வாசிப்பும், யோசிப்பும் 308: மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்!

Monday, 29 October 2018 08:18 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் 'மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்' நிகழ்வு 'சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் 'சம உரிமை இயக்கம்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.நேற்று மாலை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் 'மகாவலி (L) - வாழ்வும் அரசியலும்' நிகழ்வு 'சமாதானத்துக்கான கனேடியர்கள் மற்றும் 'சம உரிமை இயக்கம்' ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வினை அரசியற் செயற்பாட்டாளர் எல்லாளன் ராஜசிங்கம் தலைமையேற்றுச் சிறப்பாக நடத்தினார். நிகழ்வில் மூவரின் உரைகள் இடம் பெற்றன. பேராசிரியர் சிவச்சந்திரன் 'வடக்கின் நீர்வள மேம்பாடும் எதிர் நோக்கும் பிரச்சினைகளும்' என்னும் தலைப்பிலும், மகாவலி அதிகாரசபை முன்னாள் ஊழியர் மோகன் அந்தோனிப்பிள்ளை 'பயனற்ற குடியேற திட்டங்களும் பலிக்கடா ஆக்கப்பட்ட குடியேற்றவாசிகளும்' என்னும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த புபுது ஜயகொடவின் ஒலி(ளி)ப்பதிவு செய்யப்பட்ட 'மகாவலியும் குடியேற்றமும்' காணொளி உரை நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

இம்மூவரின் உரைகளும் மிகுந்த பயனைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் தந்திருக்கும். ஏனெனில் எனக்கு அவ்விதமான உணர்வே ஏற்பட்டது.

மோகன் அந்தோனிப்பிள்ளை மகாவலித் திட்டத்தில் பணியாற்றியபோது அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களிலேயே ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அவர் தனதுரையில் இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலிருந்து இலங்கை அரசுகளால் (மகாவலித் திட்டமுட்பட) உருவாக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், அவை எவ்விதம் தமிழ்ப்பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படப்பாவிக்கப்பட்டன என்பது பற்றிய்யும் எடுத்துரைத்தார். அத்துடன் அவர் கூறிய இன்னுமொரு கருத்தொன்றும் கவனத்தை ஈர்த்தது. அது: டி.எஸ்.சேனநாயக்காவின் குடியேற்றத்திட்டங்கள் அக்காலகட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிகளின் செல்வாக்கினை அழிக்கவும் பயன்படுத்தப்பட்டன. அதற்காக இடதுசாரிகளின் கோட்டைகளாக விளங்கிய பிரதேசங்களில் இவ்விதமான குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம் இத்திட்டங்களின் மூலம் பயனடையும் குடியேற்றவாசிகளின் ஆதரவினை வென்றெடுக்கலாம் என்பது டி.எஸ்.சேனநாயக்கா போன்றவர்களின் எண்ணமாகவிருந்தது. இச்சாரப்பட மோகன அந்தோனிப்பிள்ளையின் கருத்து அமைந்திருந்தது.

முன்னிலை சோசலிச கட்சியைச் சேர்ந்த புபுது ஜயகொடவின் காணொளி உரை தற்போதுள்ள சூழலில் மிகவும் அத்தியாவசியமானது. நாட்டுச்சூழலை, மகாவலித்திட்ட முல்லைத்தீவுப்பகுதிக்கான L திட்டத்திற்கான அப்பகுதி மக்களின் எதிர்ப்பு பற்றியெல்லாம் மிகவும் தெளிவாக அவர் தன் கருத்துகளைக் கூறியிருந்தார். அத்துடன் அவரது உரையின் முக்கிய பகுதிகளாகக் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. 1927ம் ஆண்டிலிருந்து வாழ்ந்து வந்த கொக்கிளாய், கடற்கரைப்பற்று மற்றும் கொக்குத்தொடுவாய் மக்கள் 1984ம் ஆண்டில் இராணுவத்தால் வெளியெற்றப்பட்டனர். ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் பேச்சு வார்த்தை நடைபெற்ற காலத்தில் தம்மிருப்பிடங்களுக்குத் திரும்பிய மக்களை இராணுவம் மீண்டும் வெளியேற்றியது தொடரவுள்ள யுத்தத்தைக் காரணம் காட்டி. 2012இல் , யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் தம்மிருப்பிடம் திரும்பியபோது அங்கு சிங்களக் குடியேற்றவாசிகள் குடியேறியிருந்தார்கள். மகாவலித்திட்ட அதிகாரசபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு 6000 சிங்களக் குடியேற்றவாசிகள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் 2000 ஏக்கர் காணிகள், அரசுக்குரிய 33000 ஏக்கர் காணிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 25 ஏக்கர் காணியில் பயிர்ச்செய்வதற்காக சிங்கள விவசாயிகளுக்கு மகாவலி அதிகாரசபை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் கொக்குளாய் , நாயாறு பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மீனவர்களுக்குக் கடலுக்குச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தையும் அதிகாரசபை வழங்கியுள்ளது. ஆனால் பாரம்பரியாமாக அப்பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழ் விவசாயிகளுக்கோ , தமிழ் மீனவர்களுக்கோ இப்பத்திரங்கள் வழங்கப்படுவதில்லை.

