நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

Saturday, 17 November 2018 00:57 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்கம், மக்னிகல் சந்திக்கருகில் அமைந்துள்ள டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் இன்று மாலை நடைபெற்ற சந்திபில் நண்பர் செல்வம் மற்றும் எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பில் போல் சத்தியநேசன் அவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றித்தன் கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவற்றில் முக்கியமான விடயங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. புகலிடத்தமிழர்களின் அகதிக்கோரிக்கைகள், குடிவரவுச்சட்டங்கள், மற்றும் அக்கோரிக்கைகளைக் கையாண்ட தமிழ் அமைப்புகள் அல்லது தனிநபர்கள் பற்றிய கருத்துகள்.
2. கனடாத்தமிழர்களின் வளர்ச்சி, அரசியற்செயற்பாடுகள் மற்றும் புதிய கலாச்சாரச் சூழல் குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் அவற்றின் விளைவுகள் பற்றிய கருத்துகள்.
3. நியுஹாம் நகரசபை உறுப்பினராகக் கடந்த இருபதாண்டு வருடங்களாகச் செயற்பட்டுவரும் போல் சத்தியநேசன அவர்களின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகள் பற்றிய கருத்துகள். புலம்பெயர் தமிழர்களில் இவ்வளவு நீண்ட காலம் அரசியலில் பதவி வகிப்பது இவர் ஒருவரே என்பதையும் தனது உரையாடலில் இவர் சுட்டிக்காட்டினார்.
4. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (ஐக்கிய இராச்சியம்) என்னும் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வு பற்றிய கருத்துகள்.
5. புலம்பெயர் தமிழர்களின் பலமும், ஈழத்தில் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளின் அவசியமும் பற்றிய கருத்துகள்.

இவ்விடயங்களைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவலை.

அகதிக்கோரிக்கைகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் இவர் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது. யூதர்களைப்பாதிக்கப்பட்ட இனமாக மேற்கு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதுபோல் வேறு பல நாட்டைச்சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அகதிக்கோரிக்கை வைத்த ஈழத்தமிழர்களை மட்டும் அவ்விதம் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் அகதிகளுக்காக வழக்குகள் எழுதி உழைத்த அமைப்புகளும் சரி, தன் நபர்களும் சரி மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் இவ்விடயத்தை எடுத்துக்கூறி இலங்கைத்தமிழர்களையும் பாதிக்கப்பட்ட இனமாக ஏற்றுக்கொள்ளச் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்யவில்லை. அவ்விதம் செய்திருந்தால் ஒவ்வொருவரும் தனித்தனியாக வழக்குகளுக்கு முகம் கொடுத்திருக்கத்தேவையில்லாமல் இருந்திருக்கும். சிலவேளை வழக்கு எழுதி உழைத்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் அனைவரையும் பாதிக்கப்பட்ட இனமாக அங்கீகரிப்பதானது பாதகமானதாக, வருமானத்தை இழக்கும் நிலையினை ஏற்படுத்திவிடும் என்பதற்காக அல்லது அறியாமையின் காரணமாக அவ்விதம் அவர்கள் அவ்விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கக் கூடும் என்னும் அர்த்தத்தில் அமைந்திருந்தன இவ்விடயம் பற்றிய அவரது கருத்துகள்.

புலம்பெயர் தமிழர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தற்போது கல்வி, பொருளாதாரம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் மிகவும் வலிமையான சமூகமாக உருமாற்றம் அடைந்திருக்கின்றது. இச்சமூகம் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் தம் வலிமையினைப் பயன்படுத்த வேண்டும். இவர்கள் அடுத்த போகத்துக்காகக் காத்திருக்கும் விதை நெல்லைப்போன்றவர்கள். ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காக இவ்விதை நெல் விதைக்கப்பட வேண்டும் ' என்னும் சாரப்படத் தன் கருத்துகளை எடுத்துரைத்தார் திரு.போல் சத்தியநேசன்.

அடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அவரது ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு பற்றி கருத்துகளைத்தெரிவிக்கையில் அவர் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கட்சி பேதங்களை மறந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும், இலங்கைத்தமிழர்களுக்கு நியாயமான, உரிமைகளுடனும் வாழக்கூடிய நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும். அதனை எம் தலைமுறையிலேயே எம் மக்களுக்கு நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மக்களின் ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்சி. இலங்கை மக்கள் அனைவருக்குமான ஜனநாயகத்தை வலியுறுத்தும் , ஆதரிக்கும் அதற்காகக் குரல் கொடுக்கும் கட்சி என்று எடுத்துரைத்தார்.

கனடாக் கலாச்சாரச்சூழலில் குடும்பங்கள் சில சிதையுண்டு அமைந்திருப்பதைத் தான் அவதானித்ததாகவும் , ஆனால் அதே சமயம் இரண்டாவது தலைமுறை பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்து வருவதாகவும், அது ஆரோக்கியமான விடயமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்செயலாக அழைக்கப்பட்டு நிகழ்ந்த சந்திப்பு இச்சந்திப்பு. திடீர்ச் சந்திப்பு என்றாலும், போல் சத்தியநேசன் அவர்கள் அவசரப்படாது, நிதானமாகத் தன் கருத்துகளை எடுத்துரைத்த விதம் என்னைக் கவர்ந்தது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Saturday, 17 November 2018 01:00