந.கவின் 'நாட்டுப்பற்று' என்னுமொரு கவிதை வெளியாகியிருப்பதை அறிவேன்.

தமிழ் முனிவர் கணேசையர் - (நவம்பர் 1960)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 06 September 2018 21:10