2. இப்பகுதித்தமிழ் மக்களுக்கு பிரதேசச் செயலாளர் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளார். இருந்தபோதும் அதிகாரம் மிக்க மகாவலி அதிகாரசபை சிங்களக் குடியேற்றவாசிகளுக்கே அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. தமிழர்கள் நீதி மன்றம் சென்றபோதும் , நீதிபதி இரு அரச நிறுவனங்களையும் பேசிப்பிரச்சினையைத் தீர்க்கும்படி தீர்ப்பு வழங்கிவிட்டார். இதுவரை இதற்கான தீர்வேதும் கிட்டவில்லை.

3. தென்பகுதி விவசாயிகளை அவர்களது காணிகளிலிருந்து வெளியேற்றிவிட்டு, காணிகளைப் பல்தேசிய நிறுவனங்களுக்கு வழங்கும் அரசாங்கம், வடபகுதி மக்களின் காணிகளைப்பறிதெடுத்துச் சிங்கள மக்களுக்குக் கொடுக்கின்றது. இது மிகப்பெரிய இனப்பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

4. வட, கிழக்கு மாகாணங்களைப்பிரிப்பதற்காகவே மகாவலித்திட்டத்தைக் காரணமாக வைத்துச் சிங்கள மக்களைக் குடியேற்றி, அப்பகுதியை வடமத்திய மாகாணத்துடன் இணைப்பதற்கு அரச முயற்சி செய்தது.

5. இலங்கையின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தம் உரிமைகளுக்காய்க் குரல் கொடுக்க வேண்டும்.

கருத்தரங்கு: மகாவலி வாழ்வும் அரசியலும்!

பேராசிரியர் சிவச்சந்திரனின் உரை மிகவும் பயனுள்ள உரை. அவர் தனதுரையில் யாழ்குடாநாட்டின் தரைக்கீழான மண் அமைப்பு, குடா நாட்டுக்கு வெளியிலுள்ள மண்ணின் தரைக் கீழான அமைப்பு, மக்கள் செய்ய வேண்டிய செயற்பாடுகள் என்பன பற்றியெல்லாம் பேசினார். மேலும் அவர் யாழ் குடாநாட்டில் ஒரு காலத்தில் 1500 குளங்கள் இருந்ததாகவும், அவற்றில் அரைவாசியையே தற்போது காண முடிவதாகவும் குறிப்பிட்டதுடன் , அவ்வகையான குளங்களைத் திருத்தி அமைக்கவேண்டுவது அவசியமென்றும் உரையாற்றினார்.

தரைக்குக் கீழ் செல்ல வேண்டிய நீரைக் கால்வாய்கள் வெட்டிக் கடலுக்குள் செலுத்துவதன் மூலம் காலப்போக்கில் நல்ல நீர்ப்பற்றாக்குறை ஏற்படுமென்றும் எச்சரித்தார்.

அத்துடன் அவர் கூறிய பின்வரும் விடயங்களும் என் கவனத்தை ஈர்த்தன:

1. மகாவலித்திட்டம் அவசியம். ஆனால் அதனைக்காரணமாக வைத்து நடாத்தப்படும் குடியேற்றத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல.
2. குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படும் இடங்களிலுள்ள மக்களின் விகிதாசாரப் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் அக்குடியேற்றத்திட்டங்கள் அமைந்திருக்கக்கூடாது. இதை எதிர்க்க வேண்டும். 3. மகாவலி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியன மிகுந்த அதிகாரம் மிக்கவை, உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரங்களைக் கூடப்புறக்கணிக்கும் வகையில் பலம் பொருந்தியவை. இந்நிலைக்கெதிராகப் போராட வேண்டும்.

மேற்படி உரைகளைத்தொடர்ந்து அவையிலிருந்த பலர் தம் கருத்துகளைத் தெரிவித்துக்கொண்டார்கள். நிகழ்வு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்ததுடன் பல புதிய தகவல்களையும் எமக்கு அறியத்தந்தது. இந்நிகழ்வுக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Monday, 29 October 2018 08:25