- வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' -1983 இலங்கை இனக்கலவரத்தைத்தொடர்ந்து , பிறந்த மண்ணை விட்டுப் புகலிடம் நாடிக் கனடா புறப்பட்ட வேளை, வழியில் பாஸ்டன் நகரிலிருந்து கனடாவின் மான்ரியால் நகருக்கு ஏற்றிச்செல்ல வேண்டிய 'டெல்டா ஏர் லைன்ஸ்' நிறுவனம் எம்மை ஏற்றிச் செல்ல மறுத்து விடவே, அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் எம்மை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதில் மும்முரமாகவிருந்தார்கள். அதிலிருந்து தப்புவதற்காக அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுமார் மூன்று மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லின் நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றினுள் அடைத்து வைக்கப்பட்டோம். அக்காலகட்ட அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் விளையே எனது நாவலான 'அமெரிக்கா'. அளவில் சிறியதானாலும் இந்நாவல் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதன் முதலில் புகலிடம் நாடிச்சென்ற இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் நாவல் இதுவேயென்பேன். இந்நாவல் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக மற்றும் கனடா மங்கை பதிப்பக வெளியீடாக மேலும் சில சிறுகதைகளையும் உள்ளடக்கி வெளியானது. இதன் தொடர்ச்சியாக இந்நாவலின் நாயகன் இளங்கோவின் நியூயோர்க் மாநகரத்து அனுபவங்கள் 'குடிவரவாளன்' என்னும் நாவலாகத் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது. 'குடிவரவாளன்' ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் 'அமெரிக்கா' தொடராக வெளிவந்த நாவல்.

நீண்ட நாள்களாக எனக்கு 'அமெரிக்கா' நாவலைத் தனி நூலாக வெளியிட வேண்டுமென்ற ஆர்வமிருந்தது. தற்போது அதற்கான சூழல் உருவாகியுள்ளது. திருத்தப்பட்ட பதிப்பாக, விரைவில் இலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக இந்நாவல் வெளிவரவுள்ளது என்னும் மகிழ்ச்சியான தகவலைப்பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். நண்பரும் , கட்டடக்கலைஞருமான சிவசாமி குணசிங்கம் (சிட்னி, ஆஸ்திரேலியா) அவர்கள் நாவலுக்கு சிறப்பான அட்டைப்படமொன்றினை வடிவமைத்துத் தந்துள்ளார். இவரே நான் ஆசிரியர் குழுத்தலைவராகவிருந்து வெளியிட்ட , மொறட்டுவைப்பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்க வெளியீடான 'நுட்பம்' (1980/1981)சஞ்சிகைக்கும் சிறப்பானதோர் அட்டைப்படத்தினை வடிவமைத்துத் தந்தவர் என்பதையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

'அமெரிக்கா' நாவல் தனி நூலாக வெளிவரவேண்டுமென்ற என் கனவினை நனவாக்கிய எழுத்தாளரும் , 'மகுடம்' பதிப்பக உரிமையாளருமான மைக்கல் கொலின் அவர்களுக்கும், அட்டைப்படத்தினைச் சிறப்பாக வடிவமைத்துத் தந்த கட்டடக்கலைஞர் சிவசாமி குணசிங்கம் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

- வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.